Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

த்ருஷ்ட-அத்ருஷ்ட பலன்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

நமக்குப் புரிகிற ஸயன்ஸ், நமக்குப் பிடிக்கிற ‘எதிக்ஸ்’ [நன்னெறிக் கோட்பாடு] இவற்றுக்கு அநுஸரணையாயிருக்கிற ஆசாரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை ‘ஸுபர்ஸ்டிஷன்’ (மூட நம்பிக்கை) என்று தள்ளுவது தப்பு. நமக்குப் புரிகிறதும் பிடிக்கிறதும் நேருக்கு நேர் பலன் தருகிறவை. பல் தேய்க்காவிட்டால் துர்கந்தமாயிருக்கிறது. பல்லில் வியாதி வருகிறது என்று பிரத்யக்ஷமாகத் தெரிகிறது. மது பானம் பண்ணினால் புத்தி கெட்டுப் போகிறது, குடி மோஹத்தில் குடும்ப வாழ்க்கையிலே அநேக அனர்த்தங்கள் ஏற்படுகின்றன என்றெல்லாம் நமக்குப் பிரத்யக்ஷமாகத் தெரிகிறது. அதனால் பல் தேய்க்கணும், மதுபானம் பண்ணக்கூடாது என்றெல்லாம் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் ஆசாரங்களை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் எல்லா ஆசாரமே இப்படிக் நம் ப்ராக்டிகல் லைஃபில் [நடைமுறை வாழ்க்கையில்] ப்ரூவ் ஆவதாக இருந்தால்தான் ஒப்புக் கொள்வோம் என்றால் அது தப்பு.

ஏனென்றால் த்ருஷ்ட பலன் என்பதாகப் பிரத்யக்ஷத்தில் பலனைக் கொடுக்கிறவற்றோடு, நேராகத் தெரியாமல் ஒவ்வொரு கார்யமும் அத்ருஷ்டமாகவும் புண்ய-பாபங்கள் என்றாகிப் பலன் தருகின்றன. அத்ருஷ்டம் என்றால் இங்கே luck என்று அர்த்தமில்லை. அத்ருஷ்டம் என்றால் கண்ணுக்குத் தெரியாதது, அதாவது சிற்றறிவுக்குப் புரியாதது என்று அர்த்தம். ஒரு கார்யம் இந்த ஜன்மத்திலோ, ஜன்மாந்தரத்திலோ, அல்லது ஜன்மா இல்லாமலாக்கிப் பராமாத்மாவிடம் சேர்ப்பதிலோ கொடுக்கிற பலன்களையும் ஆசாரங்கள் சொல்கின்றன. இதற்கு ‘அத்ருஷ்ட பலன்’ என்று பெயர்.

‘ப்ராத: ஸ்நானம் ப்ரசம்ஸந்தி த்ருஷ்டாத்ருஷ்ட பலம் ஹி தத்’ என்று சாஸ்திர வசனம். இங்கே இரண்டுவிதமான பலன்களும் ப்ராத ஸ்நானத்தினால் விளைவதாகச் சேர்த்துச் சொல்லியிருக்கிறது. “த்ருஷ்டபலன், அத்ருஷ்டபலன் இரண்டையும் ப்ராத ஸ்நானம் கொடுக்கிறது என்று அதைப் புகழ்கிறார்கள்” என்று அர்த்தம்.

ஸுர்யோதயத்துக்கு முந்தைய மூன்றே முக்கால் நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 மினிட்) க்குப் பிராதக்காலம் என்று பேர். அருணோதயம் என்றும் சொல்வதுண்டு. அந்தக் காலத்தில் பச்சை ஜலத்தில் குளிப்பதற்கு பிராதஸ்நானம் என்று பெயர். ஆற்றில், குளத்தில் செய்தாலும் சரி, அகத்தில் மொண்டுவிட்டுக் கொண்டு செய்தாலும் சரி, தலைக்கும் ஜலம் விட்டுக் கொள்ள வேண்டும். (தலைக்கு தினமும் ஜலம் விட்டுக் கொள்வது ஸ்திரீகளுக்கு அவசியமில்லை. விரததினம், பித்ருதினம் தவிர மற்ற நாட்களில் அவர்கள் தலைக்கு மஞ்சள் ஜலம் புரோக்ஷித்துக் கொண்டாலே போதும்) பொதுவாகத் தலையோடு கால் பச்சை ஜலத்தில் காலங்கார்த்தாலேயே குளித்துவிட வேண்டும். இதன் த்ருஷ்ட பலன், அதாவது ப்ரத்யக்ஷ விளைவு முதலாவதாக தேஹ சுத்தி, உடம்பின் அழுக்கு போகிறதென்று நேரே தெரிகிறது. அதோடு அந்த வேளையில் குளித்து விடுவதால் தூங்குமூஞ்சித்தனம், சோம்பல் எல்லாம் போய், உத்ஸாஹமும் சுருசுருப்பும் உண்டாகின்றன. புத்தித் தெளிவும் ஏற்படுகிறது. இன்னம் மெடிகல் ஸயன்ஸ்படி சொல்லும்போது, இந்தப் பிராத ஸ்நானத்தினால் நரம்பு மண்டலமே உறுதியடைந்து, இப்போது ‘நெர்வஸ் டிஸீஸ்’ என்று பல ரூபத்தில் பரவிவருதெல்லாம் க்ஷீணித்துவிடும் என்கிறார்கள். அந்த வேளையில் ஸ்நானம் செய்வது உணர்ச்சிகளையும் குளிரப்பண்ணி சமனமாக்குகிறதென்பது இதன் ஸைகலாஜிகல் எஃபெக்ட்.

