வேதத்தை ஒப்பியும் வேதாந்தத்தை ஒப்பாத மதங்கள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இப்படி (ஜைனம், பௌத்தம் சார்வாகம் ஆகியவற்றைப்போல்) வேதத்தை அடியோடு ஆக்ஷேபிக்காமல் ‘வேத ப்ராமாண்யத்தை (வேதம் ஸத்ய ப்ரமாணமுடையது என்பதை) நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்’ என்று சொல்லிக் கொண்டே, அதில் ஒவ்வொரு அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அதுவே எல்லாம் என்று ஸித்தாந்தம் பண்ணி, மற்ற அம்சங்களைக் கண்டனம் செய்த மதங்களும் இருந்தன. முக்யமாக இந்த மதஸ்தர்கள் எல்லாரும் வேதங்களின் பரம தாத்பர்யமாக வேதாந்தத்தில் ஜீவ-ப்ரஹ்ம ஐக்யத்தைச் சொல்லி, அந்த ஐக்யத்தை ஆத்ம ஸாக்ஷாத்காரத்தில் அநுபவிப்பதுதான் மோக்ஷம் என்றிருப்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆத்மாவைப் பற்றிக் கொஞ்சம்கூடப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கான கார்யங்களில் ஆரம்பித்து, அடியிலிருந்து நுனிவரை integrated-ஆக, ஸம்யுக்தமாக, ஒன்று சேர்த்துத் தரும் ஸநாதன தர்மத்தின் கட்டுக்கோப்பை பங்கப்படுத்தி ஏற்பட்ட இந்த மதங்களும் அப்போது வெவ்வேறு அளவில் பரவியிருந்தன.

இவற்றில் விஷய ஆராய்ச்சி என்ற முறையில் சிறப்புப் பெற்றவை ஸாங்க்யம், யோகம், ந்யாயம், வைசேசிஷகம், மீமாம்ஸை என்ற ஐந்து. யோகத்தில் ஸாங்க்யத்தின் விஷய ஆராய்ச்சியோடு ஸாதனா மார்க்கமும் சிறப்பாகச் சேர்ந்திருக்கிறது. ஆனாலும் எல்லாமே ஸநாதன தர்மத்தின் ஸார தத்வத்துக்குக் கிட்டே போகாதவைதான்.

இந்த ஐந்தில் க்ருஷ்ண பரமாத்மாவே திட்டியுள்ள மீமாம்ஸை இந்த ஸமயத்தில் மறுபடி ப்ரபலமாகி வந்தது. ஸாங்க்யம், யோகம், ந்யாயம், வைசேஷிகம் ஆகியவை அறிவாளிகளான சிலரால் மட்டும் பின்பற்றப்பட்டன. கர்மாநுஷ்டான மயமான மீமாம்ஸை மட்டும் ஓரளவு கணிசமான ப்ராம்மண ஸமூஹத்தினரின் அநுஷ்டானத்தில் இருந்து வந்தது. அக்னிஹோத்ரம், யஜ்ஞங்கள் முதலான கர்மாக்களைச் சொல்லும் அந்த சாஸ்த்ரத்தில் வேதங்களின் அர்த்தத்தை விசாரிப்பதில் நிறைய அறிவாராய்ச்சியும் சேர்ந்திருந்ததால் அதற்கு ப்ராம்மணர்களிடையே ஓரளவு நல்ல following இருந்ததாகத் தெரிகிறது.

ஆனாலும் அந்த ஜாதியிலேயே இன்னொரு பகுதி பௌத்த மதத்தைத் தழுவியிருந்ததும் தெரிகிறது. வேதாந்தம் ரொம்பவும் நலிவுற்று, ஆனாலும் நான் சொன்னாற்போல அடியோடு போய்விடாமல் மூச்சைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த காலமாக இருந்ததால், கர்மாவில் மட்டும் நிறைவு காணமுடியாமல், Metaphysics என்கிறார்களே, அப்படிப்பட்ட பௌதிக அதீதமான உண்மைகளில் ஈடுபட்டுப் பார்க்க விரும்பிய ப்ராம்மணர்கள் பௌத்தத்திலும் abstract meditation -கு (கலப்படமில்லாத ஸ்வச்சமான த்யானவிசாரத்திற்கு) இடமிருப்பதால் அதில் போனார்கள். வைதிக கர்மாநுஷ்டானங்களுக்கு முக்யமான அதிகாரிகளாக ஆதிகாலத்திலிருந்து இருந்து வந்துள்ள ப்ராம்மணர்களில் பலபேர் அதைவிட்டு விட்டு பௌத்தத்துக்குப் போனதனால்தான், ‘சங்கர விஜய’ங்களில் கொஞ்சம் அதிசயோக்தியாகவே, அப்போது தேவர்கள் போய்ப் பரமேச்வரனிடம், “யாக” என்ற சப்தத்தைக் கேட்டாலே எல்லாரும் காதைப் பொத்திக்கொள்ளும் துர்த்தசை ஏற்பட்டுவிட்டதென்று முறையிட்டதாகச் சொல்லியிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is அப்பட்டமான லோகாயதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  முழுதும் வேத ஸம்மதமானாலே வைதிகம்
Next