அருந்ததி தேவி சந்திரபாகா நதிக்கரையில் தாபஸாரண்யம் என்று பெயருள்ள ஒர் ஆச்ரமம் இருந்தது அதில் மேதாதிதி என்ற முனிவர் வசித்து வந்தார் அவர் பெரும் வேள்வி நடத்தினார் அவ்வேள

அருந்ததி தேவி

சந்திரபாகா நதிக்கரையில் தாபஸாரண்யம் என்று பெயருள்ள ஒர் ஆச்ரமம் இருந்தது. அதில் மேதாதிதி என்ற முனிவர் வசித்து வந்தார். அவர் பெரும் வேள்வி நடத்தினார். அவ்வேள்வியின் முடிவில் வேள்வித் தீயிலிருந்து ஒரு பெண் குழந்தை தோன்றியது. முனிவரான மேதாதிதி அக்குழந்தையை அன்புடன் வளர்த்து வந்தார். குழந்தை விளையாட்டில்கூடத் தர்மமான கார்யங்களுக்குத் தடங்கலாக இருந்ததில்லை. ஆகையால் அவளுக்குத் அருந்ததி என்ற பெயர் சூட்டப்பட்டது. குழந்தை அருந்ததிக்கு வயது ஐந்தாயிற்று. ஒரு நாள் பிரம்ம தேவர் மேதாதிதி முனிவரின் அருகில் வந்தார். குழந்தை அருந்ததியை நோக்கினார். மறைந்திருந்த முன்ஜன்ம அறிவுகள் வெளிப்பட வேண்டிய காலம்

வந்ததை அறிந்தார். முனிவரின் சொன்னார். அருந்ததி கல்வி கற்கும் வயதை அடைந்திருக்கிறாள். ஆகையால் இவளை இப்பொழுதே நல்லோழுக்கமுள்ள பத்தினிப் பெண்களிடம் அனுப்ப வேண்டும். அவர்களிடமிருந்தே இவன் ஒழுக்கத்துடந் கூடிய கல்வியைக் கற்க வேண்டும்.

இதைக் கேட்ட முனிவர், குழந்தையிடம் உள்ள பேரன்பினால் குழந்தையைப் பிரிய மனமில்லாதவராக்த சற்று தயங்கினார். இதைக் கண்ட பிரம்மன் முனிவரை நோக்கி நீரும் நானும் படித்தவர் தாம். இருந்தாலும், பெண்களுக்குகந்த கல்வியைப் பெண்கள்தான் கற்பிக்கமுடியும். பெண்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள நாணம், அச்சம், பக்தி, பொறுமை முதலிய நற்குணங்களை உள்ளவர்கள்தான் வர்ணிக்க முடியும். ஆண்கள் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதால் அப்பெண்கள் ஞானம் முதலிய பெண்களுக்குள்ள சிறப்பான குணங்களை இழந்து ஆண்களுடைய குணங்களைப் பெறுகிறார்கள். பெண்களுக்கு ஒழுக்கமும் நாணமும்தான் முக்கியம். உன் ஆச்ரமத்தில் பெண்கள் கிடையாது. ஆகையால் c இக்குழந்தையைப் சாவித்ரியிடம் அனுப்பு என்று சொன்னார். முனிவர் பிரம்மாவின் கட்டளைப்படி அருந்ததியை அழைத்துக்கொண்டு சூர்யலோகம் சென்றார். சாவித்ரி தேவியைச் சந்தித்தார். சாவித்ரி தேவியும் அருந்ததியை அழைத்துக் கொண்டு மேருமலைக்குச் சென்றார். அங்கே சரஸ்வதி காயத்ரி முதலிய தேவர்களும் வந்திருந்தார்கள். முனிவர் அவர்களை தனித்தனியாக வணங்கினார். பிறகு அவர்களை நோக்கி, தேவியரே இவள் என் பெண் அருந்ததி, பிரம்மனின் கட்டளைப்படி இவளை உங்களிடம் கல்வி கற்க ஒப்புவிக்கிறேன். இவள் தங்களிடமே இருக்கட்டும். தாங்கள் இவளுக்குப் பெண்களுக்கு உசிதமான கல்வியைக் கற்பியுங்கள் என்றார்.

தேவியர் முனிவரே பகவான் விஷ்ணுவின் அருளாள் இவள் முதலிலேயே ஒழுக்கமுள்ளவளாக இருக்கிறாள். பெண்களுக்கு ஒழுக்கம்தான் மிக முக்யம். ஆனாலும் பிரமனின் கட்டளைப்படி இவளை எங்கள் அருகில் வைத்துக்கொள்கிறோம். இவள் முன் ஜென்மத்தில் பிரம்மனின் பெண்ணாக இருந்தாள். உம் தவவலிமையாலும், ஈசனருளாலும் இவளை நீர் மகளாகப் பெற்றீர். இவளால் உலகத்திற்கு அநேக நன்மைகள் உண்டாகும். பெண் உலகத்திற்கே ஒற் எடுத்துக்காட்டாக விளங்கப்போகிறாள் என்றார்கள்.

