காஞ்சி பெரியவர் மணிமண்டபத்தில் வெள்ளிப் பேழை பிரதிஷ்டை காஞ்சிபுரம் அருகே மகாப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு கட்டப்படும் மணிமண்டபத்தில் மகா

காஞ்சி பெரியவர் மணிமண்டபத்தில் வெள்ளிப் பேழை பிரதிஷ்டை

காஞ்சிபுரம் அருகே மகாப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு கட்டப்படும் மணிமண்டபத்தில் மகா துவாரக (நிலைக்கால்) நடு விழா மற்றும் பேழை பிரதிஷ்டை நேற்று கோலாகலமாக நடந்தது.

காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் பாலாற்றங்கரையில் ஓரிக்கை கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் பாலாற்றங்கரையில் மகாப்பெரியவர் என்று அழைக்கப்படும் மறைந்த சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு ரூ.15 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது. தஞ்சாவூர் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு இணையாக கற்களால் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது. பணி துவங்கி 5 ஆண்டுகளாகிறது. கணபதி ஸ்தபதி தலைமையில் சுமார் 300 பேர் மணிமண்டபத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் ஆட்சிக்கு பின் முதன் முறையாக தற்போது கற்களால் ஆன கோயில் கட்டப்படுகிறது. மகாப்பெரியவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்ததை குறிக்கும் வகையில் 100 ஸ்தம்பங்களைக் கொண்ட கல் மண்டபம் அமைக்கப்படுகிறது.

மணிமண்டபத்தில் நிலைக்கால் நடு விழா மற்றும் பேழை பிரதிஷ்டை நேற்று காலை கோலாகலமாக நடந்தது. இதனையட்டி நேற்று முன்தினம் முதல் மணிமண்டபம் வளாகத்தில் சிறப்பு ஹோமங்கள் நடந்தது. நேற்று காலை 10.45 மணிக்கு மேளதாளங்கள் ஒலிக்க, வேத விற்பனர்கள் வேதங்கள் ஓத வெள்ளியில் வடிவமைக்கப்பட்ட பேழைக்கு சிறப்பு பூஜைகள் சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. பூஜை முடிந்ததும் சிவாச்சாரியார்கள் பேழையை தலையில் சுமந்தபடி மணிமண்டபத்தை வலம் வந்தனர்.

10.50 மணிக்கு சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஈசான மூலையில் வெள்ளிப் பேழையை பிரதிஷ்டை செய்தார். முன்னதாக பேழையை பிரதிஷ்டை செய்யும் இடத்தில் சங்கராச்சாரியார் புற்று மண், ஆற்று மண், மடு மண், யானை கொம்பு மண், ரிஷபம் கொம்பு மண், நண்டு வளை மண், பயிர் குழி மண், கலப்பை மண் ஆகியவற்றை தூவினார். அதன் மேல் தானிய வகைகளை தூவினார். தங்கக்காசு, தங்க மோதிரம் ஆகியவற்றை போட்டார். பின் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரை அதன் மேல் தெளித்தார்.

அதனைத் தொடர்ந்து அவ்விடத்தில் பேழையை பிரதிஷ்டை செய்து தீபாராதனை காட்டி வழிபட்டார். பிரதிஷ்டை செய்யப்பட்ட பேழையில் தங்க யானை, தங்க ரிஷபம், வெள்ளி கபாலம், செம்பு கும்பம், பித்தளை கட்வாங்கம், வெண்கல வில், காரீய கோடாரி, வெள்ளீயம் மான், இரும்பு திரிசூலம், சம்பா நெல், துவரை, வரகு, உளந்து, பாசிப்பயிறு, தினை, கொள்ளு, தாமரை கிழங்கு, ஆம்பல் கிழங்கு, நைதல் கிழங்கு, செங்குழுநீர் கிழங்கு, வெட்டிவேர் கிழங்கு ஆகியவை வைக்கப்பட்டிருந்தது.

பேழை ஸ்தாபனம் முடிந்ததும் நிலைகால் நடு விழா நடந்தது. சிற்பங்கள் நிறைந்த நிலைகாலை ஸ்ரீ சங்கராச்சாரியார் நட்டார். இவ்விழாவில் கணபதி ஸ்தபதி, மணிமண்டப அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மணி மண்டபம் அமைக்கும் பணியை விரைவாக முடித்து 2007ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மணிமண்டபத்தில் சப்தஸ்வரங்களை எழுப்பக்கூடிய தூண்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நுழைவு கோபுரம் ஒன்றும் எழுப்பப்படும். மணிமண்டபம் விமானம் மற்றும் கோபுரம் முழுவதும் கற்களால் அமைக்கப்படும் என கணபதி ஸ்தபதி தெரிவித்தார்.