“அறியாதவன்” : வார்த்தை விளையாடல் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

சைவ-வைஷ்ணவ ஸமரஸ பாவத்தில் தமிழ் தேசத்தில் சொல்கிற பாபுலர் வசனத்தில்கூட இப்படிச் சின்ன வார்த்தை விளையாட்டு செய்து பெரிய அர்த்த லாபத்தை உண்டாக்குவதுண்டு.

“அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயிலே மண்ணு; என்பது நம் எல்லோருக்கும் தெரிந்தது. இதிலே ‘அறியாதவன்’ என்பதில் வல்லின ‘றி’யை இடையினமாக மாற்றி, ‘அரியாதவன்’ என்று சொல்வார்கள். ‘ஹரி’யாகிய ‘யாதவ’குலக் கண்ணன் என்று அர்த்தம். அவன் வாயிலே மண்ணைப் போட்டுக்கொண்டுவிட்டு யசோதைக்கு லோகம் முழுவதையும் காட்டினான் அல்லவா? அதைத்தான் ”அரி யாதவன் வாயில் மண்ணு” என்பது.

“ஸரி. அரியும் சிவனும் ஒன்று என்று சொல்லிவிட்டு, இப்படி ஒன்று – இவர்களிலே ஹரி லோகம் முழுவதையும் காட்டினவன் என்று – எதற்காகச் சொல்லவேண்டும்?”

எதற்காகவா? இதிலேயும் பெரிய தத்வம் இருக்கிறது. ஒரே பிரம்மம்தான் ஹரி, சிவன் இரண்டு பேரும். அதனாலே அவர்கள் ஒன்றேதான். ஆனால் அந்த ஒரே பிரம்மத்தை நிர்குணம், ஸகுணம் என்று இரண்டு நிலைகளில் நாம் பாவிக்க வேண்டியதாயிருக்கிறது. இந்த இரண்டில் லோக வ்யவஹாரம் அடிப்பட்டுப்போன நிர்குணம்தான் சிவன். லோக வ்யவஹாரத்தை நடத்தும் ஸகுணமே ஹரி. மண்ணைத் தின்று லோகம் முழுவதையும் தன் வாயில் அடங்கியிருப்பதாக அவன் காட்டினபோது இந்த உண்மையைத்தான் உருவகப்படுத்தியிருக்கிறான். ‘அரி யாதவன் வாயில் மண்ணு’ என்று சொல்லி இதை ஞாபகப்படுத்திவிட்டால், முதல் வரியில் சொன்ன ‘அரியும் சிவனும்’ என்பதில் விட்டுப்போன சிவன் நிர்குணம் என்பதையும் சொன்னதாகி விடுகிறது.

‘றி’யை ‘ரி’யாகக் கூட மாற்றாமல் ‘அறியாதவன்’ என்ற ஒற்றை வார்த்தையை ‘அறி யாதவன்’ என்று இரண்டாகப் பண்ணிக்கொண்டாலே போதும்!’ அறி, யாதவன் வாயிலே மண்ணு’ என்றாலே, ‘அரியும் சிவனும் ஒண்ணானாலும் இவர்களில் யாதவனாக வந்து மண்ணைத் தின்னவன் ஸகுண ப்ரமம் என்று அறி; அதனால் இன்னொருவன் நிர்குணம் என்றும் அறி’ என்று அர்த்தமாகிவிடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is சிவசக்தியோ சிவ-விஷ்ணுக்களாக
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஒர் எழுத்தை எடுப்பதில் அர்த்த விநோதம்
Next