Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

தொண்டின் உட்பயன்கள்; ‘திரு’ப்பணி : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இதனாலெல்லாம் என்ன பெரிய ப்ரயோஜனம் வந்துவிடப் போகிறது என்று நினைக்கக் கூடாது. ராமாயண அணில் நமக்கெல்லாம் முன்னுதாரணம். அத்தனாம் பெரிய ஸேது பந்தத்தில், ‘நாம் அல்ப ஜந்து, என்ன பெரிய ஸஹாயம் பண்ணமுடியும்?’ என்று அது நினைத்ததா? அது பண்ணின ஸேவை ராமருக்கு என்ன உபகாரம் பண்ணிற்றோ பண்ணவில்லையோ, அதற்கே பெரிய உபகாரம் பண்ணி விட்டது – ஸ்ரீராமனின் கருணையை, கர ஸ்பரிசத்தை ஸம்பாதித்துத் தந்துவிட்டது. இப்படி ‘நாம் என்ன பண்ணி கிழிக்கப் போகிறோம்?’ என்று ஒதுங்கியில்லாமல், நம்மாலான தொண்டு செய்தால், மற்றவருக்கு நம்மால் நல்லது நடந்தாலும் நடக்காவிட்டாலும் நமக்கு ஈஸ்வரப் பிரஸாதம் கிடைத்து சித்த சுத்தி லபித்துவிடும்.

ராமாயண அணில் மாதிரி இரண்டு பேரை என் lifetime-ல் நினைக்கிறேன். (1944 பிப்ரவரியில்) காஞ்சீபுரத்தில் காமாக்ஷிக்குப் பெரிசாகக் கும்பாபிஷேகம் பண்ணினபோது, திருநெல்வேலியில் ஏதோ சின்ன கடை வைத்திருந்த ஒருவர், ‘என்னால் இதற்குமேல் பண்ணச் சக்தி இல்லையே!’ என்று மனஸார வருத்தப்பட்டு நீளமாக எனக்கு ஒரு கடிதாசு எழுதி, ஒரு ரூபாய் மணிஆர்டர் பண்ணியிருந்தார். இதேமாதிரி இளையாத்தங்குடியில் ரொம்பப் பெரிசா முதல் ஸதஸ் (1962 நடைபெற்ற ஆகம-சில்ப-வ்யாஸ பாரத-கிராமகலா-வித்வத்-ஸதஸ்) நடத்தினபோது சென்னையிலிருந்து ஒருத்தர் ஐந்து ரூபாய் அனுப்பி வைத்து, பெரிய டொனேஷன்களோடுகூட இந்த அல்பக் காணிக்கையையும் அங்கீகரிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். பெரிய டொனேஷனெல்லாம் மறந்து போனாலும், அந்த ஒரு ரூபாயும், இந்த அஞ்சு ரூபாயும் என் மனஸை விட்டுப் போகவில்லை.

முன்னேயே நான் திரும்பத் திரும்பச் சொன்ன மாதிரி நம்முடைய தானம், தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபமடைந்தாலும், அடையாவிட்டாலும் நம்முடைய மனஸின் அஹங்காரம் நிச்சயமாகக் குறையும். ஸங்கமாக எல்லாரும் சேருவதால் ஸமூஹத்தில் ஸெளஜன்யம் உண்டாகும். எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டினால், அப்போது கொஞ்சம் கொஞ்சம் நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் ஜலம் வருவதைவிட நம் நெஞ்சில் ஈரம் வருகிறதே, அது போதும்! இந்த ஈரம், அன்பு, அருள் பரமாத்ம ஸ்வரூபத்தை நாம் உணருவதற்குப் பிரயோஜனமாகும். ‘பகவானிடத்தில் பக்தி வரவேண்டும், அவனருள் கிடைக்க வேண்டும்’ என்றால் எப்படி வரும்? பரோபகாரம் பண்ணி மனஸ் பக்குவமானால்தான் நிஜ பக்தி வரும். ஈஸ்வராநுக்ரஹமும் வரும்.

அநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது, ப்ராணி வதையைத் தடுப்பது பசு வளர்ப்பது, பசிக்கஷ்டம் யாருக்கும் வராமல் உபசரிப்பது என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால் பரமேஸ்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும்.

