ஸ்ரீகாமகோடி ப்ரதீபம் கார்த்திகை தீபச்செய்தி முப்புரமெரித்தான் முக்கண்ணன், எதனால்? தனது புன்னகையால் ஆனந்தமே பாபத்தை எரிக்கும் அவனுக்கு பூமியே ர

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
கார்த்திகை தீபச்செய்தி

முப்புரமெரித்தான் முக்கண்ணன், எதனால்? தனது புன்னகையால். ஆனந்தமே பாபத்தை எரிக்கும். அவனுக்கு பூமியே ரதம். காலச்சக்கரங்களான சூர்ய சந்திரர் ரதத்தின் சக்கரங்கள். உண்மையறிவை உணர்த்தும் வேதங்களே குதிரைகள். அவ்வுன்மையறிவைக் காப்பாற்றி வைத்து முனிவருக்கெல்லாம் பொருளும் ஓதிவைக்கும் பிரமனே வண்டியோட்டி. பொன் மலையே கை வில். உலகளந்து உலகைக் காக்கும் நாரணனே அம்பு. இவ்வளவு பலத்தை வைத்துக்கொண்டும் ஒரு பலத்தையும் உபயோகிக்காமல் புன்னகையைக்கொண்டே ஆகாச கோட்டைகளாகச் சஞ்சரித்துக்கொண்டு உலகத்தை நாசம் செய்து கொண்டு வந்த அரக்கர்களை எரித்தான். அவனே சிவன். அவனே த்ரிபுர ஸம்ஹாரமூர்த்தி. பலமுள்ளவனுடைய ஆனந்த நிலையை எவ்விதக் கொடும் தீமைகளையும் போக்கும். பூர்ணமான பலத்தைச் சம்பாதித்த பிறகே அஹிம்சா தர்மத்தை கையாளவேண்டும். அதுவே உலகத்திற்கு க்ஷேமம். அந்தச் சந்தானந்தமே தீயவர்கள் தாமே எரிந்து போகும்படி செய்யும்.

திரிபுர தகனம் நடந்த நாள் கார்த்திகை பௌர்ணமி. இவ்வெண்ணத்துடன் கார்த்திகை என்ற தீபோத்ஸவம் செய்பவர்கள். எண்சாண் உடம்பாகிய ஸ்தூல தேகத்திலுள்ள பற்றையும், இத்திரியங்களாம் சூக்ஷ்ம தேகத்திலுள்ள பற்றையும், மயக்கமாம் அஜ்ஞானத்தையும் உண்மை ஆனந்தத்தால் எரித்து எஞ்ஞான்றும் சிவானந்த ஜோதியாய் விளங்க அடிகோலினவர்களாவார்கள். இச்சிவானந்த ஜோதியை நினைவூட்டுவதே அண்ணாமலை தீபம். அடிமுடி காணாத ஆண்டவனே அண்ணாமலை. திரிபுர தகன காலத்தில் வண்டிக்காரனாகவும், அம்பாகவும் இருந்த இருவர் இவனது அடியையும் முடியையும் தேடிச் சலித்து இவன் ஆதிஅந்தமில்லாத ஜோதியென்பதை விளக்கினார்கள்.

இக்காலத்தில் பொய்யும், லஞ்சமும், ஏமாற்றமும், நாஸ்திகமும் எவ்வெளவுக்கெவ்வளவு காணப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு மாறுதலாக ஸத்தியமும், நேர்மையும், பக்தியும், இவைகளுக்கு ஆதாரமான ஞானமும் ஒருகாலத்தில் பெருகியிருந்தே தீரவேண்டும். ஒரு மாதத்தில் வெயிலின் தாபமிருந்தால் எம்மாதத்திலாவது தாபத்தைத் தணிக்கும் வானமுகில் வந்தே தீருகிறதல்லவா?இருண்ட இரவுக்கு மாறாகப் பட்ட பகலிலும் இருந்தே தீருகிறது. முனிவர்களும் சித்தர்களும், வள்ளல்களும், தவசிகளும் நிறைந்த காலம் க்ருதயுகம். அக்காலத்தில் அவர்கள் உத்தம பக்குவம் நிறைந்திருந்ததனால் அவர்களை மேலும் கைதூக்கி விடுவதற்கு"உலகெலாமுணர்ந்து ஓதர்கரியவனாம்"பரமசிவன் அவர்கள் வெளிக்கண்ணாலேயே பார்த்துய்யும்படி பிரத்யக்ஷமாகித் தத்துவங்களை விளக்கும் அநேக திருவிளையாடல்களைப் புரிந்தான். அக்காலத்துறைத்த புருஷர்கள் பிற்காலத்தவர்களிடம் கருணைகொண்டு பரமசிவனிடம் வேண்டிய வரங்களைப் பெற்றார்கள். அந்த வரங்கள் சுயநலத்திற்காக அல்ல.

