Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

மன்னார்குடிப் பெரியவாள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

கொஞ்சம் வேடிக்கை கலந்த மாதிரி இந்த விஷயத்தைப் பற்றி ஒரு பெரியவர் ச்லோகம் பண்ணியிருக்கிறார். ‘பெரியவர்’ என்றேன். அவரைப் ‘பெரியவா(ள்)’ என்றே தான், பெயரைச் சொல்லாமல், மரியாதையாகக் குறிப்பிடுவது வழக்கம். என் மாதிரி ஒரு மடாதிபதியாக இருப்பவரைப் ‘பெரியவா’ என்பதில் விசேஷமில்லை. ஸ்வயமான யோக்யதை இல்லாவிட்டாலுங்கூட, ஸ்தானத்தினாலேயே எங்களுக்குப் ‘பெரியவர்’ பட்டம் கிடைத்துவிடும். நான் சொல்கிற பெரியவர் மடாதிபதி இல்லை. அதற்கடுத்தபடியாக லோக கௌரவத்தைத் தன்னுடைய ஆச்ரமத்தினாலேயே ஸம்பாதித்துவிடுகிற (மடாதிபதியாக இல்லாத) ஸந்நியாஸிகூட இல்லை. க்ருஹஸ்தராகவே வாழ்க்கை நடத்தியவர். ஆனால் “குலபதி” என்று புகழக்கூடிய அளவுக்கு ஏராளமான சிஷ்யர்களுக்கு குருகுலம் நடத்திப் பல மஹாவித்வான்களை உருவாக்கிய மஹா மஹோபாத்யாயராக இருந்தவர். ஸந்நியாஸிகளுங்கூட வந்து பாடம் கேட்டுக்கொண்டு போகும்படியான அப்பேர்ப்பட்ட பாண்டித்யத்தோடு கூடியிருந்தவர். மஹா பண்டிதர் என்பது மட்டும் அவர் பெருமையல்ல. உசந்த குணவானாகவும் இருந்தார். சிவபக்தியில் சிறந்தவர். பரம ஆசார அநுஷ்டானத்தோடுகூட ரொம்பவும் சீலராக வாழ்ந்த பெருமையும் அவருக்கு உண்டு. ஞானம், சீலம் இரண்டிலும் பெரியவராக இருந்த அவரைத்தான் ‘பெரியவாள்’ என்றே லோகம் சொல்லிற்று. அடையாளம் தெரிவதற்காக, அவர் வாழ்ந்துவந்த ஊரின் பெயரைச் சேர்த்து “மன்னார்குடிப் பெரியவாள்” என்று சொல்வார்கள். உயர்ந்த அறிவு, சிறந்த ஒழுக்கம் இரண்டும் கூடிய அவர் 19-ம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம் வரை ஸுமார் தொண்ணூறு வயசு ஜீவ்யவந்தராக இருந்து ‘ஞான-சீல-வயோ வ்ருத்தர்’ என்கிற புகழ்ச் சொல்லுக்கு முற்றிலும் உரியவராக இருந்தார். மஹானாகிய அப்பைய தீக்ஷிதரின் வம்சத்தில் வந்த அவருடைய சர்மன்* த்யாகராஜர் என்பது. அவர் யாகங்கள் செய்ததால் ‘த்யாகராஜ மகி’ என்று தம்முடைய நூல்களில் தம்மைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருப்பார். ‘மகம்’ என்றால் யாகம். சின்ன வயசிஸில் அவரை வீட்டிலே பெரியவர்கள் கூப்பிட்ட பேர் ராஜு. அதனால் ராஜு சாஸ்திரிகள் என்றும் சொல்வதுண்டு. ஆனால் பேச்சு வழக்கில் ‘மன்னார்குடிப் பெரியவா’ தான். ஊர் உலகமெல்லாம் பெரியவா என்று அழைத்தாலும் ரொம்பவும் அடக்கத்தோடு எளிமையாக இருந்தவரவர். அவருடைய குருமார்களில் கோபாலாசாரியார் என்பவர் ஒருவர். பிற்காலத்திலே இந்த கோபாலாசாரியாரின் புத்திரர் மன்னார்குடிப் பெரியவாளிடம் படித்த மாணவர்களில் ஒருவரானார். இவர் பெரியவாளைவிட வயஸில் சிறியவர் அதோடு சிஷ்யர். அப்படியிருந்தும், குரு புத்ரனுக்கு மரியாதை காட்டவேண்டும் என்ற வழக்கை அநுஸரித்து இவர் வகுப்புக்கு வரும்போது இவருக்கு குருவான மன்னார்குடிப் பெரியவாளே எழுந்திருந்து நிற்பாராம்! பக்தி ச்ரத்தை, ஆசாரம், ஸத்குணங்கள், அபாரமான வித்வத் இத்தனையும் பெற்று, ஸந்நியாஸிகளுக்கும் பாடம் சொன்னவரானாலும் அவர் கடைசி மட்டும் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளவில்லை. “நமக்கு ஏது அவ்வளவு யோக்யதை?” என்றே சொல்வாராம். அத்தனை அடக்க ஸம்பத்து!

