அக்னி காரியங்கள்* : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இப்படி ஏறக்குறைய நானூறு யஜ்ஞங்கள் வேதத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இவற்றில் ஒளபாஸனம் மட்டும் நாலு வர்ணத்தாருக்கும் உண்டு. மற்றவற்றை முதல் மூன்று வர்ணத்தாரும் செய்யலாம் என்றாலும் பிரம்ம க்ஷத்ரியர்களே அதிகம் செய்ததாகவும் வைச்யர்கள் நடைமுறையில் அவ்வளவாகச் செய்து வரவில்லையென்றும், பிற்பாடு க்ஷத்ரியர் பண்ணுவதும் குறைந்து பிராம்மணர் மட்டுமே பண்ண ஆரம்பித்ததாகவும் சொல்கிறார்கள். க்ஷத்ரியர்களுக்கென்று மட்டுமே புஜபலம், வீர்ய விஜயம் முதலியவற்றைத் தருகிற யஜ்ஞங்கள் இருக்கின்றன. ராஜஸூயம், அச்வமேதம் முதலியவற்றைச் சக்கரவர்த்திகளே பண்ணியிருக்கிறார்கள். இப்படியே தன தானிய ஸம்ருத்தி (செழிப்பு) க்காக வைச்யர்களுக்கென்றே சில யஜ்ஞங்கள் உள்ளன. யாகத்தை நடத்திக் கொடுக்கும் ஹோதா, உத்காதா, அத்வர்யு, பிரம்மா எல்லாரையும் பிராம்மணர்களாக வைத்துக் கொண்டு, யஜமானனாக க்ஷத்ரியனோ வைசியனோ இருந்து யாகம் செய்யவேண்டும். (அந்தக் காரியங்களையும் இந்த இரு ஜாதிகள் செய்வது என்றால் இவர்கள் செய்ய வேண்டிய ரக்ஷணை, வியாபாரம், விவசாயம் முதலியன பாழாகி விடுமே!)

எல்லா யாகங்களையும் எல்லா பிராம்மணர்களும் செய்யவேண்டும் என்றில்லை. இவற்றில் அநேகம் குறிப்பிட்ட ஒவ்வொரு பலனுக்காக இருக்கும். பிள்ளை பிறக்கவேண்டுமென்பதற்காகப் புத்ரகாமேஷ்டி செய்வது என்று ராமாயணத்தில் கேள்வி பட்டிருக்கிறோமல்லவா? அப்படி. இவ்வாறு ஒரு இஷ்டத்தை உத்தேசித்துப் பண்ணுவது காம்ய கர்மா எனப்படும். அது ஒருவர் பிரியப்பட்டால் செய்கிற optional காரியந்தான். இஷ்டமிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆத்ம சுத்திக்காகவும், லோக க்ஷேமத்துக்காகவும் செய்தே தீர வேண்டிய obligatory கர்மாக்களும் உண்டு. அவற்றுக்கு நித்யகர்மா என்று பெயர். ‘நித்ய’ என்றால் இங்கே தினந்தோறும் பண்ணுவது என்ற அர்த்தமில்லை.

இப்படிப்பட்ட நித்ய கர்மாக்களாகப் பண்ண வேண்டியவை இருபத்தியோரு யக்ஞங்கள். நானூற்றில் மீதமுள்ளதைப் பண்ணினால் பண்ணலாம். பண்ணாவிட்டாலும் தோஷமில்லை. ஆனால் நாற்பது ஸம்ஸ்காரங்களிலேயே சேர்க்கப்பட்டு விட்ட இந்த இருபத்தியொன்றை ஜன்மாவில் ஒரு தரமாவது செய்யவேண்டும்.

இந்த இருபத்தியொன்றும் ஏழு பாக யக்ஞங்கள், ஏழு ஹவிர் யக்ஞங்கள், ஏழு ஸோம யக்ஞங்கள் என்று பிரியும் என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.

விவாஹம் அக்னி ஸாக்ஷியாக அக்னியில் ஹோமத்துடன் தானே நடக்கிறது? அந்த அக்னியிலேயே விவாஹத்தின் போதே ஒளபாஸனம் ஆரம்பிக்கப்படுகிறது. பிறகு வாழ்நாள் பரியந்தம் அந்த ஒளபாஸனாக்னி அணையாமல் அதை உபாஸிக்க வேண்டும்.

பாக யஜ்ஞங்கள் என்று ஏழு சொன்னேனே, அவற்றையும், கிருஹத்தில் நடக்கும் உபநயனம் முதலான காரியங்களையும் சிராத்தம் முதலியவைகளையும் ஒளபாஸன அக்னியைக் கொண்டேதான் செய்யவேண்டும். தகப்பனாருடைய ஒளபாஸனாக்னியிலிருந்தே புத்திரனின் விவாஹத்தில் அக்னி வளர்க்கப்படும். இதுவே அப்புறம் புத்திரனின் ஜீவ பரியந்தமும் அவனுக்கு ஒளபாஸனாக்னியாகிறது. இப்படி அவிச்சின்னமாக [முறிவு படாமல்] தலைமுறை தலைமுறையாக அதே அக்னி போகும்.

ஒரு தனி மனிதனையும், அவனுடைய ஒரு குடும்பத்தையும் மட்டுமே மையமாகக் கொண்டு அமைகிற – அதாவது ஒளபாஸன அக்னி உபயோகிக்கப்படுகிற – எல்லா கர்மங்களுக்கும் ‘க்ருஹ்ய கர்மாக்கள்’ என்று பெயர். பாக யக்ஞங்கள் ஏழுங்கூட இப்படிப்பட்ட க்ருஹ்ய கர்மாக்கள்தான்.

இவை அநேகமாக ஒரு குடும்ப ஸமாசாரமாதலால் (பலன் நேராக ஒரு குடும்பத்தை உத்தேசித்ததானாலும், அதில் பிரயோகமாகிற வேத மந்திர சப்தம் ஸகல ஜகத்துக்கும் நல்லது செய்யத்தான் செய்யும்) ரொம்ப விஸ்தாரமாயில்லாமல் small scale-ல் இருக்கிறவை.

க்ருஹ்ய ஸூத்ரங்கள் இந்தக் கர்மாக்களை விவரிக்கின்றன. அவை ஸ்ம்ருதிகளைச் சேர்ந்தவை. ஸ்ம்ருதிகள் சொல்வதால் இவற்றுக்கு ஸ்மார்த்த கர்மாக்கள் என்றும் ஒரு பெயர் உண்டு.

