"தூங்கிக் கண்டார் சிவயோகம்"
அருளாளர்கள் அனைவருமே ஒப்பற்ற யோகிகள் ஆவர். பாச நீக்கம் பெற்றுச் சிப்பேறு அடைந்தவர்கள். உயிர் இயல்பாகவே பின்தொடரும் பற்று எனும் தன்மையைக் கைவிட்டவர்கள். இன்பத் துன்பங்களை ஒன்றாகக் கருதுபவர்கள். எப்போதும் மனக்கலக்கம் அடையாமல் நிற்பர். வறுமையில் சோர்வடைய மாட்டார்கள். செல்வத்துள் அழுந்தவும் மாட்டார்கள். நோய்கள் அவர்களை வாட்டாது. குன்றைப்போல் மனவலிமை பெற்றவர்கள். சுகங்களில் தங்கள் கருவிகளைப் பறிகொடுக்க மாட்டார்கள். ஒன்றிலும் பற்றுதல் அற்றவர்களாக இருப்பார்கள். என்றும் சிவானுபவத்தில் ஆழ்ந்து நிற்பார்கள். சிவமாம் தன்மையை அவர்கள் பெற்ற காரணத்தினால், அவர்கள் சிவத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை. "வணங்க வேண்டா, இனி வடிவை அறிந்தபின்" என்பார் திருமூலர்.
உயிரானது கருவி கரணங்களைச் சதா பயன்படுத்துகின்றது. இந்தக் கருவி கரணங்கள் யாவும் எப்பொழுதும் புறத்தே சென்று உயிருக்கு அறிவைக் கொடுக்கும். அந்த அறிவினைச் சார்ந்து, அறிவினைக் கொடுக்கும் பொருள்களில் ஒன்றிப் பொருந்தி நின்று அந்த உணர்விலே உண்மையைக் காண முயல்வது உயிரின் இயல்பாகும்.
"பற்றிடும் கருவி யாவும் படர்ந்துஉணர்வு அளிக்குங் காலை
உற்று அறிந் திடுவது ஒன்றின் உணர்வினின் உண்மையாகும்"
என்கிறது சிவப்பிரகாசம். இந்த நிலையில் உயிருக்குத்தன்னை அறியும் வாய்ப்பு இல்லை. பகலில் எரியும் விளக்கின் ஒளி போலத் தன்மை கெட்டு அடங்கி நிற்கும். இது பிறப்பின் சூழ்ச்சிக்கு முன்னம் வினைகளே காரணமாகும். வினைகளை ஈட்டியும், ஈட்டிய வினைகளின் பயன்களை நுகர்ந்தும், மீண்டும் மீண்டும் வினைகளைச் சேர்த்துக் கொள்ளுவதும் ஒருவித மயக்கத்தால் நடைபெறுகின்றது. இதனை மாயப்பிறப்பு என்பார் மணிவாசகப் பெருமான். "மாயக்குழியில் விழுவர் மனைமக்கள்" என்றார் திருமூலர்.
