ஸ்ரீகாமகோடி ப்ரதீபம் ஈச்வரதியானம் நமக்கெல்லாம் மனம் என்று ஒன்று இருக்கிறது மனத்தில் ஆசை உண்டாகிறது பல விஷயங்களை அது நினைக்கிறது அதனால் அநேக விதம

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
ஈச்வரதியானம்

நமக்கெல்லாம் மனம் என்று ஒன்று இருக்கிறது. மனத்தில் ஆசை உண்டாகிறது. பல விஷயங்களை அது நினைக்கிறது. அதனால் அநேக விதமான மனோநிலைகள் உண்டாகின்றன. பந்த்தில் சிக்குவதற்க்கும், மோஷம் என்னும் வீடு பெறவும் இந்த மனம் தான் காரணம். நாம் நமது மனம் எப்படி இருக்கவேண்டுமென நினைக்கிறோமோ அப்படி இருக்கிறதில்லை. நாம் ஒரு வஸ்துவை நினையென்றால் அது வேறு எங்கேயாவது போய் நிற்கிறது. அந்த மனம் சரி இல்லாவிட்டால் மற்ற இத்திரியங்கள் ஸெளக்கியமாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. மனம் சரியாக இருந்தால்தான் ஸகல இத்திரியங்களும் வேலை செய்யும். பைத்தியம் பிடித்தவனுக்கு மனம் இஷ்டப்படி வேலைசெய்வதில்லை. அதனால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஹிம்சை. மனம் நல்ல தன்மை குறைந்துவிட்டால் பைத்தியமாகிறது. பரமதுக்கம் உண்டாகிறது. மனம் நன்றாக இருந்தால் பரமசாந்தி உண்டாகிறது. நம்முடைய மனதை உத்தம பார்த்திரத்தில் வைத்தால் உத்தமமான இன்பம் உண்டாகும். உத்தம பதார்த்தம் எது. பரமேச்வரன்தான் உத்கிருஷ்டமானது வஸ்து. அவருடைய பாதம் நமக்கு உத்கிருஷ்டமானது. அந்தப் பாதத்தில்தான் மனதை வைக்க வேண்டும். ஹ்ருதய கமலத்தில் தியானம் செய்யவேண்டும். மனம் கெட்டுப்போய் எவ்வளவோ பாபம் செய்திருக்கிறோம். குழந்தையாக இருந்த்திலிருந்து ஈச்வர தியானம் செய்திருந்தால் இவ்வளவு நாள் எவ்வளவோ பாபம் போயிருக்கும். இப்பொழுதோ மேலும் மேலும் பாபத்தைச் செய்துகொண்டிருக்கிறோம். எத்தனை நீட்கள் ஈச்வரசரணாரவிந்த தியாநம் செய்கிறோமோ, அவ்வளவு நாட்களும் நமமுடைய கார்யத்தை நாம் பார்த்தவர்களாகிறோம். இந்த ஜன்மத்தை எடுத்தற்க்குப் பலன் அதுதான்.