காட்டுக்கொளிஞ்சை

Latin Name        – Tephrosia purpurea
Family                    –  Fabaceae (अपराजिता कुलम्)
English Name   – Wild indigo, Purple tephrosia
Sanskrit Name – शरपुङ्खः, बाणः, बाणपुङ्खः

இது இந்தியா முழுவதும் சாலைகளின் ஓரங்களில் வளரக்கூடிய ஒரு செடி. சுமார் 30 முதல் 60 செ.மீ உயரம் வரை வளர்ந்து நிறைய கிளைகளுடன் நிற்கக் கூடியது. மலர்கள் சிவப்பு அல்லது ஊதா நிறம் உடையவை. இந்த செடியின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவகுணம் வாய்ந்தவை.
கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடைய இந்த செடி உடலில் சூட்டை அதிகப்படுத்தும். குடல் கிருமிகளை வெளியேற்றும். நல்ல ஒரு ஜீரணகாரி. மலத்தை இளக்கி சிறுநீரையும் நன்றாக வெளியேற்றும். பெண்களின் கருப்பையை நன்கு உறுதிப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். உள்ளழற்சி மூட்டுகளில் தென்படும்பொழுது இதை மருந்தாக உட்கொள்ளலாம். இரத்தக்கசிவை நிறுத்தக்கூடியது. குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கும். இதன் வேர் அழற்சிநோயை நீக்கக்கூடியது. தோல் உபாதைகளை குணப்படுத்தக் கூடியது. கழுத்தில் ஏற்படும் நெறிகட்டு உபாதையை குணப்படுத்தும். யானைக்கால் உபாதையில் இதன் பயன்பாடு போற்றப்படுகிறது. வயிற்றில் வாயு சேர்தல், மூலம், மூச்சிரைப்பு, சோகை, கல்லீரல், மண்ணீரல் வீக்கம், முகப்பருக்கள், பற்களில் ஏற்படும் வலி மற்றும் ஈறு அழற்சி உபாதைகளிலும் காட்டுக்கொளிஞ்சை நல்ல மருந்தாகப் பயன்படும். சிபிலிஸ் எனப்படும் பிரங்கநோயில் இதன் பயன்பாடு உள்ளது. எலி விஷத்தில் இதன் விதைகள் பயன்படுகின்றன. அஷ்டாங்கஹ்ருதயம் – உத்தரதந்த்ரம் 30 வது அத்தியாயத்தில் இந்த செடியின் வேரை அரிசி அலம்பிய நீரில் அரைத்து பிழிந்து மூக்கில் இரண்டு நான்கு சொட்டு விடுதல், அரைத்து உடலில் பூச்சாக இடுதல் போன்றவற்றைச் செய்தால் தோலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் விஷஉபாதைகள், கிருமித்தொற்று ஆகியவை நீங்கியவை என்று காணப்படுகிறது. இந்த செடியின் வேர் சூரணத்தை கடுக்காய் சூரணத்துடன் சம அளவு கலந்து சுமார் ஒரு டீஸ்பூன் வெந்நீருடன் கலந்து குடிப்பதால் வயிற்றில் பந்து போல் சுருண்டுகொண்டு வலியை ஏற்படுத்தும் வாயு உபாதை நீங்கிவிடும் என்று பாவப்ரகாசர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். இந்த செடியினுடைய விதைகளை மோருடன் கலந்து குடிப்பதால் எலி விஷத்தினால் ஏற்படும் உபாதைகள் நீங்கிவிடுமென்றும் அஷ்டாங்கஹ்ருதயம் கூறுகிறது. காட்டுக்கொளிஞ்சையின் வேரை பாலுடன் அரைத்து பிழியப்பட்ட சாற்றை தொடர்ந்து மூக்கினுள் விட்டு வந்தால் மூடகர்ப்பம் எனப்படும் நிலை கர்ப்பஸ்த்ரீக்கு ஏற்படாது என்று வைத்யமனோரமாவில் காணப்படுகிறது.  இதன் வேரை இடித்து பொடியாக்கி பல்துலக்குவதற்கு முன் பற்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தால் பல்சம்பந்தமான நோய்கள் விலகிவிடுவதாகவும், உபலுறவின் போது வெள்ளை நிற காட்டுகொளிஞ்சையின் வேரை வாயில் அடக்கிக் கொண்டாலும், தவிடு ஊறவைத்தத் தண்ணீருடன் அரைத்து முகத்தில் பூசிக்கொண்டாலும் விந்து வெளியேற்றம் விரைவில் ஏற்படாது என்றும் வைத்யமனோரமாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

