பூஜ்யஶ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதிபதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் விகாரி ௵ பங்குனி ௴ 23 ௳ 05-ஏப்ரல்-2020 அன்று ஆற்றிய ஹிந்தி அருளுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு





மங்கள ச்லோகங்கள்
================

“குருவே ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரன். குருவே காணத்தக்க பர ப்ரம்மம். அத்தகைய குருவுக்கு நமஸ்காரம்.”

“வளைந்த துதிக்கையும், பெரிய உடலும், கோடி சூரியனுக்கு ஒப்பான ஒளியும் கொண்டவரே, எனக்கு எப்பொழுதும் அனைத்து காரியத்திலும் இடையூறுகள் நீங்கும்படிச் செய்வீர்!”

“பெயரிலும் வடிவிலும் சிவம் (மங்களம்) ஆன தேவனும், ஸர்வ மங்களா என்ற பெயருடைய தேவியும், அவர்களை நினைப்பதனால் மக்களுக்கு எவ்விடமும் ஜயம், மங்களம்.”

“அனைத்து மங்களங்களுக்கும் மங்களத்தன்மை அளிப்பவளே, சிவையே, ஸர்வ காரியங்களையும் ஸாதிக்க வல்லவளே, அடைக்கலமானவளே, முக்கண்ணளே, கௌரி, நாராயணி! உனக்கு வந்தனம்!”

“நீ மகிழ்ந்தால் வியாதிகளை மிச்சமின்றி நீக்குபவள்! (துஷ்டர்கள் விஷயத்தில்) கோபமுற்றால் அவர்களது ஸுக ஸௌக்கியங்களை அழிக்க வல்லவள்! உன்னை அண்டிய மனிதர்களுக்கு விபத்துகள் கிடையாது. உன்னை அண்டியவர்களே பிறருக்கு அடைக்கலமாகி விடுவார்கள்.” (இரு முறை சொல்கிறார்கள்.)

“அகிலத்திற்கும் ஈச்வரியே, மூவுலகின் அனைத்து இன்னல்களையும் சாந்தப்படுத்துவதும், (நல்லோராகிய) நமது எதிரிகளை அடக்குவதும் (ஆகிய இவ்விரண்டையும்) நீ எப்பொழுதும் செய்ய வேண்டும்!”

“அடைக்கலம் புகுந்த பலமற்றவர்கள் மற்றும் அல்லலுறுபவர்களைக் காப்பதையே நோக்கமாகக் கொண்டவளே, அனைவரின் இன்னலையும் நீக்கும் தேவியே, துர்கா தேவியே, உனக்கு வந்தனம்!”

“சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனைஸ்சரன், ராஹு, கேது இவர்களுக்கு நமஸ்காரம்.”

“தையல்நாயகியின் மணாளனே, வைத்யநாதரே, ஸம்ஸார வ்யாதியை நீக்குபவரே, என்று இந்த மூன்று பெயர்களையும் எப்பொழுதும் சொல்ல வேண்டும். இது கொடிய வியாதிகளையும் குணப்படுத்தும்.”

அருளுரை
========

மனித வாழ்க்கையில் தர்மமே முக்கியம். தர்மம் செய்வதற்கு உடல் முக்கியம். நல்ல ஆரோக்யமானதும் தீர்க்காயுள் கொண்டதுமான சரீரம் இருந்தால் தான் நமது நலனுக்கும் வேலை செய்ய முடியும், பிறருக்காகவும் மக்களின் நலனுக்காகவும் வேலை செய்ய முடியும். இதையே “பரோபகாரார்த்தம் இதம் சரீரம்” என்று சாஸ்த்ரங்கள் சொல்கின்றன.

பாரத தேசம் தர்மத்தை செய்யும் நிலம், உயர்ந்த சிந்தனைகளின் பூமி. இன்று இந்த பூமியில் கவலையும் கஷ்டமும் வந்துள்ளது. பரவக்கூடிய யுத்தம் ஒன்றும் வந்துள்ளது.

சில நாட்களாக தேசத்தில் நிலவி வரும் சிரம நிலை, பொருளாதார பாதிப்பு, ஆரோக்ய நிலவரம், மற்றும் பொதுமக்களின் சாதாரண அன்றாட வாழ்க்கை நடப்பதில் உள்ள இடையூறு இவற்றை எல்லாம் முன்னிட்டு நாம் சில விஷயங்களை ஆலோசிக்க வேண்டியுள்ளது

நவக்ரஹ தேவதைகளின் ஸஞ்சாரத்தினால் அறியப்படும் கஷ்டங்களிலிருந்தும், உலகில் இயற்கை சுற்றுச்சூழலில் உண்டாகும் துன்பங்களிலிருந்தும் மீண்டு வர நாம் இரண்டு விதமான காரியம் செய்ய வேண்டும் - ஒன்று ப்ரார்த்தனை, மற்றொன்று முயற்சி.

