ச்ருதி- ஸ்மிருதி; ச்ரௌதம்-ஸ்மார்த்தம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ச்ருதி-ஸ்ம்ருதிகளுக்கிடையே பேதம் கற்பிப்பது தப்பு. ச்ருதி-ஸ்ம்ருதி-புராணம் மூன்றும் ஒரே tradition (மரபு) தான். “ச்ருதி-ஸ்ம்ருதி-புராணானாம் ஆலயம்” என்று பகவத் பாதாளைச் சொல்கிறோம். இவை ஒன்றுக்கொன்று வித்யாஸமானவையாக யிருந்தால் எப்படி ஒருத்தரிடமே மூன்றும் சேர்ந்திருக்கும்?

ஆசாரியாளின் வழியை அநுஸரிப்பவர்களுக்கு ஸ்மார்த்தர்கள் என்பது பெயர். ‘ஸ்மார்த்தர்’ என்றால் ‘ஸ்மிருதிகளைப் பின்பற்றுகிறவர்’ என்பதே அர்த்தம். வேதத்தை நிலை நாட்டவே ஆசார்யாள் அவதரித்தார் என்று சொல்லிவிட்டு, அவரது வழியில் போகிறவர்களை ஸ்மார்த்தர் என்றால் வேதமும் ஸ்மிருதியும் ஒன்று என்று தானே ஆகிறது?

இப்போது, வேதத்திலே வ்யக்தமாக [வெளிப்படையாக]ச் சொல்லாமல் ஸ்மிருதிகளில் சொல்லியுள்ள அநுஷ்டானங்களை ஸ்மார்த்த கர்மா என்றும், வேதமான ச்ருதியிலேயே வ்யக்தமாகச் சொன்ன அநுஷ்டானங்களை ச்ரௌத கர்மா என்றும் சொல்கிறோம். இதனால் ச்ரௌதத்தைவிட ஸ்மார்த்தம் கீழானது என்று நினைத்து விடவே கூடாது. கிருஹஸ்தனுக்கு மிகவும் முக்யமான ஒளபாஸனம், வீட்டிலே இவன் செய்ய வேண்டிய அதி முக்யமான (domestic) க்ருஹ்ய கர்மாக்கள், வைதிக கர்மாக்களில் ரொம்பவும் அவசியமானதான பித்ரு சிராத்தம் இவையும், பாக யக்ஞங்கள் என்ற ஏழு வேள்விகளும் ஸ்மார்த்த கர்மாக்கள்தான். இவற்றிலெல்லாம் வேத மந்திரங்களேதான் பிரயோஜனமாகின்றன. ஆகையால் ச்ருதியின் உள்பாவத்தை நன்றாகப் புரிந்து கொண்டேதான் இவற்றை ஸ்மிருதிகாரர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

ஆகையால் ச்ருதியை விட ஸ்மிருதி கீழானது, ஸ்மிருதியை விடப் புராணம் கீழானது என்றெல்லாம் நினைக்காமல் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, integrated -ஆக நினைக்க வேண்டும்.

வேத தர்மங்களைப் புராணம் கதையாகச் சொல்கிறது. வேத தர்மங்களையும் கர்மங்களையும் ஸ்ம்ருதியானவை கதையில்லாத உபதேசங்களாக, விதிகளாகத் தருகின்றன‌. கர்மாக்களின் வழிமுறைகளையும் தருகின்றன.

வேதம் முனிவர்களுக்கு intuition -ல் (உள்ளுணர்வில்) பளீரென்று தெரிந்தது. அதை அவர்கள் செய்யவில்லை. வெறுமே கண்டு கொண்டார்கள். இங்கே அவர்களுடைய மூளைக்கு வேலையே இல்லை.

ச்ருதிம் பச்யந்தி முனய:

“வேதத்தை முனிவர்கள் வெறுமே கண்டு கொண்டார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிக் கண்டெடுத்ததில் தங்கள் மூளையைச் செலுத்தி, ஜனங்களுக்கு தர்மங்களையும் கர்மங்களையும் பாகுபடுத்தி, வகை தொகையாக தரவேண்டும் என்ற எண்ணத்தில் நினைவு படுத்திக் கொண்டு கோத்துக் கொடுத்ததே ஸ்மிருதி. ஸ்மிருதி என்றால் நினைவு என்று முன்பே சொன்னேனல்லவா?

வேதம் தோன்றியது தானாக உண்டான அநுபவம். அதிலிருந்து ரிஷிகள் நினைவால் உண்டாக்கியது தர்ம சாஸ்திரம் எனப்படும் ஸ்மிருதிகள்.

“ஸம்ஸ்கார ஜன்யம் ஞானம் ஸ்ம்ருதி:” என்று, நியாய சாஸ்திரத்தில் ஸ்மிருதிக்கு லக்ஷணம் சொல்லியிருக்கிறது. ஸம்ஸ்காரத்திலிருந்து பிறக்கும் அறிவே ஸ்ம்ருதி என்று அர்த்தம்.