அவருக்கு மஹாமஹோபாத்யாய பட்டம் சூட்டியதிலேயே இப்படி (அவரது அடக்க குணத்தைக் காட்டுவதாக) ஒரு விஷயம் உண்டு. (1887-ல்) விக்டோரியா பட்டமேறிய கோல்டன் ஜூபிலி கொண்டாடியபோது, இந்தியாவின் பழைய வழக்கத்தை அநுஸரித்து இனிமேல் வெள்ளைக்கார ராஜாங்கமும் பண்டிதோத்தமர்களுக்கு ‘மஹா மஹோ பாத்யாய’பட்டம் கொடுக்க வேண்டுமென்று தீர்மானம் பண்ணினார்கள். அதன் பிரகாரம் முதல் வருஷமே வடக்கத்தி வித்வான் ஒருவருக்கும், தெற்கத்தி வித்வான் ஒருவருக்கும் டைட்டில் தருவது என்று தேர்ந்தெடுத்தபோது அவர்களில் ஒருவராக இருந்த தெற்கத்திக்காரர் நம்முடைய மன்னார்குடிப் பெரியவாள்தான். ஆனாலும் அவருக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டபோது, ‘பூர்வ காலத்தில் மஹா பெரிய வித்வான்களுக்கே கொடுத்து வந்த இந்தப் பட்டம் எனக்கா?அவ்வளவு யோக்யதை இல்லவே இல்லை’ என்று சொல்லிச் சும்மா இருந்துவிட்டாராம். பட்டம் வாங்கிக்கொள்ள அவர் டில்லி தர்பாருக்குப் போகவேயில்லை! விஷயத்தை மறந்துவிட்டுத் தம்பாட்டுக்குப் பாடம் சொல்வது, சிவ பூஜை பண்ணுவது என்று இருந்துகொண்டிருந்தார். ராஜாங்கத்தில் இவருக்காகக் காத்துக் காத்துக் பார்த்தார்கள். டில்லிக்குப் போகாவிட்டாலும் கிட்டத்தில் இருக்கிற தஞ்சாவூருக்காவது போய் கலெக்டரிடமிருந்து டைட்டிலை ராஜமரியாதையோடு பெறுவாரா என்று காத்துப் பார்த்தார்கள். விநயப் ஸம்பன்னரான இவருக்கா, அந்த எண்ணமேயில்லை! அப்புறம் கலெக்டர் அந்தப் பெரிய பட்டத்துக்கான ஸன்னதுகளை அவருடைய வீட்டுக்கே அனுப்பி வைத்தபோதுதான் மறுக்க முடியாமல் ஏற்றுக்கொண்டார்.

வித்யை இருந்தால் தலைக்கனமும் இருக்கத்தான் வேண்டும் என்றில்லாமல் நேர் வித்யாஸமாக இருந்தார். வித்யாரம்பத்திலேயே விநாயகரை வந்தனம் செய்வதாலும், எந்த சாஸ்த்ரமாயிருந்தாலும் அதற்கான புஸ்தகத் தொடக்கத்திலேயே பிள்ளையார் ஸ்துதிக்கப்படுவதாலும் உண்மையான வித்வானொருவன் எப்படியிருக்கவேண்டும் என்று காட்டிய அந்தப் பெரியவரைப் பற்றிச் சொல்வதெல்லாமும் விக்நேச்வர ப்ரீதிதான். நாம் எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு எங்கோ போய்விட்டதாக ஆகாது.


* ஒரு அந்தணருக்கு சாஸ்திரோக்தமாக நாமகரணமிடப்படும் பெயர்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is தேவதையரின் இடையூறும் தீர்ப்பவர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  'ந்யாயேந்து சேகரம்'
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it