ப்ரார்த்தனையை எடுத்துக் கொண்டோமென்றால், கடந்த பல நாட்களாக யுகாதியிலிருந்து ராம நவமி வரையிலான வஸந்த நவராத்ரி எனப்படும் காலத்தில், பாரதத்தில் திருப்பதி போன்ற பல புண்ணிய க்ஷேத்ரங்களிலும் அநேக குருகுல ஆச்ரமங்களிலும் அவை நடைபெறுகின்றன. தேசத்தின் நன்மைக்காகவும், வியாதி வடிவில் வந்த கஷ்டம் குறையவும், துன்பம் விலகவும், வேத மந்த்ரங்களைக் கொண்டு பாராயணமும்,ஶ்ரீ ருத்ர அபிஷேகமும் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஶ்ரீ ருத்ரத்தில் அனைத்து மக்களும் ஸுகமாகவும் அமைதியுடனும் இருப்பதற்கான ப்ரார்த்தனை உள்ளது. வயதானவர்களும், இளைஞர்களும், மிகவும் சிறிய குழந்தைகளும், நமது உற்றவர்களும், ஆரோக்யமாக கஷ்டமின்றி இருக்க முதன்மையான ஆதி வைத்தியரான பரமேச்வரனிடம் ப்ரார்த்தனை செய்து அபிஷேகங்கள், ஹோமங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

இவ்வாறே இந்த்ராக்ஷீ சிவ கவசம் முதலிய ஸ்தோத்ரங்களின் பாராயணம் செய்து திருநீறு அணிந்து வியாதியிலிருந்து விடுபடலாம்.

அவ்வாறே நவக்ரஹ தேவதைகளும் (முன்பு சொன்ன ச்லோகத்தின்படி). இன்றைய தருணத்தில் நான்கு தேவதைகளின் வழிபாடு முக்கியம் - செவ்வாய், சனைஸ்சரன், குரு மற்றும் ராஹு. இவர்கள் நால்வரை துதித்து வணங்குவது முக்கியமாகிறது. நவக்ரஹ தேவதைகளின் அனுக்ரஹம் கிட்டுவதற்கு இது ஒரு வழி.

“பூமி தேவிக்கு மகனானவரும், மின்னலைப் போன்று ஒளிர்பவரும், சக்தி ஆயுதத்துடன் சிறுவனாக காட்சி அளிப்பவருமான செவ்வாயை வணங்குகிறேன்.”

“தேவர்களுக்கும் ருஷிகளுக்கும் குருவானவரும், தங்க நிறத்தவரும், புத்தியின் அதிபதியும், மூவுலகின் நாயகருமான ப்ருஹஸ்பதியை வணங்குகிறேன்.”

“கரு நீல நிறத்தவரும், ஸூர்யனின் மகனும், யமனுக்கு தமையனாரும், சாயா (நிழல்) தேவிக்கும் சூரியனுக்கும் பிறந்தவருமான சனைஸ்சரனை வணங்குகிறேன்.”

“அரை வடிவினரும் சக்தி மிகுந்தவரும் சந்திர சூரியர்களை பாதிப்பவரும், ஸிம்ஹிகையின் மகனுமான ராஹுவை வணங்குகிறேன்.”

இவ்வாறே ஹநுமான் சாலீஸாவையும் சொல்லலாம். (தமிழ் அருளுரையில் கோளறு பதிகத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள்.)

அதே போல மிக எளிமையாக பகவானின் திருப்பெயர்களையும் ஜபிக்கலாம்.

“அச்யுத, அநந்த, கோவிந்த, என்ற பெயர்களை உச்சரிப்பதாகிய மருந்தால் அனைத்து வியாதிகளும் அழிகின்றன. இது நான் செய்யும் சத்தியம், சத்தியம்!”

உலகைக் காக்கும் மூர்த்தியான நாராயணனின் மூன்று பெயர்களை நாம் தொடர்ந்து “அச்யுத அநந்த கோவிந்த, அச்யுத அநந்த கோவிந்த” என்று சொல்லலாம். இந்த நாம ஸ்மரணமாகிய மருந்தால் நமது கஷ்டம் தூர விலகி அழியும்.

இவ்வாறு ப்ரார்த்தனை செய்வதும் இந்த கஷ்டத்தைப் போக்கும் வழியாகும்.