இப்படியில்லாமல் விசேஷமாக லோக க்ஷேமத்தை உண்டாக்குவதாக (ஒரு குடும்பத்தின் கல்யாணம், திவஸம், இவற்றில் ஸம்பந்தப்படுவதோடு நின்று விடாததாக) இருக்கிற elaborate -ஆன [விரிவான] மற்ற யக்ஞங்கள் ச்ரௌத கர்மாக்கள் எனப்படும். வேதமான ச்ருதியையை நேர் ஆதாரமாகக் கொண்டு, இவற்றின் procedure [வழிமுறைகள்] சொல்லப்பட்டிருப்பதால் ச்ரௌதம் என்று பெயர் ஏற்பட்டது. இவற்றை விவரிக்கிற சாஸ்திரத்துக்கு ச்ரௌத ஸூத்ரங்கள் என்று பெயர்.

முன்பு ச்ருதிக்கும் ஸ்ம்ருதிக்கும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று சொன்னேன் அல்லவா? அது போலவே க்ருஹ்ய கர்மாவுக்கும் ச்ரௌத கர்மாவுக்கும் இடையிலேயும் தாரதம்மியங்கள் கற்பிக்கக்கூடாது. ஹிந்து மதம் என்று இப்போது சொல்கிற ஸநாதன தர்மத்தின் படி இரண்டும் இரு கண்களாக ரக்ஷிக்கப்பட வேண்டியவை.

விவாஹத்தின்போது ஒளபாஸனம் செய்யப்பட்ட அக்னியை இரண்டாகப் பிரிக்க வேண்டும். அதற்கென்று ‘அக்னி ஆதானம்’ என்று ஒரு சடங்கு உண்டு. இப்படிப் பிரித்ததில் ஒன்றே க்ருஹ்ய காரியங்களை செய்ய வேண்டிய க்ருஹ்யாக்னி (அல்லது ஸ்மார்த்தாக்னி) ஆகிறது. மற்றது ச்ரௌத காரியங்களைச் செய்வதற்கான ச்ரௌதாக்னியாகிறது. அதன் பின் இந்த இரண்டு அக்னிகளையும் சாச்வதமாக ரக்ஷித்து வரவேண்டும்.

இவற்றில் க்ருஹ்யாக்னிதான் ஒளபாஸனாக்னி என்றும் பெயர் பெற்று தினமும் அதில் ஒளபாஸனம் செய்யப்படுகிறது. இது ஒரே குண்டத்திலிருக்கிற அக்னிதான். அதனால் இதற்கு ‘ஏகாக்னி’ என்றும் பெயர். ஆபஸ்தம்ப ஸூத்ரத்தில் க்ருஹ்ய கர்ம விஷயங்களுக்கே ‘ஏகாக்னி காண்டம்’ என்று தான் பெயர். நான் இதுவரை சொல்லிவந்த ஸம்ஸ்கார ஸமாசாரங்கள், சாஸ்திரோக்த விதிகள் எல்லாமே பெரும்பாலும் ஆபஸ்தம்ப ஸூத்ரத்தை அநுஸரித்ததுதான். ஏனென்றால் அதை அநுஷ்டிக்கிற கிருஷ்ண யஜுர்வேதிகள்தான் தக்ஷிணத்தில் கணிசமான மெஜாரிட்டிக்காரர்கள். இங்கே மைனாரிடியாக உள்ள ரிக்வேதிகள் பின்பற்றுகிற ஆச்வலாயன ஸூத்ரத்திலும், ஸாம வேதிகள் அநுஸரிக்கிற கோபில ஸூத்ரத்திலும் சில விஷயங்கள் கொஞ்சம் மாறுபட்டிருக்கும். ஆனால், இந்த வித்யாசங்கள் க்ருஹ்ய கர்மாக்களில் தானேயன்றி ச்ரௌத கர்மாக்களில் வித்யாஸமே கிடையாது. ச்ரௌதம் எல்லோருக்கும் பொது.

ச்ரௌத காரியங்களுக்கு முக்கியமாய் இருக்கிற ச்ரௌதாக்னி என்பது மூன்று அக்னிகளாக, மூன்று குண்டங்களில் இருப்பது. அதனால் ‘த்ரேதாக்னி’ என்று அதற்குப் பெயர். ‘த்ரேதாக்னி காண்டம்’ என்றே ஆபஸ்தம்ப ஸூத்ரத்தில் இந்தப் பகுதிக்குப் பேர். இப்படி ச்ரௌதாக்னியை உபாஸிக்கிறவரையே ‘த்ரேதாக்னி’ என்று சொல்வதுண்டு. ‘ச்ரௌதி’ என்றும் சொல்வார்கள். ச்ரௌத- க்ருஹ்ய அக்னிகளை உபாஸிக்கிறவருக்கு ‘ஆஹிதாக்னி’ என்று பெயர். இப்படியே விஸ்தாரமான ஸோமயாகம் முதலானதைப் பண்ணினவருக்கு யஜ்வா, தீக்ஷிதர், மகி என்ற பெயர்கள் ஏற்படுகின்றன. ஸோம யாகங்களுக்குள் விசேஷமான வாஜபேயம் பண்ணினவர் வாஜபேயி எனப்படுகிறார். யாகம் அல்லது யஜ்ஞம் என்பதற்கு க்ரது, மகம் (இதிலிருந்துதான் யஜமானனுக்கு ‘மகி’ என்று பெயர் உண்டாகிறது) , ஸவனம், இஷ்டி, ஸ்தோமம், ஸம்ஸ்தை என்ற பெயர்களும் உள்ளன. இவற்றில் சிலவற்றுக்கிடையே சில வித்யாசங்களும் உண்டு. ‘முத்தீ’, ‘முத்தீ ஓம்புதல்’ என்றெல்லாம் ரொம்பப் பழைய தமிழ் நூல்களில் சிறப்பித்துச் சொல்லியிருப்பது ச்ரௌதாக்னியைத்தான்.

