இதர தெய்வ உபாஸகரும் வழிபடுவது : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

(ச்லோக) ஆரம்பத்தில் ஸாதாரண ஜனங்கள் பண்ணுவதைச் சொல்லியிருக்கிறது. படிப்பு வர ஸரஸ்வதி பூஜை, பணம் வரணுமென்று லக்ஷ்மி பூஜை, நேத்ரரோகம் ஸரியாவதற்காக ஸூர்ய நமஸ்காரம் என்றெல்லாம் செய்கிறோம். அதாவது பல பயன்களைப் பெறுவதற்கு ஹேதுவாகப் பல தெய்வங்களுக்கு வழிபாடு செய்கிறோம். எந்த வழிபாடானாலும் அதற்கு விக்னம் ஏற்படாமலிருக்க ஆரம்பத்தில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து மஹா கணபதிக்கு முதல் பூஜையைப் பண்ணிவிடுகிறோம். இதைத்தான் முதல் பாதியில் சொல்லியிருக்கிறது.

“அப்யந்யாமரம் ஆரிராதயிஷதாம்” : இதர தேவதையை, பிள்ளையாருக்கு அன்னியமான ஒரு தெய்வத்தை, ஆராதிக்க விரும்புகிறவர்கள்கூட…

அமரர் என்றால் தேவர். மரணமில்லாதவர் அமரர்.

‘அபி அந்ய அமரம்’என்பதாக ஆரம்பத்திலேயே உட்கார்ந்திருக்கும் ‘அபி’ க்குக் ‘கூட’ என்று அர்த்தம்.

யாரோ ‘கூட’ எதையோ செய்கிறார்கள் என்றால் அவர்கள் செய்கிற கார்யம் நமக்கு ஆச்சர்யம் தருவதாக இருக்கும். எடுத்தவுடன் ‘அபி’ போட்டுவிட்டால் ஆச்சர்யம் தருவதாகப் பின்னாடி ஸமாசாரம் வரப்போகிறது என்று ஏற்பட்டுவிடும். படிப்பவர்களுக்கு ஆர்வம் உண்டாக்குவதற்காக ‘அபி’ போட்டு ச்லோகத்தை ஆரம்பிப்பதுண்டு.

வேறு தேவதைகளை ஆராதிக்க விரும்புகிறவர்கள்கூட என்ன செய்கிறார்கள்? அந்த ஆராதனைக்கு ஏற்படக்கூடிய விக்னம் போவதற்காக யாரோ ஒருவருடைய இணையடிக் கமலங்களை ஆராதிப்பது கட்டாயம் செய்யவேண்டிய காரியமென்று அறிந்திருக்கிறார்கள். “யத் பாத பங்கேருஹ த்வந்த்வாராதனம் அந்த்ராய ஹதயே கார்யம் து அவச்யம விது:” என்பதற்கு இதுதான் அர்த்தம்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 'தத்-ஹேது'நியாயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  'தொந்தம்'
Next