ஈஸ்வராநுக்ரஹம் எங்கேயும் ப்ரவாஹம் மாதிரி ஓடிக்கொண்டேன்தான் இருக்கிறது. ஆனால் நம் மனஸ் கல்லாக இருந்தால், கல்லுக்குள் ஜலம் ஊறாத மாதிரி அநுக்ரஹத்தை நம்மால் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அதுவே ஒரு துணியை வெள்ளத்தில் போட்டால் அதுதானே விரிந்து ஜலத்தை இழுத்துக் கொள்கிறது. துணியை வெளியே இழுத்துப் பிழிந்தால் ஜலம் கொடுக்கிறது. கல் மனஸைப் பரோபகாரத்தில் இப்படி லேசாகத் துணி மாதிரி ஆக்கிக் கொண்டால் எப்போதும் நம்மைச் சூழ்ந்திருக்கிற அநுக்ரஹத்தை நன்றாக உறிஞ்சிக் கொள்ளலாம். ஜீவனுக்குச் செய்கிற பெரிய உபகாரம் அவனுக்குக் கருணாமூர்த்தியான ஈசனிடம் பிடிப்பு ஏற்படுத்தித் தருகிற திருப்பணிதான்.

பணி என்றால் ஸர்வீஸ். ஸ்கூல் வைப்பது, ஆஸ்பத்திரி கட்டுவது, ஜல வஸதி பண்ணித் தருவது எல்லாம் ஸர்வீஸ்தான். நாம் ஸோஷல் ஸர்வீஸ்-ஸமூஹப் பணி-என்றாலே இதுகளைத்தான் நினைக்கிறோம். ஆனால் இந்தப் பணியெல்லாம் இறைபணியில் கொண்டு சேர்த்தால்தான் நிறைவுள்ளதாகும் என்று நமக்குப் புரிய வைக்கிறதற்காகத்தான் ஈஸ்வர ஸம்பந்தமான பணிக்கே ‘திரு’ என்று அடைமொழி கொடுத்து ‘திருப்பணி’ என்று பேர் வைத்திருக்கிறார்கள். ‘திருப்பணி’ என்கிற வார்த்தை எல்லா ஸர்வீஸுக்கும் உச்சி அதுதான் என்று அர்த்தம் கொடுக்கிறது.

ஏழை இந்தியாவிலுள்ள இத்தனை பிரம்மாண்டமான கோயில்களைச் சம்பளத்துக்காக ஜனங்கள் கட்டவில்லை. ராஜாக்கள் கோயில் கட்டின தொழிலாளிகளுக்கு நிறையக் கொடுத்தது வாஸ்தவம். ஆனால் இவர்கள் ஸர்வீஸாகத்தான் செய்தார்கள். இவர்களுடைய காலக்ஷேபம் நடக்க வேண்டும் என்று ராஜா தானாகப் பொருள் கொடுத்தான். அந்த நாள் ஸொஸைட்டியின் ஸெட்-அப், எகானமி எல்லாமே வேறே. ஜனத்தொகை குறைச்சல், சோற்றுக்கும் துணிக்கும், ஜாகைக்கும் கஷ்டமேயில்லை. அத்யாவசியங்கள் தவிர லக்ஷரிகள், சினிமா, அது இது என்று செலவுமில்லை. இன்றைக்கு மாதிரி ஃபாக்டரிகளும், டாம்களும் கட்டவேண்டிய அவசியம் ராஜாங்கத்துக்கு இல்லை. ஸைன்யத்தை வைத்து ரக்ஷிக்கிற ஒரு செலவு தவிர, மற்றபடி Welfare State என்று இப்போது ஸமூஹ அபிவிருத்திக்குச் செலவழிக்கிற அநேகச் செலவினங்கள் ராஜாவுக்கு இல்லை. அதனால் இன்றைக்கு உள்ள ஃபாக்டரி, டாம் எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக் கோயில் கோயிலாகக் கட்டினான். புதிதாகக் கட்டுவது, பழசை விஸ்தரிப்பது என்று ஜனங்களுக்கு ஓயாமல் வேலை கொடுத்து, சம்பளமும் கொடுத்து வாழ வைப்பதற்குக் கோயில் திருப்பணிதான் முக்யமாக நடந்து வந்தது. இதனால் வேலை செய்கிற ஜனங்களின் மனஸும் ஈஸ்வர பரமாகப் போனதில் அவர்கள் நல்ல பக்தியோடு, சாந்தர்களாக இருந்து வந்தார்கள். தேசமே க்ஷேமமாக இருந்தது. வெறும் பணியாக இல்லாமல் திருப்பணியாக இருந்ததால், ‘ரைட்’கேட்பது, ‘ஸ்ட்ரைக்’ பண்ணுவது என்பதெல்லாம் இல்லாமல், மனப்பூர்வமாக உழைத்தார்கள். கார்யம் ஒழுங்காக நடந்து, இன்றைக்கும் லோகமே ப்ரமிக்கும் படியாக எங்கே பார்த்தாலும் கோயிலும் கோபுரமுமாக இருக்கிறது! இப்போது இத்தனை ஜனங்கள், என்ஜினீயரிங் முன்னேற்றம் எல்லாம் இருந்தும், அவற்றைப் பழுதுபார்க்கக்கூட நமக்கு சக்தியில்லை!
”மக்களுக்குச் செய்வதே மஹேசனுக்குச் செய்வது” என்று வெறும் வாய்ப் பேச்சாகச் சொல்லிக்கொண்டு, மஹேசனை மறந்து இப்போது கார்யங்களைப் பண்ணும்போது என்ன ஆயிருக்கிறது? தெய்வ ஸம்பந்தமில்லாமல் பணியைக் கத்தரித்து விட்டிருப்பதால், நல்ல குறிக்கோளோடு பண்ணுவதெல்லாமே அனர்த்தங்களைக் கொண்டு வந்து விடுகிறது.