இதனுடன் ப்ரயத்னம் என்பதையும் நாம் விடாமல் கவனத்துடன் செய்ய வேண்டும் -

அதாவது விவேகத்துடன், விஞ்ஞானத்தின்படி, மருத்துவர்கள், அரசாங்க மருத்துவத்துறையினர், மத்திய அரசு, மாநில அரசு, நகராட்சி பஞ்சாயத்து போன்றவர்களின் வழிகாட்டுதல், உத்தரவு, பரிந்துரைகள் ஆகியவற்றை மனதில் கொண்டு வெளியில் செல்லாமல் வீடுகளில் இருந்து சுத்தமான சூழ்நிலையைப் பாதுகாப்பது - இத்தகைய ப்ரயத்னங்களையும் ப்ரார்த்தனைகளுடன் செய்ய வேண்டும்.

நமது தேசம் தனது வரலாற்றில் பல ஸங்கடங்களிலிருந்து விடுபட்டுள்ளது, இப்பொழுதும் விடுபடவேண்டும். இந்த ஸங்கடம், யுத்தம், பரவும் வியாதியிலிருந்து வெளிவர பலரும் முயற்சித்து வருகின்றனர். ஆழமாக சிந்தித்து கவனித்து வருகின்றனர். தமது ஸாமர்த்யம், அநுபவம் இவற்றை காட்டிவருகின்றனர்.

அத்துடன் மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும். நமது இந்த பெரிய நாட்டை பெரிய ஸங்கடத்திலிருந்து வெளிகொண்டுவர ஒவ்வொரு நபரும் தமது ஒத்துழைப்பை நல்க முடியும். இப்பொழுது செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

மேலும் கண்டிப்பாக என்ன என்ன ஏற்பட்டாலும் உதவி, கூட்டுணர்வு (பிறரின் நிலையை தமது நிலையாக நினைத்து உணர்வது), மற்றவர்களுடன் ஒப்புரவுடன் ஒருமைப்பாடுள்ள மனத்துடன் - இந்த கஷ்டத்தைப் போக்க வேண்டும்.

எங்கெங்கு முடியுமோ ருத்ராபிஷேகம், இந்த்ராக்ஷீ சிவ கவச ஸ்தோத்ரம், ஹனுமான் சாலீஸா, நவக்ரஹ தேவதைகளின் ஸ்துதி, மேலும் யோக வாஸிஷ்டத்தில் உள்ள ஸ்தோத்ரத்தின் பாராயணம், (இவற்றைச் செய்ய வேண்டும்). சிறந்த வேத விற்பன்னர்கள் மூலம் எந்தெந்த மந்த்ரங்கள் இந்த தருணத்திற்கு பொருத்தமாக இருக்குமோ அவற்றை பாராயணம் செய்விப்பது (நல்லது).

இவை அனைத்தையும் செய்து எல்லோரும் வருங்காலத்தில் இதை விட சிறப்பு மிக்க பாரதத்தை நோக்கி செயல்படுபவர்களாக ஆவதற்கு ஸங்கல்பம் மேற்கொள்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் இது.

தீபத்தை ஏற்றுவதும் ஒரு முக்கிய காரியம். துர்க்கை, லக்ஷ்மீ, ஸரஸ்வதி - இவர்களை தீபத்தின் மூலமாக நாம் வழிபடுகிறோம். (லக்ஷ்மீ தேவியின் அருளால்) செல்வச் செழிப்பு (கிடைக்க வேண்டும்). (ஸரஸ்வதீ தேவியின் அருளால்) காமம் க்ரோதம் லோபம் மோகம் முதலியவற்றிலிருந்து வெளிவருவதற்கான நல்ல எண்ணங்கள் (ஏற்பட வேண்டும்). மேலும் நம்பிக்கையுடனும் வீரத்துடனும், தன்னம்பிக்கை, பரஸ்பர நம்பிக்கை, இறைவனின் பேரில் நம்பிக்கை, இவற்றுடன் தைரியமாக வேலை செய்வதற்கான துர்க்கா தேவியின் கருணையும் (வேண்டும்).

தீபத்தை ஏற்றுவதால் இவ்வாறு துர்க்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ மூவரின் அருளைப் பெற்று (அதன்மூலம்) பொருளாதார சிரமத்திலிருந்தும், இப்பொழுது வந்திருக்கும் சிரமத்திலிருந்தும் வெளிவரவும், மேலும் தேசம் பாதுகாப்புடன் இருப்பதற்கும் இந்த தீப பூஜையினால் நாம் மூன்று சக்திகளின் அருளைப் பெறவும் முடியும்.

