Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஆசாரத்தைக் காக்க உதவி : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

நான் சொல்கிறது எல்லோருக்கும்தான் என்றாலும் ப்ராம்மணர்களில் வசதியுள்ள பென்ஷனர்களுக்கு இதைக் குறிப்பாகச் சொல்கிறேன். மற்ற ஸமூஹங்களில் நிராதரவான இளைஞர்களை ஆதரிக்க அந்தந்த ஸமூஹத்தில் வசதியுள்ளவர்கள் நிரம்ப ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். ப்ராமணர்களுக்குத்தான் அந்த ‘ஸ்பிரிட்’ இல்லை. காலேஜ் அட்மிஷன், உத்யோகம் பெறுவது எல்லாவற்றிலுமே கம்யூனல் ஜீ.ஓ. வந்த நாளாக ப்ராம்மணப் பசங்கள் அதிகக் கஷ்ட தசையில் இருக்கிற இப்போதும் அந்த ஸமூஹத்தில் ஸெளகர்யமுள்ளவர்கள் இதை கவனிக்காமலிருப்பது நியாயமில்லை.

ஒரு காலத்தில் ப்ராம்மணப் பசங்களை காலேஜ் அட்மிஷன், அப்பாயின்ட்மென்ட் எல்லாவற்றிலும் ஸர்க்கார் கழித்துக் கட்டுவதைப் பார்த்து நான் ஸந்தோஷப்பட்டதுகூட உண்டு. ஆமாம், ஸந்தோஷந்தான் பட்டேன்! ஏனென்றால், ”இவன் தனக்கான வேத வித்யையையும், எளிய வாழ்க்கையையும் விட்டுவிட்டுப் பணமே குறியாக துராசாரத்தில் இறங்கியிருப்பதற்கு இந்த இங்கிலீஷ் படிப்பும், உத்யோகமும்தானே காரணம்? இவனாக இதுகளை விடாவிட்டாலும், மற்றவர்களும் ஸர்க்காரும் சேர்ந்து இவனுக்கு இதுகள் கிடையாது என்று விரட்டி அடிப்பதால், இப்போதாவது வேறு வழியில்லை என்று அத்யயனத்துக்குத் திரும்பி, உள்ளதே போதும் என்று த்ருப்தனாக ப்ராம்மண லக்ஷணப்படி க்ராமத்தோடு இருந்துகொண்டு ஸிம்பிகளாக வாழ ஆரம்பிப்பானல்லவா?” என்று மனப்பால் குடித்துத்தான் ஸந்தோஷப்பட்டேன்.

