மலர் -23 துந்துபி வருஷம்: செப்டம்பர், அக்டோபர் 1982 இதழ் 1&2
சம்ஸ்கிருத இலக்கிய வானில் முழுமதியென ஒளிவிடும் உலக மகாகவிஞனான காளிதாசன் ஒரு பெரும் சிவபக்தன் என்பது, அவன் எழுதிய காவியங்களிலும் நாடகங்களிலும் அமைந்துள்ள கடவுள் வாழ்த்துப்பாக்களிலிருந்து தெளிவாகும். அவன் சிவகுமாரனான கார்த்திகேயனிடத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டவன் என்பதற்குக் குமாரசம்பவம் என்ற பெயரில் அவன் எழுதியுள்ள காவியமே பகரும்.
அவன் எழுதிய மற்றொரு தலைசிறந்த சம்ஸ்கிருத காவியம் இரகுவம்சம் என்பதாகும். அதில் இராமனுடைய முன்னோர்களைப் பற்றியும் பின் தோன்றல்களைப்பற்றியும் காவியச் சுவை நனி சொட்டச் சொட்டச் சொல்லோவியங்களாக வரைந்திருக்கிறான். இரகுவம்சத்தோன்றல்களின் சிறப்பை வருணிக்க வேண்டிய சமயங்களில், குமாரன், கவிஞனின் மனக்கண்முன் வந்து நின்று விடுகின்றான். அவன் எடுத்துக் கொண்ட கதாநாயகனுக்கேற்பப் பல கோணங்களில் அவன் சரவணபவனாகவும், குகனாகவும், சண்முகனாகவும் தோற்றமளிக்கின்றான். அவ்வச் சூழ்நிலைகளில் கவிஞன் எப்படி, கந்தனை-கார்த்திகேயனை-சிவன் மைந்தனைக் கொண்டுவந்து நிறுத்துகிறான் என்பதைப் பார்ப்போம்.
’உவமையில் ஒப்பற்றவன் காளிதாசன்’ என்பது கவியுலக வழக்கு. ஒருசில சான்றுகளை, எடுத்துக்கொண்ட தலைப்பின்கீழ் ஆராய்வோம்.
இரகுவம்சத்தின் இரண்டாவது சருக்கத்தில் ஒரு காட்சி: திலீப மாமன்னன் வசிஷ்ட குருவை அடைந்து புத்திரப்பேறில்லாத தனக்கு அப்பேற்றினை அருளவேண்டுகிறான். வசிஷ்டரும் தனது பசுவிற்கு பணிவிடை செய்யச் சொல்கிறார். ஒருநாள் பசுவுடன் காட்டு வழியே அதைச் ஓட்டிச் செல்லும்போது ஒரு சிங்கம் எதிரே தோன்றுகிறது; வாய் திறந்து பேசுகிறது. அப்பசுவைத் தான் உண்ணப் போவதாகச் சொல்கிறது.
அப்படிச் சொல்லும்போது, ’தான் சிவ கணத்தில் ஒருவனான கும்போதரன்’ என்றும், பக்கத்திலுள்ள தேவதாரு மரத்தினிடத்தில் சிவனுக்குப் புத்திரவாத்சலயம் உண்டென்றும், சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் கந்தனிடத்தில் எவ்வளவு அன்பு உண்டோ அதற்கிணையான அன்பை இம்மரத்தினிடத்தில் அவர்கள் செலுத்துகின்றனர் என்றும், ஒருமுறை ஒரு காட்டு யானை அம்மரத்தின்மீது உரசி மேற்பட்டையைப் பெயர்த்த போது, அசுர பாணங்களால் புண்பட்ட சேனாநீ (தேவசேனைத் தலைவன்)யைக் கண்டு எப்படிக் கலங்குவாளோ, அப்படிக் கலங்கினாள் பார்வதி என்றும் கவி வருணிக்கிறார்.
