Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

மணி, மந்திரம், ஒளஷதம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

சரீர ரக்ஷைக்கு மூன்று வழி சொல்வார்கள் – மணி, மந்திரம், ஒளஷதம் என்று. நவரத்தினங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித வியாதிகளைப் போக்கும் குணமுண்டு. நவரத்தினங்களில் ஒவ்வொன்றும் நவக்ரஹங்களில் ஒவ்வொன்றுக்குப் பிரீதியானவையாகும். வியாதி என்பது கர்மாவால் ஏற்படுவதே என்றாலும் அந்தக் கர்மா ஒவ்வொரு கிரஹக் கோளாறாக ரூபம் எடுத்து உண்டாகிறது. ஆகையால் அதற்கு சாந்தியாக நவரத்தினங்களில் அந்த கிரஹத்துக்குரியதை மோதிரமாக, மாலையாகப் பண்ணிப் போட்டுக் கொள்வது, அந்த மணியால் மூர்த்தி பண்ணி அதற்கு அபிஷேகித்த தீர்த்தத்தைப் பானம் பண்ணுவது என்றெல்லாம் ஒரு வழி. இதுதான் ‘மணி, மந்திர, ஒளஷதம்’ என்பதில் ‘ மணி’. நவரத்தினத்தை நவமணி என்றும் சொல்கிறோமல்லவா? மணிகளைப் போலவே ஸ்வர்ணம் ரஜதம் (வெள்ளி) , தாம்ரம், பாதரஸம் முதலான லோஹங்களைக் கொண்டும் சிகித்ஸை செய்து கொள்வதுண்டு.

மந்த்ர ஜபம், ஜ்வரஹரேச்வரர் கம்பஹரேச்வரர் என்றெல்லாம் வியாதிகளைப் போக்கவே உள்ள மூர்த்திகளுக்குரிய மந்த்ரங்களை ஜபிப்பது, ஸூர்ய நமஸ்காரம் கந்தரநுபூதி பாராயணம் முதலியவற்றால் நோயை குணப்படுத்திக் கொள்வது – ஆகியனதான் (மணி, மந்திரம் என்பதில்) இரண்டாவதான ‘மந்த்ரம்’.

‘ஒளஷதம்’ என்பது மருந்து மூலம் குணம் செய்து கொள்ளும் மருத்துவ சாஸ்திரம். வைத்தியம் என்பது இதைத்தான். ஓஷதி என்றால் மூலிகை. அதன் அடியாகப் பிறந்த சொல்தான் ஒளஷதம். முக்யமாக மூலிகைகளை அதாவது பச்சிலைகளைக் கொண்டே மருந்துகளைச் செய்வதுதான் ஆயுர்வேதம். பவள பஸ்மம், முத்து பஸ்மம், தங்க பஸ்மம் (‘பஸ்பம்’ என்றே பொதுவில் சொல்கிறார்கள்) என்பது போல மணி, லோஹங்களை எப்போதாவது பிரயோஜனப்படுத்தினாலும் ஆயுர்வேதத்தில் முக்யமான மூலச்சரக்கு மூலிகைகள்தான்.