ஆனால் நடந்தது என்ன என்றால், இவனுக்கு மேல் படிப்பில்லை, அழுக்குப்படாத உத்யோகமில்லை என்றதும், இவன் தன் ப்ராசீன ஜீவித முறைக்குத் திரும்பாமல், இன்னம் படுமோசமாகத் துராசாரத்திலேயே இறங்க ஆரம்பித்து விட்டான். ஸினிமாவில் சேர்வது, மிலிடரியில் சேர்ந்து மது மாம்ஸாதிகளைச் சாப்பிடுவது, ஹோட்டலில் சேர்ந்து கொஞ்சம்கூட ஆஹார சுத்தமில்லாமல் தின்பது என்றெல்லாம் ஆரம்பித்து விட்டான். இதைப் பார்த்த பின்தான் எனக்கு இதைவிட இவனை வேறு விதத்தில் இங்கிலீஷ் படிப்பும் லௌகிகமான தொழிலும் பெறும்படிப் பண்ணிவிட்டு, அதோடு கூடத்தான் முடிந்த மட்டும் ப்ராம்மண தர்மங்களை அநுஷ்டிக்கச் செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. இதில்தான் பென்ஷனர்களின் ஸஹாயத்தைக் கேட்கிறேன்.
முதலில் ப்ராம்மணன் தலையில் கைவைத்தது பரவிப் பரவி இப்போது ‘ஃபார்வர்ட் கம்யூனிடீஸ்’ என்று பேர் வைக்கப்பட்ட செட்டிமார், முதலியார், பிள்ளைமார் என்று ஒவ்வொரு ஸமூஹமாகக் காலேஜ் அட்மிஷன், ஸர்க்கார் உத்யோகம் எல்லாவற்றிலும் பின்னால் தள்ளப்படுவதில் முடிந்திருக்கிறபடியால், இவர்கள் எல்லாரும் எதிர்காலத் தலைமுறைகள் விஷயத்தில் விழிப்போடு ஏற்பாடு செய்ய வேண்டும். பின்தங்கிய வகுப்பினர் என்பவர்களுக்கும் நம்மாலான ஸகல உபகாரமும் செய்யத்தான் வேண்டும். பரோபகாரத்தில் மேல் ஜாதி, கீழ் ஜாதி என்கிற எண்ணமே தப்பு என்பதுதான் நம் motto-வாக [லக்ஷிய வாசகமாக] இருக்க வேண்டுமாயினும், இந்த படிப்பு, உத்யோகம் ஆகிய விஷயங்களில், சில வகுப்பாருக்கு உரியதையும் புறக்கணித்து ஸர்க்காரே பிற்பட்ட வகுப்பாருக்கு அதிகப்படி சலுகை காட்டுவதால்தான், இந்த விஷயத்தில் மட்டும் நான் கொஞ்சம் கம்யூனல்-பேஸிஸில் (வகுப்பு அடிப்படையில்) பேசியாக வேண்டியிருக்கிறது. Depressed என்று சொல்கிறார்களே, அந்த தாழ்த்தப்பட்டவர்களை நியாயமாக முன்னேற்றுவதை நான் ஆக்ஷேபிக்கவில்லை. ஆனால் இப்படிச் சொல்லிக்கொண்டு செய்கிற காரியங்கள் மற்றவர்களை depress பண்ணித் தாழ்த்தி வைப்பதற்காக ஆகிறபோது இவர்கள் தாங்களாகவே மேலே எழும்புவதற்கு முயற்சி பண்ண வேண்டும் என்கிறேன். இந்த இனத்தில் மட்டும் தங்கள் வகுப்புக்குத் தனியாக உபகாரம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்கிறேன்.

அதாவது ஸர்க்காரும் கைவிட்டு, சொந்த ஸமூஹத்திலும் போதிய ஆதரவு இதுவரை பெறாத ப்ராம்மணப் பசங்களுக்குக் குறிப்பாகவும், மற்ற முன்னேறிய வகுப்பினர் எல்லோருக்குமே பொதுவாகவும் இந்த ஸமூஹங்களைச் சேர்ந்த பென்ஷனர்கள் ஒன்று சேர்ந்து ட்யூடோரியல் காலேஜ் வைத்துப் பலவிதமான தொழில்களும் சொல்லிக்கொடுக்க வேண்டும். பென்ஷனர்கள் தங்களுக்குச் சம்பளம் வாங்கிக் கொள்ளாமல் இவற்றில் ஆசிரியர்களாகச் சொல்லிக் கொடுத்தால் விசேஷம். ஆனாலும், ஒரு காலேஜ் என்று நடத்தினால் இதர செலவுகள், maintenance charges ஆகுமல்லவா? அதனால், அவசியச் செலவுக்கு மட்டும் கட்டுப்படி ஆகிறமாதிரி குறைச்சல் ஃபீஸ் வாங்கலாம். இதன்மூலம் முன்னேறியதாகச் சொல்லப்படும் ஜாதிக்காரப் பிள்ளைகள், இவ்வளவு தூரம் தங்களை பஹிஷ்கரிக்காத ஸென்ட்ரல் ஸர்வீஸ், பாங்கு, கம்பெனிகள் ஆகியவற்றில் வேலைக்குப் போவதற்கோ, ஸ்வதந்திரமாக ஒரு தொழில் செய்து பிழைத்துப் போகவோ வழிசெய்ததாகும். ட்யூடோரியல் காலேஜில் படித்தால் அப்புறம் ப்ரைவேட்டாக அநேக யூனிவர்ஸிடிகளில் பரிக்ஷை எழுதி டிகிரி வாங்கலாமல்லவா? ரெகுலர் காலேஜ்களில்தான் ஸர்க்கார் ஸீட் ரிஸர்வேஷன் வைத்து இவர்களை விரட்டுகிறதே!அதனால்தான் இந்த யோசனை.

