மூன்று விதமான பாவங்கள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஈச்வரனிடத்தில் பக்தி, அதே போன்ற பக்தி குருவிடத்திலும் என்று இருந்துவிட்டால் உபதேச உள்ளர்த்தமெல்லாம் புரிந்து அநுபூதி கிடைத்துவிடும். அதுதான் முதலில் சொன்ன ச்லோகம்.

இதிலே சிஷ்யர்களின் மனப்பான்மைகளையொட்டி, பக்தி பாவத்தில் பங்கீடும் கொஞ்சம் வித்யாஸாக வரும்.

‘ஈச்வரனிடத்தில் பக்தி செய்வதுதான் பரம தாத்பர்யம்; அதற்கு வழிகாட்டுபவர் என்ற முறையில் குருவிடமும் பக்தி விச்வாஸம் பாராட்டுவோம்’ என்பதாக மனோபாவமுள்ளவர்களும் இருப்பார்கள். இங்கே, ஈச்வரன் என்ற நமக்குத் தெரியாத ஆஸாமியையே மனஸு பற்றிக் கொண்டிருக்க முக்யமாக ஆசைப்படும். அவனைத் தெரிய வைப்பதற்கு ஸஹாயம் செய்பவரென்றே குருவிடம் போவது, அந்த மெயின் லைனில் கொண்டு போய்ச் சேர்க்கிற ஸைட் – லைன் இவர் என்ற அளவில் இவரிடமும் ஒரு நன்றி, ஒரு பக்தி இருக்கும். இப்படிப்பட்ட மனோபாவத்தையும் குரு மதித்து இவனை ஏற்றுக்கொள்வார். ஒரு சின்ன கொடி படர ஆதாரமில்லாமல் ஆடிக்கொண்டிருக்கும் போது நாம் அதைப் பிடித்து ஒரு கொழுகொம்பில் சுற்றிவிடுவதுபோல, அவர் இந்த மனோபாவக்காரனைக் கொண்டு போய் ஈச்வரன் என்ற கொழுகொம்பைப் பற்றிக் கொள்ளும்படி செய்துவிடுவார். அவனுக்குத் தெரியாமலிருந்த விஷயத்தைத் தெரிந்ததாகப் பிடித்துக்கொடுத்து விடுவார். ஈச்வரனும் இந்த ரீதியிலேயே அவனை அங்கீகரித்துக் கொள்வான்.

இன்னொரு பாவம், ஈச்வரனே குரு ஸ்வரூபமாக வந்திருக்கிறானென்பது ஈச்வரன், குரு இரண்டு பேரும் ஸமம் என்று வைத்துக்கொண்டு (ஆரம்பத்தில் சொன்ன ‘யஸ்ய தேவே பராபக்திர் – யதா தேவே ததா குரௌ‘ என்ற) ச்லோகத்தில் சொன்னபடி ஈச்வரனிடமும் பக்தி, குருவிடமும் அதற்குக் கொஞ்சங்கூட குறையாத பக்தி என்றிருப்பது.

பக்தியைப் பங்கு போடுவதா, அதேபோல அநுக்ரஹத்திலும் ஈச்வரன், குரு என்று இரண்டு பேர்கள் பங்கு போட்டுக்கொண்டு பண்ணுவார்களா என்று நான் பரிஹாஸம் பண்ணினாலும் அது ‘யுக்தி’ யில் சொன்னது தான். ‘அநுபவ’ த்தில் எப்படி இருக்குமென்றால் இம்மாதிரி மனோபாவகாரனுக்கு சில சில ஸமயங்களில் ஈச்வரன் என்பதிலேயே சித்தம் போய் அப்படியே பக்தியில் நிற்கும். சில சில ஸமயங்களில், ‘அவனுடைய நராகாரமே இது’ என்ற பாவத்துடன் குரு ஸ்வரூபத்திலேயே சித்தம் பக்தியில் நிரம்பிப் பதிந்திருக்கும். ஒரே ஈச்வரன் ஈச்வரனேயான ரூபம், குருவாக எடுத்துக்கொண்ட ரூபம் என்ற இரண்டின் மூலமும் அநுக்ரஹம் பண்ணுவான்.

மூன்றாவது பாவம், ‘ஈச்வரனைப் பற்றிய கவலையே இல்லை. அவன் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். நமக்கு வேண்டியது குருதான். ஈச்வரன் அவர் மூலம் நல்வழி காட்டுகிறான், அல்லது அவராக ரூபம் எடுத்துக்கொண்டு வருகிறான் என்ற கதையெல்லாம்கூட வேண்டாம். நமக்கு குருவான இவரேதான் ஸகலமும். இவரேதான் நம்முடைய ஈச்வரன், கீச்வரன் எல்லாமும். அதனால் இவரை மாத்திரம் அநன்யமாக உபாஸிக்க வேண்டியது. இவரே கடைத்தேற்றிவிட்டுப் போகிறார்’ என்று இருப்பது முழு பக்தியும் குரு ஒருவருக்கே செலுத்துவது.

‘கடைத்தேறுவது என்பதைக்கூட நினைப்பதில்லை. குருவிடம் பக்தியாயிருந்து சுச்ருஷை பண்ணிக்கொண்டிருப்பதே ஆனந்தமாக இருக்கிறதோ இல்லியோ! அதற்காகவே அப்படிச் செய்வது. கடைத்தேற்றுகிறார், ஏற்றாமலிருக்கிறார், எப்படிச் செய்வாரோ செய்துவிட்டுப் போகட்டும். நமக்கு அதைப்பற்றி விசாரமில்லை. நாம் பக்தியோடு தாஸ்யம் செய்துகொண்டு அதிலேயே நிறைந்து கிடப்பது’ என்று இருப்பது இன்னம் மேலே.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is குருபக்தியின் அநுகூலங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  குருபக்திக்கு ஈசன் செய்யும் அருள்
Next