காஞ்சி-திருமலை புனித கால்நடைப் பயணம் - 5 October 2004 மரம் பழுத்தால் வெளவாலை வா என்று அழைப்போர்ருண்டோ என்றொரு பழம் பாடல் பலாப்பழம் பழுத்துவிட்டால் அதன் வாஸன

காஞ்சி-திருமலை புனித கால்நடைப் பயணம் - 5 October 2004

மரம் பழுத்தால் வெளவாலை வா என்று அழைப்போர்ருண்டோ என்றொரு பழம் பாடல். பலாப்பழம் பழுத்துவிட்டால் அதன் வாஸனை விளம்பரமின்றி எங்கும் பரவி பறவைகளை அதனிடம் அழைத்துவிடும். ஞானப்பழமாய் விளங்கும் தண்டபானியாம் ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் இருக்குமிடம் தேடி விளம்பரமின்றி மக்கள் கூட்டம் வருகின்றனர் என்பது உண்மையைத் தவிர வேறு இல்லை. செம்பரம்பாக்க கல்லூரி வளாகம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. எங்கிருந்தோ தரிசனத்திற்கு தேடி வந்தனர் மக்கள்.

வந்தவர்களுக்கு கண்ணுக்கு விருந்து பெரியவர்களின் தரிசனம். செவிக்கு விருந்து திருப்புகழ் பாராயணம். ஆறுபடை வீடுகளைப் பற்றி அருணகிரிநாதர் பாடியுள்ள சந்தத் திருப்புகழை படித்து பாடிக்கொண்டிருந்தனர் ,ஸ்வாமிகளுடன் வந்திருந்த அன்பர்கள். ""கைத்தல நிறைக்கனி""திருப்புகழால் விநாயகனைத் தொழுது திருப்பரங்குன்றம், ஸ்வாமிமலை, பழநி, திருச்செந்தூர் திருப்புகழ் பாடல்களில் தலத்திற்கு இரண்டு பாடல்கள் எனப்பாடி யாவரையும் மகிழ்வித்தனர்.

பயணம் மீண்டும் துவங்கியது. வழிநெடுக பக்தர்குழாம். சாலையில் செல்லும் பேருந்துகள் நின்று பயணிகள் இறங்கி பெரியவர்களை தர்சித்து ப்ரஸாதம் பெற்றுசென்றனர். பெரியவர்கள் இடம்தேடி நாடி சென்று வழிபடுவது என்பது ஒருமுறை, கலியுகத்தில் நாராயணன் இரண்டு வடிவில் இருக்கிறார் என்பது வழக்கு. ஒன்று சாலிக்ராமத்தில் அதனால்தான் சாலிக்ராமம் உயர்ந்தது. அடுத்தது ஸந்நியாசிகளின் வடிவில், இடையில் காஷாயமும், திருக்கையில் தண்டமும் உள்ளவர்களைத்தான் ஸந்நியாசிகள் என்று ஸந்நியாச இலக்கணம் வகுத்துக் கூறுகிறது. ஸந்நியாசிகள் ஒரே இடத்தில் தங்காமல் கால்நடையாக செல்வதின் நோக்கமே அன்பர்கள் இருக்குமிடம் சென்று அருள்பாலிக்கவே.

செல்லும் வழியில் ஊவேரி சத்திரம் என்றொரு கிராமம். நெடுஞ்சாலையில் இருந்து சற்று உள்ளே தள்ளிப் போகவேண்டும். இந்த கிராமத்து மக்கள் ஒரு உரிமைப் போராட்த்தினை செம்பரம் பாகத்திற்கே வந்து நடத்தினார்கள். அவர்களின் வேண்டுகோள் பெரியவர்களின் புனித பொற்பாதம் மீண்டும் ஒரு முறை அவர்களின் கிராமத்தில் பதிய வேண்டும் என்பதுதான். மிகுந்த மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் 21 ஆண்டுகட்கு முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சியினை நினைவு கூர்ந்து கிராம மக்கள் வேண்டுகோள் வைத்தனர்.