மயக்க நிலையாயினும் இந்த நிலை பயனற்ற நிலையாகாது. பயனுள்ள நிலையே ஆகும். கருவி கரணங்களின் சேர்க்கை இல்லாத உயிரானது கேவல நிலையில் இருளில் மூழ்கிக் கிடக்கும். தன்னுள் வீற்றிருக்கும் பரம்பொருளின் ஒளியை அறியாது, அறிய வாய்ப்பின்றி, அறிவதற்கான கருவி கரணங்களின்றி செயலற்ற நிலையில் கிடக்கும். இது விரும்பத்தகும் நிலையும் இல்லை. ஆகவே, தன்னைப் பற்றி உணர்ந்து தன் நிலையைத் தெரிந்து கொண்டு, தன்னுள் உயிருக்கு உயிராய் நிற்கும் பரம்பொருளின் தன்மையையும் உணர்ந்துகொண்டு, சிவ பரம்பொருளின் திருவடிகளில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுதலே உயிரின் இயல்பான நோக்கமாகும். பிறந்த குழந்தை தாயின் அரவணைப்பு இல்லையென்றால் வளராது போய் விடும். அதே போன்று இருளில் மாய்ந்து கிடக்கும் உயிரானது இறை அருளில் துணையின்றித் தன்னை உயர்த்திக் கொள்ள முடியாது. அந்த இறை அருளால் உயிருக்கு உடல் கிடைக்கின்றது. உடலைச் சார்ந்த கருவிகள் கிடைக்கின்றன. கருவிகள் மூலமாக உயிரினுடைய அறிவும் ஆற்றலும் சற்றுச்செயல் வடிவம் பெறுகின்றன. அறிவும் ஆற்றலும் கருவி கரணங்களின் வாயிலாகப் புறத்தேயுள்ள அனுபவங்களில் செலுத்தப்படுவதால், அந்த அனுபவங்களே முழுமையானதென உயிர் கருதும் தன்மையைப் பெறுகின்றன. இந்த நுகர்ச்சிகள் பல்வேறு நிலைகளில் நடைபெறுகின்றன.
முதலில் விழிப்பு நிலை. விழிப்பு நிலையில் எல்லாக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. விழிப்பு நிலையில் நூற்றுக்கணக்கான புறக்காட்சிகள் நம்மைத் தாக்குகின்றன. ஆனாலும், எல்லாக் காட்சிகளிலும் மனமானது தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. எந்த ஒரு பொருளின் மீது மனம் தீவிரப் பற்றினைக் கொள்கிறதோ அந்தப் பொருளின் மீது முழுமையான நாட்டத்தைச் செலுத்துகிறது. மற்றவைகளைத் தனது கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இது நம்முடைய அன்றாட அனுபவமாகும். இசை நிகழ்ச்சியில் மூழ்கி இருப்பவர்களுக்கு வேறு எந்த எண்ணங்களும் தோன்றுவதில்லை. பரம்பொருளைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்கும் யோகிகளுக்கு வேறொரு பொருளும் மனத்தில் எழுவதில்லை. விழிப்பு நிலையில் இருபத்தைந்து கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் திருமூலர். அவை ஞானேந்திரியங்கள் ஐந்து, கன்மேந்திரியங்கள் ஐந்து, வாயுக்கள் பத்து, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் நான்கு, புருடன் என்னும் கருவிகளை நடத்திச் செல்லும் ஆன்மா ஒன்று. ஆக இருபத்தைந்து ஆகும். அதாவது உயிரானது உடலை முழுமையாகப் பற்றி எல்லாவிதமான கருவி கரணங்களைப் பயன்படுத்திக் கொள்வது விழிப்பு நிலையில் ஏற்படுகிறது. தான் சார்ந்த பொருள்களின் தன்மையைப் பற்றிக் கொள்ளும் இயல்பினை உயிரானது பெற்றிருப்பதால், கருவி கரணங்கள் புறத்தே நோக்கிச் செல்லும் போது உயிரும் புறத்தே நாடிச் செல்லுகின்றது. இதை "முகக்கண்" பிரயோகம் என்பார் யோகியர். இதுவே மருள் நிலையும் ஆகும். விழிப்பு நிலையை அடுத்துக் கனவு நிலை. கனவு நிலையில் எல்லாக் கருவிகளும் செயல்படுவதில்லை. குறிப்பாக ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள் போன்றவை ஒடுங்கி நிற்கும் நிலையாகும். இந்த நிலையில் உட்கருவிகள் தொடர்ந்து பணியாற்றும். கனவில் நடப்பது உண்மை போலவே தோன்றும். விழிப்பு நிலையில் ஏற்படும் அனுபவங்களுக்கு, பல்வேறு காரணங்களால் மனம் இடம் கொடுக்காதபொழுது, கனவு நிலையில் இந்த அனுபவங்கள் மனத்திரையில் நிறைந்து மறைகின்றன.