नीलिकाकृतिपत्रा च प्रसिद्धा भूमिमण्डले।
शिम्बीफला रक्तपुष्पा नीलवर्णा महौषधी॥
शरपुंखेति विख्याता श्वेतपुष्पा क्वचिद्भवेत्।
तस्याः पत्रं यदाकृष्य गृह्यते त्रोट्यते करात्॥
तत्पत्रं जायते साक्षादूर्ध्वं सच्छरपुंखवत्।
इयमास्ते परीक्षाऽस्याः ओषधेः दिव्यतेजसः॥ (शिवदत्तनिघण्टु)
शरपुङ्खा प्ळीहशत्रुर्नीलवृक्षाकृतिश्च सा। (भावप्रकाशम्)
शरपुङ्खा काण्डपुङ्खा बाणपुङ्खेषु पुङ्खिका।
ज्ञेया सायकपुङ्खा च इषुपुङ्खा च षड्विधा॥ (राजनिघण्टु)
शरपुङ्खो यकृत्प्ळीहगुल्मव्रणविषापहा।
तिक्तः कषायः कासास्रश्वासज्वरहरो लघुः॥ (भावप्रकाशम्)
शरपुङ्खा कटूष्णा च कृमिवातरुजापहाः। (राजनिघण्टु)
शरपुङ्खा तु कटुका तिक्तोष्णा तुवरा लघुः।
यकृत्कृमिप्ळीहगुल्मव्रणकासविषापहा॥
श्वासार्शः रक्तदोषघ्नी हृद्रोगकफजूर्त्तिहा।
वातं कफोदरं व्यङ्गं गळत्कुष्ठञ्च नाशयेत्॥ (निघण्टुरत्नाकरम्)
शरपुङ्खोद्भवं मूलं पिष्टं तण्डुलवारिणा।
नस्याल्लेपाच्च दुष्टारुरपचीविषजन्तुजित्॥ (अष्टाङ्गहृदयम्.उत्तरस्थानम्.30)
शरपुङ्खस्य लवणं पथ्याचूर्णं समं द्वयम्।
शाणप्रमाणमश्नीयात् चूर्णं गुल्मगदापहम्॥ (भावप्रकाशम्)
तक्रेण शरपुङ्खायाः बीजं संचूर्ण्य वा पिबेत्। (अष्टाङ्गहृदयम्, आखुविषम्)
स्वरसेनेषु पुङ्खायाः कृतान्मधुकरस्य वा।
नस्यान्न स्याद्भयं स्त्रीणां मूढगर्भसमुद्भवम्॥ (वैद्यमनोरमा)
बाणपुङ्खशिफा क्षुण्णा दन्तमूले श्रिता जयेत्।
दन्तरोगांस्तु यावत्प्राग्दन्तधावनमन्वहम्॥ (वैद्यमनोरमा)
सितेषुपुङ्खिकामूलं केवलं वदने धृतम्।
तुषाम्बुपिष्टं लिप्तं च शुक्ळं संस्तंभयेद्रतौ॥ (वैद्यमनोरमा)

எஸ்.ஸுவாமிநாதன்,
டீன்,
ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை – 600123
போன் - 9444441771

www.sjsach.org.in


மேலும்