காபி முதலிய பானங்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஸாதரணமாக இப்படிப்பட்ட தள்ளுபடி வஸ்துக்களுக்குத்தான் புத்தியைப் பிடித்து வசப்படுத்தி வைத்துக் கொள்கிற சக்தி இருக்கிறது. “அது இல்லாட்டா முடியாது” என்று என்னமோ பைத்தியம் பிடித்த மாதிரிப் பண்ணி, எந்த வேலையுமே ஓடாமல், இந்த மனோபளுவினாலேயே தலைவலி, அஜீர்ணம் என்றெல்லாம் இந்த வஸ்துக்கள்தான் உண்டாக்குகின்றன. அந்த வஸ்துவுக்கு இவன் அடிமை ஆகிவிடுகிறான். ‘Addict’ என்று சொல்கிறார்கள். ஏதோ ஒரு அளவு என்று நிறுத்திக் கொள்ள முடியாமல் எப்போது பார்த்தாலும் அந்த ஸாமானுக்கே ஆசை ஏற்படுகிறது. குடிப் பழக்கமுள்ளவன், புகையிலை மெல்லுகிறவன், அதையே ‘ஊதுகிறவன்’ எல்லாரும் இப்படித்தான். அபின், கஞ்சா முதலான லாஹிரி வஸ்துக்கள் எல்லாம் இப்படி மநுஷ்யனை அதே பைத்தியமாக அடிக்கிறவைதான்.

புத்தியைக் கெடுப்பதில் கள்ளு கஞ்சா அளவுக்குப் போகாவிட்டாலும், ‘அடிக்ட்’-ஆக அடிமைப்படுத்துகிற சக்தி காபி, டீக்கும் இருப்பதால்தான் அவை உதவாது என்பது. போதையை உண்டுபண்ணுவது – intoxicant – என்று இவற்றைச் சொல்ல முடியாவிட்டாலும், நரம்பை ஊக்குவிக்கிறவை – stimulant – என்பதால் தள்ளத்தான் வேண்டும். ‘ஸ்டிமுலேட்’பண்ணுவது அப்போதைக்குக் கிளுகிளுப்பைத் தந்து உத்ஸாஹப் படுத்தலாமானாலும், முடிவிலே இப்படி செயற்கையாகத் தூண்டப்பட்ட நரம்பு மண்டலம் பலஹீனம்தான் அடையும். காபியில் இருக்கிற ‘கஃபைன்’ விஷ வஸ்துவே என்று ஸகலரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

டீயும் அநாசாரம்தான். என்றாலும் காபி போல அவ்வளவு மோசமில்லையாதலால், சுறுசுறுப்புக்கு ஏதாவது பானம் வேண்டத்தான் வேண்டும் என்கிறவர்கள் டீ வேண்டுமானாலும் கொஞ்சம் சாப்பிடலாம். இப்படிச் சொன்னதால், “பெரியவா டீ சாப்பிடச் சொல்றா” என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு விடக்கூடாது. காபி, டீ மாதிரி எதுவாவது இல்லாமல் முடியவே முடியாது என்று இருக்கிறவர்கள் டீ வேண்டுமானால் கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டு, அதையும் படிப்படியாக விட வேண்டும்.

நல்ல வஸ்துவான பாலில் இந்த ஸாமான்களைக் கலந்து கெடுக்க வேண்டியதே இல்லை. அதிகாலையில் வெறும் பாலே சாப்பிடலாம். பகலில் மோராக்கிக் குடிக்கலாம். மோர்க் கஞ்சியாகவும் சாப்பிடலாம்.

வெறுமனே சொன்னால் போதாது என்று சந்திரமௌளீஸ்வரர் ஸாக்ஷியாக காபி, ஸினிமா, பட்டு மூன்றையும் விட்டுவிடுவதாக ஸத்யம் பண்ணிக் கொடுங்கள் என்று கேட்கிறேன். ஏன்? எத்தனை ஏழைக் குடும்பமானாலும் சோற்றுச் செலவைவிட ஜாஸ்தியாகக் காபி அல்லவா இழுக்கிறது? அகத்தில் சாப்பிடுவதோடு கண்ணில் படுகிற ஹோட்டலில் புகுந்தும் மூன்று வேளை, நாலு வேளை என்று குடிக்கப் பண்ணுகிறதே! எழுந்தவுடனேயே, பல் தேய்க்காமல்கூட பெட்-காபி, இல்லாவிட்டால் அந்தக் காபிப் பொடி வண்டலாலேயே பல் தேய்த்துவிட்டு அதை உள்ளேயும் தள்ளுவது என்பதாக, ‘இதில்லாமல் ஜீவனில்லை’ என்கிற அளவுக்கு இதற்கு நம் புத்திக்கு மேல் ஆதிக்யம் கொடுத்திருப்பது தப்புத்தானே? இந்த ஆதிக்யத்தினால்தான் இக்கால ஸந்நியாஸிகளுக்கு தண்ட, கமண்டலம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் ‘ஸ்டவ்’ இருந்தாக வேண்டுமென்று ஆகியிருக்கிறது! நெருப்பு கிட்டேயே போகப்படாது, சமைக்கவே கூடாது என்று விதிக்கப் பட்டிருக்கும் ஸந்நியாஸிகள் கூட, பிராம்ம முஹுர்த்தத்தில் எழுந்து தியானம் செய்வதானால் அதற்கு முந்தி காபி இல்லாமல் முடியவில்லை என்று தாங்களே ‘ஸ்டவ்’வில் போட்டுக் குடிக்கிறதாக அல்லவா பார்க்கிறோம்? இதுதான் இன்றைக்கு நடக்கிற ஸ்வயம்பாக நியமம்! இப்படி ஒரு வழக்கத்துக்கு அடிமைப்பட்டிருப்பது தப்பு என்பதால்தான் நான் காபியை பலமாகவே கண்டிப்பது.