பகலில் விளக்கு வேண்டாம். அமாவாசையன்று திருடர் பயம் அதிகம். அன்று விளக்கு வைத்து விழித்திருப்பவன் மீளுவான். அற்ப சக்தியுள்ள பிற்காலத்தவர் சிவபெருமான் திருவிளையாடல் புரிந்த இந்தப் புண்ணிய தினத்தில் அறிந்தோ அறியாமலோ இந்த உத்ஸவத்தைக் கொண்டாடினால் அவர்களது பாபத்தைப் போக்கி, அவர்களை உண்மை மார்கத்தில் செலுத்தியருள வேண்டும் என நம் பெரியோர்களான சித்த புருஷர்கள் சிவனருளைக் கொண்டு புராணமாகிய பெரும் விளக்கை ஏற்றி வைத்திருக்கிறார்கள்.

தர்ம நூல்களில் கார்த்திகை தீபங்களை வைக்கும்போது சொல்லும்படி விதிக்கப்பட்டிருக்கும் மந்திரம்:

கீடா:பதங்கா: மசகா:ச வ்ருஷா:
ஜல ஸ்தாலே யே விசரந்தி ஜீவா:

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்மபாகின:
பவந்து நித்யம் ச்வபசா U விப்ரா:

புழுக்களாயினும், பக்ஷிகளாயினும், கொசுக்களாயினும், மரங்களாயினும், நாடோடிகளாயினும், அந்தணர்களாயினும், தரையிலும் நீரிலும் சஞ்சரிக்கும் எந்த ஜந்துக்களாயினும், இத் தீபத்தைப் பார்த்த மாத்திரத்தினால் மறு ஜன்மமில்லாமல் நித்திய தன்மையடைந்தவனாக ஆகிறார்கள். இதுவே இம்மந்திரத்தின் பொருள். இவ்வெண்ணத்துடன் ஒரு விளக்கையாவது ஏற்றிவைப்பதைவிட லௌகிக முறையில் செய்யப்படும் டோஸ்ட் (TOAST) முதலிய எந்த நல்லெண்ணச் சின்னமும் பயனுடையதாகாது "மாவலியோ மாவலி".

மஹாபலி சக்ரவர்த்தி முன் ஜன்மத்தில் எலியாயிருந்தார். சிவாலயத்தில் கார்த்திகை பௌர்ணமியன்று கொஞ்சமாக எரிந்து கொண்டிருந்த தீபத் திரியைச் சற்று இழுத்ததினால் தீபம் அதிக ஜோதியாக ஜ்வலித்தது. எலி பயந்தோடியது. திரிபுர தஹனோத்ஸவத்தன்று அகஸ்மாத்தாகவாயினும் ஜோதியை ப்ராகாசப்படுத்தியவர்களுக்கு ஈச்வர வரத்தாலேற்பட்ட புண்ணியத்தினால் அந்த எலி மறு ஜன்மத்தில் மஹாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தது. பூர்வஜன்ம நினைவுமடைந்தது. அம் மஹாபலி தன் ஆட்சியில் கார்த்திகை தீபோத்ஸவத்தை அளவுகடந்த சிரத்தையுடன் அனுஷ்டித்து வந்தார். தான் பரமபதத்தை அடையும் காலத்தில் பகவானைக் குறித்துப் பிரார்த்தித்தார்:"உலகத்திலுள்ள மக்கள் எல்லோரும் இக்கார்த்திகை தீபோத்ஸவத்தை அனுஷ்டித்து நன்மையடைய வேண்டும்"என்பதே அவருடைய பிரார்த்தனை. அதனால் கார்த்திகை தீபோத்ஸவம் செய்யும் மக்களுக்கு இரு மடங்கு நன்மை உண்டாயிற்று. அவரிடம் காட்டும் நன்றியே சிறுவர்கள் கூவும் "மாவலியோ மாவலி".

