சென்னையில் மஹாஸ்வாமிகளின் 1122வது ஜெயந்தி விழா

ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் பொன்மொழிகளில் - சில துளிகள்

2.6.15 - பாரதீய வித்யா பவன், மைலாபூர், சென்னை
Report by ந. சுப்ரமணியன்

இந்த நிகழ்ச்சி ரிக், யஜுர், ஸாமம் என்ற மூன்று வேதங்களில் உள்ள பிரார்த்தனைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. ரிக் வேதத்திலிருந்து ஸரஸ்வதி ஸுக்தம், ஐக்யமத்ய ஸூக்தம் முதலியவைகளும், யஜுர் வேதத்திலிருந்து ஸவிதா பித்ரு என்ற மந்திரங்களும் ஸாம .வேதத்திலிருந்து நான்கு கடல்களை எப்படி தாண்டவேண்டும் என்பது பற்றிய மந்திரங்களும் இங்கு சொல்லப்பட்டன.
ரிக் வேதத்தில் எந்த பூமியில் நாம் வசிக்கிறோமோ அந்த நிலம், நீர், காற்று முதலியவைகள் நல்ல முறையில் இருக்க வேண்டும். அதற்கு நாம் எல்லோரும் ஒற்றுமையாகவும், ஒருமித்த மனத்துடனும் எல்லா காரியங்களையும் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
யஜுர் வேத்த்தில் ஸவித்ரு, அதாவது நல்ல புத்திதான் அடிப்படை. நல்ல புத்தியுடன், நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்யம் என்று வேண்டுதல் செய்யப் பட்டது. அதனுடன் நல் வாழ்க்கை வாழ்வதற்கான வழி முறைகளும் கூறப் பட்டது.
ஸாம வேதத்திலிருந்து .நாலு கடல்களான கோபம், கஞ்சத்தனம், அக்கரையின்மை, உண்மைக்கு மாறானவை இவைகளை எப்படிக் கடப்பது என்ற மந்திரங்கள் சொல்லப் பட்டன. காலத்தைக் கடப்பது, கடலைக் கடப்பது, கஷ்டங்களைக் கடந்து சுகத்தை அடைவது என்று கேட்டிருக்கிறோம். ஒரு கடலைக் கடப்பதற்கு கப்பல் வேண்டும். ஆனால் இந்தக் கடல்களை எப்படிக் கடப்பது?
இந்தக் கடல்களைத் தர்மத்தின் மூலமாகத்தான் கடக்க முடியும். கோபம் – இதை சாந்தத்தின் மூலமாகக் கடக்க முடியும். கஞ்சத்தனம், இது பல விதமானது. இதை தானத்தின் மூலமாக, அதாவது கொடுப்பதின் மூலமாகவும், அக்கரையின்மையை அக்கரை மூலமாகவும் உண்மைக்கு மாறான விஷயத்தை உண்மையாலும் கடக்க முடியும். அக்கரை என்பது எது செய்தாலும் பாங்காக, பொறுப்பாக, அழகாக செய்வது. செய்யும் தொழிலை நேர்த்தியாக, தொழில் நேர்மையுடன், தொழில் தர்மத்திலிருந்து விலகாமல் செய்ய வேண்டும்..தானம் வளர வேண்டும், தர்மம் வளர வேண்டும். உண்மை வளர வேண்டும்.
ஸத்யமேவ ஜயதே என்பது நமது நாட்டின், அரசாங்கத்தின் ஸ்லோகமாக (லோகோவாக) இருக்கிறது. இது உபநிஷத் வாக்யம். ஜயதே என்றால் வெற்றி. ஆசார்யாள், சங்கர பகவத் பாதாள், ஜயதே என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லும் பொழுது உண்மைக்கு வெற்றியோ தோல்வியோ கிடையாது, சத்யத்தை உடையவர்கள் ஜெயிக்கிறார்கள் என்றார்.
