திருமூலர் - நான்மறை யோகிகளில் ஒருவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருமூலதேவ நாயனார் மிகச் சிறந்த யோகியாகவும், சித்தராகவும், ஞானியாகவும், ஆன்மீகத்தி

திருமூலர் - நான்மறை யோகிகளில் ஒருவர்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருமூலதேவ நாயனார் மிகச் சிறந்த யோகியாகவும், சித்தராகவும், ஞானியாகவும், ஆன்மீகத்தின் சிகரமாகவும், இறைவனை முற்றிலும் உணர்ந்தவராகவும் விளங்கினார். இவரை நான்மறை யோகிகளில் ஒருவர் எனச் சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தில் குறிப்பிடுகின்றார். இவர் எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார் என்பது பற்றிய பிரச்னைகளுக்கு வரலாற்று ஆசிரியர்கள் முடிவு காணவில்லை. அந்தப் பிரச்னைக்குள் நாம் இப்போது புகவேண்டிய அவசியமில்லை. திருமூலதேவ நாயனார் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சிலவற்றைச் சேக்கிழார் பெருமான் அருளிச் செய்த திருத்தொண்டர் புராணத்தின் வாயிலாக அறிகின்ற வாய்ப்பைப் பெற்றுள்ளோம். கயிலை மலையில் வெகுகாலம் தவம் செய்து வந்த சிவ யோகியார் ஒருவர் தென்னாடு வருகின்றார். இப்போது திருவாடுதுறை எனப் பெயர் பெற்றுள்ள ஊர் அக்காலத்தில் சாத்தனூர் என வழங்கப்பெற்று வந்தது. இதற்கு "தென்கரைத்திரையூர் நாட்டுப் பிரமதேயம் சாத்தனூர் திருவாவடுதுறை" என்னும் கல்வெட்டே சான்று. திருமூலதேவ நாயனார் தனது பயணத்தில் பல புகழ்பெற்ற தலங்களைத் தரிசித்துக் கொண்டு சாத்தனூரை வந்தடைந்தார். அப்பொழுது மூலனெனும் பெயருடைய இடையன் ஒருவன் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவன் திடீரென மரணம் அடைந்தான். அவனிடம் மிகுந்த பற்றுக் கொண்ட மாடுகள் அவன் உடலைச் சுற்றி நின்று கதறி அழுதன. அப்பசுக்களின் மீது அளவற்ற கருணை கொண்ட சிவயோகியார் தனது தவத்தால் பெற்ற அட்டமா சித்தியைப் பயன்படுத்தித் தனது உடலை ஒர் இடத்தில் மறைத்து வைத்துக் கூடு விட்டுக் கூடு பாயும் உபாயத்தின் மூலம் தம்முயிரை இறந்து கிடந்த மூலனின் உடலில் செலுத்தினார். மூலனும் உயிர் பெற்று எழுந்தான். பசுக்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவனைச் சுற்றித் துள்ளி விளையாடின.

மாலை நேரம் வந்தபோது மூலன் பசுக்களை மனைதோறும் புகவிட்டான். அவனுக்காகத் காத்துக் கொண்டிருந்த அவனுடைய மனையாள் அவனை நெருங்கினாள். அவரோ பொதுமடத்திற்குள் சென்று தங்கினார். மூலன் உடலில் தற்காலிகமாக இடம் கொண்ட சிவயோகியாரின் உயிர் அவள் தீண்டுவதற்கு இசையவில்லை. இரவெல்லாம் பேசவுமில்லை. மறுநாள் ஊர் பெரியார் முன் மூலர் தன்னைப் புறக்கணிப்பது பற்றிக் கூறினாள். அவர்கள் அவரை நன்கு ஆராய்ந்து அவர் சிவயோகத்தில் வைத்த மனமுடையவராயிருக்கின்றார். பற்றறுத்து உபதேசம் பெற்றவர் போல் உள்ளார். இனி அவர் உறவு முறைத் தொடர்புக்கு உதவுவார் என்றனர். இவளும் மனவருந்திச் சென்றாள்.