அடுத்து ஆழ்ந்த உறக்க நிலை. இந்த நிலையில் கருவி கரணங்களின் இயக்கம் ஓடுங்கி இருந்தாலும், உயிரானது உடலில் தங்குவதற்கான செயல்களெல்லாம் நடைபெறும். ஆகவேதான், விழித்தவுடன் உயிரானது தொடர்ந்து உடலில் தங்கி அனுபவிக்கும் தன்மையைக் காணலாம்.
அதற்கடுத்தாற்போல் துரியம் என்றும் துரியாதீதம் என்றும் உள்ள நிலைகளை யோகிகள் தம்முள் பலவாறு அனுபவக்கின்றனர். மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள் துரிய நிலையிலும், துரியாதீத நிலையிலுமே நிற்பார்கள். அவர்களுடைய அறிவு உள் அறிவாகும்.
"ஐயைந்து மத்திமை யானது சாக்கிரங்
கைகண்ட பன்னான்சிற் கண்டங் கனாவென்பர்
பொய்கண் டிலாத புருடனித யஞ்சுழுனை
மெய்கண் டவனுந்தி யாகுந் துரியமே". (திருமந்திரம் - 2142)
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது. உயிரானது உடலாகிய கோட்டையிலே கருவி கரணங்களுடன் கூடியும். அவற்றை விட்டும் ஓடிக் கொண்டே இருக்கின்றது. விஷய அனுபவங்கள் கருவி கரணங்களை வலிமையாகத் தாக்குவதால், அவற்றுடன் கூடியிருக்கும் உயிரும் தன்னை உயர்த்திக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருப்பதை உணர்ந்து கொள்வதில்லை. ஐந்து இந்திரிய சக்திகள் வஞ்சனை புரிந்து, மனதிலே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி, மாயை இருளில் உயிரினைப் புகுத்தி, பரம்பொருளின் சேர்க்கையைத் தவிர்த்து வைப்பதால் ஏற்படுத் அல்லலை, துன்பத்தை மாணிக்கவாசகர் உள்ளம் உருகப் பாடுகின்றார்.
"மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி
புறத்தோல் போர்த்து எங்கும் புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கிக்" (சிவபுராணம்)
பல பிறப்புகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிறப்பில் பரம்பொருளின் பேரருள் உயிருக்குக் கிட்டுகிறது. உலகத்தை, உடலை உயிராகக் கருதுதல் மடமை என்கிற உணர்வு ஏற்படுகிறது. உடம்பு சடப்பொருள். அதற்கு அறிவு, இச்சை, செயல்கள் இல்லை. உயிருக்கே அறிவு, இச்சை, ஆற்றல் போன்றவை உண்டு. உயிர் கண்ணால் காணப்படும் பொருள் அன்று. ஆனாலும், காணப்படும் உடம்பின் செய்கைகளிலிருந்து காரணமாகிய உயிர் நிச்சயிக்கப்படுகின்றது. மயக்கம் நீங்க நீங்க அனுபவ முறையில் இந்த உயிரினை நடத்திச் செல்லுவது சிவம் என்னும் உண்மை புலப்படுகின்றது. ஆன்மா அல்லது உயிர் உடலில் அழுந்தி, ஜீவித்து சுகித்திருப்பது அறிவின் ஒரு நிலையாகும். பரம்பொருளை உணர்ந்து, பரம்பொருளில் அடங்கி நிற்றல் அறிவின் வேறு நிலையாகும். இறைவன் உயிரோடு கூடி உயிராக நிற்கின்றான். அப்படி இல்லையென்றால், உயிரானது எதனையும் விரும்பி அனுபவிக்கும் ஆற்றல் பெறாது. ஐம்பொறிகள், புலன்கள் ஆகியவற்றிடமிருந்து தன்னை விடுத்துக் கொண்டு, தன்னை அறிவென்றும், பேரறிவே தன்னோடு கலந்து நிற்கின்றது என்றும் உணர்ந்திருப்பதே யோக நிலையாகும்.
