ஸ்ரீமடத்தின் பல்வேறு பணிகள் - ஹைதராபாத் / செகந்தராபாத் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் தொடர்ச்சியாக அருள் பாலித்து வரும் குரு பரம்பரை நமது இந்து தர்மத்திற்கே ஒளி விள

ஸ்ரீமடத்தின் பல்வேறு பணிகள் - ஹைதராபாத் / செகந்தராபாத்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் தொடர்ச்சியாக அருள் பாலித்து வரும் குரு பரம்பரை நமது இந்து தர்மத்திற்கே ஒளி விளக்காய் திகழ்கிறது. சனாதன தர்மம் இன்றும் பல தடைகளையும், மேற்கத்திய கலாசார சீரழிவையும் எதிர்த்து தழைத்து வருவதற்கு முக்கிய காரணம் நமது ஆச்சார்யர்கள் மதம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை காப்பாற்ற எடுத்துவரும் முயற்சிகளேயாகும்.

இறைவனின் பரிபூரண ஆசியுடனும், பரமாச்சாரியரின் அநுக்ரஹத்துடனும் இந்த ஹைதராபாத் நகரம் பல்வேறு ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. விவரம்:

1. சங்கர மடம், ஸ்கந்தகிரி மற்றும் அதைச் சுற்றி உள்ள ஹநுமான், சிவன் மற்றும் முருகன் கோயில்கள்.

2. 1968-ல் ஸ்தாபிக்கப்பட்ட சங்கர பக்த ஸபா

3. சங்கர பக்த ஸபாவின் தொடர் முயற்சியால் உருவாக்கப்பட்ட ' வேதபவனம் '

4. ஸ்ரீ மடத்தின் கீழ் இயங்கும் கோயில்கள்

5. வேத பாடசாலை - ஜூப்ளி ஹில்ஸ்

6. ப்ராஹ்மண மஹிளா ஸமிதி

7. ஸ்ரீ சங்கர வித்யாலயா

8. NRI பெற்றோர்கள் மையம்

9. ஜாதக பரிவர்த்தனை

10. ஸ்ரீ சங்கர வேத ஸம்ஸ்கிருத பாடசாலை, ஹைதராபாத்.

1968-ல் ஸ்தாபிக்கப்பட்ட சங்கர மடம் ஆன்மிக மற்றும் இந்துமத தலைமை இடமாக விளங்குகிறது. நாள்தோறும் நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். நமது ஆச்சார்ய ஸ்வாமிகள் இங்குவந்து சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்தபோது நகரத்தையே ஒரு ஆன்மிக மணம் சூழ்ந்திருந்தது என்றால் அது மிகையாகாது.

1998-ல் நிர்வாகத்தினர் மற்றும் சில நலம்விரும்பிகளின் அயராத உழைப்பால் நமது சங்கர மடம் புதுப்பிக்கப்பட்டு தற்போது ஒரு தெய்வீக தோற்றத்துடன் விளங்கி வருகிறது.

நமது பரமாச்சார்யாளின் ஆணைப்படி 1968-ல் துவங்கப்பட்ட சங்கர பக்த ஸபா, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலமாக சமூகத்திற்கு அளப்பறிய தொண்டாற்றி வருகிறது. மேலும் பல வேத பாடசாலைகள் உருவாவதற்கும், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறவும், மக்களின் உயர்வுக்கு ஏற்றம் தரும் வகையில் ஆன்மிக மாநாடுகள் நடத்தவும் திட்டமிட்டு வருகிறது. இந்த சபாவின் முயற்சிக்கு எடுத்துக்காட்டாக வேத பவனம் திகழ்கிறது.

1993-ல் துவக்கப்பட்ட வேத பவனம், சின்னஞ்சிறார்களின் மனதில் நமது வேதம், புராணம், பாரம்பரியம், சாஸ்திரம் மற்றும் அநுஷ்டானங்கள் ஆகியவற்றை பதிய வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தற்போது பலமாடி கட்டிடமாக உருவெடுத்துள்ள வேத பவனத்தில் 85 வித்யார்த்திகள் தங்கி நான்கு வேதங்களையும் பயின்று வருகின்றனர். 2002-ல் விஜயவாடா வித்யாரண்யம் வேதார்த்த பாடசாலையும் இவ் வேதபவனத்தோடு இணைக்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட வித்யார்த்திகள் பாடத்தினை பூர்த்தி செய்து கணபாடிகளாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நகரத்தில் மொத்தம் 24 கோயில்கள் மடத்தின் நிர்வாகத்தில் அல்லது மேற்பார்வையில் இயங்கி வருகின்றன.

