நவீனர்களின் கருத்து* : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

நம் மதத்தில் பிராம்மணர், க்ஷத்ரியர், வைச்யர், சூத்ரர் என்று நான்கு வர்ணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த ‘வர்ண’ங்களை நாம் ‘ஜாதி’ என்கிறோம்.

வாஸ்தவத்தில் ஜாதி வேறே, வர்ணம் வேறே. வர்ணங்கள் மேலே சொன்ன நாலுதான். இதற்குள்ளேயே ஒவ்வொன்றிலும் பல ஜாதிகள் இருக்கின்றன. ப்ராமண வர்ணத்திலேயே ஐயர், ஐயங்கார், ராவ் என்று பல ஜாதிகள் இருக்கின்றன. நாலாம் வர்ணம் ஒன்றிலேயே முதலியார், பிள்ளை, ரெட்டி, நாயக்கர், நாயுடு, கவுண்டர், படையாட்சி என்கிற மாதிரி எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன.

இருந்தாலும் பொது வழக்கில் வர்ணம் என்று சொல்லாமல் ஜாதி என்றே சொல்லுவதால், நானும் இந்த இரண்டிற்கும் வித்யாஸம் பார்க்காமல் வர்ணத்தையும் ஜாதி என்றே சொல்லிக்கொண்டு போகிறேன்.

நான்கு ஜாதிகளுக்கும் (அதாவது வர்ணங்களுக்கும்) சாஸ்திரங்களில் வெவ்வேறு விதமான கர்மாக்களையும் ஆசாரங்களையும் விதித்திருக்கிறது. இதனால் ஒரே மதஸ்தரிடையிலேயே ஏகப்பட்ட வித்தியாஸங்கள் உள்ளன. ஒருவர் சமைத்ததை இன்னொருத்தர் சாப்பிடக்கூடாது. ஒருத்தரோடு ஒருத்தர் கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது. ஒருவர் செய்யும் காரியத்தை மற்றொருவர் செய்யக்கூடாது என்று இப்படி எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கின்றன.

நாலு வர்ணம் என்று பெயரளவில்தான் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான பிரிவுகள் இருக்கின்றன. இன்னும் பல பிரிவுகள் உண்டாகிக் கொண்டே இருக்கின்றன. இப்படி, இந்த ஹிந்து மதமானது ஒரு விசித்ரமான மதமாக இருக்கிறது.

லோகம் முழுவதற்கும் பொதுவாக இருந்தது இந்த ஒரே மதம் என்று அவ்வளவு பெருமைப்படும் படியான நம் மதத்தில் இப்படி ஒன்றுக்கொன்று ஒரே வித்தியாசமாக இருப்பதைப் பார்த்தால் இந்தக் காலத்தவருக்கு ரொம்பச் சிறுமையாக, அவமானமாக இருக்கிறது. மற்ற மதங்களிலும் இதிதைச் செய்ய வேண்டும் என்ற விதிகளும், இதிதைச் செய்யக்கூடாது என்ற நிஷேதங்களும் உண்டு. ஆனால் அந்த மதங்களிலுள்ள எல்லாருக்கும் ஒரே விதமான விதிகள், ஒரே விதமான வில‌க்குகளே உண்டு. Ten Commandments [பத்துக் கட்டளைகள்] என்றால் அது கிறித்துவ மதத்தில் அத்தனை பேருக்கும் தான் பொது. சிலருக்கு அவை உண்டு, சிலருக்கு இல்லை என்று இல்லை. குரான் விதிகளும் இப்படியே. நமக்குள்ளேயோ ஒரே மதமாக இருந்தாலும் விதிகளும் நிஷேதங்களும் பல வகைகளாக இருக்கின்றன. ஒரு காரியத்தை ஒருவன் செய்தால் தர்மமாகிறது. அதையே வேறொருவன் செய்தால் அதர்மம் என்கிறோம். ஒருத்தன் பூணுல் போட்டுக் கொண்டு வேதம் சொன்னால் தர்மம், இன்னொருத்தன் இதைப் பண்ணினால் அதர்மம். வேதம் சொல்கிறவன் ஸ்நானம் பண்ணி வயிற்றைக் காயப்போடாவிட்டால் அதர்மம். மற்றவன் ஸ்நானம் பண்ணவேண்டுமென்றில்லை. உபவாஸமிருக்க வேண்டும் என்றில்லை. இப்படி ஏகப்பட்ட வித்தியாசங்களோடும் நம் மதம் உயிரோடிருப்பதை பார்த்தால் ஒன்று தோன்றுகிறது. ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தை சொல்லுகிறார். நாமெல்லாம் மரணமடைவது ஆச்சரியமில்லை. இந்த உடம்பில் ஒன்பது ஓட்டைகள் இருந்த போதிலும் அவற்றின் வழியாக உயிரானது வெளியே போகாமல் நிற்கிறதே. அதுதான் பெரிய ஆச்சரியம். என்று அவர் சொல்லுகிறார்.