ஶ்ரீ ஆதி சங்கராசார்யர் கூறியிருப்பதாவது “மூன்று திரி கொண்டதும், நெய்யினால் ஏற்றப்பட்டதும், இடைவிடாத ஒளியால் வெளி இருள் உள் இருள் இரண்டையும் போக்குவதும், அனைத்து தேவர்களுக்கும் பிரியமானதுமான தீபம்” என்று அனைத்து தேவதைகளைப் பூஜித்த பயன் இந்த தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் என்று.

“மாசற்ற ஒளியுடன் கூடிய ஜொலித்து உயரும் தீபக்கொழுந்துகளால் (அஸுரர்களின்) முப்புரங்களை அழித்தவரும் மரணத்தை வென்றவருமான (சிவபெருமானுக்கு) தீபாராதனை” (என்றும் ஶ்ரீ ஆதி சங்கராசார்யர் கூறுகிறார்.)

துன்பமாகிய இருள் கட்டுப்படுத்தப்பட்டு (அதை உருவாக்கும்) இந்த வியாதி விலக வேண்டும். ஆகவே இன்று ஞாயிற்றுக்கிழமை ப்ரதோஷம் ஆன பிறகு – நமது தேசத்தின் பிரதான மந்திரியும் கேட்டுக்கொண்டபடி – ஸமஷ்டி பூஜையாக, சமுதாய ப்ரார்த்தனையாக (இதை செய்ய வேண்டும்).

தனிப்பட்ட முறையில் ஒருவர் தனது நலனுக்காகவும் தனது குடும்பத்தின் க்ஷேமத்திற்காகவும் நாம் செய்யும் ப்ரார்த்தனை செய்ய வேண்டியது தான். ஏகாந்தமாக அமர்ந்து செய்யும் உபாஸனை செய்ய வேண்டியது தான். தனது குடும்ப மக்களுடன், தனது நண்பர்களுடன், நமது கலாச்சாரத்தை விரும்பக்கூடியவர்களுடன் கூடி (அவரவர்களது) ஆச்ரமங்களில், குருகுலங்களில், கோவில்களில், வீடுகளில் இருந்து நாம் ப்ரார்த்தனை செய்வதால் “பகவான் அடியார்களும் பக்தர்களுமான நமது கஷ்டங்களை நொடியில் நீக்க வேண்டும். அத்தகைய ஜகதீசனான பகவானுக்கு ஜயம்” என்று ப்ரார்த்தனை செய்வோம்.

இந்த தீபம் ஏற்றுவதால் நமது கஷ்டம் நீங்கி அழியட்டும். வளர்ச்சி பெற்று ஒளிரும் வருங்காலத்தை நோக்கி அனைவரும் “ஒன்று சேர்ந்து கலந்து பேசுங்கள். உமது மனங்கள் ஒன்றுபடட்டும். உமது அபிப்ராயங்களும் உமது இதயங்களும் ஒன்றாக இருக்கட்டும்” என்று வேதத்தில் சொன்னபடி அனைவரும் ஒருமித்த எண்ணத்துடன் ப்ரார்த்தனை ப்ரயத்னங்களைச் செய்ய வேண்டும்.

அன்பு, நட்பு, நம்பிக்கை மற்றும் விழிப்புணர்ச்சியுடன் அனைவரும் எந்தெந்த முறையில் பங்கு பெறமுடியுமோ அவ்வாறு பங்கு பெற்று வருங்காலம் ஒளி பெருகவும் இருள் விலகவும் ஜ்வாலாமுகி (க்ஷேத்ரத்தில் தரிசனம் அளிக்கும் பராசக்தியின்) உபாசனையை குருவின் ஆசியுடனும் அவரவர்களின் இஷ்ட தேவதையின் அருளாலும் செய்ய வேண்டும்.

மேலும் வருங்கால பாரதத்திற்காக அனைவரும் “நாம் தனி நபர் என்ன பெரிய காரியத்தை சாதித்துவிட முடியும்?” என்று நினைக்காமல் “இந்த தர்மத்தை சிறிதளவு செய்தாலும் பெரிய ஆபத்திலிருந்து காக்கும்” என்றபடி ஒவ்வொரும் பங்குபெறுவது பெரும் பலனை அளிக்கும். அந்த எண்ணத்துடன் அனைவரும் இந்த பெருமை மிகுந்த தார்மீக காரியத்தில் கலந்துகொள்ள வேண்டும். இந்த பெரிய இன்னலிலிருந்து விடுதலை பெறுவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

ஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர.


Back to news page