கார்த்திகை மாதம் முப்பதுநாளும் ஸாயங்காலம் விளக்கேற்ற வேண்டும். இது காசியில் கங்கைக் கரையில் இப்பொழுதும் நடந்து வருகிறது. முடியாதவர்கள் த்வாதசி, சதுர்தசி, பௌர்ணமி இம்மூன்று தினங்களிலாவது தீப வரிசைகளை ஏற்ற வேண்டும். பௌர்ணமியன்று ஸ்தம்ப தீபத்தையும் தூண் நட்டு ஏற்ற வேண்டும். மரத்தை நட்டு வைக்கோலைச் சுற்றி நெய்விட்டு மஹாபலி சக்ரவர்த்தியை நினைத்து, தீபத்தை ஏற்றி அந்த ஸ்தம்ப தீபம் விசேஷமாக ஜ்வலிக்கும்படி குங்கிலியத்தை வாரி இறைக்க வேண்டும். ஒன்றுக்கும் வகையில்லாத பரம ஏழையாயிருப்பவன் ஓர் நார்த்தங்காயின் எண்ணையைக் கொண்டாவது ஜோதி அர்ப்பணம் செய்ய வேண்டுமென்று கார்த்திகை புராணத்தில் எழுதியிருக்கிறது. (நார்த்தங்காயிலிருந்து எப்படி எண்ணெய் பெறுவது என்று எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. வயதான பௌராணிகர்களைக் கேட்டேன். ஒருவர் என்னைப் பார்த்து "நார்த்தங்காய்த் தோலை கொண்டுவா"என்றார். அதை இரு விரலாலும் பிழிவதைப்போல் மடக்கிக் கொண்டு தீபத்தின் சமீபத்தில் காட்டினார். அதிலிருந்து கிளம்பிய ரச ஆவி விளக்கில் பட்டவுடன் குங்கிலியத்தைப்போல் வெகு வேகத்துடன் ஜ்வலித்தது) .

கோவில் ஸ்தம்ப தீபம் (சொக்கப்பானை) ஏற்றும்போது சொல்ல வேண்டிய மந்திரம்.

உத்சவே தவ தீபஸ்ய மயா தத்தம் மஹாபலே
வத்ஸரஸ்ய ஸக்ருத்பச்ய ப்ரீதோ பவ திதே ஸுத

கோவில்களில் சொக்கப்பானையிலும் வீடுகளில் பந்தத்திலும் குங்கிலியம் முதலியன போடும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

உஜ்ஜ்வல ஜ்யோதி ஆகாசே தீப்யமாநே விபாவஸெள
குக்குலும் ப்ரக்ஷிபாமி அத்ர ப்ரீதோ பவ மஹாபலே மஹாபலேய நம:

(இம்மந்திரங்கள் இன்னும் அச்சில் வராத மயூரக்ஷேத்ர புராணத்தில் காணப்படுகின்றன)

தூய்மையுடைய நெற்பொரியும், தன்னலமற்ற வள்ளல் தன்மையையுடைய தெங்கும், அன்பிற்கு அறிகுறியாம் தித்திப்புத் தன்மையையுடைய வெல்லமும் ஒன்று கலந்து அன்று நிவேதனம் செய்யப்பட வேண்டுமென்றும் அப்புராணம் கூறுகின்றது.

வெண்மையும் தூய்மையும் ஒருங்கே பொருந்திய சிவபெருமானையும் தன்னலமற்ற வள்ளலாம் மஹாபலி சக்கரவர்த்தியையும், குழந்தைகளாம் ஜீவாத்மாக்கள் அனுபவிக்கும் சிவானந்தத்தையும் குறிக்கின்றதோ பொரி உருண்டை!