பழைய நாளில் பக்தியால் தேசத்தில் கன்யாகுமாரியிலிருந்து காஷ்மீர் வரை எல்லா ஜனங்களும் ஏகோபித்திருந்ததால், வடக்கே கோயில் கட்டுகிறார்களா, தெற்கே கோயில் கட்டுகிறார்களா என்று சண்டை போடாமல், வடக்கத்திக்காரன் தென்தேசத்துக் கோயில்களுக்கும், தெற்கத்திக்காரன் வடதேசக் கோயில்களுக்கும் போனான். இப்போதோ ராஜாங்கம் எந்த டாம் கட்டட்டும், எந்த ஃபாக்டரி வைக்கட்டும், உடனே அத்தனை ஸ்டேட்காரர்களும், தங்கள் தங்கள் ஸ்டேட்டில் தான் அதைக் கட்ட வேண்டும் என்று சண்டைக்கு ஆரம்பிக்கிறார்கள்.

எல்லாருக்கும் படிப்பு என்று சொல்லிக் கொடுக்கிறார்கள் நல்ல எண்ணத்தில்தான் செய்கிறார்கள். ஆனால் ‘தெய்வ ஸம்பந்தமே இருக்கக்கூடாது; அப்படியிருந்தால் நம் ஸெக்யூலரிஸத்துக்கு (மதச்சார்பின்மைக்கு) களங்கமாய்விடும்’என்று நினைத்து வெறும் அறிவு வ்ருத்தியை மட்டும் படிப்பினால் உண்டாக்கித் தருகிறார்கள். இதனால் படிப்பறிவில்லாவிட்டால் ஸாது ஜனங்களாக இருக்கக் கூடியவர்களுக்கும் ஃபோர்ஜரி மாதிரி அநேக தப்புத் தண்டாக்களையும், புத்திசாலித்தனத்தால் செய்யக்கூடிய அநேக ஒழுங்கீனங்களையும் கற்றுக் கொடுத்ததாகவே ஆகிறது.

எங்கே பார்த்தாலும் ஆஸ்பத்திரி என்று வைத்து அதே ஸமயத்தில் மதாநுஷ்டானத்தாலேயே உண்டாகிற கட்டுப்பாடுகள் இல்லாமல் ஜனங்களை அவிழ்த்து விட்டிருப்பதாலும் அனர்த்தங்கள் உண்டாகின்றன. ‘குடிக்கலாம், எதை வேண்டுமானாலும் தின்னலாம். ‘அபார்ஷன்’ மாதிரி இன்னும் பெரிய தப்புகளும் பண்ணலாம் – இதனாலெல்லாம் கெடுதி வராமல் வைத்யம் பண்ணிக்கொண்டு விடலாம்’ என்று ஜனங்களுக்குத் துணிச்சல் கொடுத்துப் போகிறது.