"அஞ்சே அஞ்சாக அறிவே அறிவாகத்
துஞ்சாது இருந்து உணர்ந்து உந்தீபற
துய்ய பொருள் ஈதென்று உந்தீபற" (திருவுந்தியார்)
இத்தகைய அறியும் நிலையை ஆன்மா இறை அருளால் பெறுகின்றது. எவ்வாறு? படிகக்கல் வெண்மை நிறம் கொண்டது. ஆனாலும், சூரியனின் தோற்றம்முன் பல வண்ணங்களைத் தன்பால் காட்டுகிறது. மறுபடியும் சூரியன் உச்சி வேளையில் நிற்கும்பொழுது, மீண்டும் தனது இயல்பான வெண்மையையே காட்டுகின்றது. அதேபோல, இறைவனும் உயிருக்குத் தன்னிடமிருந்து வேறாகத் தெரிந்து கொள்ளவும் உதவுகிறான். தன்னுடைய இந்த அறியும் சக்தியும், பரம்பொருள் தன்னோடு இருப்பதால்தான் பெற முடிகின்றது என்பதையும் உணர்த்துகின்றான்.
"தன்நிறமும் பல்நிறமும் தான் ஆம்கல் தன்மைதரும்
பொன் நிறம்போல் மன் நிறம்இப் பூ". (திருவுந்தியார்)
இறை அருள் உள்ளத்தில் பதியப் பதிய இந்த உயிரின் அறிவு நிலைகளில் மாறுதல்கள் தோன்றுகின்றன. இந்த மாறுதல்கள் எளிதாக வந்துவிடுவதில்லை. பிறவிப்பயன், வினைகள் அடங்குதல், குரு அருளின் வீழ்ச்சி, உடலின் மீது உள்ள பற்றினை நீக்குதல், உள்ளத்திலே தான் வணங்கும் தெய்வத்தின்பால் ஆழ்ந்த அன்பு, இதுகாறும் தான் நடத்திய வாழ்க்கையைப் பற்றித் தானே நொந்து கொள்ளுதல், குறைகளைக் களைந்து சிவன் திருவடிகளைச் சேர வேண்டும் என்கிற சொல்லொணாத ஆவல், தான் செய்த பாவங்களுக்காகத் தன்னைத்தானே ஏசிக் கொள்ளுதல், எதிர்காலத்தில் பிறவிக் கடலைத் தாண்ட இறையருள் ஒன்றே உறுதியான தோணி, திருமுறைகளைக் கற்றோதல், சிவபூசை செய்தல், புறத்தேயும் அகத்தேயும் பரம்பொருளின் அருள் நிலையைக் கண்டு எண்ணி எண்ணி வியத்தல் போன்ற பல படிகளை உயிர் கடந்த பின்னரே அருளது நிலையில் உள்ளத்திலே ஓர் மாறுபட்ட உணர்வு தோன்றுகிறது. இந்த நிலையை அடைய பல ஆண்டுகள் ஆகலாம். பல பிறவிகள் எடுக்க நேரிடலாம். ஆயினும், ஒவ்வொரு உயிரும் இந்த நிலையை வந்தடைவது திண்ணம். கண்ணப்பர் போன்ற ஒப்பற்ற அடியார்கள் ஒரே பிறவியில் இந்தப் பேறினைப் பெறுகின்றனர். இறைவன் அவர்களை ஆட்கொள்கின்றான். சிக்கெனப் பிடித்துக் கொள்ளுகின்றான். அந்த உள்ளங்களிலே மூடிக்கிடந்து சிவப்பண்புகள் ஒளிவிட்டு பிரகாசிக்கத் தொடங்குகின்றன. அவர்களைச் சேக்கிழார் பெருமான் "கோதிலாதக் குணப்பெரும் குன்றனார்" என்பார். இவர்களே "தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்" (திருமந்திரம்) ஆவர். இவர்கள் பெறுவது சொல்லொணா இன்பம். தாயுமான சுவாமிகள் தனது உள்ளக்கிடக்கையை வெகுநுட்பமாக வெளியிடுகின்றார்.
