குருவின் ‘முயற்சி’ உத்தரணத்தைக் குறிப்பதே : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஒன்றிலிருந்து ஒன்று அபிப்ராயங்கள் சுவடு விட்டுப் போய்க்கொண்டிருப்பதில், இப்போது ‘ப்ரச்நோத்தர ரத்ந மாலிகா’ வைக் கிளறிப் பார்த்ததில், இதுவரை நாம் பார்த்த துரிதோத்தரண ஸமாசாரமாகவும் இன்னொரு விஷயம் வந்திருக்கிறது. [சிரித்து] உள்ளேயிருந்து இன்னொரு விஷயத்தைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டுவந்து “உத்தரணம்” பண்ணியிருக்கிறது!

இதில் (‘ப்ரச்நோத்தர ரத்ந மாலிகை’யில்) ஆரம்பம், ‘எது ஏற்கத்தக்கது?’ என்பதுதான். அதாவது எதை ஆதாரமாக எடுத்துக்கொண்டு அதன்மேல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்ற கேள்விதான்: கிம் உபாதேயம்?

பதில், “குருவசனம்.”

அப்புறம், “குரு யார்?” என்று கேள்வி: கோ குரு:?

பதில் கொஞ்சம் நீளமாகவே வருகிறது: “அதிகத – தத்த்வ:, சிஷ்யஹிதாயோத்யத: ஸததம்.”

“அதிகத தத்த்வ:” என்றால் தத்வார்த்தங்களைக் கற்றுணர்ந்தவர், அவற்றில் அநுபவம் பெற்றவர் என்று அர்த்தம்.

அப்புறம்தான் நம் ஸமாசாரம்- துரிதோத்தரணம் – வருகிறது: “ஸததம்” – ஸதா காலமும்; “சிஷ்ய ஹிதாய” – சீடர்களின் நலனுக்காக; “உத்யத:” – முயன்று கொண்டிருப்பவர், முனைந்து வேலை செய்து கொண்டிருப்பவர். முன்பே சொன்ன விஷயந்தான் – குரு என்றால் தாம் கற்றறிந்து அநுபவித்தவராக இருப்பதோடு, மற்றவர்களுக்கும் அந்த அறிவையும் அநுபவத்தையும் ஊட்டி அவர்களுக்குப் பரம ஹிதத்தைச் செய்பவராக இருக்கவேண்டும். இந்தப் பணியிலேயே அவர் ஸததமும் முனைந்து முயற்சி பண்ணிக் கொண்டிருக்கவேண்டும். “உத்யத:” என்பதற்கு அதுதான் அர்த்தம் – கவனமாக, வலுவாக முயற்சி பண்ணுவது.

(“கநகதாரா ஸ்தவ” த்தில்) ‘துரிதோத்தரண’ த்தைச் சொல்கிறபோதும், “உத்யத” என்ற இந்த வார்த்தையையே போட்டிருக்கிறார்: “துரிதோத்தரணோத்யதாநி”, அதாவது, “துரித உத்தரண உத்யதாநி.”

நமஸ்காரம் என்ற க்ரியை செய்யும் பல காரியங்களில், (துரிதம் என்கிற) பாபங்களை (உத்தரணம் என்பதாக) உள்ளேயிருந்து பிடுங்கி எடுப்பதில் முனைப்பாக முயற்சி பண்ணுவதே முடிவாக வருவது என்று காட்டியிருக்கிறார். இங்கே மட்டுந்தான் ‘ச்ரமப்பட்டு முயலுவது’ என்று பொருள்படும் “உத்யத” போட்டிருக்கிறார். மற்ற காரியங்களை நமஸ்காரம் ச்ரமப்பட்டு முயற்சி செய்து ஸாதிக்கவில்லை. ஸுலபமாக, அநாயாஸமாக ஸாதித்துவிடுகிறது. நமஸ்காரங்கள் (‘வந்தநாநி’) என்று பன்மையில் சொல்லும் ஆசார்யாள் முதலில் அவற்றை “ஸம்பத்கராணி” என்கிறார். “ஸம்பத்துக்களை உண்டாக்குபவை” என்று ‘ஈஸி’ வேலையாகச் சொல்லிவிடுகிறார். ‘முயன்று’ உண்டாக்குவதாகச் சொல்லவில்லை. இதேபோல, அடுத்தபடி, “ஸகலேந்த்ரிய நந்தநாநி” – “எல்லாப் புலன்களுக்கும் இன்பமாக, இன்பம் தருவனவாக, இருப்பவை” என்னும் போதும் ‘பாடுபட்டு முயன்று’ என்று சொல்லவில்லை. அதற்கப்புறம், “ஸாம்ராஜ்யதாந நிரதாநி”: பெரிய ராஜ்யத்தையே வழங்க வல்லனவாக இருப்பவை. “நிரத” என்றால் ஸந்தோஷமாக ஒரு கார்யத்தில் ஈடுபட்டிருப்பது. ச்ரமப்பட்டு முயன்று செய்வதல்ல. ‘அதற்கு’ ஆப்போஸிட். பக்தனை ராஜாவாகவே தூக்கி வைப்பதுகூட நமஸ்காரத்தின் சக்தியில் ஸந்தோஷமாகச் செய்யும் அநாயாஸமான கார்யமாகவே இருக்கிறது.

