சன்யாஸிகளின் சாதூர்மாஸ்யம்
ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் வழக்கப்படி சில வகையான தர்மங்கள் அல்லது பொறுப்புகள் உண்டு. அதேபோல் சன்யாசிகளுக்கும் பொதுவாக அவர்கள் ஒரே இடத்தில் வெகுநாட்கள் தங்கக்கூடாது. ஏன் என்றால் பல இடங்களுக்கு சென்று அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை செம்மைப் பெற, அவர்களுக்கு பல தர்மங்களை போதித்து, அறவழியில் செல்ல சாஸ்திரத்தில் கூறியபடி போதிக்க வேண்டும்.
இப்படி அவர்கள் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போய்க்கொண்டே இருப்பதால், அவர்களுக்கு உண்டான தர்ம வழியில் சென்று ஆத்ம ஞானம் பெற்று அதனால் மூலத்தின் உட்பொருளை அறிந்து கொள்ள நேரம் இல்லாமல் போகிறது. அதனால் அவர்கள் ஆனி பௌர்ணமி முதல் தொடங்கும் சாதுர்மாஸ்ய காலத்தில் ஒரே இடத்தில் தங்கி அவர்களுடைய பூஜை, தபஸ், தியானம் முதலியவற்றை ஒருமைப் பாட்டுடன் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
சன்யாஸ ஆஸ்ரமம் என்பது ஒரு அஹிம்ஸை வழியே ஆகும். அதாவது எந்த உயிரினங்களுக்கும் இடையூறு விளைவிக்காமல் இருப்பது சாதுர்மாஸ்ய காலம். மழைக்காலம் என்பதால், நிறைய உயிரினங்கள் வெளியே வரும். அப்போது அவர்கள் ப்ரயாணம் மேற்கொண்டால் மிகச்சிறிய கண்களுக்கும் தெரியாத உயிரினங்களுக்கு துன்பம் ஏற்பட நேரிடும். அதனால்தான் சாதுர்மாஸ்ய சங்கல்பத்தில், பக்தர்களிடம் மேற்கூறிய காரணங்களைக் கூறி உங்களுக்கு அதாவது பக்தர்களுக்கு அசௌகர்யம் இல்லாமல் இருந்தால், நான் இந்த இடத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கப்போவதாக அறிவித்து அவ்விடத்தில் தொடர்ந்து இருப்பார்கள். பக்தர்களும் மகிழ்வடைந்து சாதுர்மாஸ்யத்துக்குத் தேவையான அனைத்து கைங்கர்யங்களும் செய்து தருவதாக உறுதி அளிப்பார்கள்.
சாதுர்மாஸ்யம் அனுஷ்டிப்பது என்பது இந்து மதம், புத்த மதம், ஜெயின மதம் ஆகியவற்றுக்குப் பொதுவானது. 2000 வருஷம் முந்தய அசோகர் காலத்து கல்வெட்டுகளில் சாதுர்மாஸ்யம் என்பது 4-மாதங்களுக்கு அனுஷ்டித்து வந்ததாக தெரிய வருகிறது. ஆனால் அது எப்போது 4-பக்ஷங்களாக குறைக்கப்பட்டது என்பது தெரியவில்லை. தவிர "பக்ஷ£வை மாஸா" என்றும் ஒகு வாக்யம் இருக்கிறது. அதன்படி பார்த்தால் 4 பக்ஷங்கள் அல்லது 2 மாதங்கள் தான் வருகின்றன.
ஒவ்வொரு சன்யாஸியும், வியாச பூஜைக்கு பிறகு சாதுர்மாஸ்ய விரதத்தை சங்கல்பம் செய்து கொள்கிறார்கள். எப்படி உபாகர்மா என்பது ப்ரம்மச்சாரி மற்றும் க்ருஹஸ்தர்களுக்கு முக்கியமோ அதேபோல் வியாஸ பூஜை, சன்யாஸிகளுக்கு முக்யமானது. எப்படி உபாகர்மா அன்று வியாஸரை வேத மந்த்ரங்களை ஜபித்து ரிஷிகளின் அருளை வேண்டுகிறோமோ, அதேபோல் வேதவியாஸரில் ஆரம்பித்து ஆத்மஞானம் பெற உதவும் ஏனைய ரிஷிகளின் அருளை வேண்டி தியானம்,
யோகம் மற்றும் ஆத்ம விசாரத்தை ஆரம்பிக்கிறார்கள்.
வியாஸ பூஜையன்று வியாஸரை மட்டும் பூஜை செய்வதில்லை. ஞான மார்கத்தின் ஆமூல புருஷர்கள், அவர்கள் உள்ளடக்கிய ஐந்து மூல புருஷர்கள் ஒவ்வொருவருக்கும் பூஜை செய்யப்படுகிறது. அவர்களின் விபரம்,
| மூல புருஷர் | அவர்கள் உள்ளடக்கிய ஐந்து மூல புருஷர்கள் |
| கிருஷ்ண பஞ்சகம் | ஸ்ரீ கிருஷ்ணர், வாசுதேவர், பிரத்யும்னர், அனிருத்தர், சங்கர்ஷணர் |
| வியாஸ பஞ்சகம் | ஸ்ரீ வியாஸர், ஸ்ரீபைலர், ஸ்ரீ வைசம்பாயனம், ஸ்ரீ ஜைமினி, ஸ்ரீ சுமந்து, |
| ஸ்ரீ பகவத்பாத பஞ்சகம் | ஸ்ரீ சங்கர பகவத்பாதாள், ஸ்ரீ பத்மபாதாச்சார்யாள், ஸ்ரீ சுரேஷ்வராச்சார்யாள், ஸ்ரீ ஹஸ்தாகமலாச்சார்யாள், ஸ்ரீ தோடகாச்சார்யள், |
| ஸ்ரீ ஸனகாதி பஞ்சகம் | ஸ்ரீ ஸனகர், ஸ்ரீ சனாதனர், ஸ்ரீ சனந்தனர், ஸ்ரீ சனத்குமாரர், ஸ்ரீ சனத்சுஜாதா |
| ஸ்ரீ திராவிட பஞ்சகம் | ஸ்ரீ திராவிடாச்சார்யார், ஸ்ரீ கௌடபாதாச்சார்யார், ஸ்ரீ கோவிந்த பகவத்பாதாச்சார்யார், ஸ்ரீ சங்க்ஷேபகாச்சார்யார், ஸ்ரீ விவரணாசார்யார், |
| ஸ்ரீ குரு பஞ்சகம் | ஸ்ரீ குரு, பரமகுரு, பரமேஷ்டி குரு, பராபரகுரு, மற்றும் சம்பிரதாயத்தில் வந்தவர்கள். |
இவர்கள் மட்டும் அல்லாமல், ஸ்ரீ சுகர், ஸ்ரீ நாரதர், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ கணபதி, ஸ்ரீ க்ஷேத்ரபாலர்கள், ஸ்ரீ ஸரஸ்வதி, ஸ்ரீ இந்திரன் முதலான பத்து திக்குகளின் பாதுகாவலர்கள் பூஜிக்கப்படுகிறார்கள். கடைசீயாக சுத்த சைதன்யரை சாலிகிராமத்தில் ஆவாஹனம் செய்து, சமஸ்டியாக பூஜை செய்யப்படுகிறது.
1957-ம் வருடம் சென்னையில் ஸ்ரீ மஹா பெரியவாள் செய்த அருள் உரையிலிருந்து தொகுக்கப்பட்டது.