ஸமூஹ நலன் என்று க்ராமம் க்ராமமாக பாங்குகள் வைத்து தாராளமாகக் கடன் தருகிறார்களென்றால், உடனே அதை வாங்குவதற்கு எத்தனை பொய் பித்தலாட்டம் உண்டோ அத்தனையிலும் ஜனங்களை இழுத்து விடுவதாகவும் ஆகிறது. இப்படிப் பலபேர் அப்ளிகேஷன் போடுவதில், சிலருக்குத்தான் ஸாதகமாகிறது என்கிற போது அதிகாரிகள் லஞ்ச ஊழல், பாரபக்ஷம் எல்லாம் சேர்கிறது.

தப்பிப் போனவர்களுக்கு ஸகல வசதிகளுடன் ஸேவாஸதனம் வைக்கிறதென்பதே, மனக்கட்டுப்பாடு போதாதவர்களை இன்னமும் தளர்ந்து கொடுக்கத் துணிச்சல் அடையுமாறு செய்யலாம்.

ஆகையால் தெய்வப் பணியை விட்டுவிட்டு தேசப்பணி, மக்கட்பணி என்று புறப்படுவது தப்பு.

இதிலே நமக்கெல்லாம் வழிகாட்டினவர் அப்பர் ஸ்வாமிகள். ”என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற அவர் என்ன செய்தார்?’ பாடும் பணி’யினால் ஸகல ஜனங்களின் நெஞ்சமும் உருகிப் பரமேஸ்வரனிடம் சேருமாறு பண்ணிவைத்தது அவர் செய்த வாக் கைங்கர்யம். அது தவிர சரீர கைங்கர்யமாக, ஒரு உழவாரப்படையை வைத்துக்கொண்டு கோயில் கோயிலாய்ப் போய் அங்கே ப்ராகாரத்தில் முளைத்திருந்த புல்லைச் செதுக்கிக் கொண்டிருந்திருக்கிறார். உலகத்திலுள்ள ஜீவர்களுக்குச் செய்கிற தொண்டிலேயே, உலக ஜீவர் எல்லோருக்கும் அம்மையப்பனான பரம்பொருளுக்குச் செய்கிற தொண்டையும் சேர்த்து ஜனங்களின் உய்நெறிக்கு உபகாரம் பண்ணியதே அப்பரின் பெருமை.

அப்பர் காட்டிக் கொடுத்தபடி அம்மையப்பரிடம் பக்தி வைத்து, எல்லாரும் அந்த ஒருவனின் குழந்தைகள் என்கிற அன்பில் ஒன்றுபட்டுச் சேர்ந்து ஸேவை செய்கிற போதுதான் த்வேஷம், கட்சிச்சண்டை, ஏமாற்று, வெறும் நடிப்பான ‘இன்டக்ரேஷன்’ (ஒருமைப்பாடு) இவை இன்றி களங்கமில்லாத பரிசுத்த ஒற்றுமையும், உத்ஸாஹத்தோடு உழைக்கிற மனப்பான்மையும் ஏற்படும். பெரிய பெரிய கார்யங்களையெல்லாம் ஸுலபமாக ஸாதிக்கலாம். அந்தச் சூழ்நிலையிலேயே ஆனந்தத்தின் ஸுகந்தத் தென்றல் வீசும். கெட்டதுகளின் வாடையே அங்கு தலை காட்டாது.

ஆசாரங்களையும், தர்ம சாஸ்த்ரக் கட்டுப்பாடுகளையும் விட்டு விலகி விலகிப் போகிறதுதான் ஸோஷல் ஸர்வீஸ் என்றில்லாமல், அவற்றில் இன்னம் கிட்டே கிட்டே போய் ஒட்டிக்கொள்கிற மாதிரி தெய்வ ஸம்பந்தத்துடன்தான் தேசப்பணி செய்ய வேண்டும்.