இன்று பெரியவாளின் நூற்றி இருபதாவது ஜெயந்தியை, அதாவது நினைவு கூறும் நாளாக்க் கொண்டாடுகிறோம். நினைவு கூறும் கொண்டாட்டம் என்றால் இன்னும் பலகாலும் நமது நினைவில் இருக்க வேண்டும். இந்த பாரதீய வித்யா பவனில் இந்த நினைவு நாள் நிகழ்ச்சி பல வருஷங்களாக நடந்து வருகிறது.
பால்கிவாலா, பராசரர் முதலியவர்கள் சேர்ந்து வேத பாட நிதி என்று ஆரம்பித்து வயதான வேத வித்வான்களுக்கு சன்மானம் கொடுப்பது, பென்ஷன் கொடுப்பது என்று பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறார்கள்.
பல்வேறு வழிபாட்டு முறைகள், அவைகளில் குழப்பங்கள் என்று இருந்த காலத்தில் ஆசர்யாளான, சங்கர பகவத் பாதாள், தர்மத்தின் மூலமாக, நமது கலாசாரத்தின் மூலமாக, வேதத்தைத் தழுவிய மரபுக்கு மாறாத, இயற்கையாகவே நமது தேசத்தில் உண்டான ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு ஷண்மத ஸ்தாபனம் செய்தார். தார்மீகமான ஒற்றுமையே வேதத்தின் கருத்து. ஆசார்யாள் பிரியத்தாலும், உபதேசத்தாலும், வாதத்திறமையாலும், ஸ்தோத்திரங்களின் மூலமாகவும் ஸநாதன தர்மத்தைப் பிரசாரம் செய்தார்.
நமது பெரியவா (ஸ்ரீ சந்திர சேகர ஸரஸ்வதி ஸ்வாமிகள்) 1932-33 சென்னையில் பல காலம் தங்கி பிரசங்கம் செய்தார். அவற்றை கலைமகள் பத்திரிக்கையாளர்கள் ஒரு புத்தகமாக ஏற்கனவே பதிப்பித்து இருந்ததை இப்பொழுது மறு பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். பழக்க வழக்கங்கள் மாறுகிறது. மொழி நடை மாறுகிறது. இந்தக் காலத்து ஜனங்கள் புரிந்து கொள்ளுமாறு அநுபந்தம் ஒன்றும் சேர்த்து வெளியிடப் பட்டிருக்கிறது.
முந்திய யுகங்களில் பகவான் அவதாரம் செய்தார். கலி யுகத்தின் பல்வேறு குழப்பங்கள் நடுவே அவ்வப் பொழுது நமது தர்மத்தை நிலை நாட்டுவதற்காக, சங்கர பகவத் பாதாள், ரமானுஜர், மாத்வசாரியார் என்று பல யுக புருஷர்கள் தோன்றினார்கள். எப்படி ஆசாரியாள் நமது தேசத்தை ஸநாதன தர்மத்தின் மூலமாக ஒன்று படுத்த தோன்றினாரோ அதேமாதிரி நமது பெரியவா நூற்றி இருபது வருஷங்களுக்கு முன்பு தோன்றினார். சின்ன வயதிலேயே, மைனராக இருக்கும் பொழுதே, பதவியை ஏற்றுக் கொண்டார். பெரும் பொறுப்பை மேற்கொண்டார். பொறுப்பு என்று வரும் பொழுது வேண்டாம் என்று சொல்ல முடியும். ஆனால் அப்படி இல்லாமல் பல்வேறு சிரமங்களுக்கு நடுவே, பதவிக்கு ஏற்பட்ட, ஞான பரம்பரையை நிலை நாட்ட வேண்டிய, பொறுப்பை எடுத்துக் கொண்டார். “அத்ரைவர்க்கிக சம்பிரதாய பதவீ ஸாம்ராஜ்ய சிம்ஹாஸனே”, அதாவது, தர்மம், அர்த்தம், காமம், என்ற மூன்றைத் தாண்டிய மோக்ஷ சாதனமான ஞான மார்க்கத்தை, ஞான பரம்பரையை, நிலை நாட்ட வேண்டிய பொறுப்பு அவருக்கு வந்தது.
