ஜகத்குரு ஸ்ரீ சங்கரவிஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பேட்டி " மனதை வளர்ப்பதே மதம் " 'மனதை வளர்ப்பதே மதம்'என்று காஞ்சி ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கூறுகின்ற

ஜகத்குரு ஸ்ரீ சங்கரவிஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பேட்டி

" மனதை வளர்ப்பதே மதம் "

'மனதை வளர்ப்பதே மதம்'என்று காஞ்சி ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கூறுகின்றார். நம்முடைய மதம் வாழ்க்கையுடன் ஒட்டியிருக்கிறது. மதச்சார்பு என்பதை மதத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் தவறாக பேசுகிறார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு கோயிலையும் திருப்பதி போன்று சமய கேந்திரமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இந்த பேட்டியில் பாலபெரியவர்கள் காஞ்சிமடத்தின் செயல்பாடுகள் பற்றியும், அதன் எதிர்கால பணிகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

அவருடைய பேட்டி விவரம்:

1. கேள்வி : மடம் முழுக்க முழுக்க ஆன்மீகமாக இருந்தது போக, இப்போது அரசியல் கலந்த சம்பவங்களில் ஈடுபட வேண்டி இருக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

அரசியலில் இருந்து ஆன்மீகவாதிகள் முழுக்க முழுக்க விலகி இருக்க முடியுமா?அப்படி என்றால், அவர்கள் என்ன தொண்டு ஆற்ற முடியும்?அரசியலின் பாதிப்பு மடத்திற்கு எந்தவிதமாக உள்ளது?

பதில் : அரசாங்கத்தோடு எங்களுக்கு தொடர்பு இருக்கிறது. அரசியலோடு எங்களுக்கு தொடர்பு இல்லை. பொது நல வேலைகள், அதாவது கிராமபுற மேம்பாட்டிற்காக, கிராமங்களில் மருத்துவ சேவைகளுக்காக, கல்வி, சிறுதொழில் பயிற்சி இது போன்று பொது மக்களுக்கு, அரசாங்கத்தின் மூலமாக என்ன உதவிகள் செய்யப்படுகிறதோ, அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையிலே அதையெல்லாம் உபயோகப்படுத்துகிறோம். ஓரளவிற்கு பொது சேவை எங்கெல்லாம் நடக்கிறதோ அதை ஊக்கப்படுத்துகிறோம்.

2. கேள்வி : அரசாங்கத்தோடு இணைந்து செய்யப்படும் சேவைகளை உங்களால் குறிப்பிட்டு சொல்ல முடியுமா?

பதில் : கண் சிகிச்சையை ரோட்டரி மூலமாக அளிக்கிறோம். இலவசமாக லயன்ஸ், மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் என்று கட்சிக்கு சம்பந்தமில்லாத உலகளாவிய பொது ஸ்தாபனங்கள் இவற்றுடன் நாங்கள் கலந்து பணியாற்றுகிறோம்.

3. கேள்வி : இந்து மதத்தை குறை சொல்பவர்கள் அதிகபட்சமாக இந்து மதத்தில் உள்ள பிரிவினைகளையே சுட்டி காட்டுகிறார்கள்?மேலோட்டமாக தென்படும் இந்த பாகுபாடுகளையே பெரிதுபடுத்துகிறார்கள். இதனைபோக்க, ஒன்றுபடுத்த மடத்தின் முயற்சிகள் ஏதேனும் உண்டா?

பதில் : வேற்றுமைகள் எல்லா இடத்திலும் உண்டு. வேற்றுமைகள் குறைய வேண்டும். விரோதங்கள் மறைய வேண்டும் என்பது எங்களது விருப்பம். அந்த ரீதியிலே உதவி செய்யும் போது அனைத்து மக்களுக்கு என்ன உதவிகள் செய்ய முடியுமோ அதை செய்கிறோம். உதாரணமாக செயற்கை கால்கள் பலருக்கு பொருத்தப்பட்டன. அதிலே எத்தனை பேர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள், எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற புள்ளி விவரம் கூட எங்களிடம் கிடையாது. அதாவது பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும். சேவை மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற இரண்டையும் நாங்கள் செய்து வருகிறோம்.

