யதோக்தகாரி : சொன்ன வண்ணம் செய்த பெருமாள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

“சொன்னவண்ணம் செய்த பெருமாள்” என்ற பெயரிலேயே காஞ்சீபுரத்தில் ஒரு கோவிலில் பகவான், மஹாவிஷ்ணு இருக்கிறார். “யதோக்தகாரி” என்று ஸம்ஸ்க்ருதத்தில் சொல்வார்கள். ‘யதோக்த’ – ‘யதா உக்த’: ‘சொன்னபடி’, ‘சொன்னவண்ணம்’; ‘காரி’ – செய்பவர்.

யார் சொன்னபடி பெருமாள் செய்தார்? குருவாக இருக்கப்பட்ட ஒருவர், தன் சிஷ்யன் ஊரைவிட்டுப் போகிறானா, அப்போது பெருமாளும் அவன் பின்னே துரத்திக்கொண்டு ஓடவேண்டும்; அப்புறம் அவன் ஊருக்கே திரும்பி வருகிறானா, அப்போதும் அவன் பின்னேயே துரத்திக்கொண்டு வந்துவிடவேண்டும் என்று ‘ஆர்டர்’ போட்டார்! பகவானுக்கே ஆர்டர் போட்டார்! அவர் சொன்னபடியெல்லாம் பகவானும் பண்ணினான். யதோக்தகாரி என்று பெயர் வாங்கினான்.

அந்த குரு யார்? சிஷ்யப்பிள்ளை யார்? ஏன் இப்படி (குரு) ஆர்டர் போட்டார்?

கொஞ்சம் கதை கேட்கலாம்.

ஆழ்வார்களில் திருமழிசையாழ்வார் என்பவர் ஒருவர். பூந்தமல்லிக்குக் கிட்டே இருக்கும் திருமழிசையில் பிறந்து வளர்ந்தவராதலால் ஊரை வைத்தே அவர் பேரைச் சொன்னார்கள். பெரியவர்களின் பேரைச் சொல்லப்படாது என்பதால் அந்த நாளில் இப்படியெல்லாம்தான் ஊரை வைத்து, அல்லது அவர்கள் செய்த காரியத்தை வைத்து, அல்லது அவர்களுடைய மஹிமையைக் குறிப்பிடுகிறமாதிரி இன்னொரு பெயரைச் சொல்வார்கள். பெரியாழ்வார் – பெரிய ஆழ்வார், நம்மாழ்வார் – நம்முடைய, அதாவது நமக்கு ரொம்ப ஸொந்தமான ஆழ்வார் என்பவையும் இப்படிப்பட்ட காரணப் பெயர்கள்தான். காரணப் பெயரே ப்ரஸித்தி பெற்று, அம்மா அப்பா வைத்த பெயர் மறந்து, மறைந்து போய்விடுவதுமுண்டு. திருமழிசையாழ்வாருக்கு பக்திஸாரர் என்று ஸம்ஸ்க்ருதப் பேர் சொல்கிறார்கள். அதுவும் காரணப் பெயராகவே இருக்குமோ என்னவோ? திருமழிசை என்பதில் மழிசை என்பது ‘மஹீஸாரம்’, அது மஹீஸார க்ஷேத்ரம் என்கிறார்கள். பூமிக்கே ஸாரமான ஊர் அது என்று அர்த்தம். மஹீஸாரத்தில் பிறந்து வளர்ந்தவர் பக்திஸாரர்!

அப்புறம் அவர் காஞ்சீபுரத்துக்கு வந்து வாஸம் பண்ணிக் கொண்டிருந்தார். அங்கேயிருக்கிற ஒரு பெருமாள் கோவிலில் பாசுரம் பாடிக்கொண்டும், உபதேசம் பண்ணிக் கொண்டும் அவ்வப்போது அப்படியே யோக ஸமாதியில் போய்க் கொண்டும் இருந்தார்.

பொதுவாக அவரைப் பற்றி ஒன்று நினைக்க இடமுண்டு. அதாவது, ‘முதலாழ்வார்கள் என்கிற மூன்று பேரும் – பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்ற அந்த மூன்று பேரும் – மஹாவிஷ்ணுவின் பரம பக்தர்களென்றாலுங்கூட ஸமரஸ மனப்பான்மையோடு சிவனையும் உயர்வாகச் சொல்லிப் பாடினவர்கள்; திருமழிசையாழ்வார்தான் வீரவைஷ்ணவமாகவே சொல்ல ஆரம்பித்தவர்’ என்று சொல்வதற்கு இடமிருக்கிறது. பெரியவர்களைப் பற்றிக் குறைவாகச் சொல்லக்கூடாது. இதர தெய்வங்களைக் குறைத்துச் சொல்லியிருந்தாலும் அவர் பண்ணின திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி ஆகியவற்றில் விஷ்ணுவிடம் பரம பக்தியையும், யோக மார்க்கத்தின் உத்தம ஸ்திதிகளைப் பற்றியும் பார்க்கிறோம். இத்தனை நாழி ஒருவரிடமே அநன்ய பக்தி பண்ணுவது பற்றி சொன்னேனே, அப்படி விஷ்ணு பக்தர்களை ஒரே குறியாக அந்த ஒரு மூர்த்தியிடமே ஈடுபடுத்துகிற நோக்கத்தில்தான் அவர் இதர தெய்வங்களை மட்டம் தட்டினாலும் பரவாயில்லை என்று பண்ணியிருக்கிறாரென்று ஸமாதானம் செய்து கொள்ளலாம். அது இருக்கட்டும்.

பகவானுக்குப் பாசுரம் ஸேவிப்பது, பாகவதாளுக்கு உபதேசம் செய்வது, அப்படியே யோக நிஷ்டையில் போய் விடுவது என்று அவர் கோவிலிலேயே வாஸம் பண்ணிக் கொண்டிருந்தார். (அது) வரதராஜா கோவிலென்று நினைத்தால் அது தப்பு.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is குரு வழிபாட்டின் சிறப்பம்சங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  காஞ்சியிலுள்ள 'திவ்ய தேசங்கள்
Next