பல துறைகளில் அநுபவஸ்தர்களான பெரியவர்கள் ரிடையராகி ஓய்வில் இருக்கிறீர்களல்லவா? நீங்கள் ஒன்று சேர்ந்து கணிதம், ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, மற்றும் புது ஸயன்ஸ்கள், என்ஜினீயரிங், அக்கவுன்டன்ஸி. இன்னம் இப்போது ஏற்பட்டிருக்கிற அநேக டெக்னலாஜிகல் ஸப்ஜெக்ட்கள், வீவிங் (நெசவு) போன்றவை கூடத்தான், ஸங்கீத வாத்யங்கள் வாசிப்பதைக் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்-இந்த எல்லாவற்றிலும் பயிற்சி தருவதற்குப் பிரைவேட்டாக ட்யூட்டோரியல் காலேஜ் ஆரம்பியுங்கள்* போதகர், போஷகர் இரண்டாகவும் இவற்றில் பணிசெய்து இரட்டிப்புப் புண்யம் பெறுங்கள். கற்ற வித்தையை, உங்களுக்கு இத்தனை நாள் ஸம்பாத்யமும் இப்போது பென்ஷனும் வாங்கிக் கொடுக்கிற வித்தையை, தினம் ஒருமணி இரண்டுமணி பிறருக்கு உபகாரமாகச் சொல்லித் தரக்கூடாதா? இதனால் ஒரு பெரிய ஸமூஹ ப்ரச்னை தீரவும் உதவி செய்ததாகிறது.

வெறுமனே தொழிலுக்கான படிப்பாக மாத்திரமில்லாமல், இந்த ட்யூடோரியல் காலேஜ்களில் அவரவர் குலாசார முறைப்படிக் கொஞ்சம் ஸமயக் கல்வியும், அநுஷ்டான போதனையுங்கூடக் கொடுக்கலாம்.

இந்த ஸமயக் கல்வி போதனையில் பிற்பட்ட வகுப்புக்காரர்களுக்கும் முன்னேறிய வகுப்புக்காரர்கள் ஏற்பாடு செய்து தரவேண்டும். ஸர்க்காரின் ஏற்பாட்டில் அவர்களுக்கு தெய்வபக்தி உண்டாக்க எதுவுமில்லை. அது மட்டுமில்லாமல் அவர்களுக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்கிற நாஸ்திகக் கட்சிகளின் வலையிலும் அவர்கள் விழப் பார்க்கிறார்கள். இதே ஸமயத்தில் அவர்களைப் படிப்பு, பதவி, இவற்றிலும் தூக்கிவிட்டு, உரிமை, ஸ்ட்ரைக், ஒத்துழையாமை என்றெல்லாம் வேறு சொல்லிக் கொடுப்பதால், தலைமுறை தலைமுறையாக அவர்களுக்கு வந்தருக்கிற ஸ்வபாவமான பக்தியும், அடக்கப் பண்பும் மறைந்துபோய் அவர்கள் தறிகெட்டுப் போகும்படியான நிலை உண்டாகியிருக்கிறது. ஆனபடியால் அவர்களையும் தெய்வத்தின் பக்கம் திருப்ப வேண்டிய கடமை ஜன ஸமுதாயம் முழுவதற்குமே இருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இங்கே என்ன சொன்னேனென்றால், ஸம வாய்ப்பு இழந்து விட்டவர்களுக்காக வைக்கிற ட்யூட்டோரியல் காலேஜ்களில் அவரவர் குலாசாரப்படி ஸமயக்கல்வி, அநுஷ்டானங்களையும் போதிக்கலாம் என்பது. இப்போது லோகம் இருக்கிற இருப்பில், இதை ‘கம்பல்ஸரி’யாகப் பண்ணினால், இம்மாதிரி காலேஜில் சேர வருகிறவர்களே குறைந்து போய்விடுவார்களோ என்று பயமாயிருக்கிறது! ஆனபடியால் இதை ‘ஆப்ஷன’லாக வைக்கலாம். கட்டாயப் பாடமாக இல்லாததாலேயே ‘இதில் என்னதான் இருக்கு? பார்ப்போமே!’ என்று பலருக்கு ஆர்வம் ஏற்பட்டு இஷ்ட பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.

காளைப் பருவத்தில் ஆஹார சுத்தி இல்லாமல் கண்டபடிச் சாப்பிட்டு மாணவர்கள் மனஸ் விகாரப்படுவதைத் தடுப்பதாக, இந்தக் காலேஜ்களில் சாஸ்திர ஸம்ப்ரதாயப்படியான ஹாஸ்டல்களும் வைக்கலாம்.