4. கேள்வி : காஞ்சி நகரம் என்றாலே மக்கள் மனதில் 'சங்கரமடம்' தான் நினைவுக்கு வருகிறது. காஞ்சிபுரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பாரம்பரியம்மிக்க இடம். காஞ்சிபுரம் பற்றி உங்கள் கருத்து?

பதில் : காஞ்சி புராண பிரசித்தி பெற்ற க்ஷேத்திரம். ஏழு மோக்ஷபுரிகளில் தென்நாட்டிலே இருக்கக்கூடிய ஒரே மோக்ஷபுரி காஞ்சிபுரம் மட்டும்தான்.

சைவம், வைணவம், சாத்தம், ஜைனம் என்ற பல சமய வழிபாட்டு முறைகளும் வலுப்பெற்ற இடமாக விளங்கும் காஞ்சிபுரம், கல்விக்கும் சிறந்த இடமாக இருந்தது. இன்றைக்கும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய இடமாக விளங்குகிறது. அது மாத்திரம் அல்ல, இன்றைய கண்ணோட்டத்தில் சென்னைக்கு அடுத்தாற்போல் இருக்கக் கூடிய நகரம் காஞ்சிபுரம். சென்னையில் பல நெருக்கடிகள், கஷ்டங்கள் இருப்பதினாலேயும், எதிர்காலத்திலே காஞ்சி நகரம் காஞ்சி மாநகரமாக மாறுவதற்கான வாய்ப்புகளும் அவசியமும் இருக்கிறது. இப்பொழுது காஞ்சி நகரத்தின் தேவைகள் பல நிறைவேறி வருகின்றன. ரெயில்வே லைனில் மீட்டர்கேஜ், பிராட்கேஜாக ஆக்கப்பட்டு வருகிறது. அது மின்சார ரெயிலாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.

இப்படி வரும் காலங்களில் திருப்பதியிலிருந்து காஞ்சிக்கு வந்து, அங்கிருந்து ஸ்ரீரங்கம் சென்று அங்கிருந்து அகலப்பாதை அமைக்கப் படுமானால் மதுரை, ராமேஸ்வரத்திற்கு செல்லும் வாய்ப்புகளும் இருக்கின்றன.ஆகவே காஞ்சி நகரம் எதிர்வரும் காலங்களிலே ஒரு ஆன்மீக நகரமாக கல்விக்கு சிறந்த நகரமாக சென்னையின் இட நெருக்கடியை தீர்க்கக்கூடிய, சென்னைக்கு உதவக்கூடிய நகரமாக வளர்வதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே அனைத்து விதத்திலும் காஞ்சி நகரம் வளர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

5. கேள்வி : கடந்த சில வருடங்களாக மடம் அரசியலுடன் அதிகமாக இணைத்து பேசப்படுகிறது. அரசியலில் அதிக ஆர்வத்துடன் கூடிய தொடர்பு, ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தலைமையில் அதிகமாக தெரிகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் : எப்போதுமே மடம் பொது நலனில் ஆர்வத்துடனே இருந்து வந்துள்ளது. பகுதி நேர விழிப்புணர்வு என்பது அல்ல. அந்த காலேத்திலேயும் சமுதாய சேவை செய்யப்பட்டது. வெள்ளம் வந்த போது தஞ்சாவூர் மாவட்டத்திலே ஆங்கில ஆட்சி காலத்திலே மடத்தின் மூலமாக பலருக்கும் உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டது.