தங்களுக்கும் ஸமூஹத்துக்கும் ஒன்று செய்துகொள்வதற்கு முன்னால், பகவானுக்கு எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டும். தீபாவளி என்றால் தாங்கள் எண்ணெய் தேய்த்துக் கொள்வது, புது வஸ்த்ரம் கட்டிக் கொள்வதோடு ஏழை பாழைகளுக்கும் எண்ணெய், சீயக்காய், துணி கொடுக்க வேண்டும். அது மட்டும் போதாது. எல்லாரும் சேர்ந்து முதலில் கோயிலில் உள்ள அறுபத்து மூவர் உள்பட எல்லா மூர்த்திகளுக்கும் தைலம் சாத்தி, புது வஸ்த்ரம் அணிவிப்பதில்தான் கொண்டாட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். இப்படியே பொங்கல் என்றால் அவரவர் வீட்டுக்குச் சுண்ணாம்பு அடித்து சுத்தப்படுத்துவதோடு, வசதியில்லாதவர்களுக்கும் இந்த உதவியைப் பண்ணுவதோடு, வசதியுள்ளவர், வசதியில்லாதவர் எல்லாருமே ஒன்று கூடிப் பக்கத்திலுள்ள ஆலயங்களில் களை பிடுங்கி, தேய்த்து மெழுகி அலம்பிவிட்டு, பொக்கை பொறைகளை அடைக்க வேண்டும்.

இப்போது நமக்கு உள்ளே இருக்கிற அழுக்கும் முள்ளுந்தான் கோயிலில் அழுக்காகவும் முள்ளாகவும் ரூபம் எடுத்திருக்கிறது! கோயிலில் செதுக்கி, மெழுகி சுத்தப்படுத்துகிறபோது நம் மனஸின் முள்ளையும் அழுக்கையும் அகற்றித் துப்புரவாக்கிக் கொண்டு விடுவோம். அப்போது நம் மனஸே தங்கமாகிவிடும். அந்தக் கனகஸபையில் அன்பே உருவான சிவம் வந்து குடிகொண்டு நாமே ஆலயமாகி விடுவோம்.

நடமாடும் மனிதருக்குச் செய்வதே படமாடும் பரமனுக்குச் செய்ததாகும் என்று சொல்லும் அதே திருமூலர் முதலில் ஈஸ்வரனுக்கு பத்ர அர்ச்சனையைச் சொல்லிவிட்டு அப்புறம்தான் பசுவுக்குப் புல், பிற்பாடு (இப்போது நான் பிடியரிசித்* திட்டம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேனே அம்மாதிரி) ஏழை ஜனங்களுக்கு ஒரு கவளம் அன்னம் இவற்றைச் சொல்லிவிட்டு முடிவாக, இப்படிக் கையால் பொருளாக உபகாரம் பண்ணாவிட்டாலும், வாயாலாவது ஸகலரிடமும் மதுரமாகப் பேசி உபகாரம் பண்ணவேண்டுமென்று சொல்கிறார்.

யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க் (கு) இன்னுரை தானே.

ஆக ஈஸ்வர ஸேவையில்லாமல் மநுஷ்ய ஸேவை என்பதில்லை.

ஸமூஹ ஸேவையும் தெய்வப்பணியும் கைகோர்த்து நடக்க வேண்டுமென்றுதான் ஸ்ரீமட தொண்டு ஸபை என்பதாக மத ஸம்பந்தமாகத் துண்டுப் பிரசுரம் போடுபவர்களையும் பொதுத்தொண்டு செய்யும் ஸ்ரீமட முத்ராதிகாரிகளோடு சேர்த்து விட்டது.

”பகவான் நம்மைக் கண் திறந்து பார்க்க வேண்டும்” என்று எல்லாரும் குறைபட்டுக் கொள்கிறோம். கருணைக்கடலான ஈஸ்வரன் கண்ணைத் திறந்து பார்த்துக்கொண்டேதான் இருக்கிறான். ஏன் அவன் நாம் இஷ்டப்படுகிற மாதிரி நமக்கு ஸெனபாக்யங்களைத் தரவில்லை என்றால், நாம் கண்ணைத் திறந்து லோகத்தின் கஷ்டங்களைப் பார்த்துஅது நிவ்ருத்தியாவதற்கு நம்மாலான உபகாரத்தைப் பண்ணாமலிருப்பதால்தான் நம் மனஸ் மற்றவர்களிடம் தயையால் நிரம்பினால், உடனே கருணையே உருவமான ஈஸ்வரனும் நமக்குத் தயை புரிவான். ஆனதால், கண்ணைத் திறந்து பார்க்க வேண்டியது நாம்தான்; பகவானல்ல.