இந்த உலகம் நல்வழியில் செல்ல வேண்டுமென்று சதா சர்வ காலமும், பூஜை, புனஸ்காரம், தபஸ், ஞானம், பிரசாரம் என்று ஈடு பட்டிருந்தார். வேறு மதத்தினருக்கும், மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக் காட்டாக இருந்தார். அந்தக் காலத்திலிருந்த வெள்ளைக் கார தஞ்ஜாவூர் கலெக்டர் இவரைப் பற்றிக் கேள்விப் பட்டு இவரை வந்து தரிசித்தார். பால் ப்ரெண்டன் இவரிடம் வந்து உலக அமைதிக்கு வழி என்ன என்று கேட்டபோது மனதிலே மாறுபாடு வர வேண்டும் அதுவே வழி என்று கூறினார்.
கர்மானுஷ்டானங்களை ஒழுங்காக, வேதங்களில் சொல்லியபடி செயவதற்கு வழி செய்தார். பஞ்ஜாப் மாகாணத்தில் சர்தார்களில் குடும்பத்திற்கு ஒருவர் மதத்தைக் காப்பதற்காக வரவேண்டும் என்று சொன்னார்களோ அதே போல குடும்பத்திற்கு ஒரு குழந்தையாவது வேத அத்யயனம் செய்ய வர வேண்டும் என்று பிரசாரம் செய்தார். அதன் படி பலர் வேதபாடசாலையில் சேர்ந்தார்கள். வேத காலத்தில் எவ்வாறு முறைப் படி வேதம் கற்றுக் கொடுக்கப்பட்டதோ அதே தரத்துடன், அநுஷ்டானத்துடன், சாஸ்திர சம்ப்ரதாயம் தவறாது கட்டுப்பாடுடன் வேதம் சொல்லிக் கொடுக்க வேத பாடசாலைகளை ஏற்படுத்தினார். அண்ணாத்துரை ஐயங்கார் மூலமாக வேத ரக்ஷண நிதி (VRNT) என்ற ஒரு ட்ரஸ்டை ஆரம்பித்து வேதம் படித்தவர்களுக்கு சன்மானம், வேதத்தில் பரீக்ஷைகள், அவற்றில் தேரினவர்களுக்கு சர்டிபிகேட்கொடுப்பது, வயதான வேத விற்பன்னர்களுக்கு பென்ஷன் என்று பல விதமான் காரியங்களைச் செய்தார். திருப்பதி தேவஸ்தானத்தின் மூலமாக வேதம் படித்தவர்க்ளுக்கு உத்யோகம் கிடைக்க வழி செய்தார். சம்சாரிகளின் லௌகீகமான கஷ்டங்களை உணர்ந்து அவற்றை நிவர்த்தி செய்வதில் முனைந்தார். இவ்வாறான பல விதமான முயற்சிகளின் மூலம் இந்த நாட்டை வேத பூமியாக, கர்ம பூமியாக சபலமாக்கிக் காட்டினார்.