1983ம் ஆண்டில் 13-வயது சிறுவனாக, உலகினை துறந்து துறவறம் மேற்கொண்டு, தனது பரமகுருவாம் ஸ்ரீபரமாசார்யாளை தரிசிக்க விருப்பம் கொண்டு இளம் துறவி புறப்படுகிறார் கால் நடையாக, அப்போது பரமசார்யாள் கர்னூலில் முகாமிட்டு இருக்கிறார்கள். அந்த நடை பயணத்தில் கிடைத்தது தான் ஒரு அற்புதமான குரு வந்தன துதி. சீடன் எதை எவரிடம் எப்படிக் கேட்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்தது அந்த துதி. உள்ளத் தூய்மையை வேண்டி தங்கள் திருப்பாதம் நாடி வருகின்றேன் என்று வருவதின் நோக்கத்தை பட்டியலிட்டு காட்டுகிறது அந்த துதி. பரம குருவின் நினைவோடு, நாவில் இறை நாம ஜபத்தோடு நடந்து செல்லும் இளம் துறவி ஓர் இரவு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காஞ்சிபுரம் பக்கத்தில் சொன்ன வண்ணம் செய்த பெருமான் தன் சீடருக்காக ஓர் இரவு, காஞ்சி நகர் விட்டு சென்று ஓரிடத்தில் தங்கி பின்பு மீண்டும் அவன் வேண்டுகோளுக்கு இணங்க காஞ்சி நகர் வந்தடைத்தால் ஓர் இரவு தங்கின இடம் ''ஓரிக்கை''என்ற பெயருடன் விளங்கி வருகிறது. அப்படி ''ஓரிக்கை''யாக மாறியது தான் இந்த ஊவேரி சத்திரம். ஸ்ரீபாலபெரியவர்கள் ஓர் இரவு இங்கு தங்கி அந்த இடத்தை புனிதப்படுத்தி ஆண்டுகள் 21 ஆகி விட்டது. ஒரு தலைமுறை மாறிவிட்டது. அடுத்த தலைமுறைக்கும் அந்த பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று கிராம மக்கள் விரும்புவது நியாயமான கோரிக்கைதானே, கருணை வள்ளல், இசைந்து கிராமத்திற்குள் சென்று, பஜனை மன்றத்தில் அமர்ந்து, கிராம மக்களுடன் சிறிது நேரம் அளவளாவி அவர்களின் தாபத்தைக் தீர்த்து அவர்களிடம் பிரியாவிடை பெற்று பயணத்தை தொடர்ந்தார்கள் ஸ்ரீபால பெரியவர்கள்.

கோவிந்தவாடி ஒரு புகழ்பெற்ற தலம். இங்கு கோயில் கொண்டுள்ள தக்ஷிணாமூர்த்தி மிகவும் பிரஸித்தி பெற்றவர். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து ஆதிகுருவை வணங்கி ஆசி பெற்று செல்வார்கள். ஸ்ரீ பாலபெரியவர்களின் பயணபாதையிலிருந்து சற்று உள்ளடங்கி இருக்கின்ற கிராமம் என்பதால் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி கோயில் பிரஸாதம் நெடுஞ்சாலைக்கு கொணரப்பட்டு ஸ்ரீ பாலபெரியவர்கட்கு வழங்கப்பட்டது.

கோவிந்தவாடியின் ஒரு பகுதியாக இருப்பது கம்மவார் பாளையம். இங்கு மொத்தம் 60 வீடுகள் மட்டும் உள்ளது. இங்குள்ள யாவரும் கம்மவார் நாயுடு இனத்தைச் சார்ந்தவர்கள். அதன் காரணமாகவே இந்த கிராமத்திற்கு 'கம்மவார் பாளையம்'என்ற பெயரே ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்தின் நுழைவாயிலில் கோயில் குடைகள், இரண்டு புறமும் இருக்க நாதஸ்வர இசை கமழ பூர்ண கும்பத்துடன் ஸ்ரீ பெரியவர்கள் வரவேற்கப்பட்டார்கள். சாலையில் நீர் தெளிக்கப்பட்டு அழகு மிக கோலங்கள் போடப்பட்டு சாலையே அழகு மிளிர்ந்திருந்தது. சாலையில் இரு புறங்களிலும் குழல் விளக்குகள் ஒளிவீச, வர்ண சரவிளக்குகள், அழகு சேர்க்க, ஒளிமயமான சாலையில் ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் கற்பூரத்துடன் மங்கல ஆரத்தி எடுத்து பெண்கள் வணங்கி எழுந்தது, நமது கலாசாரமும் பாரம்பர்யமும் காப்பாற்றப்பட்டு வரப்படுகிற கிராமம் இது என்பதை கண்டபோது பெருமையாக இருந்தது.