கண்ணைத் திறந்து பல தினுஸாகக் கஷ்டப்படுபவர்களையும் பார்த்து நம்மாலானவரையில் அதை நிவ்ருத்தி பண்ண வேண்டும். அது மட்டும் போதாது. அவர்களும் தங்கள் கண்ணைத் திறந்துகொண்டு, இத்தனை கஷ்ட நிவ்ருத்திக்கும் எவன்தான் மூலகாரணமோ, எவனுடைய கருவி மாத்திரமாகவேதான் நாம் தொண்டு செய்வதல்லாமோ – அவனைப் பார்த்து, இந்தக் கஷ்டம் ஸுகம் எல்லாவற்றையும்விடப் பெரிசு அவனை அடைவதுதான் என்று உணரும்படியாகப் பண்ண வேண்டியதே நம்முடைய தலையாய பணி.

நம் மதத்தில் பொதுத்தொண்டு உண்டா என்று கேட்பவர்கள் கேட்டுவிட்டுப் போகட்டும். நான் சொல்கிறேன்: இப்போது நம் மதத்துக்கே தொண்டால்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஹிந்துமதம் வேலி இல்லாத தர்காஸ்து நிலம் மாதிரிக் கிடக்கிறது. இந்த நிலைமை மாறி இந்த மதத்தைக் கவனிக்க மநுஷ்யர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை உண்டு பண்ண வேண்டும். ஸ்வய மரியாதையுடன் நம் மதத்தில் இருக்கலாம் என்று ஸகல வகுப்பினருக்கும் நம்பிக்கையை உண்டுபண்ணுவது எல்லோரும் ஸங்கமாகக் கூடிச் செய்கிற பொதுத்தொண்டு தான். இந்தத் தொண்டுகளை அப்புறம் சொல்கிறேன். இப்படி ஸகல ஹிந்துக்களும் சேர்ந்து கொண்டு, செய்வதே நம் மதத்துக்கு வேலியாகி, இது ‘தர்காஸ்து’ நிலமில்லை என்று ஆக்கும். ‘நம்முடைய சொந்த மதம்’ என்ற அபிமானம் எல்லா வகுப்பாருக்கும் உண்டாகி விடுமாதலால் வேறு யார் வேண்டுமானாலும் இதிலிருக்கிறவர்களை ஸ்வாதீனம் பண்ணிக்கொள்ளலாம் என்ற நிலைமை போகும். மதமாற்றம் ஏற்படாமல் ஹிந்துக்களின் நிலைமையை மாற்ற நாம் எதிர் பிரசாரம் பண்ணிச் சண்டை உண்டாக்க வேண்டியதில்லை. நம்முடைய அசட்டையும், கடினமும் போய் நாம் மனமாற்றம் அடைந்து நம் ஜனங்களையெல்லாம் பரோபகாரத்தில் அணைத்துக் கொண்டாலே மதமாற்றம் நின்று போய்விடும். இதுதான் ஹிந்து ஸமூஹத்தை ஹிந்து ஸமூஹமாகவே வைத்துக் காப்பாற்றுவதற்கு சாந்தமான வழி. மதத்துக்காக ulterior motive-ஓடு (உள் நோக்கத்தோடு) நாம் பரோபகாரம் பண்ணாமல் அன்பின் நிறைவுக்காகவே பண்ணி, side by side மதத்தையும் ரக்ஷிக்க வேண்டும். எனக்கு உபசாரம் பண்ணிப் பூர்ணகும்பம் கொடுத்து மாலை போடுவதைவிட இப்படி ஹிந்துக்கள் அனைவரும் தொண்டினால் ஒன்று சேர்ந்து மதத்தை ரக்ஷித்துத் தருவதுதான் எனக்கு நீங்கள் பண்ணுகிற பெரிய உபசாரம், உபகாரம் எல்லாமும்.


* “தெய்வத்தின் குரல்” முதற்பகுதியில் “பரோபகாரம்” என்ற உரை.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is தெய்வப் பணியும் மக்கட் பணியும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  முத்ராதிகாரித் திட்டம்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it