வைகுந்தா

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

இரண்டாம் பத்து

வைகுந்தா

ஆழ்வாரோடு வந்து கலந்த எம்பெருமான் திருப்தியடைந்தான், 'இவருக்கு என்ன உதவி செய்யலாம்?' என்று யோசித்து நின்றான், 'பெறமுடியாத ஆழ்வாரைப் பெற்றோம். இவர் தமக்கு இல்லாத தாழ்மைகளை எல்லாம் ஏறிட்டுச் சொல்லிக் கொண்டு நம்மை விட்டுப் பிரிந்து விடுவாரோ!' என்று எண்ணினான். இதனை அறிந்த ஆழ்வார், 'நான் பிடித்தபிடி சாதாரணமன்று, இனி ஒரு நாளும் உன்னை விடமாட்டேன். திடமாகப்பற்றிக் கொண்டேன்' என்று கூறி இறைவனைச் சிக்கெனப் பிடித்தார்.

இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்

ஆசிரியத்துறை

வைகுந்தா!உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

2840. வைகுந்தா!மணிவண்ணனே!என்பொல்லாத்

திருக்குறளா!என்னுள் மன்னி,

வைகும் வைகல் தோறும்

அமுதாய வானேறே,

செய்குந் தாவருந் தீமையுன் னடியார்க்குத்

தீர்த்தசுரர்க்குத் தீமைகள்

செய்குந்தா, உன்னைநான்

பிடித்தேன்கொள் சிக்கெனவே.

தாமரைக் கண்ணன் என்னையே நோக்குகின்றான்

2841. சிக்கெனச் சிறிதோ ரிடமும்

புறப்படாத் தன்னுள்ளே, உலகுகள்

ஒக்கவே விழுங்கிப்

புகுந்தான் புகுந்ததற்பின்,

மிக்க ஞான வெள்ளச் சுடர்விளக்காய்த்

துளக்கற் றமுதமாய், எங்கும்

பக்கநோக் கறியானென்

பைந்தாமரைக் கண்ணனே.

வள்ளலே!என்னே நின்னருள்!

2842. தாமரைக் கண்ணனை விண்ணோர்

பரவும் தலைமகனை, துழாய்விரைப்

பூமருவு கண்ணியெம்

பிரானைப் பொன்மலையை,

நாமருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி

நாம்மகிழ்ந் தாட, நாவலர்

பாமருவி நிற்கத் தந்த

பான்மையேய் வள்ளலே.

வள்ளலே!உன்னை எங்ஙனம் விடுவேன்?

2843. வள்ளலே!மதுசூதனா!என்மரதக

மலையே, உனைநினைந்

தெள்கல் தந்த எந்தாய்!

உன்னை யெங்ஙனம் விடுகேன்,

வெள்ள மேபுரை நின்புகழ் குடைந்தாடிப்

பாடிக் களித்து கந்துகந்து,

உள்ள நோய்க ளெல்லாம்

துரந்துய்ந்து போந்திருந்தே?

எந்தாய்!நின்னை நினைத்து நின் அடிமை ஆனேன்

2844. உய்ந்து போந்தென் உலப்பிலாத

வெந்தீவினைகளை நாசஞ் செய்து,உன

தந்தமில் அடிமை

அடைந்தேன் விடுவேனோ

ஐந்து பைந்தலை யாடர வணைமேவிப்

பாற்கடல் யோக நித்திரை,

சிந்தை செய்த எந்தாய்!

உன்னைச் சிந்தை செய்து செய்தே.

நரசிம்மா!எனக்கு முடியாதது ஒன்றுண்டோ?

2845. உன்னைச் சிந்தை செய்து செய்துன்

நெடுமா மொழியிசை பாடியாடி,என்

முன்னைத் தீவினைகள்

முழுவே ரரிந்தனன்யான்,

உன்னைச் சிந்தையினா லிகழ்ந்த

இரணியன் அகல்மார்வங் கீண்ட,என்

முன்னைக் கோளரியே!

முடியாத தென்னெனக்கே?

இறைவன் என்னுள் புகுந்தான் : நாகம் இல்லை

2846. முடியாத தென்னெனக் கேலினி முழுவே

ழுலகு முண்டான்,உகந்துவந்

தடியேனுள் புகுந்தான்

அகல்வானும் அல்லனினி,

செடியார் நோய்க ளெல்லாம்

துரந்தெமர் கீழ்மே லெழுபிறப்பும்,

விடியா செந்நரகத் தென்றும்

சேர்தல் மாறினரே.

எந்தாய்!என்னிடமிருந்து உன்னை நீக்காதே

2847. மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்தடியை

யடைந்துள்ளந் தேறி,

ஈறி லின்பத்

திருவெள்ளம் யான்மூழ்கினன்,

பாறிப் பாறி யசுரர்தம் பல்குழாங்கள்

நீறெழ, பாய்பறவையன்

றேறி வீற்றிருந் தாய்!உன்னை

யென்னுள் நீக்கேல் எந்தாய்!

எந்தாய்!இனி என்னை விட்டுப் போக முடியாது

2848. எந்தாய்!தண்திரு வேங்கடத்துள்

நின்றாய்!இலங்கை செற்றாய், மராமரம்

பைந்தா ளேழுருவ ஒருவாளி

கோத்த வில்லா,

கொந்தார் தண்ணந் துழாயினாய்!அமுதே!

உன்னை என்னுள்ளே குழைத்தவெம்

மைந்தா, வானேறே!

இனியெங்குப் போகின்றதே?

வேங்கடவா!முக்காலங்களிலும் தாய்தந்தை நீயே

2849. போகின்ற காலங்கள் போய காலங்கள்

போகு காலங்கள், தாய்தந் தையுயிர்

ஆகின்றாய்!உன்னைநான்

அடைந்தேன் விடுவேனோ,

பாகின்ற தொல்புகழ் மூவுலகுக்கும்

நாதனே!பரமா, தண்வேங்கடம்

மேகின்றாய்!தண்டுழாய்

விரைநாறு கண்ணியனே!

இவற்றைப் பாடுக:கேசவன் அடியார் ஆகலாம்

2850. கண்ணித் தண்ணந் துழாய்முடிக்

கமலத் தடம்பெருங்

கண்ணனை, புகழ்நண்ணித் தென்குருகூர்ச்

சடகோபன் மாறன்சொன்ன

எண்ணில் சோர்வி லந்தாதி யாயிரத்துள்

இவையுமோர் பத்திசையடும்

பண்ணில் பாட வல்லாரவர்

கேசவன் தமரே.

நேரிசை வெண்பா

சடகோபன் பாடல்களால் கேவசன் வலிமை பெற்றான்

வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ்மாறன்,

செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து, - நைகின்ற

தன்மைதனைக் கண்டுன்னைத் தான்விடே னென்றுரைக்க,

வன்மையடைந் தான்கேச வன்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is அந்தாமத்தன்பு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  கேசவன் தமர்
Next