முனிவர் தம் குழந்தை அருந்ததியை அவர்களிடம் ஒப்புவித்துச் சென்றார். அருந்ததியும் அத்தேவியற்களுக்கு தினமும் பணிவிடை செய்து கொண்டும், கல்வி கற்றுக்கொண்டும் வந்தாள். சில ஆண்டுகள் சென்றன. அருந்ததி திருமணப் பக்குவத்தை அடைந்தாள். ஒரு நாள் வசிஷ்ட முனிவர் அருந்ததியின் ஆசிரமப் பக்கம் சென்றார். தற்செயலாக இருவரும் சந்தித்தார்கள். அருந்ததி நாணமடைந்து உள்ளே ஒடி விட்டாள். இதையறிந்த தேவியர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலிய தேவர்களும் வந்தார்கள். மேதாதிதி முனிவர் வசிஷ்டமுனிவருக்குத் தம் மகள் அருந்ததியைத் தானம் செய்தார். தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். மும்மூர்த்திகளும், மணப்பந்தலில் தம்பதியினரை உட்காரவைத்து நீராட்டினார்கள். அந்நீரே கோமதி, சரயூ முதலிய ஆறுகளாக பெருகிற்று. திருமண காலத்தில் பிரம்ம தேவர் மிக அழகிய விமானமும், விஷ்ணு

அழியாப் பதவியும், ருத்ரர் நீண்ட ஆயுளையும் அளித்தார்கள். வசிஷ்டர், தம் மனைவியுடன் தமக்கென அளிக்கப்பட்ட சப்தரிஷி மண்டலத்தில் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறார். அவர் அருகில் மிகச் சிறு நக்ஷத்திரமாக அருந்ததி தேவி விளங்குகின்றாள். சப்தரிஷி மண்டலத்தில் தம் கனவரை விட்டுப் பிரியாமல் இடம் பெற்று இருக்கும் தேவி அருந்ததி ஒருவள்தான்.

ஒரு சமயம் அக்னி தேவனுடைய மனைவி ஸ்வாஹாதேவி, அருந்ததியைப்போல உருவம் எடுக்க விரும்பினாள். எவ்வளவு முயற்சி செய்தும் அருந்ததியைப்போல உருவம் எடுக்க முடியவில்லை. இதற்குமுன், அநேக முனிவர்களின் மனைவியைப்போல உருவம் எடுத்திருக்கிறாள். ஒருவரைப்போல் நாம் ஆகவேண்டுமானால் முதலில் அவர்களுடைய குணங்களைப் நாம் பெற வேண்டும். குணத்தை அடைந்த பிறகே நாம் அவர்களைப்போல் ஆகமுடியும். அருந்ததியோ மஹா உத்தமி. ஒழுக்கத்தை உயிரினும் மேலாக மதிப்பவள். ஸ்வாஹாதேவி அருந்ததியிடம் சென்று கைகூப்பிச் சொன்னாள். தேவி நீங்கள் ஒருவர்தான் பதிவ்ரதா தர்மத்தைச் சரியான முறைப்படி அனுஷ்டிக்கிறீர்கள். தங்களைப் போன்ற உத்தம பத்தினியை நான் இதுவரை பார்த்ததே இல்லை. எந்தப்பெண் திருமண காலத்தில் அக்னி, அந்தணன் இவர்களுக்கு முன்னால் கணவனின் கையைபிடிக்கும் சமயம் உங்களை நினைக்கிறாளோ, அவள் நீண்டகாலம் கணவனுடன் சுகத்தையும், புத்திரனையும், செல்வத்தையும் அடைவாள். நான் எனது அல்ப புத்தியினால் உங்களைப்போல் உருவத்தை அடைய எண்ணினேன். ஆனால் என்னால் முடியவில்லை. என்னை மன்னிக்கவேண்டும் என்று வணங்கிச் சொன்னாள். இதனால்தான் திருமணக்காலத்தில் அருந்ததியைப் பார்க்கின்றார்கள். நல்லோரைக் காண்பது நல்லதல்லவா.

ஒரு சமயம் இந்திரன், அக்னி, சூரியன், இம்மூவரும் பதிவ்ரதா தர்மத்தைச் சோதிப்பதற்காக அருந்ததியின் ஆச்ரமத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அருந்ததி நீர் எடுத்துவர, குடத்தை எடுத்துக் கொண்டு நதியை நோக்கிச் சென்றுகொம்டிருந்தாள். எதிரில் தேவர்களைக் கண்டு வணங்கினாள். வருகையின் காரணம் வினவினாள். தேவர்கள் எங்களுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக தங்களிடம் வந்துள்ளோம் என்றாகர்கள். அருந்ததி சற்ரு இவ்வாசனத்தில் அமருங்கள் நான் நதியிலிருந்து ஜலம் கொண்டுவந்தபின் உங்களுடைய சந்தேகத்தைத் தீர்க்கிறேன் என்றாள். தேவர்கள் எங்களுடைய சக்தியால் இக்குடத்தை நிறப்பிவிடுகிறோம் என்றார்கள். அருந்ததி குடத்தை கீழே வைத்தாள். இந்திரன், அக்னி, சூர்யன் மூவரும் எவ்வளவு முயற்சி செய்தும் அக்குடத்தை நிரப்பமுடியவில்லை. மூவரின் சக்தியால் முத்தால் குடம்தான் நிறைந்தது. தேவர்கள் தங்களால் முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். அருந்ததி தனது பதிவ்ரதா மகிமையால் அக்குடத்தை நிரப்பினாள். தேவர்கள் சந்தேகம் தெளிந்தவர்களாய் பதிவ்ரதையை வணங்கிச் சென்றனர். பத்தினிப் பெண்ணின் பெருமை தேவர்களின் பெருமையைவிட மிக உயர்ந்தது. பத்தினிப் பெண்களால்தான் நம் தேசம், தர்மம் இவை முன்னேர வேண்டும்.