ஸித்த வைத்தியத்தில்தான் மணி, லோஹம், பாஷாணம், மற்ற தாதுப் பொருட்களைக் கொண்ட மருந்துகள் ஜாஸ்தி. ஸித்த வைத்யமும் நம் சாஸ்திர ரீதியானதுதான். ஆனால் வீர்யம் ஜாஸ்தி. தப்பினால் ரொம்பக் கெடுதல் உண்டாய்விடும். துளிப்போல சூர்ணம்தான் டோஸேஜ் ஆனாலும் potency (உள் சக்தி) மிகவும் அதிகம். அதனால் ஜாக்ரதையாக சிகித்ஸை செய்ய வேண்டும். அகஸ்தியர், தேரையர் முதலான ஸித்த புருஷர்கள் நமக்குப் புரியாத பரிபாஷையில் ஸித்த வைத்ய சாஸ்திரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ‘பவர்’ ஜாஸ்தி என்பதாலேயே இப்படி எல்லாருக்கும் புரியாதபடி ஜாக்ரதை பண்ணி எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஸித்த வைத்தியம், ஆயுர்வேதம் இரண்டிலுமே மணி ஸம்பந்தமும் இருக்கிற மாதிரி, மந்திர ஸம்பந்தத்தையும் சேர்த்து மருந்தை மேலும் effective-ஆகப் பண்ணுவதுண்டு. நல்ல ஸம்பிரதாயத்திலே வந்த வைத்யர்கள் அநேக மந்த்ரங்களை ஜபித்தபடியே ஒளஷதங்களைப் பண்ணி ஜபித்துத் தருவார்கள். த்ரயம்பக மந்த்ரம், அச்யுத-அநந்த-கோவிந்த என்ற நாமத்ரயம் (மூன்று திருநாமங்கள்) தன்வந்தரி, அச்வினி தேவர்கள், ஸுர்யன் முதலான மூர்த்திகளுக்கான மந்திரம், கவசம் முதலியவற்றை மருந்தோடு சேர்த்துக் கொள்வதுண்டு. அகஸ்தியர் ஸ்ரீராமசந்திர மூர்த்திக்கு உபதேசித்த “ஆதித்ய ஹ்ருதயம்” பிரஸித்தமாயிருக்கிறது. விஷக் கடிகளுக்கு என்ன மூலிகை, சிந்தூரம் (சித்த வைத்ய சூர்ணத்தை சிந்தூரம், செந்தூரம் என்று சொல்வார்கள்) கொடுத்தாலும் மந்திர ஜபம்தான் முக்யமாயிருக்கிறது. ஸர்ப்பங்கள் பயந்து நடுங்குகிற கருட பகவானைக் குறித்த மந்திரத்துக்கு விஷம் இறங்குவதில் ஆச்சர்யமான சக்தி இருக்கிறது. நம்முடைய ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’ யில் ஒரு ச்லோகத்தில்*1 அம்பாளை ஸகல அவயங்களிலிருந்தும் அம்ருத ரஸ கிரணங்கள் பெருகுகிற சந்திர காந்த சிலா வர்ண மூர்த்தியாக த்யானம் செய்வதால் ஒருத்தன் கருடனைப் போலப் பாம்பு விஷத்தை சமனம் செய்கிற சக்தி பெற்று விடுகிறானென்றும், இப்படிப்பட்டவனுக்கு அம்ருத நாடி என்று உண்டாகி அதன்பின் இவனுடைய த்ருஷ்டிபட்டாலே பிறரின் ஜ்வரதாபம் இறங்கிவிடுமென்றும் சொல்லியிருக்கிறார். இந்த ச்லோக ஜபத்தாலேயே விஷம், ஜ்வரம் முதலியவைகளை நிவ்ருத்தி செய்துவிட முடிகிறது. ‘ஸெளந்தர்ய லஹரி’யின் வேறு பல ச்லோகங்களை ஜபிப்பதற்கும் இவ்வாறு பலவிதமான வியாதி நிவிருத்தி சக்தி இருக்கிறது. நாராயண பட்டத்திரி ‘நாராயணீயம்’பண்ணியே அவருடைய வயிற்று உபாதை நீங்கியதால் அதையும் நோய் தீருவதற்காகப் பாராயணம் பண்ணுகிறார்கள். “இருமலுரோக முயலகன் வாத” என்று ஒரு திருப்புகழ உண்டு. அதுவும் ஸர்வ வியாதி நிவ்ருத்திக்காக ஜபிக்கப்படுகிறது. ஸம்பந்த மூர்த்தி ஸ்வாமிகள் கூன்பாண்டியனை ஸ்வஸ்தப்படுத்துவதற்காகச் சொன்ன திருநீற்றுப்பதிகத்தையும் பல ஆவிருத்தி ஜபித்து விபூதி இடுவதுதுண்டு. வியாதியஸ்தரே விபூதியில், அல்லது ஜலம், தேன், பால் போன்ற ஒன்றில் ஜபித்து அதை இட்டுக் கொள்வதோ பானம் பண்ணுவதோ உண்டு. அல்லது அவருக்கு ரொம்ப அசக்தமானால் அவருக்காக இன்னொருத்தர் பண்ணி, விபூதியானால் இட்டு விட்டு வாயில் போடலாம்;தேன், பால் போன்றவற்றை நோயாளி குடிக்கப் பண்ணலாம். ‘மந்த்ர ராஜா’என்கிற காயத்ரியையும் இப்படி வியாதிகள் ஸ்வஸ்தமாவதற்கு ஜபிப்பதுண்டு.