அப்போது இருந்த அந்த மாவட்டத்தின் கலெக்டர் பெரியவர்களை பார்க்க விரும்பினார். இப்பொழுது தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகமாக இருக்கின்றன. இடைக்காலத்திலே மக்களிடம் ஆன்மீக ஈடுபாட்டில் ஒரு தொய்வு ஏற்பட்டது. ஆனால் தற்போது ஆன்மீகத்தினுடைய தேவையை இன்றைய இளைஞர்களும், இன்றைய அதிகாரிகளும் பிரமுகர்களும் உணர்ந்திருக்கிறார்கள். அதனால் ஆன்மீகத்தின் சேவை தேசத்திற்கு தேவை என்று விரும்புகிறார்கள். அதனாலே பணிகள் பரவலாகியிருக்கின்றன. ஈடுபாடு செயல்பாடு என்றும் இருந்திருக்கிறது. இப்போது விரிவாக்கப்பட்டுள்ளது.

6. கேள்வி : இந்து மதத்தை பற்றி ஒரு பரவலான குறை என்ன சொல்லப்படுகிறது என்றால், இந்த மதத்தில் பல மடாதிபதிகள் சைவம், வைணவம் என்று பல பிரிவுகள். இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை, கலந்தாலோசிப்பதும் இல்லை என்பது இந்த குறையை போக்க காஞ்சி மடம் செயல்பட்டால் ஓர் ஒருங்கிணைந்த சக்தியாக இந்து மதம் திகழுமே?

பதில் : காஞ்சி மடமானது 1950களிலேயே ஏன் அதற்கு முன்பே மகா பெரியவர்கள், ஆதீனத்திற்கு சென்று அவர்களுடன் உரையாற்றியிருக்கிறார்கள். அதை தொடர்ந்து சென்னை மைலாப்பூர், கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பல மடாதிபதிகளும் இணைந்து ஒரு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்து அதில் முக்கிய பங்கும் வகித்தார்கள். அந்த தெய்வீக பணிக்கு தலைவராகவும் இருந்திருக்கிறார்கள். இந்து சமயத்தின் பல சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களும் அடிப்படையிலே ஒருமித்த கருத்துடன் இருக்க முடியும். பக்தி விஷயங்களை ஒன்று சேர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு காஞ்சி மடம் பிரதான முயற்சிகளை ஆரம்ப காலத்திலிருந்தே எடுத்து வருகிறது.

பெங்களூரில் 1971-ல் ஆண்டவன் ஸ்வாமிகள் (ஸ்ரீகண்ணன் ஸ்வாமிகள்) அவரிடத்தில் கலந்தாலோ சித்திருக்கிறார்கள். பாத யாத்திரை செய்திருக்கிறார்கள். அதை தொடர்ந்து வடநாட்டு சாதுக்கள், தென்னாட்டில் இருக்கக்கூடிய மடாதிபதிகள், ஆதீனங்கள் போன்றவர்களின் தொடர்பை காஞ்சி மடம் ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே, ஒற்றுமையின் அவசியத்தை காஞ்சிபுரம் உணர்த்தியிருக்கிறது. ஒற்றுமையை வளர்க்கும் முயற்சிலேயும் ஈடுபட்டிருக்கிறது.

7. கேள்வி : வெளிநாடுகளில் காஞ்சி மடத்தின் பணிகள் என்ன? எவ்வாறு செயல்படுகிறது?

பதில் : இரண்டு விதமான செயல்பாட்டிலே ஈடுபட்டு வருகிறது. ஒன்று வெளிநாட்டினர் மத்தியிலே; இரண்டாவது வெளிநாட்டில் வசிக்கக்கூடிய இந்தியர்கள் மத்தியிலே. வெளிநாட்டவர் மத்தியிலே வேதாந்த கருத்துக்களைப் பற்றி எடுத்துச்சொல்லப்படுகிறது. நம்முடைய மக்கள் இந்தியர்கள் பல காரணங்களை முன்னிட்டு வெளிநாட்டிலே வசிக்கிறார்கள். அங்கும் கோயில்களை கட்டி பூஜைகளை நடத்தி வருகிறார்கள். அங்கு வசிப்பவர்களின் குழந்தைகள், நம்முடைய பாரம்பரியத்தை, மொழியை, நம்முடைய பழக்கவழக்கங்களை மறந்து விடாமல் இருக்க வேண்டும், காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு இன்டர்நெட்டில் வெப்சைட் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வீடியோ கான்ஃபரன்சிங் செய்யப்படுகிறது. ஆங்கில உரையுடன் ஸ்தோத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. ஆகவே காஞ்சி மடமானது எந்தெந்த நேரத்திற்கு ஆன்மீகத்தை எப்படியெல்லாம் எடுத்துச் சொல்ல முடியுமோ, அதற்கான வாய்ப்பை எல்லாம் உபயோகித்து வெளிநாடுகளில் ஆன்மீகத்தை பரப்ப முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. நமது இணையதளம் www.kamkoti . org ஆகும். அதிலே தமிழ் இணைய தளமும் துவக்கப்பட்டு இருக்கிறது. தெலுங்கிலும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