இந்த இடத்தில் ‘ஸம்ஸ்காரம்’ என்பதற்கு ‘அதீந்திரியம்’ என்றும் இன்னொரு பேர் சொல்லியிருக்கிறது. இது என்ன?

காசிக்குப் போய் நேரிலே அந்த க்ஷேத்ரத்தைப் பார்த்தோம். நேரிலே பார்த்தது அநுபவம். ஊருக்குத் திரும்பி வந்து ரொம்ப நாள் கழித்துக் கோயிலுக்குப் போகிற போது, இந்த உள்ளூர்க் கோயிலிலும் ‘காசி விஸ்வநாதர் ஸந்நிதி’ என்று இருப்பதற்குப் போகிறோம். உடனே காசியிலே நாம் அநுபவித்த விச்வநாத தரிசனம் ஞாபகம் வருகிறது. நடுவே பல நாள் இந்த நினைவு இல்லை. அநேகம் பேரைப் பார்க்கிறோம். பிறகு நினைப்பதில்லை. மறுபடி பார்த்தால் மட்டும், ‘ஒஹோ, முன்னே பார்த்திருக்கிறோமே! என்று பழைய ஞாபகம் வருகிறது. இடையிலே நினைவு இல்லை. அப்படி இடையில் இருக்கிற நிலைதான் ஸம்ஸ்காரம் அல்லது அதீந்திரியம் என்பது. அதிலே அநுபவத்தின் impression [பதிவு] உள்ளூர இருக்கிறது. இந்த ‘இம்ப்ரெஷன்’ அப்புறம் ‘எக்ஸ்ப்ரெஷ’னாக வெளிப்படுவதுதான் ஸ்மிருதி (நினைவு) . ஆக அநுபவம், அந்த அநுபவித்தில் ஏற்பட்ட உள் இம்ப்ரெஷனான ஸம்ஸ்காரம் என்ற இரண்டையும் கொண்டே ஸ்மிருதி என்ற நினைவு உண்டாகிறது.

அநுபவமான வேதம் நினைவான ஸ்மிருதியாக, தர்ம சாஸ்திரமாக வந்திருக்கிறது. வேத மூலம் இல்லை என்றால் ஸ்மிருதி என்ற பேரே தப்பு. இந்த ஸ்மிருதிக்கு எது ஆதாரமான அநுபவம் என்றால் வேதம்தானே? அப்படியொரு ஆதாரமில்லாவிட்டால் “நினைவுக் குறிப்பு” என்று பொருள்படும்படிப் பேர் வைத்திருப்பார்களோ? ஏற்கெனவே ஆதாரமில்லாமல் புதிதாகத் தோன்றுவதை ஞாபகக் குறிப்பு என்று யாராவது சொல்வார்களா?

நேராக ச்ருதியிலேயே சொன்ன ச்ரௌதம் ஸந்தேஹத்துக்கு இடமில்லாமல் நமக்கு 100% பிரமாணம் என்பதில் யாருக்கும் இரண்டாவது அபிப்பிராயமில்லை. அதற்காக அப்படி நேராக ச்ருதியில் இல்லாமல் ஸ்மிருதியிலேயே உள்ள ஸ்மார்த்தம் இரண்டாம் பக்ஷப் பிரமாணம் என்று அர்த்தமில்லை. ச்ரௌதத்துக்கு ஆக்ஷேபமாக, மாறாக ஸ்மார்த்தம் பேசாது. ச்ரௌதத்துக்கு அதிகமாகவே சிலதை அது சொல்கிறது. இவையும் நமக்குப் பூர்ணப் பிரமாணமே. ஏனென்றால் ச்ருதியின் inner spirit -ஐ (உள் பாவத்தை) ப் புரிந்து கொண்டே இவற்றை ஸ்மிருதி சொல்கிறது. மஹாபுராணங்களிலும், இதிஹாஸங்களிலும் விட்டுப் போனதையும் ஸ்தல புராணங்கள் எடுத்துச் சொல்லி இட்டு நிரப்புகிற மாதிரி, ச்ரௌதத்தில் விட்டுப் போனதையே ஸ்மார்த்தத்தில் சொல்லியிருக்கிறது. ஆகையால் ‘ச்ருதி பிரமாணம்’, ‘ஸ்மிருதி பிரமாணம்’ என்ற இரண்டு வார்த்தைகள் அடிபடுவதைப் பார்த்து, இவற்றுக்கிடையில் வித்யாஸமோ, ஏற்றத் தாழ்வோ கற்பிக்கக் கூடாது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வேதமே ஸ்மிருதிகளுக்கு அடிப்படை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஸம்ஸ்காரம்
Next