ஆஹாரசுத்தி ஆத்ம சுத்திக்கே அஸ்திவாரம் மாதிரி. அது இப்போது ரொம்பவும் சீர்கெட்டுப் போயிருக்கிறது. கண்டதைத் தின்பதற்குக் கண்ட இடமெல்லாம் ஹோட்டல் மயமாயிருக்கிறது. முன்னே ஹோட்டல் என்பதே என்னவென்று நம் ஸமூஹத்துக்குத் தெரியாது. ஹோட்டல் வைத்துக் காசு வாங்கிக் கொண்டு அன்ன விக்ரயம செய்வது (உணவை விற்பது) நம் சாஸ்திரப்படி பாபமேயாகும். முன்னெல்லாம் ஊருக்கு ஊர் இதனால்தான் யாத்ரிகர்களுக்காக சத்திரம் என்று தர்மசாலை இருந்தது. அதிலே சாஸ்திரப்படியான ஆஹாரமே, நாள் கிழமைகளிலும் வ்ரத உபவாஸ தினங்களிலும் எப்படிப் போடணுமோ அப்படியே போட்டு வந்தார்கள். யாத்ரிகர்கள் இம்மாதிரி போஜனம் பண்ணுவதில் அவர்களுக்கு ”ஏற்பது இகழ்ச்சி” என்பது இல்லாமலே, சத்திரம் நடத்துகிறவர்களுக்கு மட்டும் ஈகையின் புண்யம் கிடைத்து வந்தது!

மற்றவர்களை விடவும், வித்யாப்யாஸம் செய்கிற இளம் பருவத்திலிப்பவர்களை வயோ சேஷ்டையால் புத்தி விகாரப்படாமல் ரக்ஷிக்க வேண்டியது ரொம்பவும் அவசியமானதால் அவர்களுக்காக சாஸ்த்ரீயமான ஹாஸ்டல்கள் வைத்து சுத்தமான ஆஹாரம் போடுவதை முக்யமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையின் கடைசி ஸ்திதியில் இருக்கும் பென்ஷனர்களான நீங்களே யோசித்துப் பாருங்கள். எத்தனையோ ஆயிரம் வருஷமாக நம் பெரியோர்கள் ரக்ஷித்துக்கொடுத்த ஆசார, ஆஹார சுத்திகள் இன்னவென்றே தெரியாமல் இளந்ததலைமுறையினரால் தாரை வார்க்கப்பட விடலாமா? விடக்கூடாது என்றால், யாரைக் கொண்டு இதைப் பண்ணுவது? ராஜாதான் முன்காலங்களில் தர்ம ரக்ஷணத்தை கவனித்துக் கொண்டது. ஆனால் இப்போதுள்ள ஸர்க்காரைக் கொண்டு ஆசார அபிவிருத்திக்கு ‘ரூல்’ போடப் பண்ண நினைப்பதே பரிஹாஸம் அல்லவா? நேராக இந்த ஆசாரங்களைத் தாங்களே நாசம் பண்ணுவதோ அல்லது பிறர் நாசம் பண்ணும் போதாவது ‘ஆஹா’ என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதோதான் நம் தேசத்தில் ‘முற்போக்குக்காரர்’களின் கொள்கையாக இருக்கிறது. அவர்களை மீறி நம்முடைய ‘ஸெக்யூலர்’ராஜாங்கமும் போகாது. ஆகையால் நம்முடைய புராதன தர்மங்களைக் காப்பாற்ற நாமேதான் ஆனதைச் செய்ய வேண்டும் எனவே உங்களில் கற்றறிந்து, அநேக இடங்களில் நல்ல பதவிகள் வகித்து ஓரளவு செல்வமும் செல்வாக்கும் பெற்று தற்போது நிறைய ஸாவகாசம் பெற்றுள்ள பென்ஷர்களான பெரியோர்களே இந்த விஷயத்தில் தங்களாலியன்ற பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.


* கம்ப்யூட்டர் சகாப்தம் பிறப்பதற்கு முன் கூறியது. எனவே அந்தப் பயிற்சியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ரிடையர் ஆனவர்களுக்கு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  பள்ளிப்படிப்போடு பண்டைய சாஸ்த்ரங்கள்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it