கிராமத்தின் நுழைவாயிலில் வினாயகர் ஆலயம். ஸ்ரீபெரியவர்கள் தரிசித்து பின் வேணுகோபால ஸ்வாமி ஆலயத்திற்கு விஜயம் செய்தார்கள். திரளாக மக்கள் குழுமி இருந்தனர். இந்த கிராமத்தின் சிறப்பே, பெண்கள் நிரம்ப படித்தவர்களாக அதிகமான எண்ணிக்கையில் இருப்பது.

ஸ்ரீபெரியவர்கள் இந்த கோயிலில் சொற்பொழிவாற்றினார்கள். இங்கு குடி இருப்பவர்கள் யாவரின் தாய்மொழியாக தெலுங்கு இருப்பினும், தெலுங்கில் பேச துவங்கிய பெரியவர்களை தமிழிலேயே உரையாற்ற வேண்ட அவர்களும் தமிழில் நீண்டதொரு உரையாற்றினார்கள்.

அதன் சாரம்:

நமது பாரம்பர்யம் வளரவும் நம்மிடம் சிரத்தை, பிரேமை பக்தி வளரவும் நமது முன்னோர்கள் கோயில்களை கட்டியளித்துள்ளனர். ''கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்'' என்று ஒரு முதுமொழியே உள்ளது. மனிதனுக்கு நல்ல சிந்தனை, செயல், நிலைத்து நிற்க ஆன்மீகம் அவசியம். நல்ல கருத்துக்கள் மனதில் பதிந்து, மனதில் அன்பு வளர்ந்து, நம்பிக்கை மேலோங்கி, அகங்காரம் அகன்று, நம்முடைய தர்மத்தைப் பற்றி கவுரவமாகவும் பெருமையாகவும் நினைக்க, ச்ரத்தையுடன் எல்லா செயல்களையும் செய்து முடிக்கும் திறன் வளர ஆன்மிகம் மிகவும் உதவியாக இருக்கும். உதாரண புருஷனாக, செயல்வீரனாக, பொறுமைசாலியாக, தயாள குணம் கொண்டவனாக, பக்திக்கு எடுத்துக்காட்டாக, சுறுசுறுப்பிற்கு உதாரணமாக, பேச்சுத் திறனுக்கு புகழ்மிக்கவனாக விளங்கியவர் ஆஞ்சநேயர். அவர் உள்ளத்தில் ராம பிரான் என்றும் குடிகொண்டிருக்கிறார். எஜமான விசுவாசியாகவும், எஜமானனின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் ஹனுமான் விளங்கினார். நான்கு திசையும் சீதையைத் தேடி வானரர்கள் சென்றாலும் ஹனுமானிடம்தான் ராமன் கணையாழியை அடையாளமாக தந்து அனுப்பினார். அவ்வளவு நம்பிக்கை தொண்டனிடம். நம்முடைய இளைய சமுதாயம் ஹனுமனை முன்னுதாரணமாக கொண்டிடல் வேண்டும். நம்முடைய பாரம்பர்யம் மிகவும் பழமையானது, புனிதமானது, மஹரிஷிகளும், ஞானிகளும், தபஸ்விகளும், குடும்பப் பெரியவர்களும் நமக்கு விட்டுச்சென்ற சொத்து. இதனுடைய பெருமையை ஒவ்வொருவரும் உணரவேண்டும். விட்டுச் சென்ற சொத்தை வளர்க்காமல் போனாலும் அழிக்காமல், பாதுகாத்துக் கொள்ளவாவது முயன்று செயல்படவேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சம்பிரதாயம் உண்டு. அது பாதுகாக்கப்பட வேண்டும். அவரவர் நெற்றியில் அவரவர் குடும்பப் பழக்கப்படி திலகம் இட்டுக்கொள்ளவேண்டும். இதில் வெட்கப்பட தேவையே இல்லை. ''நீரில்லா நெற்றி பாழ்''என்பது பழமொழி. நா படைத்ததின் நோக்கமே இறைவனின் நாமத்தை சொல்வதற்கென்றேதான். இதனால்தான் வீட்டில் குழந்தைக்கு இறைவன் நாமத்தை சூட்டுகின்றனர். அவர்களைக் கூப்பிடும் முறையாக இறைவன் நாமம் அடிக்கடி சொல்லப்படுகிறது. இறைவன்  ¢நாமத்தைச் சொல்வதற்கு கூச்சமோ, வெட்கமோ கொள்ளத் தேவையில்லை. ஒவ்வொருவரும் காலை மாலை வேளைகளில் சிறிது நேரமாவது தியானம் செய்யும் பழக்கத்தைக் கொள்ளவேண்டும். நமது செயல்களில் வெற்றி அடைவதற்கு இரண்டு மிகவும் முக்கியம்.