மூன்று அக்னிகள் என்ன என்றால், ஒன்று ‘கார்ஹபத்யம்’- அதாவது இல்லத்தின் அதிபதியான க்ருஹபதிக்கு உரியது. இந்த கார்ஹபத்ய குண்டத்திலேதான் அணையாமல் எப்போதும் ச்ரௌதாக்னி எரிந்து கொண்டிருக்க வேண்டும். இது முழுவட்ட வடிவமாக இருக்கும். இதிலே நேராக ஒரு ஹோமமும் கூடாது. இதிலே இருக்கிற அக்னியை பித்ரு காரியம் (இது க்ருஹ்யமான சிராத்தம் இல்லை; இது ச்ரௌதமாக அமாவாஸ்யை தோறும் செய்யும் பிண்ட பித்ரு கர்மா) செய்வதற்காகவும், சில சில்லறை தேவதா ஹோமங்களுக்காகவும் இரண்டாவதான ஒரு குண்டத்தில் எடுத்து வைத்துப் பண்ண வேண்டும். இந்தக் குண்டம் தெற்கே இருப்பதால் இந்த அக்னிக்கு ‘தக்ஷிணாக்னி’ என்று பெயர். இது அரை வட்டமாக இருக்கும். பொதுவாக மற்ற எல்லா தேவதைகளுக்கும் செய்கிற ஹோமங்களை மூன்றாவதான ‘ஆஹவநீயம்’ என்ற கிழக்குப் பக்கமுள்ள குண்டத்தில் பண்ண வேண்டும். கார்ஹபத்ய அக்னியிலிருந்தே கிழக்குக் குண்டத்தில் எடுத்து வைத்து ஆஹவநீய அக்னியை உண்டாக்க வேண்டும். ஹவன், ஹவன் என்றுதானே வடக்கே யாகத்தையே சொல்கிறார்கள்? அந்த ஹவனம் அல்லது ஆஹவனத்துக்கு ஆதாரமாக இருக்கப்பட்டதுதான ஆஹவநீயம். இந்த ஆஹவநீய குண்டம் சதுரமாக இருக்கும். தேவதாப்ரீதியாகச் செய்யப்படும் ஸோம யாகம் முதலான எல்லாப் பெரிய வேள்விகளும் ஆஹவநீய அக்னியை க்ருஹத்திலிருந்து யாகசாலைக்கு கொண்டு போய் அங்கே அதில் செய்வதுதான்.

க்ருஹ்யத்தில் ஒளபாஸனம் போல, ச்ரௌத கர்மாக்களில் அன்றாடம் இரண்டு வேளையும் செய்ய வேண்டியது அக்னி ஹோத்ரம். முன்பு சொன்ன அக்னி ஆதானமும் அக்னி ஹோத்ரமும் ஏழு ஹவிர்யக்ஞங்களில் முதலிரண்டாகும். அக்னி ஹோத்ரம் செய்பவர்களையே அக்னி ஹோத்ரிகள் என்கிறோம். (இக்காலத்தில் ஹாஸ்யம் என்று நினைத்து, ஸிகரெட் ஊதுவதை அக்னி ஹோத்ரம் என்றும், ரேஸுக்குப் போவதை அச்வமேதம் என்றும் சொல்வது அபசாரமாகும்.)

வஸந்த காலத்தில் (அதாவது ஏறக்குறைய நம் சித்திரை வைகாசி மாஸங்களில்) விவாஹம் செய்வதால் ஒளபாஸன ஸித்தியும், அக்னி ஆதானம் செய்வதால் அக்னி ஹோத்ர ஸித்தியும் உண்டாகின்றன.

அக்னிஹோத்ர அக்னி எக்காரணத்திலாவது அணைந்து விட்டால் புனராதானம் என்பதாக மறுபடி ஆதானம் பண்ணி மீண்டும் ஆரம்பிக்கலாம். இப்படியே ஒளபாஸன அக்னி அணைந்தாலும், அக்னி ஸந்தானம் செய்து மறுபடி ஆரம்பிக்கலாம். தற்போது அநேகமாக அத்தனை பேர் வீட்டிலுமே ஒளபாஸன, அக்னி ஹோத்ர அக்னிகள் இல்லாததால் நான் இவற்றைச் செய்யச் சொல்லும்போது, “எப்படி முடியும்? விவாஹ காலத்திலிருந்து இந்த அக்னிகளை நாங்கள் ரக்ஷிக்காமல் விட்டு விட்டோமே!” என்று நீங்கள் கேட்டுவிடக்கூடாது என்றே இதை – இப்போதுகூட இவற்றை ஆரம்பித்துக் கொள்ள இடமிருக்கிறது என்பதை — சொல்கிறேன்.

ஒளபாஸனத்தில் அக்ஷதையையும், அக்னி ஹோத்ரத்தில் பால், அக்ஷதை, நெய் இவற்றில் ஒன்றையும் ஹோமம் செய்யவேண்டும். (பொதுவாக அக்னி ஹோத்ரத்தில் பாலைச் செய்வதே வழக்கமாயிருக்கிறது.)

கார்ஹபத்ய அக்னியை ச்ரௌதமான பிண்ட பித்ரு காரியத்துக்காக தக்ஷிணாக்னியிலும் வைத்து அந்தக் கர்மாக்களைப் பண்ணி முடிந்த பிறகு இந்த இரண்டு அக்னிகளும் ‘ச்ரௌத அக்னி’ என்ற உன்னதமான பெயரை இழந்து வெறும் ‘லௌகிக அக்னி’ யாகி விடும். இவற்றை விஸர்ஜனம் செய்து விடவேண்டும். [அணைத்து விடவேண்டும்]. கார்ஹபத்யம் மட்டுமே விஸர்ஜனமில்லாமல் ஒளபாஸனாக்னி போல எப்போதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.

முக்கியமாக ஒவ்வொரு பிரதமையிலும் க்ருஹ்யாக்னி, ச்ரௌதாக்னி இரண்டிலும் க்ருஹஸ்தன் செய்யவேண்டிய உபாஸனைகளாக முறையே ஒரு பாக யஜ்ஞமும் ஒரு ஹவிர் யஜ்ஞமும் உள்ளன.

இந்த பாக யஜ்ஞத்துக்கு ஸ்தாலீபாகம் என்று பேர். ஸ்தாலீ என்று சோற்றுப் பானைக்கு பெயர். ஒளபாஸன அக்னியிலே ஸ்தாலியை வைத்து ‘சரு’ என்கிற பக்குவ அன்னம் செய்வது ஸ்தாலீபாகம். இந்தச் சருவை ஹோமம் செய்ய வேண்டும்.