"மோகமாதி தரும் பாசமானதை
அறிந்து விட்டுஉனையும் எனையுமே
முழுதுணர்ந்து சுகமான இன்ப வெளம்
மூழ்க வேண்டும்".
இந்த இன்ப உணர்ச்சி உள்ளத்திலே ஏற்படுகின்றது. இந்திரியங்கள் செயல் ¢படாது அடங்குகின்றன. ஆமையானது தனது உறுப்புக்களைத் தன்னுள் அடக்குவது போன்ற நிலையாகும். உள்ளத்திலே ஓங்காரமான ஒளிமயம் தோன்றும். நான் என்கிற நினைப்பு அறவே ஒழிந்து விடும். அது ஒழிந்ததைக்கூட நாம்ட அறியமாட்டோம்ட. எஞ்சி நிற்பதெல்லாம் ஞானானந்த மயமே.
"ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓமய முற்றது வுள்ளளி பெற்றது
நாமய மற்றது நாமறி யோமே". (திருமந்திரம் - 2158)
இதை "தூங்காமல் தூங்கும் சுகம்" என்பர் யோகியர். புலன்களை அடக்கி முக்தி தரும் ஞான மொழி எனும் வித்தை உள்ளத்திலே பதித்து, இறை அன்பெனும் நீரை அதன் மீது பாய்ச்சி, எல்லாம் சிவன் செயல் என்றிருந்து, முக்தியான வித்து வளர்ந்து, ஆன்மீக மரத்தை படர்ந்து, சிவத்தைத் தன்னுள் கொண்டும், சிவத்தை எல்லாவற்றிலும் பார்த்தும், எல்லாச் சீவராசிகளுக்கும் தன்னுடைய அன்பைப் பகிர்ந்தளித்தும் செய்யும் செயல்களெல்லாம் யோகியர் செயலாகும்.
"ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமற்றூங்கிக் சுகம் பெறுவதெக்காலம்"
"நீங்காச் சிவயோக நித்திரை கொண்டேயிருந்து
தேங்காக்கருணை வெள்ளந் தேக்குவது மெக்காலம்". (பத்திரகிரியார்)
நமது உணர்வுகள், ஆராய்ச்சி உணர்வு, அனுபவ உணர்வு என்று இரண்டு வகைப்படும். பகுத்தறிவைத் தூண்டி, நூல்களைக் கற்று தத்துவங்கள் இன்னதெனத் தெரிந்து கொண்டு, தனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவை, மனம், புத்தி போன்றவற்றால் அறிந்து, அந்த அறிவால் தான் என்கிற முனைப்போடு, இறை உணர்வினைத் தம்முள் எழுப்பிக் கொள்வது ஒருவகை. பிறவிக்கடலை ஓரளவுக்கு நீந்திக் கடக்க இது வகைசெய்யும். ஆனால், எண்ணிறைந்த, விண்ணிறைந்த பரம்பொருளின் திருவடிகளில் என்றுமே தங்க இறப்பு, பிறப்புகளை முழுவதுமாகத் தாண்ட வேண்டியுள்ளது. அதற்காக நாம் பெற வேண்டிய ஞானம் இறைவனின் திருவருளால் ஏற்படுகிறது. மயக்கத்தைக் கடக்க வேண்டும். "யாதும் உறங்காதே" என்கிறது திருக்களிற்றுப்படியார் தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஓரளவு எல்லாவற்றையும் தெரிந்து கொண்டதாக நம் உள்ளத்திலே ஏற்படும் எண்ணமும் நம்மைச்சரியான பாதையில் அழைத்துச் செல்லாது. ஆகவே, அதையும் "உணராதே" என்கிறது திருக்களிற்றுப்படியார். "c பொதுவே நிற்கின்" என்றும் அறிவுறுத்துகிறது.