அனைத்து நித்ய கர்மாக்களும் மிகவும் சிரத்தையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்கோயில்களின் பணிகள் சிலவற்றைக் காண்போம்:

1. இலவச ஆயுர்வேத மருத்துவம் 2. இசை மற்றும் நாட்டிய வகுப்புகள் ஸ்கந்தகிரி கோயிலில் நடைபெற்று வருகிறது 3. கணிப்பொறிக் கல்வி (பரமாச்சார்ய கல்வி அறக்கட்டளை மூலமாக ) 4. தினம் கோபூஜை, 5. குழந்தைகளுக்கு கல்வி, 6. லலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் அஷ்டலக்ஷ்மி ஆலயத்தில் நடைபெறுகிறது. 7.குக்கட்பள்ளி வெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் நித்ய கல்யாண உத்ஸவம் 8. வருடந்தோறும் 100 பையன்களுக்கு தர்ம உபநயனம். 9. இலவச ஹோமியோபதி மருத்துவமனை 10. வேதாந்த நூல்கள் அடங்கிய நூலகம், 11. இலவச மருந்தகம் - ஷ்யாம்பாபா கோவிலில்) மேலும் இக்கோயிலில் வருடாவருடம் ம்ருகசீர கர்தே நாளில் மீன் மருத்துவம் மூலமாக லட்சோப லட்ச மக்களுக்கு ஆஸ்துமா நோய்க்கான மருத்துவம் வழங்கப்படுகிறது.

பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் ஸ்வர்ண ஜயந்தியை முன்னிட்டு பீடம் வெளியிட்ட அறிவிப்பில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரிலும் கல்வியை மேம்படுத்தும் பொருட்டு சங்கர வித்யாலயா திட்டத்தின் கீழ் மத்திய பாடதிட்டத்தினை அறிமுகப்படுத்துவது என்று ஆலோசிக்கப்பட்டு அதன் முதற்கட்டமாக பத்மாராவ் நகரில் சங்கர வித்யாலயா 2003 -ல் தொடங்கப்பட்டது.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் ஆசிகளோடு, நகரில் NRI பெற்றோர்கள் மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இது வடஅமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் NRI சங்கத்தின் ஆலோசனைகளோடு நடத்தப்பெறுகிறது. இதன் முக்கிய அம்சங்கள் : ஜாதக பரிவர்த்தனை (திருமணப் பொருத்தம்) கலை மற்றும் ஆன்மிக தொடர்புகள். சமய ஒருங்கிணைப்பே இம்மையத்தின் தலையாய கொள்கையாகும். NRI களிடமிருந்து கருத்துகளை வரவேற்கிறோம்.

பூஜ்யஸ்ரீ ஆச்சார்யாளின் அநுக்ரஹத்தோடு 2001-ல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ சங்கர வேத ஸம்ஸ்கிருத பாடசாலை வேதம், ஜ்யோதிஷம் ஆகியவற்றோடு தற்கால கல்வியையும் அளிக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இப்பாடசாலையில் பயில வரும் மாணவர்களுக்கு தங்கும் வசதியும் மிகக் குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுகிறது. வழக்கமான பாடதிட்டங்களுடன் கூடிய ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கப்பட்டு மாலை நேரங்களில் அவர்களுக்கு வேத உபாகர்மா, சம்ஸ்கிருதம் மற்றும் ஜ்யோதிஷம் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பாடசாலைக்கு பள்ளி மற்றும் விடுதியுடன் கூடிய ஒரு வளாகம் சொந்தமாக இருந்தால் மேலும் நிறைய மாணவர்களை சேர்க்க ஏதுவாக இருக்குமென்பதால் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கப்படுகிறது. இப்பாடசாலைக்கு நன்கொடை அளிக்க அனைவரும் முன்வரவேண்டும். நன்கொடையாளர்கள் இப்பாடசாலைக்கு உதவி அளித்து வரும் ஸ்ரீ காமகோடி கடிகாஸ்ரமம் டிரஸ்ட் என்ற அறக்கட்டளை பெயரில் அளிக்கலாம் என்றும் மேலும் அதற்கு 80 (G) பிரிவில் வரிவிலக்கும் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அமெரிக்க வாழ் இந்தியர்கள் அங்குள்ள காஞ்சி காமகோடி ஸேவா ஃபவுண்டேஷன் மூலம் நன்கொடை அளிக்கலாம். அதற்கும் Federal Tax exemption (ID-11-302107) உண்டு.