ஏனைய பலவற்றுக்கு அடிப்படையாக இருப்பதை ‘ப்ரக்ருதி’ என்பார்கள். இந்த ப்ரக்ருதியைத் தழுவி சில மாறுதல்களுடன் செய்கிற மற்றவற்றுக்கு விக்ருதி என்று பெயர். ச்ராவணி என்கிற ஸர்ப்ப பலி, ஆக்ராஹாயணி முதலான பாக யக்ஞங்களுக்கு ஸ்தாலீபாகம் தான் ப்ரக்ருதி. அடி முதல் நுனி வரை கர்மா செய்ய வேண்டிய கிரமம் சொல்லப் படுவதே ‘ப்ரக்ருதி’. அநேக விஷயங்களில் இதையே ‘ஷெ’ அல்லது ditto போட்டுக் காட்டி மற்ற விஷயங்களை மட்டும் சொல்வது ‘விக்ருதி’.

பிரதி பிரதமையும் ச்ரௌதாக்னியில் பண்ணவேண்டிய ஹவிர்யக்ஞத்துக்கு ‘தர்ச பூர்ண இஷ்டி’ என்று பெயர். தர்சம் என்றால் அமாவாஸ்யை; பூர்ணம் என்றால் பௌர்ணமி. இந்த இரண்டுக்கும் மறுநாளான பிரதமைகளில் செய்யப்படும் இஷ்டியாதலால் (இஷ்டி என்றால் யாகம்) தர்ச பூர்ண இஷ்டி என்று பெயர். இதை ‘இஷ்டி’ என்று மட்டுமே சுருக்கியும் சொல்வார்கள். ஹவிர்யக்ஞங்களுக்குள் இதுவே ப்ரக்ருதி, மற்றவை இதன் விக்ருதிகள்.

இப்படியே ஸோம யக்ஞங்களில் ‘அக்னிஷ்டோமம்’ என்பதுதான் ப்ரகிருதி. ‘ஸ்தோமம்’ என்றாலும் வேள்வி தான். அக்னி+ஸ்தோமம் என்னும்போது ஸந்தியில் ‘ஸ்தோ’ என்பது ‘ஷ்டோ’வாகிறது. ‘ஸ்தாபித’ என்பதை இங்கிலீஷில் ‘எஸ்டாப்லிஷ்’ என்கிறபோது ஸ்தா ஸ்டாவாகிறதல்லவா? சில பாமர ஜனங்கள் ஸ்டார், ஸ்டாம்ப் என்பதை இஷ்டார், இஷ்டாம்ப் என்கவில்லையா? இவை வேதத்திலேயே சில ஸந்திகளில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒலி மாற்றங்கள் (phonetic changes).

ஏழேழு பாக-ஹவிர்-ஸோம யஜ்ஞங்களில் பாக்கியுள்ளவை பற்றி கொஞ்சம் சொல்கிறேன்.

பாக யஜ்ஞங்கள் சின்னவை. இவை யாகசாலை போட்டுக்கொள்ளாமல் வீட்டிலேயே செய்கிற க்ருஹ்ய கர்மாக்கள். ச்ரௌத கர்மாக்களில் கூட முதல் நாலு ஹவிர் யக்ஞங்களான சாதுர்மாஸ்யம், (நிரூட) பசுபந்தம், ஸெளத்ராமணி இவையும், ஏழு ஸோம யக்ஞங்களும், மற்ற எல்லா யாகங்களும் யாகசாலை தனியாக அமைத்து அதிலேயே செய்யப்பட வேண்டியவை.

யாகசாலைக்கு ‘தேவ யஜனம்’ என்றும் பெயர். அந்த அமைப்பைப் பற்றி ஸகல விவரங்களும் வெகு நுணுக்கமாக கல்ப ஸூத்ராதிகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. ‘சயனம்’ என்று செங்கல் வைத்துக் கட்டவேண்டிய யக்ஞ அமைப்புகள் உண்டு. (பாக யக்ஞங்களுக்கும் ஹவிர் யக்ஞங்களுக்கும் சயனம் கிடையாது). இவற்றுக்கும் ரொம்ப minute ஆக details [நுணுக்கமான விவரங்கள்] தரப்பட்டுள்ளன. இதிலே கணித விஷயங்கள் உள்ளன என்று முன்பே சொன்னேன். ஹோமம் செய்கிற கரண்டியை எடுத்துக் கொண்டால் அதில் தர்வீ, ஸ்ருக், ஸ்ரவம் என்று பல தினுசு. ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவு, இன்ன வஸ்துவால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று இருக்கிறது. இப்படியிப்படி கை முத்திரை பிடிக்க வேண்டும் என்று விதி உள்ளது. எந்த சின்ன விஷயமும் விட்டுப் போகாமல் இப்படி அளவுகள், இன்ன ‘மெடீரியல்’ என்பது எல்லாம் சொல்லியிருக்கும். அணு ஆராய்ச்சி, ‘ஸ்பேஸ் ரிஸர்ச்’ என்று லாபரட்டரியில் செய்கிற போது எப்படி ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் அதி ஜாக்ரதையுடன் செய்கிறார்களோ அப்படியே [இயற்கைக்கு அதீதமான] ஸூபர்நாச்சுரல் சக்திகளை லோக க்ஷேமத்துக்காக இழுத்துக் கொடுக்கிற யஜ்ஞங்களிலும் இண்டு இடுக்கு விடாமல் ஸகல அம்சங்களையும் ஜாக்ரதையுடன் முறைப்படி செய்ய சாஸ்திரம் விரிவான விதிகளைக் கொடுத்திருக்கிறது.

பாகயக்ஞம் ஏழும் சின்னவை. ‘பாக’ என்றால் ‘சின்ன’, ‘குழந்தை மாதிரியான’ என்று ஒரு அர்த்தம். வெந்த உணவுக்கும் பாகம் என்று பெயர். அதனால்தான் சமையற்கலையையே ‘பாக சாஸ்திரம்’ என்கிறோம். Paaka என்று சொல்லவேண்டும். Baaga அல்லது Bhaaga என்பது தப்பு. சமைக்கிற இடம் பாகசாலை. அநேகமாக ஸ்தாலீபாகத்தில் அன்னத்தை ஹோமம் செய்வது போல வெந்த தானியங்களையே பாக யக்ஞங்களில் ஆஹூதி பண்ணும்படியிருக்கிறது. கஞ்சி வடிக்கக்கூடாது. இதற்கு ‘சரு ஹோமம்’ என்று பெயர். ஆனால் ஒளபாஸனத்தில் வேகவைக்காத அட்சதை (வரட்டு அரிசி) தான் ஹோமம். அஷ்டகா என்ற பாக யஜ்ஞத்தில் அடை மாதிரி உள்ள புரோடாசம் ஹோமம் செய்யப்படுகிறது.