ரிஷி பரம்பரையை மறுபடி உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி அனைவருக்கும் தர்மத்தோடும், பக்தி மார்க்கத்தோடும் தொடர்பு ஏற்பட வேண்டும் என்று திருப்பாவை, திருவெம்பாவை, விஷ்ணு ஸஹஸ்ரநாமம், லலிதா. ஸஹஸ்ரநாமம் முதலிய ஸ்தோத்திரங்களை பிரபலப் படுத்தினார். சம்ஸ்கிருத கல்வெட்டுக்களையும் மற்ற மொழிகளில் உள்ள புராதன கல்வெட்டுகளையும் ஆராய்ச்சி செய்வதற்கு உத்தங்கிடா ட்ரஸ்டை ஆரம்பித்து அதன் மூலமாக நமது நாட்டின் கல்வெட்டுக்கள் பற்றிய பல புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
சாஸ்திரம், சரித்திரம் பற்றிய விஷயங்களைப் பற்றி ஜனங்கள் தெரிந்து கொள்வதற்காகவும் அவர்களை கலாசாரத்தின் ஒருமித்த உருவாக ஆக்கவும் பல விதமான முயற்சிகள் செய்தார். சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியர்கள், கிராமக் கோவில் பூசாரிகள், ஆகியவர்களுக்கு ஆதரவு கொடுத்தார். அவர்களுக்காக பாடசாலைகள் ஏற்படுத்தினார். இவை போன்ற சேவைகளை சுரு சுருப்போடும், அக்கரையோடும், புனிதத் தன்மை கெடாமல், பாரம்பரியம் மாறாத பிராசீனமான கலாசாரத்தோடும் செய்தார். அதே சமயத்தில் சமுதாய சேவைகளையும் செய்து வந்தார். ராமேஸ்வரத்தில் பெரும் புயல் வந்த பொழுது அன்னதான சேவை செய்தார். சங்கரதேவா நேத்ராலயா, குழந்தைகளுக்காக சைல்ட் ட்ரஸ்ட் மற்றும் பல ஹாஸ்பிடல்களை ஆரம்பித்து வைத்தார்.
ஸமூக சேவையோடு தர்மத்தை எந்த அளவுக்கு முன்போல பலமானதாகவும், பரந்ததாகவும் ஒற்றுமையானதாகவும் ஆக்க முயற்சிகள் செய்தார். அனைவரும் நவீனத்தை வரவேற்று ப்ராசீனத்திற்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று அபிப்ராயப் பட்டார். நமது தேசத்தின் அடிப்படையான கட்டுக் கோப்பு frame work குலையக் கூடாது என்பதில் உருதியாக இருந்தார். 1927ல் காந்திஜி அவர்களுடன் பாலக்காட்டில் தேசத்தைப் பற்றிய பல விஷயங்களைப் பேசினார். என்ன பேசினார்கள் என்று தெரியாது. ஆந்திராவிலிருந்து நீலம் ராஜு சேஷய்யா என்பவர் வருஷா வருஷம் பெரியவாளின் ஜன்ம நக்ஷத்திரத்தன்று தரிசித்து காவி வஸ்திரம் சமர்ப்பிப்பார். நடிச்சே தேவுடு, (நடமாடும் தெய்வம்) என்று தெலுங்கில் பெரியவாளைப் பற்றி புஸ்தகம் ஒன்றை வெளியிட்டார். அவர் ஒரு தடவை பெரியவா சின்னக் காஞ்சீபுரத்தில் ஆனைக் கட்டி மண்டபத்தில் இருக்கும் பொழுது காந்திஜீயிடம் பேசியது பற்றி விசாரித்தார். அப்பொழுது பெரியவா அவருக்கே உரித்தான பாணியில் “அவர் இப்பொழுது இல்லை, அதனால் அதைப் பற்றிப் பேசமாட்டோம்” என்று சொன்னார். அந்த மாதிரியான ஒரு உயர்ந்த கோட்பாட்டுடன் வாழ்ந்தார்.
தேச நிர்மாணம், புனருத்தாரணம் தேசத்தைப் பற்றிய கவலையோடு பணி செய்தார். தேசப் பிரிவினை பற்றிப் பேசப் பட்ட போது அதை வரவேற்கவில்லை. 1945ல் சேலத்தில் சுகவனேஸ்வரர் கோவிலில் “இந்த தேசம் என்பது ’சந்த்ஸ்தான்’ – சான்றோர்கள் தேசமாக, வித்யாசங்கள் பல இருந்தாலும் ஒவ்வொரு சமூகத்தாரும் அவரவர் அநுஷ்டானங்களை செய்தாலும் இதை பிரிக்கக் கூடாது” என்று சொன்னார். தேசத்தின் (constitution), அரசியல் சாசனத்தில் எல்லோருக்கும் அவரவர்கள் பழக்க வழக்கங்களின்படி தனிப்பட்ட அநுஷ்டானங்களைச் செய்ய அடிப்படை உரிமை உண்டு என்ற முக்யமான பகுதியை ஏற்படுத்தினார். அதற்கான வாசகங்களையும், wordings also, கொடுத்தார்.