இப்படி இஹலோக விஷயங்களை ஈஸியாக முடித்த பிறகுதான் கடைசியில் வருகிறது, பரலோகத்துக்கான துரிதோத்தரணம். இங்கே மட்டுந்தான் “உத்யதாநி” என்று போட்டிருக்கிறார். ஒருத்தனுக்குள்ளே ஜன்மாந்தரமாகப் போய்ச் சொருகிக்கொண்டிருக்கும் பாபத்தையெல்லாம் நெம்பி இழுத்துப் போடுவது என்பது நமஸ்கார க்ரியையின் மஹாசக்திக்கும் ஈஸியாக இருந்துவிடவில்லை என்று காட்டியிருக்கிறார்.

அதன் சக்தியைக் குறைத்து நினைப்பதற்காக இப்படி “உத்யதாநி” என்று போடவில்லை. நாம் எத்தனை பாபத்தை, துஷ்கர்மத்தைப் பண்ணி அவற்றின் வாஸனை நமக்குள் ஆழமாக வேரோட விட்டிருக்கிறோம் என்று புரிந்து கொள்வதற்காகவே இப்படிச் சொல்லியிருக்கிறார்.

இங்கே (‘ப்ரச்நோத்தர ரத்நமாலிகா’வில்) சிஷ்யனின் ஹிதத்துக்காக பாடுபட்டு முயற்சி பண்ணுபவர் (“உத்யத:”) குரு என்கிறார்.

‘ஹிதம்’ என்பது என்ன? சீடனின் நலம். அந்த ‘நலம்’ என்ன? அவனுடைய கர்மாவை நிவ்ருத்தி பண்ணுவதுதான். ஸம்ஸார நிவ்ருத்திக்கு இதைத் தவிர வேறு வழியே இல்லை.குருவை ஒரு சீடன் எந்த முடிவான லக்ஷ்யத்திற்காக அடைகிறானோ அந்த நித்யானந்தத்தை அவன் ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டால்தான் பெறமுடியும். தன்னுடைய கர்மாவிலிருந்து அவன் விடுபட்டால்தான் ஸம்ஸாரத்திலிருந்து விடுபடமுடியும்.

கர்ம நிவ்ருத்தி என்பதுதான் பாப நிவ்ருத்தி, அதாவது துரிதோத்தரணம்.

நமஸ்கார சக்தியானது முனைந்து முயன்று துரிதோத்தரணம் செய்வதாகச் சொன்ன அதே ஆசார்யாள், சிஷ்ய ஹிதத்துக்கு ஸதாகாலமும் குரு முனைப்பாக முயன்றபடியிருக்கிறார் என்று சொல்லும்போது, இந்த குரு செய்வதும் துரிதோத்தரணம்தான் என்று ஆகிறது.

நாம் செய்யும் நமஸ்காரம் அவருக்குள்ளே உள்ள அநுக்ரஹ சக்தியைத் தூண்டி, அது நமக்குள்ளே போய்ச் சொருகிக் கொண்டுள்ள பாபங்களையெல்லாம் தோண்டியிழுத்து வெளியில் தள்ளும்படிச் செய்கிறது.

ஸம்பத், ஸாம்ராஜ்யாதிகளுக்காக லக்ஷ்மியிடம் போக வேண்டுமென்றும், பாப நிவாரணத்துக்கு குருவிடம் போக வேண்டுமென்றும் நடைமுறையில் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஆசார்யாள் மஹாலக்ஷ்மியிடம் பிரார்த்தித்ததையே நாம் கொஞ்சம் மாற்றி குருவிடம் பிரார்த்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். “எங்களுடைய துரிதங்களை உத்தரணம் செய்வதற்காக அயராமல் பாடுபடும் தங்களுக்குச் செய்யும் நமஸ்காரமே எங்களைவிட்டு என்றும் நீங்காத நிதியாக இருக்கவேண்டும்” என்று ப்ரார்த்தித்து, திரும்பத் திரும்ப நமஸ்காரம் பண்ணிக்கொண்டு, அவருடைய அநுக்ரஹமான கனகதாரையைப் பெற்று ஆனந்தமாக, பஞ்சு மாதிரி லேசாக, ஆகிவிடவேண்டும்.

ஆசார்யாள் “மாதா!” என்று கூப்பிட்டுச் சொன்னதையே, “குரோ!” என்று மாற்றிக்கொண்டு, “எங்களுக்கு வேறே எதுவும் வேண்டாம்! உங்களை நமஸ்காரம் பண்ணுவது என்பது மட்டும் எங்களுடைய ஸொந்த ஸொத்தாக ஆகிவிடவேண்டும். வேறே எந்த உடைமையும் வேண்டாம். வந்தன ப்ரக்ரியை எங்களை விடாமல் இருக்க வேண்டும். அவ்வளவுதான். சரீரத்தை கீழே கிடத்தி, ஹ்ருதயத்தைத் தங்கள் சரணாரவிந்தங்களில் அர்ப்பணித்து நாங்கள் செய்கிற இந்த நமஸ்காரத்தால் பெறுகிற அநுக்ரஹத்துக்கு மேலே ஸொத்து, உடைமை எதுவுமில்லை” என்று ப்ரார்த்தித்து, அப்படியே நிறைந்து இருந்துவிட வேண்டும்.

தஸ்மை ஸ்ரீ குரவே நம:

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is குரு வந்தனை-நிந்தனை:அம்ருதம்-விஷம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ப்ரவ்ருத்தி-நிவ்ருத்தி
Next