பாகயஜ்ஞங்கள் ஏழில் அஷ்டகா என்பது சிராத்தத்தைச் சேர்ந்த பித்ருகர்மா. சுக்லபக்ஷம், கிருஷ்ணபக்ஷம் என்று இருக்கிறதல்லவா? இவற்றில் சுக்லபக்ஷம் (வளர்பிறை) தேவர்களுக்கு விசேஷமானது, கிருஷ்ணபக்ஷம் (தேய்பிறை) பித்ருக்களுக்கு விசேஷமானது. பித்ரு காரியங்களுக்கு ‘அபர காரியம்’ என்றும் பெயர். அதனால் கிருஷ்ணபக்ஷத்தை அபரபக்ஷம் என்பதுண்டு. இந்த அபரபக்ஷத்தில் நட்டநடுவில் அஷ்டமி வருவதால் அது பித்ருக்களுக்கு அதி விசேஷமானது. ஹேமந்தருது (முன்பனிக்காலம்) . சிசிர ருது [பின்பனிக்காலம்] என்கிற மார்கழி, தை மாசி, பங்குனி மாதங்களில் இந்த அஷ்டமிக்களில் அஷ்டகா சிராத்தம் செய்யப்பட வேண்டும். இவற்றில் மாசியில் செய்வதே சிறப்பாக அநுஷ்டிக்கப் பட்டிருக்கிறது. அஷ்டகையின் தொடர்ச்சியாக மறுதினம் செய்வது அன்வஷ்டகை.

ஸ்தாலீபாகம் என்ற பாகயக்ஞத்தைப் பற்றி முன்பே சொன்னேன்.

பாகயக்ஞங்களில் இன்னொன்று பார்வணீ என்பதே சிராத்தங்களுக்கெல்லாம் பிரகிருதி. அது மாஸம் ஒரு முறை செய்யப்படுவதால் ‘மாஸி ச்ராத்தம்’ என்றும் கூறப்படும். இது ஆபஸ்தம்ப ஸூத்ரப்படி. கௌதம ஸூத்ரப்படி பார்வணம் என்பது ஒவ்வொரு பர்வாவிலும் செய்யும் ஸ்தாலீபாகத்தையே குறிப்பதாகும்.

‘ச்ராவணீ’ என்கிற பாகயக்ஞத்துக்கு ‘ஸர்ப்ப பலி’ என்றும் பெயர். ச்ராவண மாஸத்தில், அதாவது ஆவணியில் பௌர்ணமி ராத்திரியில் சருவாலும், ஆஜ்யத்தாலும் [நெய்யாலும்] ஹோமம் செய்து, பலாச [புரச]புஷ்பங்களையும் இரண்டு கைகளால் ஹோமம் பண்ண வேண்டும். புற்றிலோ வேறு சுத்தமான இடத்திலோ பச்சரிசி மாவால் கோலம் போன்ற சிலவற்றைப் போட்டு ஸர்ப்ப மந்திரங்களைச் சொல்லி பலிபோட வேண்டும். ஆவணியில் ஆரம்பித்ததை விடாமல் தினமும் மார்கழிப் பௌர்ணமி வரை செய்ய வேண்டும்.

மார்கழிப் பூர்ணிமாவில் ‘ஆக்ரஹாயணி’ என்கிற பாக யக்ஞத்தைச் செய்து, ஆவணியில் ஆரம்பித்த ஸர்ப்பபலியை உத்ஸர்ஜனம் [பூர்த்த] செய்ய வேண்டும். ‘ச்ராவணி’ போலவே ‘ஆக்ரஹாயணி’ என்பதும் மாஸத்தின் பெயரால் ஏற்பட்டது. ஆக்ரஹாயணி என்று மார்கழிக்குப் பெயர். ‘ஹாயனம்’ என்றால் வருஷம். வருஷத்தில் அக்ர மாதமாக [முதல் மாஸமாக] எது இருக்கிறதோ அது ‘ஆக்ரஹாயனம்’. இதிலிருந்து மார்கழியை முதல் மாஸமாகக் கொண்டே ஆதியில் நம் வருஷம் இருந்திருப்பதாக ஏற்படுகிறது. ஜனவரி என்ற முதல் மாதம் இப்போதும் மார்கழி நடுவில் தானே வருகிறது? நம்மிடமிருந்துதான் மேல் நாட்டினர் இதைப் பூர்வத்தில் எடுத்துக் கொண்டார்கள். பிறகு நாம் அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டாலும் அவர்கள் விடவில்லை என்று தெரிகிறது. இதே மாதிரி சித்திரை என்னும் மாஸப் பெயரைக் கொண்டு ‘சைத்ரி’ என்பதாகவும் ‘ஆச்வயுஜி'[ஐப்பசி] என்ற மாஸப் பெயரால் ‘ஆச்வயுஜி’ என்பதாகவும் இரண்டு பாக யக்ஞங்கள் உள்ளன.

சைத்ரி என்பது நாலு வீதிகள் கூடுமிடத்தில் ஈசானனை உத்தேசித்துச் செய்யப்படுவதால் ஈசானபலி என்றும் கூறப்படும். ஈசானன் என்பதுதான் பரமேச்வரன் [சிவபெருமான்]. மற்ற பாகயக்ஞங்களில் மற்ற தேவதைகளை உத்தேசித்து ஹோமம் செய்யப்படுகிறது. அவர்கள் த்வாரா [மூலம்] பரமேச்வரனுக்குப் ப்ரீதி ஏற்படும். அது ஸப்கலெக்டர் மூலம் ராஜாவுக்கு வரி கொடுக்கிற மாதிரி. சைத்ரியிலோ நேரே ராஜாவான பரமேச்வரனுக்கு கொடுக்கிறோம்.

ஐப்பசியில் குறுவை நெல் விளைந்து வரும். இதை ‘ஆச்வயுஜி’ என்ற கர்மாவில் முதலில் ஈச்வரார்ப்பணம் பண்ணிவிட்டு பிறகு மற்றவர்கள் புஜிப்பார்கள்.

இப்படியே நம் தக்ஷிண சீமையில் மார்கழியில் சம்பா நெல் அறுவடையானவுடன் ஆக்ரஹாயணி செய்துவிட்டு அப்புறம் சாப்பிடும்படியாக ஏற்படுகிறது.

இப்படியாக ஏழு பாக யக்ஞங்கள்.

ஹவிர் யக்ஞங்களைப் பார்க்கலாம். இவை பாகயக்ஞங்களைவிட elaborate ஆனவை [விரிவானவை]. ஆனாலும் ஸோம யக்ஞங்களைப் போல் அவ்வளவு பெரியவை இல்லை.