காஞ்சிபுரத்திற்கு வரக்கூடிய யாத்திரிகர்களுக்கு வசதியாக தொட்டால் தகவல் தரக்கூடிய தகவல் கியால்க் (Kiosk) மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது மாத்திரம் அல்ல காஞ்சிபுரத்தில் 12மணி முதல் 4மணி வரை கோயில் நடைகள் சாத்தியிருக்கும். அந்த நேரத்தை மக்கள் நன்கு பயன்படுத்த அறிவியல் நிறைந்த கண்காட்சி ஒன்றினை காஞ்சியில் நிறுவ, தொழில் நுட்ப துறையுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

காஞ்சிமடம் தேசிய ஒருமைப் பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறது.

சிக்கிம் மாநில தலைநகர் கேன்டாக்கிலே 'பஞ்சாயதன'கோயில் கட்டப்பட்டு 2003 மார்ச் 10ஆம் தேதி கும்பாபிஷேகம் பெரியவர் தலைமையில் நடைபெற்றது. வடகிழக்கு மாகாணங்களிஸ் 10 கோடி ரூபாய் செலவில் கோயிலும் கட்டப்பட்டு ஒரு நேத்திராலயாவும் கட்டப்பட்டு பக்தி வழியிலேயும், சேவை வழியிலேயும் அங்கு நல்ல பெயருடன் காஞ்சி மடத்தின் சேவைகள் நடைபெற்று வருகின்றன.

கோவாவில் பெருமாள் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இப்போதும் அடுத்த மாதம் அங்கு பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அதை தொடர்ந்து அந்தமானிலேயும் இப்போது ஆரம்ப கட்டவேலைகள் நடைபெறுகின்றன. அங்கும் ஒரு ஸ்தாபனம் ஏற்பாடு செய்யப்படும்.

எல்லைகளிலே இறைவனுடைய அருள் நமது தேசத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படுகிறது. ஆகவே சுருக்கமாக சொன்னால் தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு, ஆன்மீக வளர்ச்சியுடன் தேசத்தினுடைய வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு காஞ்சி மடம் செயல்படுகிறது. ஆன்மீகத்தை பொறுத்தவரையிலே புதியதாக ஒரு பாடசாலை ஒன்றை காஞ்சிபுரத்தில் துவக்க இருக்கிறது. அதிலே கிராமபுரத்திலே இருக்கக்கூடிய அர்ச்சகர்கள், குருக்கள், பட்டாச்சாரியார்கள், இவர்களுக்கு எல்லாம் நல்ல பயிற்சி கொடுக்கவிருக்கிறோம்.

அரசாங்கத்தின் மூலமாக மதச்சார்ப்பற்ற படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மதம் சம்பந்தப்பட்ட படிப்பிற்கு உதவிகள் செய்யப்படுவதில்லை. ஆகவே இதை கருத்தில் கொண்டு பொது மக்களும், ஆன்மீக கல்விக்கு உதவிசெய்ய வேண்டும் அரசாங்கமும் எந்த துறையில் முடியுமோ, அந்த துறைக்கு உதவி செய்தால் திருப்தியாக இருக்கும்.