இறைவனிடம் பிரார்த்தனை, மற்றொன்று சொந்த ப்ரயத்தனம். பிரார்த்தனை இல்லாத ப்ரயர்த்தனமும், ப்ரயர்த்தனம் இல்லாத ப்ரார்த்தனையும் பயனளிக்காது. வீட்டில் அனைத்து செல்வமும் கிடைக்க வேண்டும். நல்ல நண்பன் அமைவதும் செல்வம்தான். பெண்கள் மாலை நேரங்களில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடல் வேண்டும். விளக்கு இருளைமட்டும் அகற்றுவதில்லை. உடன் நம்மிடம் உள்ள அறியாமை இருளையும் விலக்குகிறது. தீபமங்கள ஜோதி நமோ என்று விளக்கு பூஜை செய்து வழிபடுதல் சால சிறந்தது.

முந்தைய யுகங்களில் இறையருள் பெறுவதற்கு கடுமையாக தவம் இயற்றவேண்டும். உபவாசங்கள் இருக்க வேண்டும். இத்தகைய எந்த விதமான உடல் சிரமும் இன்றி கலியுகத்தில் எளிதில் இறையருளை பெறுவதற்கு சுலபமான வழியாக நாம ஸங்கீர்தனம் வழி செய்கிறது. ஸத்ஸங்கத்தை ஏற்படுத்தி, அதில் பங்கேற்று, அவரவர் தர்மத்தை பின்பற்றுவதன் முலம் காப்பாற்றி அனைவரும் எல்லா நலன்களும் பெற்று சுபிக்ஷமாக வாழ ஸ்ரீபெரியவர்கள் ஆசி வழங்கினார்கள்.

ஸ்ரீ பெரியவர்களுடன் அன்பர் ஒருவர் நாம ஸங்கீர்த்தனம் செய்ய குழமி இருந்தவர்கள் மிகவும் பக்திச் ச்ரத்தையுனி திருப்பிச் சொல்லி ஒரு இறையருள் ஒலி சூழ்துள்ள சூழ்நிலை ஏற்படுத்தினார்கள்.

ஸ்ரீ பெரியவர்களின் பயணக் குழுவிலிருக்கும் இரண்டு இளைஞர்கள் குழுமி இருந்த மக்களை தங்களின் கர்நாடக இசையினால் மகிழ்வித்தனர்.

இந்த கிராமத்தில் இரவு ஒய்வு எடுத்து மறுநாள் பயணம் துவங்கும்.

நாளை மீண்டும் துவங்குவேன்.

5-10-2004 இராமாயணம்

அரிக்கல்பாடி