வைஷ்ணவம் த்வாரகா மஹாபாரதம், ஹரி வம்சம், வாயு புராணம், பாகவதம் போன்ற கிரந்தங்களில் கிருஷ்ண பகவானின் இருப்

வைஷ்ணவம்
த்வாரகா

மஹாபாரதம், ஹரி வம்சம், வாயு புராணம், பாகவதம் போன்ற கிரந்தங்களில் கிருஷ்ண பகவானின் இருப்பிடமான துவாரகையைப் பற்றி பேசப்படுகிறது. தற்போதுள்ள துவாரகையை ஸ்ரீ கிருஷ்ணணின் பழைய தலைநகரமான துவாரகையுடன் இணைத்து உறுதிப்படுத்துகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் பழமையான செழிப்பான துவாரகை கடலில் மூழ்கிவிட்டது என்று சில புராணங்களில் கூறப்பட்டுள்ளதால், ஆராய்ச்சியாளர்களின் கூற்றை சிலர் எதிர்க்கவும் செய்கின்றனர்.

சௌராஷ்டிரத்தில் ஒக்ஹா துறைமுகத்திற்கு அருகாமையில் துவாரகை உள்ளது. இங்குள்ள த்வாரகாதீசர் கோயில் மிகவும் புகழ்வாய்ந்தது. த்வாரகாதீசர் மக்களால் அன்புடன் "ரஞ்சோத்ரை"என்றும் அழைக்கப்படுகின்றார். கோமதி கரையில் அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் அழகுவாய்ந்த சிகரத்தைக் கொண்டது. 7 நிலைகளுடன் 140 அடி உயரம் கொண்டது. 5 நிலைகள் கொண்ட மண்டபத்தில் 64 தூண்களால் தாங்கப்படும் விமானம் உள்ளது. நுட்பமான, நூதனமான, அழகான சிற்பங்கள் இங்கு செதுக்கப் பட்டு காட்சி அளிக்கின்றன.

இங்கு வரும் பக்தர்கட்கு கோகார என அழைக்கப்படும் ஐந்து சடங்குகள் விதிக்கப்பட்டுள்ளன.
1. கோமதி நதியில் ஸ்னானம்.
2. கோமயத்தை (பசுவின் சிறுநீர்) உட்கொள்ளுதல்,
3. கோதானம் அளித்தல்
4. நெற்றியில் வெள்ளை மண் கோபி சந்தனம் அணிதல்
5. கோபிநாதரின் தரிசனம்.
இவையாவும் பசுக்களுடனும், கோபிகளுடனும், கிருஷ்ணனுடனும் தொடர்பு கொண்டவை.

துறவறம் மேற்கொண்டிருந்த ஸ்ரீ சுரேஸ்வரரை, ஆதிசங்கரர் த்வாரகையில் ஒரு மடம் ஸ்தாபித்து அதற்கு அவரை முதல் பீடாதிபதியாக நியமித்தார். அந்த பரம்பரை இன்றும் தொடர்கிறது. சிறந்த பக்தர்களும் மகான்களுமான ராமானுஜர், மத்வாசார்யார், ஞானேஸ்வரர், வல்லபாசார்யார், வங்காளத்து கோவிந்தஸ்வாமி, சைதன்யர், மீராபாய் போன்றவர்கள் துவாரகை வந்து தரிசனம் செய்துள்ளனர்.