சிங்கத்திடம் பசுவுக்குப் பதில் தன்னை உணவாக அர்ப்பணிக்கிறான் திலீபன். அவனது பக்தியை மெச்சிப் பாராட்டி மறைகிறது சிங்கம். நாளடைவில் சுதட்சிணை கரு தருக்கிறாள். ’அக்கரு எது போல் இருக்கிறது? ஈசனின் தேஜசான இறைவனின் தீப்பொறிகள் ஆறும் குளிர்ந்த புனிதமான கங்கை நீரில் சேர்ப்பிக்கப்பட்டபோது எப்படி இருந்ததோ, அப்படி இப்புனிதவதியின் கருவில் திருவாய் இருந்தானாம் பிறக்கப்போகிற ரகு’ என்று கவிஞன் வருணிக்கிறான். அதே சருக்கத்தின் முடிவில் திலீபனுக்கும் சுதட்சிணைக்கும் பிறந்த ரகுவின் பெயரைத் தாங்கிய இவ்வம்சமே ரகுவம்சம் என்று கொண்டாடப்படுகிறது. இவர்கள் புத்திரப்பேற்றினால் பெற்ற இன்பம் எத்தகையது என்பதை மூன்றாவது சருக்கத்தில் கூறும் போது, உமையும் இடபக்கொடியோனும் சரஜன்மாவை (சரவணனை)ப் பெற்றபோது எத்தனை இன்பத்தை நுகர்ந்தார்களோ அதற்கொப்பான இன்பத்தைத் துய்த்தார்கள் என்கிறான்.
ரகு, குமரனாக வளர்கிறான். அனைவரையும் வென்று போரில் வெற்றிக்கொடி நாட்டுகிறான். இந்திரனோடும் போரிடுகிறான். அப் போரில் அவன் காட்டிய வீரச்செயல் சிவகுமாரனின் வீரச்செயலுக்கு ஒப்பானதென மூன்றாவது சருக்கத்தில் குறிப்பிடுகிறான் கவிஞன். குமார விக்கிரமன் என்று போற்றப்படுகின்றான் ரகு.
காலப்போக்கில் ரகுவிற்கு ஒரு புதல்வன் பிறக்கிறான். பிராம்ம முகூர்த்தத்தில் பிறந்த அவனுக்கு அஜன் எனப் பெயரிடுகின்றனர். அவனும் சிவகுமாரனை ஒத்தவன் என்றே குறிப்பிடுகிறான் கவிஞன். காளிதாசனுக்கு வேறொருவனை உவமைகாட்டத் தோன்றவில்லை. இது ஐந்தாவதாக வருகின்ற உவமை.
ஆறாவது சருக்கத்தில் இந்துமதி சுயம்வரம் வருணிக்கப்படுகிறது. விதர்ப்ப வேந்தனான போஜராஜன், அஜன் அமருவதற்காக ஓர் ஆசனத்தைத் தருகிறான். அவ்வாசனம் ரத்தினங்கள் பதிக்கப்பெற்றும், நீலம், மஞ்சள் முதலான வர்ணங்களோடு கூடிய ரத்தினக் கம்பளத்தால் அலங்கரிக்கப்பட்டும் இருக்கிறது. அதில் கம்பீரமாக வீற்றிருக்கிறான் அஜன். இக்காட்சி கவி காளிதாசனின் மனத்திரையிலே மற்றொரு காட்சியைத் தோற்றுவிக்கிறது. அக்காட்சி மயில்மீதிவர்ந்து எண்டிக்கும் விளையாடும் நாதனான குகன் அல்லது வேறு யாராக இருக்கமுடியும் குமாரதாசனான காளிதாசனுக்கு? அவன் அகத்திரையில் பச்சை மயில் வாகனமும் திண்டோளும், அருள் விழியும், திருமுடியும் தோன்றுகின்றன. வண்ணத்தோகையை விரித்தாடும் மயூரத்தின் முதுகில் அமர்ந்துள்ள குகனை இங்கே உவமை காட்டுகிறான் கவிஞன்.
தசரதன் பட்டத்திற்கு வருகிறான். ரகு வம்சத்தினரின் ஆட்சி மேலும் இப்போது சிறப்பெய்துகிறது. கிரௌஞ்ச கிரியைத் துளைத்த குமாரனின் பராக்கிரமத்தை நினைவு கூர்கிறான் கவிஞன். தசரதனின் பராக்கிரமத்தை எண்ணும்போது இயல்புதானே. பல்வேறு திசைகளிலும் தடையின்றிச் செல்லும் ரதத்தை உடையவனன்றோ தசரதன்.