விபூதிக்கு இதிலே தனியான சக்தி. நாட்டு ஜனங்களுகளுங்கூட என்ன உடம்பானாலும் “துண்ணூறு” என்று திருநீறு வாங்கி இட்டுக் கொள்வதையும் வாயில் போட்டுக் கொள்வதையும் பார்க்கிறோம். விஷயம் தெரிந்தவர்கள் பஞ்சாக்ஷர, ஷடக்ஷரங்களைச் சொல்லி தாரணம் பண்ணிக் கொள்வார்கள். திருச்செந்தூர் விபூதி ஸர்வரோக ஹரணமென்று ஆசார்யாளே ஸ்தோத்திரித்திருக்கிறார்*2. “பன்னீர் இலையில் வைத்துத் தரும் அந்த விபூதியை முழுங்கணும், இட்டுக்கணும் என்பதெல்லாங் கூட வேண்டாம். வெறுமே க்ஷணம் பார்த்தாலே போதும் – “விலோக்ய க்ஷணாத்” – fits, குஷ்டம், துர்வியாதிகள், ஜ்வரம், பைத்தியம், குன்மம், ஆவிசேஷ்டை எல்லாமே ஓடிப்போய்விடும் என்கிறார். பழநியாண்டவரின் மூர்த்தம் மூலிகைச் சாறுகளை இறுக்கிப் பண்ணியதே என்பார்கள். அதனால் அவருக்கு அபிஷேகமாகிற தீர்த்தம் முதலானவற்றையும் வியாதி நிவ்ருத்திக்குக் கொடுப்பதுண்டு. குருவாயூர் தைலம், திருச்சூர் நெய், இன்னம் அநேக க்ஷேத்ரங்களில் இப்படியே மருத்துவ சக்தி உள்ளதாகப் பிரஸாதம் கொடுக்கிறார்கள். பிரஸாதமென்று ஸ்தூலமாகத் தராமல், ‘நடந்தே மலை ஏறுகிறேன்’, ‘அங்கப் பிரதக்ஷிணம் பண்ணுகிறேன்’, ‘மாங்கல்யம் சாத்துகிறேன்’என்றெல்லாம் வேண்டிக் கொண்டாலே வேங்கடரமண ஸ்வாமி தீராத வியாதியெல்லாம் தீர்த்து வைக்கிறார். பரமேச்வரனும் பவரோகம் என்னும் ஸம்ஸார வியாதியை மட்டுமின்றி, அந்த ஸம்மஸாரத்திலே வருகிற அநேக ரோகங்களைத் தீர்ப்பதற்காக ‘வைத்யநாத ஸ்வாமி’ என்றே பெயர் வைத்துக்கொண்டு வைத்தீச்வரன் கோயிலில் விளங்குகிறார். உப்பு, வெல்லம் கரைகிற மாதிரி வியாதி கரைவதால் அங்கே இவற்றைக் கரைப்பதாக வேண்டிக் கொள்வார்கள்.

பரமேச்வரனுக்குரிய பில்வ பத்ரம், பெருமாளுக்குரிய துளசி, அம்பாளுக்கு (முக்யமாக மாரியம்மனுக்கு) விசேஷமான வேம்பு – இந்த மூன்று இலைகளை ஒரே அளவு சேர்த்து தினந்தோறும் ஒரு பிடி தின்றுவிட்டால் போதும்;எந்த வியாதியும் வராது என்று ஒரு நாட்டு வைத்தியர் எழுதியிருக்கிறார்.

வேப்பங்காற்றே ரத்த சுத்தி உண்டாக்குவதென்றும் அதோடு கர்ப்பக் கோளாறுகளைப் போக்குவதென்றும், அரசமரக் காற்றுக்கும் கர்ப்பப் பை நோய்களை நிவ்ருத்தி செய்கிற சக்தி இருக்கிறதென்றும், அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் பண்ணி வைத்து, புத்ர ஸந்தானமில்லாதவர்கள் அதைப் பிரதக்ஷிணம் பண்ண வேண்டுமென்று வைத்திருப்பதில் இப்படி வைத்ய சாஸ்திரப் பிரகாரமே ஸந்ததி உண்டாவதற்குக் காரணம் தெரிகிறதென்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

பூஜையில் தூபம் போடுவது, கர்ப்பூரம் கொளுத்துவது ஆகியனகூட disinfectant-ஆக (க்ருமி நாசினியாக) அநேக வியாதிகளைத் தடுக்கிறது என்று எழுதியிருக்கிறார்கள்.

அசையாத நம்பிக்கையாக பக்தி இருந்தால் அதனாலேயே ரோக நிவ்ருத்தி முதலான எதையும் ஸாதித்துக் கொண்டுவிடலாம்; அல்லது ரோகம், ஆரோக்யம் எதுவானாலும் வித்யாஸமில்லை என்கிற உசந்த நிலையை ஸம்பாதித்துக் கொள்ளலாம். இதிலே வைத்ய சாஸ்திரத்துக்குப் பிடிபடாத மந்திரம், பிடிபடுகிற மூலிகைகள், வேம்பு துளஸி மாதிரியான மருந்துச் சரக்குகள் எல்லாமே கலந்து வரலாம்.


*1“கிரந்தீம் அங்கேப்ய” எனத் தொடங்கும் இருபதாவது ச்லோகம்

*2ஸுப்ரஹ்மண்ய புஜங்கத்தில் ‘அபஸ்மார’ என்று தொடங்கும் 25-வது ச்லோகம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is வைத்தியத்திலும் ஆன்மிக லக்ஷ்யம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஆயுர்வேதமும் மத ஆசாரணையும்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it