டின்னில் அடைத்து, பார்க்க ‘நீட்’டாக என்னென்னவோ பான வகைகள் வந்திருக்கின்றனவே, அதிலெல்லாம் என்னென்ன வஸ்துக்கள் சேர்ந்திருக்குமோ? இவற்றிலும் சரி, இதே மாதிரி பார்க்க சுத்தமாக, அழகாக pack பண்ணி வருகிற பிஸ்கோத்து, பன், கேக் முதலானவற்றிலும் சரி, ஒரு வஸ்து இல்லாமலிருக்காது என்றுதான் ஸந்தேஹம்1. ஆனாலும் இதைக் கண்டுகொள்ள வேண்டாமென்று ஆசாரக் குலவழக்குள்ளவர்களும் இவற்றை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘அப்படியே அந்த வஸ்து இருந்தாலும் பரவாயில்லை. அது முழுக்க உயிர் வந்துவிட்ட ஜீவனில்லை’ என்று துணிந்து ஸமாதானம் சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அதற்கு உயிர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது நமக்குக் கெடுதி செய்யும் ஊன்தான். இவர்கள் சொல்லும் நியாயப்படி எந்தப் பிராணிக்குமே தானாக உயிர் போனபின் அதன் ஊனைத் தின்றால் தப்பில்லை என்றும் ஆகும். நீலகண்ட தீக்ஷிதர் என்ற மஹான்2 மந்திரி பதவியை விட்டு வரும்போது திருமலை நாயகரிடம், “குக்குட சப்தமில்லாத ஒரு பிராந்தியத்தில் கொஞ்சம் பூமி கொடுத்தால் போதும்” என்று கேட்டு வாங்கிக் கொண்டு தாம்ரபர்ணிக் கரையில் பாலாமடை என்கிற அக்ரஹாரத்தை ஏற்படுத்தினாராம்! அந்த அஹிம்ஸா பாரம்பர்யத்துக்கு நாம் களங்கமுண்டாக்கக் கூடாது. நம் கண்ணுக்குத் தெரியாமல் எங்கேயோ ஃபாக்டரியில், பேக்கரியில் பண்ணுகிறவற்றில் என்னென்ன கலந்திருக்கிமோ! கைபடாமல் மிஷினேதான் பண்ணி ‘பாக்கிங்’கும் செய்கிறது என்பதால் அது ஆசாரமானதாகி விடாது. நாமே அகத்தில் பார்த்து அரைத்து வைத்துக் கொள்கிற மாவுகளைப் போட்டுக் கஞ்சியாகக் குடிப்பதுதான் ஆசாரம். வியாதியஸ்தர்கள், வியாதிக்கப்புறம் தேற்றிக் கொள்ள வேண்டியவர்கள் மட்டும் சொஸ்தமாகி உடம்பு தெம்பு பிடிக்கிற வரையில் பாக்டரியிலிருந்து வருகிற மற்ற ஆரோக்யம் தரும் பான வகைகளை கரைத்துக் குடிக்கலாம். மருந்து மாதிரி இதற்கும் அந்தக் காலத்தில் மாத்திரம் விலக்கு தரலாம். அப்புறம் இதை நிறுத்தி விட்டு பஞ்சகவ்யம் சாப்பிட்டு சுத்தி பண்ணிக்கொள்ள வேண்டும்.


1. முட்டையைத்தான் ஸ்ரீ பெரியவர்கள் குறிக்கிறார்கள்.

2. பின்னால் வரும் ‘மீநாக்ஷி‘ என்ற உரையில் நீலகண்ட தீக்ஷிதரைப் பற்றிய சில விவரம் காணலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is புகைத்தல்:லமூஹ விரோதச் செயல்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  பால் வஸ்த்துக்கள்
Next