முழுமுதலாக விளங்கும் மூர்த்திகள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இங்கே விஷ்ணு, ருத்ரர் ஆகிய இரண்டு பேருக்கும் ப்ரஹ்மாவுக்கும் ஒரு வித்யாஸம் சொல்வதுண்டு. விஷ்ணுவும் ருத்ரமூர்த்தியும் வெளிக்கார்யம் எப்படி வைத்துக் கொண்டிருந்தாலும் – ஒரு ஆய்ச்சியிடம் அடிவாங்கிக் கொண்டு, ஒரு பிட்டு வாணிச்சிக்குக் கூலிவேலை செய்துகொண்டு இருக்கிறபோதுகூட – உள்ளூரப் பரமாத்மாவோடு ஒன்றுபட்டு ஸதாகாலமும் அந்த ஸர்வசக்தனாகவும், சக்தி விலாஸமெல்லாமும்கூட அடிபட்டுப்போன நிர்குண ப்ரஹ்ம வஸ்துவாகவும் தங்களைத் தெரிந்து கொண்டிருப்பவர்கள். அம்பாள், ஸாக்ஷாத் பராசக்தி, அவளும் இப்படித்தான். மஹாலக்ஷ்மி மஹாவிஷ்ணுவோடு கொஞ்சம்கூடப் பிரியாத பாவத்தில் கரைந்திருந்து தத்-த்வாரா (அதனடியாக) பரமாத்ம ஸ்வரூபத்தில் ஒன்று பட்டிருப்பவள். வைஷ்ணவர்கள் (அவளுடைய) ஸ்தானத்தை நன்றாக உயர்த்தி, அநுக்ரஹிக்குமாறு மஹாவிஷ்ணுவைத் தூண்டிவிடும் சக்தியே அவள்தான் என்பார்கள். ‘தாயார், தாயார்’ என்று நம் மனஸை உருக்கும்படியாக இப்படி அபிப்ராயம் சொல்வார்கள். நம்முடைய ஆசார்யாளும் மஹாலக்ஷ்மியை ஸ்துதிக்கும்போது அவளையே கீர்தேவதை’, அதாவது ஸரஸ்வதி என்றும், ‘சசிசேகரவல்லபா’ அதாவது சந்த்ரமௌளீச்வரனின் சக்தியான அம்பாள் என்றும் சொல்லியிருக்கிறார்.*

பிள்ளையார், முருகன் ஆகியவர்களும் இப்படியேதான் (முறையே) விக்னஹர்த்தா, தேவஸேநாதிபதி என்று மட்டும் முடிந்து போகாமல் முழுமுதலாக நின்று கொண்டு அநுக்ரஹிக்க கூடியவர்கள். ஆஞ்ஜநேய மூர்த்தியும் ராம தாஸனாக இருந்து கொண்டே ஸர்வ சக்தராகப் பூஜிக்கப்படும் ஸ்தானத்தைப் பெற்றிருக்கிறார். ப்ரஹ்மாவை இந்த லிஸ்டில் சேர்க்கவில்லை. ஏராளமான சாஸ்திரங்களை அலசிப் பார்த்து அப்பைய தீக்ஷிதர் அபிப்ராயம் பண்ணும்போது விஷ்ணுவையும், சிவனையும், அம்பாளையும் ‘ஈச்வரகோடி’ என்ற பூர்ண ப்ரஹ்ம சக்தியாகச் சொல்லியிருப்பதுபோல் ப்ரஹ்மாவைச் சொல்லவில்லை. பேரிலே ‘ப்ரஹ்மா’ என்பது ‘ப்ரஹ்மம்’ என்கிறமாதிரி இருந்தாலும், ஸாரத்திலே அப்படிப் பூர்ணமாக இல்லை. சித்தே முந்திதானே பார்த்தோம். தனக்குச் சிரஞ்ஜீவித்வம் வேண்டும் என்று யாராவது வரம் கேட்டால் ப்ரஹ்மாவே, ‘எனக்கு அப்படிக் கொடுக்க அதிகாரமில்லை, சக்தியில்லை’ என்று சொல்லிவிடுவாரென்று?


* ‘கநகதாராஸ்தவம்’ – 10.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is முத்தொழில் புரிபவர் என்பதற்காக வழிபாடில்லை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ப்ரம்மாவுக்கு மட்டும் ஏன் விலக்கு?
Next