அக்னியில் ஆஹுதி செய்கிற எல்லாவற்றிற்குமே ஹவிஸ் என்று பெயர். ‘அவி’ என்று திருக்குறள் முதலான தமிழ் நூல்களில் சொல்லியிருக்கிறது. ஆனாலும் குறிப்பாக நெய்க்கு ஹவிஸ் என்ற பெயர் உள்ளது. ஸோமரஸ ஆஹுதி உள்ள யக்ஞங்களைத் தனியாக ஸோம யாகம் என்று வைத்ததால், கிருஹ்யமான சின்னவற்றையும் பாகயக்ஞம் என்று தனியாய் வைத்ததால், நாற்பது ஸம்ஸ்காரங்களில் வந்து விடும் ச்ரௌதமான பாக்கி ஏழையும் ‘ஹவிர் யக்ஞம்’ என்றே ஹவிஸை முன்னிட்டு பெயரிட்டிருக்கிறார்கள்.

முன்னே யாகங்களைப் பற்றிச் சொல்லும்போது யாகத்தைப் பண்ணும் யஜமானன் என்பவனுக்காக ரித்விக்குகள் என்ற புரோகிதர்கள் அதை நடத்திக் கொடுப்பார்களென்றும் இந்த ரித்விக்குகளில் ரிக்வேதத்தால் தேவதைகளை ஸ்துதித்துக் கூப்பிடுகிறவர் ஹோதா, யஜுர் வேதப்படிக் காரியங்கள் செய்கிறவர் அத்வர்யு, ஸாமவேத கானம் செய்து தேவதைகளைப் ப்ரீதி செய்கிறவர் உத்காதா, அதர்வ வேத விதிகளின்படி ‘ஸூபர்வைஸ்’ செய்கிறவர் பிரம்மா என்றும் சொன்னேனல்லவா?

பாக யக்ஞங்களில் யஜமானனைத் தவிர இந்த நாலு விதமான ரித்விக்குகளில் எவருமே கிடையாது. பிறத்தியார் துணையின்றி ஒவ்வொரு கிருஹஸ்தனும் தானே பத்தினி ஸஹிதமாக செய்ய வேண்டியனவே பாகயக்ஞங்கள்.

ஹவிர்யக்ஞங்களில் யஜமானனைத் தவிர யக்ஞத்தை நடத்தித் தருபவர்களாக ஹோதா, அத்வர்யு, அக்னீத்ரன், பிரம்மா என்ற நாலு ரித்விக்குகள் இருப்பார்கள். அதாவது நான் முன்சொன்ன நாலு தினுசான ரித்விக்குகளில் உத்காதாவுக்குப் பதில் அக்னீத்ரன் இருக்கிறார். ஸாமகானம் செய்பவர்தானே உத்காதா? ஸோம யாகங்களில்தான் ஸாம கானம் உண்டு; ஹவிர்யாகங்களில் இல்லை. அதனால் உத்காதாவும் இல்லை. உத்காதாவுக்குப் பதில்தான் அக்னீத்ரன் இருக்கிறார். சாதுர்மாஸ்யம், பசுபந்தம், முதலியவற்றில் அதிகப்படி ரித்விக்கும் உண்டு. அந்த விவரங்கள் இங்கே வேண்டாம். காலமே சொல்ல முடியாமல் அவ்வளவு ப்ராசீனமாக ஏற்பட்டு ஸமீபகாலம் வரை நடைபெற்று வந்த முக்கியமான யக்ஞகர்மாக்களைப் பற்றி ஒரு basic knowledge [அடிப்படை அறிவாவது] இருக்கட்டுமென்றுதான் இவ்வளவாவது சொல்கிறேன்.

ஹவிர்யக்ஞங்களில் முன்பே அக்னியாதானம், அக்னி ஹோத்ரம், தர்சபூர்ணமாஸம் இவைபற்றிச் சொன்னது போதும். ஆக்ரயணம் என்ற இஷ்டி ஐப்பசிப் பூர்ணிமையில் செய்யப்படும் ஹவிர்யக்ஞம். சாமை என்று சொல்லப்படும் ‘ச்யாமாகம்’ என்ற கடுகு போலிருக்கும் தானியத்தை இதில் ஹோமம் செய்ய வேண்டும். ‘சாதுர்மாஸ்யம்’ என்ற ஹவிர்யக்ஞம் பல இஷ்டிகளை ஒன்றாக அடக்கினாற் போன்றது. வர்ஷா காலத்தில் [மழைக் காலத்தில்] ஸந்நியாஸி ஒரே இடத்தை விட்டுப் போகாமலிருப்பதற்குச் “சாதுர்மாஸ்யம்” என்று பேர் என்று உங்களில் சில பேருக்குத் தெரிந்திருக்கலாம். கிருஹஸ்தர்களான நீங்களே பண்ண வேண்டிய ஒரு ஹவிர்யாகத்துக்கு அதே பேர். மழைக் காலமான சதுர் மாஸங்கள் [நாலு மாஸங்கள்] துறவியானவன் ஒரே இடத்தில் இருப்பதால் ‘சாதுர் மாஸ்யம்’ என்று பேர் வந்தது. இங்கோ ஒரு கிருஹஸ்தன் நாலு மாஸங்களுக்கு ஒரு முறை, அதாவது கார்த்திகை, பங்குனி, ஆடி ஆகிய மாத ஆரம்பங்களில் இந்த யக்ஞத்தைப் பண்ணுவதால் அதே ‘சாதுர்மாஸ்ய’ப் பெயர் ஏற்பட்டிருக்கிறது. இந்த யக்ஞத்திலிருந்துதான் கிருஹத்தில் செய்வது போய் யாகசாலையில் பண்ணுபவை தொடங்குகின்றன.

இதற்கு அடுத்த ஹவிர்யக்ஞமான நிரூட பசுபந்தம் (வெறுமே ‘பசுபந்தம்’ என்றே இதைச் சொல்லுவது வழக்கம்) என்பதிலிருந்துதான் மிருக பலி ஆரம்பிக்கிறது.