நவத்வாரே சரீரே (அ)ஸ்மின் ஆயு: ஸ்ரவதி ஸந்ததம் |

ஜீவதீத்யத்புதம் தத்ர கச்சதீதி கிம் அத்புதம் ||

அதைப்போலப் பலவிதமான ஸந்தேஹங்களுக்கும் வித்தியாசங்களுக்கும் இடமான இந்த மதமானது எவ்வளவோ யுகங்களாக இன்னும் உயிருடன் இருக்கிறதே என்பதை நினைத்துதான் ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது!

வேதத்தை விட்டால் சிலருக்குப் பாபம், வேதம் சொன்னால் சிலருக்குப் பாபம் என்பதைப் போல இவ்வளவு வித்தியாசங்களும் பக்ஷபாதங்களும் ஏன் நம் மதத்தில் மட்டும் இருக்கின்றன என்று தோன்றுகின்றது. இந்த விஷயங்களையெல்லாம் நாம் சொல்லிக் கொள்வது அவமானமாக இருக்கிறதென்று நாம் நினைக்கிறோம். இவை தொலைந்தால் நல்லதென்று நாம் நினைக்கிறோம். இந்த வித்தியாசங்கள், பல நல்ல அம்சங்களுடைய நமது மதத்துக்குக் களங்கமாக‌ இருக்கின்றன என்று பலர் சொல்லுகிறார்கள். இப்படிப் பலபேருக்கு இந்த விஷயங்கள் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கின்றன. சில பேர் ஏதாவது தெரிந்து சமாதானப் படுத்திக் கொள்கின்றார்கள். சில பேர் சில ஸமயங்களில் இந்த மாதிரி வித்தியாசங்களைப் பார்த்து ஆத்திரமடைந்து நாஸ்திகர்களாகி, இவற்றை எடுத்துக் காட்டி உறுத்தி உறுத்தி சொல்கின்ற போது அப்படிப் போகாத நமக்கு மனஸ் ரொம்பவும் கஷ்டப்படுகிறது.

இம்மாதிரி ஸமயங்களில் உள்ளூர மதாபிமானம் உள்ளவர்கள், “இந்த வர்ண தர்மத்தை மட்டும் எடுத்துப் போட்டுவிட்டு, எல்லா ஜாதிகளையும் ஒன்றாக்கிவிட்டு, மற்ற மதஸ்தர்களைப் போலவே நாமும் ஆகிவிட்டால் நன்றாக ஆகிவிடும்” என்கிறார்கள். “வேதமோ, ஈச்வர ஆராதனமோ எல்லாவற்றையும் எல்லோருக்கும் ஒன்றாக்கி விடலாம்; வெவ்வேறு ஆசாரம், அநுஷ்டானம் என்பதே வேண்டாம்” என்கிறார்கள். இன்னும் கொஞ்சம் அதிகமாகப்போய் “நம்முடைய ரொம்பவும் ஆதிகாலத்திய பூர்விகர்கள் கொள்கையே இதுதான். ஜீவாத்மாவும் பரமாத்மாவுமே ஒன்று என்று சொன்ன நம் மூல புருஷர்கள் ஜீவர்களுக்குள்ளேயே இத்தனை பேதம் சொல்லியிருப்பார்களா? அவர்களும் ஸரி, கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் ஸரி, ஜீவர்கள் தங்கள் தங்கள் குணத்துக்கு ஏற்றபடி தொழில்களை நாலுவர்ணமாகப் பிரித்துக்கொண்டு செய்வதைத்தான் சொன்னார்களே தவிர பிறப்புப்படி ஜாதித்தொழில் வருவதாகச் சொல்லவில்லை” என்றெல்லாம் சொல்லி நம் மதத்தில் களங்கம் என்று இவர்களுக்குத் தோன்றுகின்ற பாரம்பரியமான ஜாதிமுறையே மூலத்தில் நம் மதத்தில் இல்லாமல், பிற்பாடு சேர்ந்து விட்ட தப்பான விஷயந்தான் என்கிறார்கள்.

இதையெல்லாம் இப்போது கொஞ்சம் அலசி, ஆலோசித்துப் பார்ப்போம்.


* ஜாதி முறைகளை ஏற்படுத்தும் வர்ண தர்மம் குறித்த விரிவான விளக்கத்தை “தெய்வத்தின் குரல்” முதற் பகுதியில் “வைதிக மதம்” என்ற பிரிவிலுள்ள உரைகளில் காண்க. இவ்விரண்டாம் பகுதியிலும் இது தொடர்பான விவரங்கள் விரவி வந்துள்ளன.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is பிறகு போகவே முதலில் வேண்டும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வேதம், கீதை இவற்றின் கருத்து
Next