ஆனால் இந்த ஹைஜீன், மெடிகல் வால்யூ ஸைகாலஜி எல்லாவற்றையும் விட முக்யம் இந்தப் பிராதஸ்நானம் சாஸ்திரவத்தாக மந்திரடத்துடனோ, கோவிந்த நாம பூர்வமாகவோ பண்ணப் பட்டால் அது வெளி அழுக்கைப் போக்குவதோடு ஆத்மாவையும் சுத்தி செய்யப் பிரயோஜனப்படுகிறதென்பதுதான். சரீர அழுக்கு போகிறதும், மனஸிலே அப்போதைக்கு ஒரு குளிர்ச்சி ஏற்படுவதும் உடனே த்ருஷ்டமாகத் தெரிகிறது. ‘நெர்வஸ் ஸிஸ்டம் ஸ்ட்ரெங்க்தன்’ ஆவது போகப் போகத் தெரியும் ஆத்ம சுத்தி ரொம்ப நிதானமாகத்தான் தெரியும். பிராத ஸ்நானமே மந்திர பூர்வமாக, அல்லது பகவந் நாம பூர்வமாக விதிப்படி பண்ணப்படும்போது அதனால் நமக்கு ஏற்படுகிற புண்யத்தின் விளைவுகள், இதனால்தான் அது [பிராத ஸ்நானத்தின் புண்யத்தினால்தான் இந்த பலன் நமக்கு வாய்க்கிறது] என்று டைரக்டாகத் தெரியாமல் என்றைக்கோதான் உண்டாகும். இந்த ஜன்மாவிலோ இந்த லோகத்திலோகூட இல்லாமல் அது உண்டாகலாம். அந்த அத்ருஷ்ட பலன்தான் ஆசாரங்களின் லக்ஷ்யம். த்ருஷ்டத்தில் எத்தனை நன்மைகள் உண்டானாலும் அதெல்லாம் இரண்டாம் பக்ஷந்தான்.

இந்தக் காரியத்துக்கு இந்த விளைவு என்று டைரக்டாக நாம் கண்டுகொள்ள முடியாமலிருப்பவை அத்ருஷ்ட பலன்கள். அவை ஸாக்ஷாத் பரமேஸ்வரனின் சித்தப்படி நடக்கிற விளைவுகள். அவன் எல்லாவற்றையும் மூடி மறைத்து ஆட்டம் போடுகிறவன். இப்படி மாயை பண்ணுவதுதான் அவன் தொழில். அந்த மாயாவியே மஹா கருணையோடு மஹான்களாக, ரிஷிகளாக இருக்கப்பட்டவர்களுக்குத் தன்னுடைய திவ்ய சித்தத்தைக் கொஞ்சம் திறந்து காட்டுகிறான். அதனால்தான் நமக்கு ரஹஸ்யமாக இருக்கிற உண்மைகள் அவர்களுக்குத் தெரிகின்றன. பரம கருணையோடு அவற்றை லோகமும் உஜ்ஜீவித்துவிட்டுப் போகட்டும் என்று அவர்கள் சாஸ்திரங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். இப்படித்தான் அத்ருஷ்ட பலனைத் தருகிற ஸமாசாரங்களைப் பற்றி நமக்கு ஆசார விதிகள் செய்து கொடுத்திருக்கிறார்கள். இதில் நமக்குப் பிரத்யக்ஷ நிரூபணம் (practical proof ) இல்லை, அல்லது இதற்கு scientific basis [விஞ்ஞான ரீதி அடிப்படை] இல்லை, அல்லது இது நம்முடைய social ideology -க்கு [ஸமூஹ வாழ்க்கைக் கொள்கைக்கு] ஒத்து வரவில்லை என்று சொல்லி அலக்ஷ்யம் செய்வது கொஞ்சங்கூட புத்திசாலித்தனமாகாது. நம் புத்தியின் நேர் proof -க்கு வராத விஷயங்களும் ஈஸ்வரனுடைய மஹா புத்தியில் இருக்க முடியும்; அவற்றை அவனோடு அவனாகக் கலந்திருந்த மஹான்கள் அறிந்து நமக்குச் சொல்ல முடியும் என்பதில் பக்தியும் சிரத்தையும் இருக்க வேண்டியது அவசியம். ஆசாரமென்பது மெகானிகலாக ஏதோ ஒரு ரொடீனை அநுஸரிப்பது மட்டுமில்லை. சரீர காரியத்தோடு இதில் மனஸின் பக்தி சிரத்தையும் கலக்க வேண்டியது ரொம்ப அவசியம். இல்லாது போனால் பலன் ஏற்படாது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அனைத்தும் அடங்குவது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  செயல்களை ஈஸ்வரபரமாக்குவது
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it