மரக்கறி உணவு முன்னிலும் தேவை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

முன் காலங்களில் ஸர்வ ஜனங்களுக்கும் சாஸ்த்ராபிமானம், தெய்வத்திடம் பய பக்தி, அதனால் தப்புப் பண்ணுவதிலே பயம், அடக்க குணம் முதலியன இருந்தன. அதனால் ஸகல ஜாதியாருமே இன்றைக்கு இருப்பதைவிடக் கட்டுப்பாட்டுடன் (இந்திரிய நிக்ரஹத்தில் கூட இன்றைவிடக் கட்டுப்பாட்டுடன்) இருந்து வந்தார்கள். இப்போது ஸினிமா, ட்ராமா, நாவல் எல்லாம் ஸ்வதந்திரப் போக்கு என்று சொல்லி ஜனங்களைத் தறிகெட்டு அலையப் பண்ணியிருக்கிற மாதிரி அப்போதில்லை. இந்திரிய சாபல்யத்துக்கு இப்போது திரும்பின இடமெல்லாம் தீனி போட்டு வளர்ப்பது போல அப்போது இல்லை. அதனால் மது மாம்ஸாதிகள் சாப்பிடுபவர்கள் கூட அதிலே ஓர் அளவு, ஒழுங்கு வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இன்றைய ஜனங்கள் மாதிரி இல்லாமல் சரீரத்தால் நன்றாக உழைக்கவும் உழைத்தபடியால் அந்த ஸாமான்கள் அவர்களுக்கு தேஹ ரீதியிலோ, மனோ ரீதியிலோ கெடுதல் பண்ணவில்லை. ஆனால் இப்போதுள்ள பொது ஜனங்களின் ஸ்வபாவம், வேலை முறை எல்லாமே மாறி, சூழ்நிலையும் கெட்டுப் போயிருப்பதால் அந்தக் காலத்தைவிட இந்தக் காலத்தில் ஸகல ஜாதியாருமே மரக்கறி உணவுப் பழக்கத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக வளர்த்துக் கொள்வது நல்லது; கள்ளு குடி முதலியவற்றை விடுவதும் நல்லது.

அதோடு இப்போது ஆபீஸ், குடியிருப்பு எல்லாவற்றிலும் எல்லா ஜாதியாரும் முன்னைவிட நெருங்கி வாழும்படியாகியிருக்கிறது. பிராம்மணாசாரங்களை மற்றவர்கள் முடிந்தமட்டும் எடுத்துக் கொள்வதே இதுவரை வழக்கமாயிருந்திருக்க, இப்போது பிராம்மணன் மற்றவர்கள் பண்ணுகிற மாதிரித் தானும் செய்வதாக ஏற்பட்டிருக்கிறது! புலால் உணவுக்காரர்களுடன் நெருக்கமாக வாழ்வதால் மரக்கறி உணவுக்காரர்கள் அந்த வழக்கத்தை எடுத்துக்கொண்டு விடப் போகிறார்களே என்று பயமாக இருக்கிறது. அவ்வப்போது ஒவ்வோரிடத்தில் இப்படிக் கேள்வியும் படுகிறோம். ஆனால் இன்னமும் நிலைமை கை மீறி விடவில்லை. இந்தியாவில் மட்டும் எல்லா ஜாதி ஜனங்களும் …. நினைத்துப் பார்க்கவே கஷ்டமாயிருக்கிறது …. நான்-வெஜிடேரியன்களாகி விட்டார்களென்றால் லோகத்துக்கே ஒரு பெரிய ‘ஐடியல்’ நஷ்டமாகிவிடும். அப்புறம் அதை ஒரு காலத்திலும் ஈடு செய்யவோ அதற்குப் பரிஹாரம் காணவோ முடியாது. இன்றைக்கும் நமக்கு ஏதாவது துளிப் பெருமை ஒட்டிக் கொண்டிருக்கிறதென்றால், அது லோகத்திலேயே மிகப்பெரிய ஜனஸமூஹம் வெஜிடேரியன்களாக உள்ள தேசம் நம்முடையதுதான் என்பதே. ஹிந்து என்றால் அஹிம்ஸாவாதி என்றே லோகத்தில் இன்னமும் பரவலாக நல்லபிப்ராயம் இருக்கிறது.

‘ஹிந்து’ என்ற வார்த்தை அந்நிய தேசத்தார் நமக்கு வைத்த பெயர்தான்* நம்முடைய சாஸ்திரங்களில் அந்தப் பேரைப் பார்க்கவே முடியாது. ஆனால் பிற்காலத்தில், வெளிதேசத்தார் வைத்த ‘ஹிந்து ‘என்ற பெயரையே ஸம்ஸ்கிருத ‘ரூட்’டிலிருந்து வந்த மாதிரி நம்மவர்கள் அர்த்தம் பண்ணியிருக்கிறார்கள் – அதாவது ” ஹிம்ஸாயாம் தூயதே ய: ஸ ஹிந்தூ(இ)த்யபிதீயதே” என்று! ஹிம்ஸையில் எவன் ரொம்பவும் துக்கப்படுகிறானோ அவனே ஹிந்து என்று இதற்கு அர்த்தம். இது சமத்காரமாகப் பண்ணியது என்றாலும் ஹிந்து மதஸ்தர்கள் அஹிம்ஸைக்காரர்கள் என்பதால்தானே இப்படி ஒரு ‘டெஃபனிஷன்’ கொடுக்க முடிந்திருக்கிறது? இந்தப் பெரிய கௌரவம் நமக்குப் போகப்படாது என்றால், முன்னைவிட எல்லா ஜாதியாரும் கலந்து கொண்டு வாழும்படியாக இருக்கிற இந்தக் காலத்தில் புலால் உணவுக்குப் பழக்கப்பட்டவர்களும் முன்னைவிட மரக்கறி உணவில் அதிக நாட்டம் கொள்வது நல்லதென்று தோன்றுகிறது.


* ” தெய்வத்தின் குரல்”முதற்பகுதியில் “வைதிக மதம்”என்ற பிரிவில் ‘பெயரில்லாத மதம்‘ என்ற உரை பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is பூர்வ வழக்கும் கலிகால நடப்பும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  மதுவிலக்கு
Next