சன்யாஸ தர்மத்தின் கடினமான நியமங்களையும், நேமங்களையும், அநுஷ்டானங்களையும், விரதங்களையும் கடைப் பிடித்தது போக, தானாகவே மேலும் பல கடினமான விரங்களையும் மேற்கொண்டார். ஐம்பதாவது வயதிலிருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் சாயந்திரத்திற்கு பிறகு ஒன்றும் எடுத்துக் கொள்வதில்லை. அப்பொழுது தேசப் பிரிவினையின் போது நடந்த சில சம்பவங்களால் மனது வருத்தப் பட்டார். அதனால் இந்த விரதத்தை ஆரம்பித்தார்.
மனது விசாலமாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், நமது நாட்டின் புனிதத் தன்மையை, தனித் தன்மையை, குடும்ப வாழ்க்கையை இழக்கக் கூடாது, தியாக சிந்தனை, சாத்வீக சிந்தனை வளர வேண்டும் என்ற உயர்ந்த தத்துவங்கள் மகான்கள், ரிஷிகள் விதைத்தவை. அவைகளை நாம் கடைப் பிடிக்க வேண்டும் என்பது அவரது கொள்கை.
எதிர்ப்புகள் இருந்தாலும், எதிர்பார்ப்புகள் இருந்தாலும், தாமதம் இருந்தாலும், தடைகள் இருந்தாலும். ஆசைகள் இருந்தாலும், அவநம்பிக்கைகள் இருந்தாலும், பல்வேறு விதமான சிரமங்களின் மத்தியில் இந்த பூமியில் பல சான்றோர்கள் பல்வேறு பிரதேசங்களில், பல்வேறு காலங்களில் தோன்றியிருக்கிறார்கள். வரலாறு காரணமாக, போட்டிகள் காரணமாக பல்வேறு சரித்திர நிகழ்வுகள் நடந்து வந்திருக்கின்றன. ஆனாலும் இந்த நாடு ஒரே தேசமாகத்தான் இருந்திருக்கிறது. பஞ்சாப், பெங்கால் மாகாணங்களில் இடர்கள் ஏற்பட்ட போது சிலர் அனைத்து மதத்தினருக்கும் உதவினார்கள் சிரம காலத்தில் உதவியவர்களுக்கு அவர்கள் எந்த மதத்தினரானாலும் சமூகம் அவர்களை சௌரவிக்க வேண்டும். பெரியவா காலத்தில் வதிகளும் இல்லை, வசதிகளை உபயோகப் படுத்த வழிகளும் இல்லை, ஆனாலும் அவர்கள் பல சமூகப் பணிகளை அயராது செய்து வந்தார். அவரவர்களை அவரவர்களது சம்பிரதாயத்தை விடாது செய்ய வேண்டும் என்று வைதீகர்கள் மூலமாகவும். ஆஸ்தீகர்கள் மூலமாகவும், ஆஸ்தி உள்ளவர்கள் மூலமாகவும் முயற்சி செய்தார். நாஸ்தீகர்களாலும் நம்பப் பட்டு, முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் ஒற்றுமையின் உருவமாக இருந்து, ஆன்மீக ரீதியாகவும், லௌகீக ரீதியாகவும் ஒரு பூர்ணப் பிரகாசமாக, “ஞான தீபேன பாஸ்வதா” என்றுபோல் எல்லோர் உள்ளத்திலேயும் ஒளிரும் ஞான தீபமாக விளங்குகின்றார்.
நமப் பார்வதீ பதயே ! ஹர ஹர மகாதேவா !
@@@@


 

மேலும் செய்திகள்