ஆன்மீக கல்விக்கு வருங்காலத்திலே பல முயற்சிகள் செய்து முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறோம். ஆன்மீகக் கல்வி இரண்டு விதமாக தரவிருக்கிறோம். ஒன்று முழு நேரம்;இரண்டாவது பகுதி நேரம்.

8. கேள்வி: ஆன்மீகக் கல்விக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்று நீங்கள் வேண்டுகோள் விடுக்கிறீர்களா?

பதில் : ஆம், ஆன்மீகக் கல்விக்கு அரசாங்கம், மேலும் பக்தர்கள் கூட முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த அளவிற்கு கோயில்களுக்கு நன்கொடை கொடுக்கிறார்களோ அதே போன்று கோயில்களில் பணியாற்றுபவர்களுக்கு நிரந்தர வருமானத்திற்கான உத்தரவாதம் இல்லாததால் அவர்களுடைய தலைமுறையை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சேவை செய்ய, முன் வருவதற்கு ஏதுவாக பல வசதிகளை நாம் செய்ய வேண்டும். நகரங்களில் ஆன்மீக நிகழச்சிகள் நிறைய நடக்கின்றன. கிராமங்களில் வசதிகள் இல்லாததாலே ஆன்மீக நிகழச்சிகள் குறைவாக இருக்கின்றன. ஆகவே கிராமங்களிலே ஆன்மீகத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் மடத்துக்கு இருக்கிறது.

9. கேள்வி: மதச்சார்பின்மை மதச்சார்பின்மை என்று இப்போது பேசாதவர்களே கிடையாது. மதச்சார்பின்மை பற்றி உங்கள் கருத்து என்ன

பதில் : எங்களைப் பொறுத்தவரையில் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மதம் என்பது சரியாக புரிந்து கொள்ளப்படுமானால் அது யாருக்கும் விரோதி அல்ல. மனம் வளர்ந்தால் மனிதன் வளர்வான்.

இந்த மனதை வளர்ப்பதற்காக ஏற்பட்டது மதம். ஆக மனிதனுடைய மன வளர்ச்சிக்காக இந்த ஆன்மீகம், மதம் இருக்கிறது. நம்முடைய மதம் வாழ்க்கையுடன் ஒட்டி இருக்கிறது. இயற்கையோடு இணைந்து இருக்கிறது.

வேப்ப மரத்தில் இருக்கிறது, அரச மரத்தில் இருக்கிறது, குளத்தங்கரையில் இருக்கறது. வாழ்க்கை முறை என்பது தான் மதம் என்று ஆன பிறகு, வாழ்க்கை முறையை வெறுப்பது சரியல்ல, அதனால் முறையான வாழ்க்கையை விரும்புபவர்கள் மதத்தை வெறுக்கக்கூடாது. மதச்சார்பு என்பதை மதத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் தவறாக பேசுகிறார்களே ஒழிய, மதம் என்பது வாழ்க்கை முறையாக பார்க்கப்படுமேயானால், வாழ்க்கை முறையாக உபயோகப்படுத்து- வோமேயானால் அதில் எந்த ஒரு தப்பும் இல்லை.

10. கேள்வி: இன்று இந்து மதத்திற்கும், இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் இரண்டு விதமான அச்சுறுத்தல் இருக்கிறது. ஒன்று Islamic Militancy இரண்டாவது Christ ian Missionary மாற்றம். இது இரண்டுமே இந்து மதத்திற்கு புதிதான விஷயம். இந்து மதத்தில் இல்லாத விஷயங்கள் இவை இரண்டும் நம்மை இரண்டு பக்கத்திலும் மோதிக் கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்துக்கள் இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? எப்படி கையாள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில் : இந்த இரண்டு முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது. இது இந்துகளுக்கான அச்சுறுத்தல் என்று இருக்கக்கூடாது. இந்தியாவிற்கான அச்சுறுத்தல். இதனால் கிறிஸ்துவர்களும் பாதிக்கப்படுவார்கள், இஸ்லாமியர்களும் பாதிக்கப்படுவார்கள். நம் நாட்டினுடைய பொருளாதாரமும் பாதிக்கப்படும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அதனாலே அனைவரும் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டுமேயழிய இது இந்துக்களுக்கு மட்டும் எதிர்ப்பு என்று நினைத்து யாரும் ஒதுங்கக்கூடாது. இது மனித குலத்திற்கான அபாயமே ஒழிய இந்த இரண்டு அச்சுறுத்தல்களும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கான அச்சுறுத்தல் என்று யாரும் நினைத்து விடக்கூடாது.