பலி என்ற வார்த்தையை நான் இங்கே சொன்னாலும் சாஸ்திரீய பரிபாஷை (technical term)ப் படிப் பார்த்தால் இது பலி இல்லை. அக்னியில் ஹோமமாகப் பண்ணாமல் அப்படியே நேராக அர்ப்பணம் பண்ணுவதுதான் பலி. ஹோமம் பண்ணப்படுவதற்கு ஆஹுதி, ஹவிஸ் என்றெல்லாம்தான் பெயர். ஸர்ப்பத்தின் புற்றில் அப்படியே மாவைப் போடுவது ஸர்ப்ப பலி. பஞ்ச மஹா யக்ஞங்களில் ஒன்றான வைச்வதேவத்தில் சிலதை அக்னியில் மந்திர பூர்வமாகப் போடுவார்கள்; இது ஹோமம். சிலதை மந்திர பூர்வமாக அப்படியே வீட்டிலும் வெளியிலும் ஒவ்வொரு ஸ்தானத்தில் பலவிதமான ஜீவன்களை உத்தேசித்து எறிந்து விடுவார்கள். இது பலி.

இன்னொரு விஷயம் இங்கே சொல்ல வேண்டும் இப்படி மந்திர பூர்வமாக அர்ப்பணம் பண்ணும்போது, தேவதைகளுக்குச் செய்வதற்கே ‘ஸ்வாஹா’ என்று சொல்ல வேண்டும். பித்ருக்களுக்குச் செய்யும் போது ‘ஸ்வதா’ என்று சொல்ல வேண்டும். மற்ற ஜீவன்களுக்கு ‘ஹந்தா’ என்று சொல்ல வேண்டும். அதிகார ஸ்தானத்தைப் பொறுத்து நாம் ‘யுவர் மெஜஸ்டி’, ‘யுவர் ஆனர்’ என்று பல தினுஸாகச் சொல்லவில்லையா? அப்படி.

யஜ்ஞங்களில் ஒரு பசுவின் (மாடு இல்லை. ஸம்ஸ்கிருதத்தில் எந்த மிருகமுமே ‘பசு’ தான்) இன்ன பாகத்தை ஹோமம் செய்ய வேண்டும் என்று இருக்கிறது. இது பலியில்லை; அக்னியில் போடுகிற ஹோமம்தான். பசுபந்தத்தில் ஒரே பசுதான்.

பசுவுள்ள யக்ஞங்களுக்கே யூப ஸ்தம்பம் என்பது உண்டு. மூங்கில் அல்லது கதிரம் என்னும் மரத்தாலான போஸ்டில் பசுவைக் கட்டுவார்கள். அதற்குத்தான் யூபம், அல்லது யூப ஸ்தம்பம் என்று பேர்.

அடுத்த, கடைசியான, ஹவிர்யக்ஞமான ‘ஸெத்ராமணி’யில் மட்டுமே ஸுரை[கள்] அர்ப்பணம் ஓரிடத்தில் வருகிறது. சில க்ஷூத்ர சக்திகளுக்கு (சில்லுண்டி தேவதைகளுக்கு) அதில் பிரீதியிருப்பதால் அவற்றிடமிருந்து லோக க்ஷேமத்தைப் பெற ஸுரை ஹோமம் செய்யப்படுகிறது. நம் ராஜாங்கம் ரொம்ப strict-ஆக prohibition [மதுவிலக்கு]-ஐப் பின்பற்றினாலும், அந்நிய தேசப் பிரமுகர்கள் வருகிற போது, அவர்களால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைக்காக, பரவாயில்லை என்று அவர்களுக்கு மட்டும் மதுவிலக்குக்கு விலக்கு தந்து ஒயின் கொடுப்பது சரியென்றால் ஸெளத்ரமணியில் ஸுரா ஹோமமும் சரிதான். இங்கேயும்கூட ஸுரையானது உத்தமமான தேவதைகளுக்குரிய ஆஹவநீயத்தில் ஹோமம் செய்யப்படாமல், தக்ஷிணாக்னியில் தான் ஹோமம் செய்யப்படுகிறதென்பது குறிப்பிடத்தக்கது. ஹோம சேஷமானதால் மந்திர பூர்வமாக சுத்தியாக்கப்பட்ட ஸுரை கெடுதல் பண்ணாதென்று, மிஞ்சியதை யாகம் செய்கிறவர்கள் பானம் பண்ண வேண்டும். இதன் அளவு கால் அவுன்ஸுக்கும் குறைவானது. ஆகையால் யஜ்ஞம் என்று சொல்லி ஸோமபானம், ஸுரா பானம் என்று இஷ்டப்படி குடித்தார்கள் என்று குற்றம் சாட்டுவது மஹா அக்ரமம். யஜ்ஞசேஷமான மாம்ஸ ஸ்வீகரணத்தைப் பற்றிய புரளியைக் குறித்தும் முன்பே சொல்லியிருக்கிறேன்**.

ஸோம யாகங்களைப் பற்றி சிறிது சொல்கிறேன். இவற்றை ‘ஸோம ஸம்ஸ்தை’ என்றும் சொல்வதுண்டு. ஸம்ஸ்தை என்றால் என்ன? யாகத்திலே உத்காதா கானம் செய்கிற ஸாமவேத ஸ்தோத்திரத்தின் முடிவுக்குத்தான் ‘ஸம்ஸ்தை’ என்று பெயர். தேவதா பரமாக உள்ள எல்லாவற்றையுமே ஸ்தோத்திரம் என்று பொதுவில் சொன்னாலும், வைதிக வழக்குப்படி ரிக்வேதத்திலுள்ள ஸ்தோத்திரங்களுக்கு ‘சஸ்த்ரம்’ என்றே பெயர். இதையே ஸப்தஸ்வரங்கள் உள்ளூர தொனிக்கிற மாதிரி ஸாமவேதத்தில் அமைத்து கானம் செய்கிறபோதுதான் ஸ்தோத்ரம் என்ற பெயர் ஏற்படும். இப்படிப்பட்ட ஸாமவேத ஸ்தோத்ர கானம்தான் ஸோம யாகங்களில் மிகவும் முக்கியம். பாக-ஹவிர் யக்ஞங்களிலும் மற்ற நூற்றுக்கணக்கான யாகங்களிலும் ஹோமங்கள் குறைச்சலே. ஸ்தோத்ரங்கள்தான் அவற்றில் அதிகம். தேவர்களுக்கு ரொம்பவும் பிரீதியான ஸோமரஸ‌ம் ஹோமம் செய்யப்படுவதால்தான் இவற்றுக்கு ஸோமயாகம் என்று பெயர். ஸோம ரஸம் மட்டுமின்றி பசுவும் இவற்றில் உண்டு. இருந்தாலும் இந்த ஹோமங்களை விட ஸாமகானம் தான் இவற்றில் நிறையச் செய்யப்படும். பிறகு ஹோமங்கள் குறைச்சலாகவே செய்யப்படும். அதனால் ஸோமயாகம் ஒருவிதத்தில் ஸாமயாகம்தான்! இந்த ஸாமகானம் ரொம்பவும் பரவசமூட்டுவதாக இருக்கும். ஒரு வித்வான் ஆலாபனை பண்ணிக் கொண்டே போய் தாரஸ்தாயி பஞ்சமத்தைப் பிடித்தவுடன் ரஸிகர்களுக்கு உத்ஸாஹம் உச்சிக்குப் போய் விடுகிற மாதிரி ஸாமகானமான ஸ்தோத்ரங்களின் முடிவான ஸம்ஸ்தை வருகிறபோது யஜ்ஞபூமியில் கூடியிருப்பவர்களுக்கு, அப்படியே தேவலோகமே வந்து இறங்கிவிட்டாற்போல் ஆனந்தம் கரைபுரண்டு போகும். அதனால்தான் ஸோம யஜ்ஞத்துக்கே ஸோம ஸம்ஸ்தை என்று பெயர் ஏற்பட்டு விட்டது.

