வாத்திய, நாட்டிய வகைகள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

வாத்தியங்களில் தந்த்ரீ வாத்யம், ரந்த்ர வாத்யம், சர்ம வாத்யம், லோஹ வாத்யம் என்று நாலு வகைகள். தந்த்ரீ என்றால் தந்தி. வீணை, தம்பூர், யாழ், வடக்கத்தி ஸிதார், ஸாரங்கி, மேல் நாட்டிலிருந்து வந்துள்ள பிடில் முதலியவை தந்த்ரீ வாத்யங்கள். ரந்த்ரம் என்றால் த்வாரம். புல்லாங்குழல், நாயனம், வடக்கத்தி ஷெனாய், மேல்நாட்டு க்ளாரினெட் முதலியன ரந்த்ர வாத்யங்கள். மற்ற வித வாத்யங்களில் கைவிரலால் மீட்டுவது, கையால் bow போடுவது, தட்டுவது முதலியவற்றால் ஸங்கீத ஒலி உண்டாகிறதென்றால் இந்த ரந்த்ர வாத்யங்களில் மட்டும் வாயினால் காற்றைச் செலுத்தி ஸங்கீதத்தை உண்டுபண்ண வேண்டியிருக்கிறது. ஹார்மோனியம்தான் கையால் இயக்கப்பட்டும் ஒருவித ரந்த்ர வாத்யமாக இருப்பது. அதிலே வாய்க்குப் பதில் காற்றைக் கொடுக்க bellows (துருத்தி) இருக்கிறது. ஃப்ளூட்டிலும், நாதஸ்வரத்திலும் த்வாரங்களைக் கை விரலால் மூடித் திறக்கிறோமென்றால், ஹார்மோனியத்தில் பில்லைகளை விரலால் அழுத்துவதும் எடுப்பதுமாக இருக்கிறது. ‘ப்ரின்ஸிபிள்’ ஒன்றுதான். சர்ம வாத்யம் என்பவை தோலைக் கட்டி அடித்து சப்தம் உண்டாக்குபவை. ம்ருதங்கம், தவில், நகரா, பேரிகை, கஞ்ஜிரா முதலியன சர்ம வாத்யங்கள். லோஹ வாத்யம் என்பதில் அதைச் செய்வதற்கு உபயோகப்படும் லோஹம் தான் முக்யம். மோர்ஸிங், ஜால்ரா, சேமக்கலம், மணி முதலானவை இதில் சேர்ந்தவை. இவை ஒரே ஒரு லோஹத்தால் மட்டும் ஆனவையாயிருக்கும். தந்தி, த்வாரம் எதுவும் இராது. மண்ணால் மட்டுமே ஆனது கடம். பானைதான் அது. களிமண்ணிலேயே ஒரு தினுஸான china clay என்கிற பீங்கானால் ஆன கிண்ணங்களுக்கு ஜலதரங்கம் என்று பெயர். கிண்ணங்களில் ஜலத்தை விட்டு அவற்றின் ஓரத்தில் இரண்டு மெல்லிசான மூங்கில் குச்சியால் தட்டி ஸப்தஸ்வரங்களை உண்டாக்குகிறார்கள்.

வாத்யங்கள் பலவகை இருப்பதுபோல நாட்டியத்திலும் பல உண்டு. முக்யமாக தாண்டவம், லாஸ்யம் என்ற இரண்டு. புருஷர்கள் செய்வது, பௌருஷ கம்பீரம் நிறைந்தது தாண்டவம். ஸ்திரீகள் செய்வது, லலிதமாக இருப்பது லாஸ்யம். பரமேஸ்வரன் செய்வது தாண்டவம், சிவ தாண்டவம், நடராஜ தாண்டவம், ப்ரளய தாண்டவம், ஊழித் தாண்டவம் என்றெல்லாம் சொல்கிறோம். அம்பிகை ஆடுவது லாஸ்யம். ‘லாஸ்ய ப்ரியா’, ‘லயகரி’ என்று ‘லலிதா ஸஹஸ்ர நாம’த்தில் பெயர்கள் வருகின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is புலன் வழியே புலனுக்கு அப்பால்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தெய்வங்களின் தொடர்பு
Next