Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

அந்தரங்க சுத்தம் அவசியம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

‘அனைத்து அறன்’, அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’, அதாவது, தங்கள் மனஸைத் தாங்களே துளிகூட அழுக்கில்லாமல் நிர்மலமாக சுத்தம் செய்துகொள்வதுதான் என்கிறார் திருவள்ளுவர். கர்மாநுஷ்டானத்தால் அவரவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற வைதிக ஸம்பிரதாயத்தைத்தான் இங்கே திருக்குறளும் சொல்கிறது. முதலில் இவன் தன்னைத்தானே சுத்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். இது இல்லாமல் பரோபகாரம், ஸோஷல் ஸர்வீஸ் என்று கிளம்பினால் அது வெற்றுக் காரியம்தான்.

தான் அடங்கியிருக்க வேண்டும்; பக்தியோடு ஈஸ்வர ஸேவை என்று நினைத்து ஸமூஹ ஸேவை செய்ய வேண்டும். அப்போதுதான் அது பலனளிக்கும். அந்தரங்க சுத்தமில்லாமல் செய்கிற காரியங்கள் வெறும் படாடோபமாகவும், ‘ஷோ’வாகவுமே முடிந்து போகும். இந்த படாடோபத்தால் ‘ஸேவை’ என்று செய்கிறவனுக்கு அஹங்காரம் மேலும் ஜாஸ்தியாகத்தான் செய்யும். அஹங்காரம் தொலைவதற்கு உதவவேண்டிய ஸேவையை அடக்குமும் பணிவும் பக்தியும் அன்பும் இல்லாமல் செய்தால் அஹங்காரத்தை அதிகமாக்கிவிடும். குளிக்க வேண்டும் என்று போய்ச் சேற்றை வாரிப் பூசிக்கொண்டதாகிவிடும்.

”தான் சுத்தமாவதுதான் ஸர்வ தர்மமும்” என்றால் இது ஸ்வயநலம் மாதிரி அல்லவா இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் இது நாம் லோக ரீதியில் நினைக்கிற மாதிரியான ஸ்வயநலம் இல்லை. பிறத்தியாரைக் கஷ்டப்படுத்தியாவது நம் இந்திரிய ஸுகங்களைப் பூர்த்தி பண்ணிக் கொள்வதுதான் தப்பான ஸ்வயநலம். மனஸை சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டுமானால் நாம் கஷ்டப்பட்டாவது நல்லதே பண்ண வேண்டியதாகிறது. இது இந்த்ரிய ஸெளக்கியங்களிலிருந்து நம் மனஸை மீட்டு சாச்வதமான பேரின்பத்தில் சேர்ப்பதற்கு உதவுகிறது. ‘உபகாரம்’ என்றால் பிறத்தியாருக்குச் செய்தால் மட்டும் போதுமா? இதோ நமக்கென்று ஈஸ்வரன் ஓர் உயிரைக் கொடுத்த மாதிரி கொஞ்சம் வெளியே அவிழ்த்து விட்டிருக்கிறானே, மனஸ் என்ற ஒன்றைக் கொடுத்து அதை நல்லது கெட்டது இரண்டிலும் ஆடுகிற மாதிரி விட்டிருக்கிறானே! இந்த நம் உயிருக்கு ஜீவாத்மா என்கிறார்களே அதற்கு, மட்டும் நாம் உபகாரம் பண்ணாமல் இருக்கலாமா? மனஸை நல்லதிலேயே செலுத்தி, பகவான் தந்திருக்கிற வாக்கு, சரீரம் எல்லாவற்றையும் நல்ல பேச்சு, நல்ல காரியங்கள் இவற்றிலேயே பிரயோஜனப்படுத்தி இந்த உயிரைப் பேரின்ப நெறியில் சேர்க்க நாம் கடமைப்பட்டிருக்கவில்லையா? சின்னதான ஸ்வயநலத்தைவிட்டு, இந்தப் பெரிய ‘ஸ்வயநல’த்துக்கு எல்லோரும் பாடுபடத்தான் வேண்டும்.

இப்படிச் செய்வதற்குப் பரநலப் பணிகளே ரொம்பவும் ஸஹாயம் செய்கிறது. இதிலே ஒரு வேடிக்கை – இவன் மனஸ் சுத்தமாக இருந்தால்தான் பரோபகாரம் நிஜமாக நடக்கிறது, பலன் தருகிறது; பரோபகாரத்தால் தான் இவன் மனஸே சுத்தமாகத் தொடங்குகிறது என்றால் contradiction (முரண்) மாதிரித்தானே இருக்கிறது? ஆனால் முரண்பாடு இல்லை. முதலில் இவனுக்கு மனஸ் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற தாபம் இருந்தாலே போதும். மனஸ் லேசில் கட்டுப்பட்டு வரத்தான் வராது. இந்திரிய ஸெளக்யத்தையே நினைத்து அது திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டுதான் இருக்கும். அப்போது, ‘ஐயோ, இது திருந்த வேண்டுமே! ‘என்ற உண்மையான கவலை இருந்தால் இந்த விசாரத்துக்கே ஒரு நல்ல சக்தி ( effect ) உண்டு. இப்படி ஒரு தாபத்தோடு பரோபகார காரியங்கள் என்ற லகானைப் போட்டு அப்போதப்போதும் ஓடுகிற மனஸை இழுத்து ஒரு பொதுத் தொண்டில் செலுத்த வேண்டும். ஒன்றுக்கொன்று போஷித்து இட்டு நிரப்புவது, complementary என்கிறார்களே, அப்படிப், பரோபகாரப் பணி மனஸைக் கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் பண்ணப் பணண, அந்தச் சித்த சுத்தியால் நாம் செய்கிற தொண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சுத்தமாகிக் கொண்டு சக்தியோடு பலன் தர ஆரம்பிக்கிறது. இப்படிப் பரோபகாரமும் ஆத்மாபிவிருத்தியும் ஒன்றுக்கொன்று கைகோத்துக் கொண்டு, பரஸ்பரம் பலம் தந்து கொண்டு வளர்கின்றன.

என்ன சொன்னாலும் வெளி உலகத்தை நாம் முழுக்க ஸரி பண்ணுவது நம் கையில் இல்லை. பல பேர் பல தினுஸான கர்மாவால் கஷ்டப்படும்போது நாம் எத்தனை ஸேவை செய்தாலும், அவர்கள் கர்மா குறுக்கே நின்று வெளியிலே பலன் இல்லாமலும் போகலாம். ஆனால் பிடிவாதமாக நாம் இந்தக் காரியத்தைச் செய்து கொண்டே வந்தால், அது நிச்சயமாக நம் கர்மாவைக் கழுவத்தான் செய்யும்;கர்ம வாஸனையால் ஏற்ப்பட்ட நம் உள் அழுக்குகளை அலம்பத்தான் செய்யும். இதனால்தான் திருவள்ளுவர், ”வெளியில் உன் தொண்டு பலன் தந்ததா என்று proof (நிரூபணம்) தேடாதே! உன் மனஸிலே அழுக்கு போச்சா, மனத்துக்கண் மாசிலன் ஆனாயா என்று பார்த்துக்கொள். இந்த உள் proof – இதை யாரும் உன்னிடமிருந்து ஒளிக்க முடியாது – கிடைத்துவிட்டால் நீ பண்ணின தர்மம், அறன் பலித்துவிட்டது என்று அர்த்தம்” என்று சொல்கிற மாதிரி குறளைப் பண்ணியிருக்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ''என் கடன் பணி செய்து கிடப்பதே''
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  வைதிக மதமும் உலகப் பணியும்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it