இப்படிப்பட்ட ஸோம யாகங்களில்தான் ஹோதா, அத்வர்யு, பிரம்மா என்ற ரித்விக்குகளோடு உத்காதா என்ற ஸாமகானக்காரரும் சேர்ந்து பூர்ண யஜ்ஞ லக்ஷணத்தோடு இருக்கிறது. இந்த நாலு பேரில் ஒவ்வொருவருக்கும் உதவியாக மூனறுபேர் இருப்பார்கள். ஆக அத்வர்யு கணத்தில் நால்வர், ஹோதா கணத்தில் நால்வர், உத்காதா கணத்தில் நால்வர், பிரம்மா கணத்தில் நால்வர் என்பதாக ஸோம யாகங்கள் ஒவ்வொன்றிலும் பதினாறு ரித்விக்குகள் இருப்பார்கள்.

ஸப்த ஸோம யக்ஞங்களில் முதலாவதான அக்னிஷ்டோமமே ப்ரகிருதி. மற்ற ஆறும் அதன் விக்ருதிகள். அத்யக்னிஷ்டஹோமம், உக்த்யம், ஷோடசி, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்பன அவற்றின் பெயர்.

இவற்றில் வாஜபேயத்தை வெகு விசேஷமாகக் கருதிச் செய்வது வழக்கம். வாஜபேய யாகம் முடித்து யஜமானன் ஸ்நானம் செய்து வருகையில் (யஜ்ஞ முடிவில் செய்வதற்கு அவப்ருத ஸ்நானம் என்று பெயர்) அவருக்கு ராஜாவே ச்வேத சத்ரம் [வெண்பட்டுக் குடை] பிடிப்பான்! அவ்வளவு பெருமை இதற்கு. ‘வாஜம்’ என்றால் அன்னம்; ‘பேயம்’ என்றால் பானம். அன்ன பானாதிகளை அதாவது நல்ல தானியச் செழிப்பையும், நீர்வளத்தையும் லோகத்தில் ஏற்படுத்தித் தருவதால் இதற்கு இப்படிப் பெயர். இன்னொரு விதத்திலும் இந்தப் பெயர் பொருந்துகிறது. இந்த யாகத்தில் ஸோம ரஸ ஹோமம், பசு ஹோமம் (23 பசுக்கள்) இவற்றோடு வாஜ [அன்ன] ஹோமமும் உண்டு. அது ஆன பின்பு சேஷான்னத்தால் [மிகுதியுள்ள அன்னத்தால்] யஜமானனுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதை இந்த யஜ்ஞத்திலேயே சிறப்பான அம்சமாக நினைப்பதுண்டு. வாஜத்தையே [அன்னத்தையே] பேயம் [ஜலம்] போல் அபிஷேகம் செய்வதாலும் வாஜபேயம் என்ற பெயர் பொருந்துகிறது.

பிராம்மணன் சொத்தெல்லாம் ஸோமயாகத்துக்காகத்தான் என்று முன்பு சொல்வார்கள். திரவியங்களுக்காக ஓர‌ள‌வும் பண்ணி வைக்கிற ரித்விக்குகளுக்கு தக்ஷிணையாக நிறையவும் செலவிட வேண்டும். இப்பொழுது சொத்து ஒன்றையேதான் நினைத்துக் கொண்டு ஸோம யாகத்தை மட்டுமின்றி செலவேயில்லாத ஸந்தியா வந்தனத்தைக்கூட விட்டு விட்டிருக்கிறோம். நாற்பது, ஐம்பது வருஷங்களுக்கு முந்திக் கூட நம்பூதிரிகளில் பத்துக் குடும்பத்தில் ஒன்று வீதமாவது ஸோமயாகம் நடந்து வந்தது. அவர்களில் மூத்தவன்தான் ஸோமயாகம் செய்யலாமென்று இருந்ததால் அவனுக்குத்தான் சொத்துரிமையும் இருந்தது.

“வஸந்தே வஸந்தே” என்று சொல்லியிருப்பதால், தரித்திரர்களாக உள்ள பிராம்மணர்களுங்கூட யாசகம் வாங்கியாவது வருஷா வருஷம் ஸோமயாகம் பண்ணி “ப்ரதி வஸந்த சோமயாஜி”கள் என்று பெயர் வாங்கிய ஒரு காலமும் இருந்தது.

மற்ற ஸோம யாகங்களைப் பண்ணா விட்டாலும் இவற்றில் முதலாவதான ஜ்யோதிஷ்டோமம் எனப்படும் அக்னிஷ்டோமத்தையாவது பண்ணினால் லோகத்தில் வைதிகஸ்ரீ பிரகாசிக்கத் தொடங்கும்.

இந்த இருபத்தியொரு யக்ஞங்களோடு நாற்பது ஸம்ஸ்காரங்களும் முடிந்து விடுகின்றன.


* இப்பகுதியிலுள்ள விஷயங்கள் பல கும்பகோணம் ஸ்ரீ லக்ஷ்மி காந்த சர்மா தம்பதியரும், அக்னிஹோத்ரம் ராமாநுஜ தாதாசாரியாரும் விளக்கி வைத்தவை.

** “வேதம்” என்ற உரையில் “ஜீவஹிம்ஸை செய்யலாமா?” என்ற பிரிவில்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is அக்னியின் சிறப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  மற்ற ஸம்ஸ்காரங்கள்
Next