இக – பர பலன்கள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஸகல தேவதோபாஸனா பலன்களையும் கொடுக்க வல்லவராகப் பிள்ளையார் இருக்கிறார் என்பதால்தான் ச்லோகத்தின் கடைசி வரியில் “ஸர்வார்த்த ப்ரதிபாதநைக சதுரோ த்வைமாதுரோ (அ) வ்யாத் ஸ ந: “என்று சொல்லியிருக்கிறது. ஏக பர தெய்வமாக இருந்துகொண்டு அதனால் பிள்ளையாரே ஸர்வசக்தியுடன் டைரக்டாக எந்தப் பலனை வேண்டுமானாலும் தரலாம்; அல்லது மற்ற தேவர்களுக்கும் விக்ன நிவ்ருத்தி அருளுகிற சக்தி பெற்றவர் என்பதாலேயே அவர்கள் மீது தமக்குள்ள செல்வாக்கைக் கொண்டு நாம் விரும்பும் பலனை அவர்கள் கொடுக்கும்படி அவர் சிபார்சு செய்யலாம். எப்படியானாலும் நமக்கு எல்லா விதமான பலன்களையும் அடைவிக்கப் பண்ணுவதில் அவர் வல்லவர் : ஸர்வார்த்த ப்ரதிபாதநைக சதுரர். ‘ஸர்வார்த்தம்’ என்றால் நாம் விரும்பும் எல்லாப் பொருள்களையும் பலன்களையும் என்று அர்த்தம். மநுஷ்ய வாழ்வின் லக்ஷ்யங்களாக நாலு சொல்வார்கள், ‘சதுர்வித புருஷார்த்தம்’ என்று தர்மார்த்த (தர்ம – அர்த்த) – காம – மோக்ஷம் அல்லது அறம் – பொருள் – இன்பம் – வீடு என்பது இதுதான். இந்த நாலு புருஷார்த்தங்களையும் தர வல்லவர் பிள்ளையார் என்றும் (“ஸர்வார்த்த ப்ரதிபாதநைக சதுர :” என்பதற்கு) அர்த்தம் செய்துகொள்ளலாம். காமம், மோக்ஷம் என்பது தான் முறையே இஹம், பரம், இவ்விரண்டையும் தருகிறார் என்றால் அதில் அடங்காதது எதுவுமே இல்லை!

இஹத்துக்கு ஆதாரமாக இருக்கப்பட்ட காமம் நம்மை இதிலேயே புதைத்து பரத்தின் பக்கமே போக முடியாமல் தடுத்துவிட்டால் நாம் பிறவி எடுத்து என்ன புண்ணியம்? அதனால்தான் அதை முதலில் நெறிப்படுத்தித் தருவதற்காக தர்மத்தை முதல் புருஷார்த்தமாக வைத்திருக்கிறது.

காமம், அதாவது, ஆசை என்பது மனஸிலே இருக்கிற விஷயம். அதன் நிறைவேற்றத்துக்குப் பல வஸ்துக்கள் வேண்டும். இந்த வஸ்துக்களைப் பெற நமக்கு வசதி இருந்தால்தான் ஆசைகள் பூர்த்தியாகும். இந்த வசதியைத் தருவதுதான் இரண்டாவது புருஷார்த்தமான ‘அர்த்தம்’ என்கிற பொருட்செல்வம். இந்த பொருட் செல்வத்தை நம்முடைய சொந்த ஆசைகளுக்காக இல்லாமல் பரநலமாகச் செலவிடவும் இடமிருக்கிறது. இப்படிப் பண்ணும்போது இரண்டாவது புருஷார்த்தமான அர்த்தமே முதல் புருஷார்த்தமான தர்மத்தை நமக்குக் கொடுக்கிறது! அனர்த்த ஹேதுக்களான அர்த்த-காமங்களுக்கு முன்னால் முதலிலே தர்மத்தின் பிடிப்பு இருந்து, அதோடு இவற்றைச் சேர்த்து அநுபவித்தால் நாளாவட்டத்தில் பக்குவம் ஏற்பட்டு நாலாம் புருஷார்த்தமான மோக்ஷத்தின் வழியில் கொண்டுவிடும்.

“ப்ரதிபாதன – ஏக – சதுர”: ‘கொடுக்கவல்ல ஒரே ஒருவர்.’ இஹ – பர நலன்கள், பலன்கள் எல்லாவற்றையும் கொடுப்பதில் சதுரர், திறமை மிக்கவர்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 'வெரைட்டி'வழிபாடே மனித இயற்கை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  இரண்டு தாயார்க்காரர்!
Next