காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள் திருமலைக்கு புனித கால்நடைப் பயணம் - 4 October 2004
நீண்டகாலத்திற்கு பிறகு உங்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு அடியேனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஒரு நல்ல நாள். காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள் திருமலைக்கு புனித கால்நடைப் பயணத்தை துவக்குகிறார்கள். 1994-ல் இத்தகைய பயணம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அப்போதும் பெரியவர்களுடன் பயணத்தில் கலந்து செல்லும் பாக்கியம் அடியேனுக்கு கிட்டியது. ஒரு சுவையான அநுபவம் அது.
இந்த பயணத்திலும் உடன் கலந்து கொள்ளும் பாக்கியத்தை அடியேனுக்கு ஸ்ரீ பாலபெரியவர்கள் மிகுந்த கருணையுடன் அளித்துள்ளார்கள். இந்த பயணத்தின் அநுபவங்களை, அடியேன் கண்டு சுவைத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் இந்த தொடர் கட்டுரையினை துவக்குகிறேன்.
நேற்று இரவு சென்னையிலிருந்து திரும்பிய பெரியவர்கள் காஞ்சிபுரத்தில் காமாக்ஷி அம்மன் ஆலையத்திற்கு அருகிலுள்ள அன்னதான கூடத்தில் தங்கி ஒய்வெடுத்துக் கொண்டார்கள். சாதுர் மாஸ்ய விரதம் முடிந்து விஜய யாத்திரை துவக்கிய பெரியவர்கள் தங்களின் பாத யாத்திரையை காஞ்சீபுரம் காமாக்ஷி அம்மன் ஆலயத்திலிருந்து துவக்குவதற்காக வந்தபோது மக்கள் வெள்ளம் திரண்டு வந்து ஆர்வத்துடன் வரவேற்பு அளித்து வணக்கம் செலுத்தியது.
விடியற்காலையில் கோ பூஜையுடன் துவங்கிய அம்பாளின் தரிசனத்தை பெரியவர்களுடன் மக்களும் கண்டு களித்தனர். இந்த காட்சியை கண்டபோது அடியேனின் மனம் த்ரேதாயுகத்திற்கு சென்று அப்போது நடந்த காட்சியினைக் கண்டது. கானகம் செல்வதற்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பு ராமன் தாய் கௌசல்யையிடம் வணங்கி ஆசிபெற செல்கிறான். தாய் மங்களாசாசனம் செய்து அனுப்புகிறாள். எந்த தர்மத்தை உறுதியுடனும், அன்புடனும் கடைபிடித்து வருகிறாயோ அந்த தர்மமே உன்னை காப்பாற்றட்டும் என்பது தாயின் ஆசி.
"யம் பாலயாஸி தர்மம் த்வம் தருத்யேன நியமேன ச I
ஸ வை ராகவ சார்தூல தர்மஸ்த்வாம் அபிரக்ஷதுமிமி"
த்ரேதாயுகத்து ராமன் தர்மத்தை நிலைநாட்ட மேற்கொண்ட புனித பயணத்திற்கு தாயிடம் அநுமதியும் ஆசியும் பெற்றதுபோல ஸனாதன தர்மத்தை காக்கவும், நிலைநாட்டவும், தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கலியுக ராமனாம், ஸ்ரீ பாலபெரியவர்கள் தான் மேற்கொள்ளும் புனித பயணத்திற்காக அனுமதியும், ஆசியும் தாயிடம் பெறுவதற்காக அவள் ஆலயம் சென்றது வியப்பில்லையே. சரித்திரம் திரும்புகிறது ( History Repeats) என்பார்கள். கோ பூஜையுடன் தரிசனம் துவங்கியது. அன்னையையும், ஆச்சார்யாளையும் ஒரு சேர கண்ட மக்கள் தாங்கள் கண் பெற்றதின் பயனை இன்று பெற்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது.
தாயின் அனுமதியையும் ஆசியையும் பெற்றபின், தன் ஆச்சார்ய தேவனின் அருளாசிபெற ஆதிசங்கரரின் சந்நிதி சேர்ந்தார்கள் ஸ்ரீ பால பெரியவர்கள். வேத வாக்கினை பிசகாமல் பின்பற்றுபவர்கள் ஸ்ரீ பாலபெரியவர்கள். வேதம் மாத்ருதேவோ பவ. பித்ரு தேவோ பவ. ஆச்சார்ய தேவோ பவ என்று வரிசைப்படுதக்திக் கொடுத்துள்ளது. முதல் குருவாம் தாயிடம் ஆசியும், அருளும் பெற்றபின் ஆச்சார்யாரிடம் அருளாசிபெற செல்கின்றார்கள் ஸ்ரீபால பெரியவர்கள். ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் அளித்தாள் அம்பிகை. பெற்ற தந்தை யாருடைய பாலை c குடித்தாய் என கோல் கொண்டு அதட்டிய தந்தைக்கு தோடுடைய செவியன் விடையேரி என் உள்ளம் கவர் கள்வன் என்று தந்தையை காட்டியவன் குழந்தை ஞானசம்பந்தன். அருள் ஞானத்தை, அறிவுக்கண்ணை திறந்து வைத்த ஆசானும் தந்தையே என வகைப்படுத்துவர் அறிஞர்கள். அந்த முறையில் அருள் ஞான தந்தையாய் சிவபெருமானின் மறு அவதாரமாய் (சங்கர:சங்கர ஸாக்ஷ£த்) வந்து ஸ்ரீ மடத்தை ஸ்தாபித்து என்றும் அருளாசி புரிந்து கொண்டிருக்கும் ஆதி சங்கரரை வணங்கி அவரின் அனுமதியும் ஆசியும் பெற்றார்கள் ஸ்ரீ பால பெரியவர்கள்.
கோயிலை விட்டு வெளி வந்த பின் கோபுர வாசலில் வேத விற்பன்னர்களுக்கு யாத்ரா தானம் அளித்து, தேவியின் மாட வீதியை வலம் வந்து, குமர கோட்டத்து முருகப் பெருமானின் அருள் பெற்று, ஸ்ரீமடத்தின் காவல் தெய்வமாக எதிரில் நிற்கும் ஆஞ்சநேயரை வணங்கி, ஸர்வதீர்த்த குளக்கரையில் உள்ள ஈசன் கோயிலிலும் அம்மன் கோயிலிலும் வழிபட்டு ஆசிபெற்று தனது பயணத்தை மேற்கொண்டார்கள். காஞ்சிபுர எல்லை வந்தவுடன் காஞ்சி வாழ் பக்தர்கள் பெரியவர்களிடம் பிரியா விடை பெற்று திரும்பி விட பயணம் தொடர்ந்தது. வழிநெடுக பக்தர்கள் பெரியவர்களைக் கண்டு பிரஸாதம் பெற்று மகிழந்தனர்.
சுமார் பத்து கிலோ மீட்டர் சென்ற பின் ஆசிரிய பயிற்சி பள்ளி ஒன்றில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டாகள். சற்று ஓய்வுக்குப் பின் பயணம் தொடரும்.
அடியேனும் இந்த இடைவேளைக்குப் பிறகு மீண்டும் உங்களுடன் தொடர்பு கொள்வேன்.
04-10-2004 இராமாயணம்
செம்பரம்பாக்கம்