எண்ணங்களின் அசைவை அடக்கி, உள்ளத்துள்ளே தனது பார்வையைத் திருப்பி, மெல்லக் கனலை எழுப்பி, கள்ளப் புலன் ஐந்தையும் கடிந்து விட்டு, தனது நாட்டத்தையெல்லாம் சிவ பரம்பொருள் மீது வைத்து, அங்குமிங்கும் தேடிக் கொண்டிராதபடி, ஒரே இடத்தில் தனது கவனத்தைச் செலுத்தி விழிப்போடு இருப்பவர்கள் சிவக்கனியைப் பெற்று, சார்பு கெட, பூதம் கலங்கிலும் அசைவற்று இருப்பார்கள் என்கிறார் திருமூலர்.
"பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே". (திருமந்திரம் - 624)
இதுவே துரிய நிலையாகும். விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் போன்ற நிலைகளில் எல்லாம் யோகியர் துரிய உணர்வுடனேயேதான் பார்ப்பார்கள். ஐம்புலன்களுடைய சேட்டைகளைப் பொறுத்தவரை, அவர்களுடைய உணர்வுகள் உறங்குகின்றன. இறை அருளைப் பொறுத்தவரை, அவர்களுடைய உணர்வுகளெல்லாம் விழித்த நிலையில் ஒளிவிட்டு நிற்கின்றன.
"நித்திரை கெட்டு நினைவோடிருப் போர்க்கு
முத்திரை ஏதுக்கடி - குதம்பாய் முத்திரை ஏதுக்கடி"
என்பார் குதம்பைச் சித்தர். கருவி கரணங்கள் கழட்டி விடப்பட்ட நிலையில், சுத்தாவத்தை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இறை அருளுடன் கூடி நிற்கும். அவர்கள் பார்க்கும் பார்வையெல்லாம் இறை உணர்வோடு காணப்படும். நனவிலும் சரி, கனவிலும் சரி, ஆழ்ந்த உறக்கத்திலும் சரி, அஞ்ஞானம் நீங்கிய நிலையில், யோகியர் கருவி கரணங்களைத்தம் வசம் கொண்டு வந்த பரம்பொருளின் தரிசனத்திற்காகவே அவற்றை ஈடுபடுத்துவர். தனது உயிர் அறிவு மயம் என்று கண்டுகொள்வர். அந்த அறிவுக்கு அறிவாய், இறை ஒளி எங்கும் பிராகாசமாய், வியாப்பியமாய் நிற்பதைக் காண்பர். அந்தப் பேரறிவின் வியாபகத்தில் அடங்கி நிற்பதே நிர்மலமான நிலை என்பதை அவர்கள் உணருகின்றார்கள். அவ்வாறு உணர்ந்து நிற்றல் துரியநிலையாகும். ஆன்ம தரிசனம் பெறுவது ஒரு படி. ஆன்ம தரிசனம் பெற்றுச் சிவ வியாபகத்தில் பொருந்தி நிற்றல் எல்லாவற்றிற்கும் மேலான நிலையாகும்.
"உன்னை யறியா துடலைமுன் நானென்றாய்
உன்னை யறிந்து துரியத் துறநின்றாய்
தன்னை யறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தன் அமலனென் றறிதியே". (திருமந்திரம் - 2279)
இதுவே உயிரின் மேலான நிலையாகும் என்கிறார் திருமூலர். ஆறுகள் கடலைச் சேருவது போல, தூய்மை பெற்ற உயிரின் அறிவொளி இறைவனின் எல்லையற்ற ஞானப்பிரகாசத்தில் சேர்ந்து கொள்கின்றது.
"சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர் சேரும்" (திருமந்திரம் - 135)
சிவனடியார்கள் ஒப்பற்ற துரிய நிலையில் என்றுமே சஞ்சரிப்பவர்கள். சுயம்பிராகாசவெளியில் இருப்பதாகவும் கூறிக் கொள்வார்கள். "இருத்தேன் இராப்பகல் அற்ற இடத்தே" என்றார் திருமூலர். மிக்க பணிவோடு மணிவாசகப்பெருமான் "தெய்வம் என்பதோர் சித்தமுண்டாகி" என்கிறார்.
அத்தகையோர் நெஞ்சம் எப்போதும், எப்பணியிலும் சிவ பரம்பொருளின் திருவடியிலேயே தஞ்சமாகக் கிடக்கும். அகத்தேயும் புறத்தேயும் சிவத்தன்மையின் அடிப்படையில் பொருள்களைக் காண்கின்றார்கள். விஷயங்களை அனுபவிக்கின்றார்கள். திருக்குறிப்புத் தொண்ட நாயனாரின் புறத்துப்பணி ஆடைகளை வெளுத்தலாகும். ஆனால், அவர் இப்பணியிலும் இறை பணி முன் நிற்றலைக் காண்கிறார். சுந்தர மூர்த்தி நாயனார் சிந்தையிலே சிவமே நிரம்பி இருந்த காரணத்தால், சந்தனத் திருத்தொண்டுக்கு முழங்கையைத் தேய்த்தார். எல்லாவற்றிற்கும் மேலாக கண்ணப்ப நாயனார் போல் தனக்கு அன்பு இல்லை எனக் கூறி "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்.. என்னையும் ஆட்கொண்டருளி" என இறைவன் மீது தான் வைக்க வேண்டிய அன்பின் ஆழத்தைப் புலப்படுத்துகின்றார். இறை அனுபூதிமான்களுடைய புலன்கள் அவர்கள் வசம் சேர்ந்து, அவர்களால் கட்டுண்டு, அவர்களுடைய இறை உணர்வுக்குச் சான்றாகவும், அந்த உணர்வினை வெளிப்படுத்தும் சாதனங்களாகவும் பயன்படுகின்றன. இல்லாவிட்டால் சேக்கிழார் பெருமானுக்குக் காவிரி பாயும் சோழர் நாட்டில் நெல் வயல்களில் கதிர்கள் முதிர்ந்து நின்ற தோற்றம் அன்பின் வசப்பட்ட இறையடியார்கள் ஒருவருக்கொருவர் தலைவணங்கி இறைஞ்சுவதுபோலத் தோன்றாது. சேக்கிழார் பெருமானுடைய கண்ணோக்கு இறை அருளிலே ஆழ்ந்து கிடக்கும் கண்ணோக்கு.
சுந்தரமூர்த்தி நாயனார் திருவம்பலத்தின் அருகே மதிலைச் சூழ்ந்துள்ள ஆழ்ந்த அகழியில் உள்ள தாமரை மலர்களில் வண்டுகள் மகரந்தத் தூள்களிலே படுத்து, அந்தத் தூள் படிந்த மேனி உடையவைகளாகி இருப்பதைத் திருநீறு பூசிய சிவனடியார்களைப் போன்ற தோற்றமாகக் கண்டார் என்றால் அது வன்தொண்டருடைய சிறந்த சிவப்பண்பினை மட்டும் காட்டவில்லை. அந்தக் காட்சியை நமக்கு அருளித் தந்த சேக்கிழார் பெருமானின் தெய்வத் தன்மையையும் சுட்டிக் காட்டுகிறது.
அத்தகைய பெருமை பெற்ற சிவபரம்பொருளில் தம்மை அர்ப்பணித்து, சிவயோகத்தில், சிவபோகத்தில் திளைத்து நிற்கின்ற தூங்கிக் கண்டார் பெருமையை எவ்வாறு சொல்வது!