Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

குளம் வெட்டும் பணி : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

முதலில் நான் சொன்னமாதிரி, நானே க்ராமம் க்ராமமாகப் போய் இந்தக் காரியங்களை emphasize செய்தபோது, நல்ல response இருந்தது. அதுவும், இவற்றில் குளம் வெட்டுகிற கைங்கர்யத்தைப் பார்க்கும்போது எனக்கே ரொம்ப நிறைவாக இருந்தது. கூலிக்கு வேலையாக இல்லாமல் அன்புப் பணியாக இது நடக்க வேண்டும் என்றுதான் ஏற்பாடு. ஆனால் ரொம்பவும் ஏழைகளாக இருக்கப்பட்ட குடியான ஜனங்களுக்குச் சாப்பாடு போடுவது என்று வைத்திருந்தோம். இருந்தாலும், அநேக இடங்களில் அந்தப் பரம ஏழைகள்கூடத் தாங்களே சோறு கட்டிக் கொண்டுவந்து உத்ஸாஹத்தோடு குளம் வெட்டியதைப் பார்க்கிறபோது, ‘நம் தேச ஏழைகளுக்கு இன்னம் நல்ல பண்புகள் போகவில்லை; நாம்தான் அதை ஸரியாகக் கார்யத்தில் கொண்டு வரவில்லை’ என்று தெரிந்தது. ரதோத்ஸவம் மாதிரி, பெரிய பெரிய மிராஸ்தாரிலிருந்து அந்த மிராஸில் கடைசியாக நிற்கிற பண்ணையாள் வரையில், ச்ரௌதிகளின் பத்தினியிலிருந்து புல்லுக் கட்டுக்காரி வரையில் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து பூர்த்த தர்மம் செய்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ”அப்புறம் நடக்கிற பரோபகாரம் இருக்கட்டும்; இப்போது இப்படி ஸமூஹம் முழுக்க ஐக்யமாகச் சேர்ந்திருக்கிறதே, இதுவே போதும்; என்று இருந்தது. ஒரு தடவை நல்ல பௌர்ணமி ராத்திரி. அந்த நிலா வெளிச்சத்திலே மாயவரத்துக்குக் கிட்டே இப்படித்தான் ஸகல ஜனங்களும் ஒரு மனஸாகச் சேர்ந்து குளம் வெட்டினார்கள். நானே போய்க் கூட இருந்து பார்த்துக் கொண்டேன். வெட்டுவது ஜில்லென்று குளம்; சந்திரிகையும் ஜில்லென்று வர்ஷித்துக் கொண்டிருந்தது; தொண்டு ரூபமாக அத்தனை உள்ளங்களும் ஜில்லென்று அன்பை வர்ஷித்துக் கொண்டிருந்தன. இப்போது நினைத்தாலும் நெஞ்சு குளிர்கிறது. அப்புறம் நான் நூறாயிரம் கார்யத்தை வைத்துக்கொண்டு எங்கெங்கோ சுற்றப்போனதில் அவர்களுக்கு உத்ஸாஹம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. இதை விட்டு விட்டுப் போனது என் தப்புத்தான்.

தஞ்சாவூர் ஜில்லாவில் மாத்திரம் இரண்டாயிரம் ஸங்கங்கள் போல் நிறுவி, ஒவ்வொன்றுக்கும் ஒரு முத்திராதிகாரிகளையும் உப முத்திராதிகாரியையும் தொண்டர்களையும் நியமனம் பண்ணியிருந்தோம். தாலுகா கமிட்டி, கோட்டகக் கமிட்டி, க்ராமச் சங்கம் என்று இதை மூன்றாகப் பிரித்திருந்தோம். (நாலு க்ராமம் சேர்ந்து ஒரு கோஷ்டம், அல்லது கோட்டகம் என்று வைத்திருந்தோம்) பட்டணங்களில் தெருவுக்கு ஒரு முத்திராதிகாரிகூடப் போட்டோம். அநேகமாக தஞ்சாவூர் ஜில்லா க்ராமங்களில் எல்லாம் மடத்துக்கென்றே பட்டயமான்யம் என்று ஒரு துண்டு நிலம் இருக்கும். அவற்றின் வருமானத்தை எல்லாம் முத்திராதிகாரிகளிடமே ஒப்படைத்து இந்த ஜீவாத்ம கைங்கர்ய தர்மங்களைப் பண்ணச் செய்தோம். சுமார் 5000 தொண்டர்கள் சேர்ந்து, ரொம்ப ஈடுபாட்டோடு பணிகள் செய்து வந்தார்கள். ஸூர்யோதயத்திலிருந்து ஸூர்யாஸ்தமனம் வரை, பௌர்ணமியானால் ராத்திரி பூராவும் ஊர்ஜனங்கள் எல்லாரும் ஏக மனஸாக பகவந் நாமாவைச் சொல்லிக் கொண்டு குளம் வெட்டியது இப்போது கூடக் கண் முன்னால் நிற்கிறது.