வால்மீகி விரித்த ராமனின் கதையை ரகு வம்சத்தில் ஒரு சில சருக்கங்களில் சுவை மிகச் சுருக்கிக் கூறுகிறான் காளிதாசன். ராமனும் பரசுராமனும் சந்திக்கிற கட்டம். அந்திப் பொழுதில் எழுகின்ற முழுமதி போலவும், மேலைத் திசையில் மறையும் கதிரவன் போலவும் இவர்கள் முறையே காட்சியளிக்கின்றனர். அருளும் மருளும் போன்றவர்கள், பொறையும் பொறாமையும் போன்றவர்கள் இவ்விருவரும். வீரமும் சாந்தமும் ஒருங்கியைந்து காணப்படுகின்றன. இராமச்சந்திர மூர்த்தியிடத்தில், அரசூனுவினிடத்தில் (சிவகுமாரனிடத்தில்) தீமையை அழிக்கும் ஆற்றலும் பகைவனுக்கருளும் பெற்றியும் அமைந்து கிடப்பது போல என்கிறான் கவிஞன்.
இராமனுடைய குணநலன்களைக் கவி நயந்து போற்றுகிறான். எண்ணிலடங்கா அவனது நற்குணங்களில் பெற்றோரைப் போற்றும் பக்தியும் ஒன்று. சாதாரணக் குடிமகன் ஒருவனுக்குத் தாய் ஒருத்தி தான். ஆனால் இராமனுக்கோ தசரதனின் மனைவிமார் அனைவருமே தாய்மார்கள் தான். தன்னைப் பெற்றெடுத்த தாய் என்றும் தம்பியருடைய தாய் என்றும் வேறுபாட்டைக் கண்டான் இல்லை. இதற்கு உவமை கூறவேண்டுமென்று எண்ணிய காளிதாசனுக்கு எளிதாகக் கிடைத்துவிடுகிறது ஓர் உவமை.
என்றென்றும் அவன் உள்ளத்திலே குடி கொண்டிருக்கும் கார்த்திகேயன் அவனுக்குக் காட்சியளிக்கின்றான். சரவணப்பொய்கையில் சீதப்பகீரதி சென்னியிற் கொண்டுயத்த ஆறு தீப்பொறிகளும், ஆறு குழந்தைகளாகி, அறுமீன் கிருத்திகைமாதர் முலையுண்டு, விளையாடிய ஆறுமுகன் (ஷடானன்) அல்லது வேறு யார் கவிஞனின் உள்ளத்தில் இங்குத் தோன்ற முடியும்? இக்கருத்தைக் காணகிறோம் பதினான்காவது சருக்கத்தில்.
இராமனுக்குப் பின்வந்த ரகுவம்ச வேந்தர்களுள் அதிதி என்பான பலவகைகளில் சிறப்பெய்தியவன். அவனது நல்லாட்சியின் பயனாய் பூமி பல செல்வங்களைத் தந்தாள். சமாதானம், போர் முதலான அறுவகைக் குணங்களையும் அமைச்சு, படை முதலான பலன்களையும் தக்கவாறு பயன்படுத்தும் முறையினை நன்கறிந்தவன் அரசன் அதிதி. இத்தகைய அறிவும் ஆற்றலும் படைத்தவன் வேறு எவரேனும் உண்டா? பூவுலகில் எந்த வேந்தனுக்கும் இந்த அறிவும் ஆற்றலும் இருந்தாலன்றோ உவமையாகக் கூறலாம். இவ்வகையில் உவமையாக எடுத்துக் கூறத்தக்கவன் ஒருவனே. அவன் தான் ஷண்முகன். தாரகன் மாய, வீர வடிவேல் விடுத்தவனும், சூரனைச் சோதித்து வருக என்று விஜய வீரனைத் தூதாக விடுத்தவனும், சிங்கமுகனை வென்று வாகை முடித்தவனும், சூருடலங்கீண்ட சுடர் வேலவனுமான அவன் ஒருவனே கவிஞன் கருத்தில் தோன்றுகிறான்.
கோசலநாட்டு வேந்தர்களின் பெருமையை விளக்க வந்த கவிகுல திலகன் காளிதாசன். உவமையைக் கையாள்வதில் உவமையிலாக கவிஞன் என்று பெரும்புகழ் பெற்ற புலவன் காளிதாசன். உலகக் கவிஞன், சிவகுமாரனைக் கந்தன், ஈசனின் தேஜஸ், சரஜன்மா, குமாரன், குகன், நகரந்தரகரன் (கிரௌஞ்சத்தைப் பிளந்தவன்) ஹரசூனு (சிவகுமாரன்) சமூனாம்நேதா (தானைத் தலைவன்) ஷண்முகன் என்றெல்லாம் அழைத்து, பொன்னில் மணியைப் பதிப்பதுபோல் முத்துக்குமரனை உவமையில் வைத்துக் காட்டும்போது, காளிதாசனைக் குமாரதாசன் என்று ஏன் நாம் அழைக்கக் கூடாது?