11. கேள்வி: புதிய கோயில்கள் கட்டுவது பற்றிய தங்கள் அபிப்ராயம் என்ன

பதில் : எங்களை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் புதிய கோயில்களை கட்ட வேண்டாம், அவை ஊக்குவிக்கப் படுவதில்லை. அதனுடைய நோக்கம் என்னவென்றால், இருக்கின்ற கோயில்கள் கேந்திரங்களாக வளர்ச்சியை பெற வேண்டும். அங்கு நாதஸ்வரம் ஒலிக்க வேண்டும், அன்னதானம் நடைபெற வேண்டும். ஒவ்வொரு கோயிலும் திருப்பதி போன்று சமய கேந்திரமாக விளங்க வேண்டும்.

திருப்பதியிலே எப்படி பக்தர்களுக்கு வசதி செய்துதரப்படுகிறதோ, எப்படி வேத பாராயணம் நடைபெறுகிறதோ, புஷ்பாலங்காரம் நடைபெறுகிறதோ, எப்படி சகஸ்ரதீபாலங்காரம் நடைபெறுகிறதோ அது போன்று ஒவ்வொரு கோயிலையும் திருப்பதியாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலேயும் அடிப்படை வசதிகள் வர வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

12. கேள்வி: இந்துக்கள் தற்காப்பிற்காக நடந்து கொள்வதைகூட Fanaticism என்று சொல்கிறார்கள். Communalism (மதவாதம்) என்கிறார்கள். ஆனால் அவர்கள் மதமாற்றத்திலும் இது போன்ற வேலைகளிலும் தீவிரமாக இருக்கும்போது, இந்துக்கள் எப்படி இதை எதிர்கொள்ள வேண்டும்? எடுத்துக்கொள்ள வேண்டும்?

பதில் : இதை அரசாங்கம் கவனத்திலே கொண்டு, தீர்க்கமான முடிவுகளை தைரியமாக எடுக்க வேண்டும்.

13. கேள்வி: Anti Conversion Bill கட்டாய மதமாற்ற தடை சட்டம் மாதிரி எல்லா மாநிலத்திலும் Bill (சட்டம்) வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?

பதில் : அதாவது, தேசத்துடைய பாதுகாப்பின் ஒரு அம்சமாக சமுதாய நல்லிணக்கம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். எந்த கட்சியின் அரசாங்கமாக இருந்தாலும் இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். ஆன்மீக செயல்பாட்டிற்கு இந்தியாவில் என்றைக்குமே விரோதம் இருந்தது இல்லை. ஆன்மீகத்தை மக்கள் விரோத சக்தியாக மாற்றும் போது தான் சச்சரவுகள் வருகின்றன. சேவைக்கும், வழிபாட்டிற்கும் இந்தியாவிலே என்றைக்குமே எதிர்ப்பு இருந்தது இல்லை. ஆகவே, இது தேசத்தினுடைய ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

எப்படி ஒரு ஆட்சியை நடத்துவதற்கு குறைந்தபட்ச செயல் திட்டம் வைத்துக்கொண்டிருக்கிறார்களோ, அதே போன்று முக்கிய கட்சிகள் மத்தியிலே தேசத்தை வழிநடத்திச் செல்வதற்காக காமன் மினிமம் புரோகிராம், குறைந்தபட்ச செயல்திட்டம், ஒரு மித்த கருத்துடைய செயல் திட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.