ஒவ்வொரு க்ராமத்திலும் இருக்கிறவர்கள் ஒன்று சேர்ந்தது மட்டுமில்லை. நாலு நாலு க்ராம ஜனங்களாகச் சேர்ந்து ஒரு வருஷம் ஒரு க்ராமத்தில் குளம் வெட்ட வேண்டும் இருக்கிற குளத்தை தூர் வார வேண்டும்; அடுத்த வருஷம் இவர்கள் அந்த நாலில் இன்னொரு க்ராமத்தில் இந்தப் பணியைச் செய்ய வேண்டும்; அதற்கடுத்த வருஷம் மூன்றாவது க்ராமத்தில், அதற்கும் அடுத்த வருஷத்தில் நாலாவது க்ராமத்தில் பண்ண வேண்டும் என்று வைத்ததால் கோட்டக ஜனங்களுக்குள்ளே ஒற்றுமை, ஒத்துழைப்பு உண்டானதோடு, அது தாற்கலிகமாய் இருந்து பிசுபிசுத்து விடாமல், நாலு வருஷமாவது உயிரோடு நீடித்து வந்தது. தஞ்சாவூர் ஜில்லாவில் நாலு ஐந்து மாஸம் ஜலம் இருக்காதாதலால் ‘காதம்’ என்கிற இந்தக் குளம் வெட்டுகிற பணிக்கு நிறைய அவசியம் உண்டு. சேரியிலும் வெட்ட வேண்டும், இன்னும் ஜனங்களுக்கு என்றே இல்லாமல் ஆடு மாடுகளாக்காகவும் ஊருக்கு வெளியில் மேய்ச்சல் பூமியில் வெட்ட வேண்டும் என்றெல்லாம் ஏற்பாடு பண்ணி அப்படியே நடந்து வந்தது. வெயிலில் கஷ்டப்படுகிற வாயில்லா ஜீவன்களுக்குத் தண்ணீர் கைகங்கர்யம் செய்வது உத்தமமான தர்மம்.

சாஸ்திரத்தில், குளிக்கப் போகிற ஒவ்வொருவனும் குளத்திலிருந்து நாலு கை மண் அள்ளிப்போட்டு விட்டுக் குளிக்க வேண்டும் என்று ஸூக்ஷ்மமாகச் சொல்லியிருக்கிற ஸ்வல்ப தர்மத்தைப் பின்பற்றினால் ஜலக் கஷ்டம் எவ்வளவோ குறையும்.

கோனேரிராஜபுரத்தில் ஒரு ப்ராம்மண குடும்பம். அவர்கள் எங்கே குளம் வெட்டினாலும் அதற்குப் பாதிப் பணம் கொடுப்பார்கள். ஆனால் ஒரு கண்டிஷன் சொல்வார்கள். அதாவது, குளத்துக்கு ஒரு பக்கம் படித்துறை கட்டாமல், நிலத்தையே ஜல மட்டம் வரை சரித்துவிட வேண்டும் என்பார்கள். ஏனென்றால், ஆடு மாடுகளுக்குப் படிகளில் ஸெள‌கர்யமாக இறங்கிவந்து நின்று ஜலம் குடிக்கத் தெரியாது. எனக்கு ஆசை, ஹரிஜனங்களும் குடியான ஜனங்களும் நம்ம மடத்துப் பிரதிநிதிகளாகக் கோட்டகம் தோறும் கால்நடைகளுக்கென்று குளம் வெட்டவேண்டும் என்று.

பட்டுக்கோட்டை தாலுகா தவிர ஜில்லா முழுக்க இப்படி நிறையச் செய்தோம். பட்டுக்கோட்டையில் ஒவ்வொரு வீடுமே ஒரு காடாக இருக்கும். இடுப்பளவு வெட்டினாலே ஜலமும் வந்தவிடும். ஒரு பண்ணையார் வீடு என்றால் பண்ணையாள் வீடு உள்பட எல்லாம் அந்த வேலிக்குள்ளே இருக்கும். அதனால் அவனவன் பாட்டுக்கு ஜலம் உள்ளேயே கிடைக்கும். இதனால் அங்கே மட்டும் ‘காத’த் திருப்பணி செய்யாமல் எல்லோருமாக சேர்ந்து ரோடு போட்டார்கள்.

பொதுவாக, முத்ராதிகாரிகள் திட்டத்தில் மாஸத்தில் இரண்டு ஏகாதசியும் புராண படனம், வருஷத்தில் ஒரு கோட்டகத்தில் ஒரு குளம் வெட்டுவது என்ற இரண்டும் நன்றாக நடைபெற்றன.

பிற்பாடு ஸமூஹத்துக்கு ஒரு நன்மை கிடைப்பது பிற்பாடு இந்த மாதிரி உழைப்பே ஒருத்தனுக்கு சித்தசுத்தி தருவது எல்லாவற்றுக்கும் மேலாக, அப்போதே இம்மாதிரிக் கார்யங்கள் பல ஜனங்களை ஜாதி, ‘ஸ்டேடஸ்’ சண்டைகளில்லாமல் ஒரு குடும்பமாகச் சேர்த்து வைத்ததைப் பார்த்ததிலிருந்து தனித்தனியாகப் பரோபகாரம் செய்வதைவிடப் பலர் சேர்ந்து ஸங்கமாகச் செய்வது ரொம்ப விசேஷமானது என்று தெரிந்தது. கழகம், கம்யூனிஸம் எல்லாவற்றுக்கும் பெரிய மாற்று மருந்து, கொஞ்சங்கூட அரசியல் வாடையே இல்லாத பொதுநலப் பணிதான் என்றும் தெரிந்தது.

பலர் சேரவேண்டும் என்பதற்காக இதை ஒரு அஸோஸியேஷன் என்று சொல்லி ரிஜிஸ்டர் பண்ணி, சேர்மன், ஸெக்ரடரி, கவர்னிங் பாடி அது இது என்று சொல்லிக்கொண்டு, ‘ஸ்தானங்கள்’, அதற்காக சண்டை போட்டி என்று ஆகிவிடக்கூடாது. பரோபகாரத்தின் பெரிய பலனாக அஹம்பாவ நாசமே இதனால் அடிப்பட்டுப் போய்விடும். அதனால் இதிலே ‘ஆஃபீஸ்’ எதையும் உள்ளே விடக்கூடாது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is கோ ஸம்ரக்ஷணை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  வார வழிபாடு
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it