சிவயோகியார் ஏற்கனவே தனது உடலைப் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

அதைத் தேடி அவர் அங்குச் செல்லவும், அவ்வுடல் அந்த இடத்தில் காணப்படவில்லை. எல்லாம் இறைவன் செயலேயாகுமென முற்றிலும் உணர்ந்த மூலனுடலில் தங்கியிருந்த சிவயோகியார் திருவாவடுதுறையின் திருக்கோயிலின் மேற்றிசையில் இருந்த ஒர் அரச மரத்தின் கீழ் பல ஆண்டுகள் யோக நிட்டையில் அமர்ந்தார். இறைவன் தந்த ஆகமப் பொருளை, இறைவன் திருவருளால், திருமந்திரம் என்கின்ற ஒப்பற்ற தமிழ் வேதமாம் மூவாயிரம் பாடல்களில் பாடினார். இந்த மூவாயிரம் பாடல்களை ஆண்டுக்கு ஒரு பாடலாகப் பாடினார் என்று கர்ண பரம்பரையாக வந்த செய்தியையும் சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் குறிப்பிடுகின்றார். இறுதியில் இறைவனுடன் இரண்டறக் கலந்தார் என்பது வரலாறு.

"ஊனுடம்பிற் பிறவி விடந் தீர்த்துலகத் தோர்உய்ய

ஞான முதல் நான்குமலர் நல்திருமந் திரமாலை" (பா - 26)

என்பது சேக்கிழார் வாக்கு. நலம் சிறந்த ஞான யோகக் கிரியா சரியையெல்லாம் அழகிய தமிழில் வழங்கிய திருமூலதேவநாயனார் மலர்க்கழல்களை வணங்கித் தொடங்குவோம்.

திருமூலர்பெருமான் அருளிச் செய்த திருமந்திர மணிமாலை எனப்படும் நூல் சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகச் சைவப்பெருமக்களால் போற்றப்படுகிறது. ஆனால், முன்னமே கூறியதுபோல் திருமூலர் எந்தக் காலத்தவர் என்று ஆராய்ச்சியாளர் இன்னும் தெளிவாக முடிவு செய்யவில்லை. A.H.8 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் "நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்" என்று குறிப்பிடுகின்றார். இவருக்கு முந்திய நாவுக்கரசரோ, ஞான சம்பந்தரோ திருமூலரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. இந்தக் கணக்கில் சிலர் நாவுக்கரசருக்குப் பின்பும், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு முன்பும் திருமூலர் வாழ்ந்து இருந்ததாகக் கொள்வர். இதைப் பற்றிய முடிவான சான்றுகள் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்த தலைசிறந்த யோகிகள், சித்தர்கள் போன்றவர்களுடைய சாதனைகளில் நம்பிக்கையும் பற்றும்கொண்ட பெரியவர்கள், திருமூல நாயனார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்தார் என்றும், 3000 ஆண்டுகளுக்கு மேல் யோக நிலையில் ஒரே உடலைப் பற்றி நின்றனர் என்றும் கூறிப் போற்றுவார்கள்.

திருமந்திரத்தில் பாயிரம் என்கின்ற பகுதியில் திருமூல நாயனார்தனது வாழ்க்கை வரலாற்றின் சில பகுதிகளைக் குறிப்பிடுகின்றார். சிவபெருமானின் அருள்பெற்ற நந்தி தேவரைக் குருநாதராகக் கொண்ட சனகர், சநந்தனர், சநாதனர், சனற்குமார், சிவயோகமாமுனி, பதஞ்சலி, வியாக்கிரமர் என்கின்ற எழுவருடன் தானும் ஒருவரென்று அவர் கூறிக்கொள்கிறார். இந்த எட்டுப்பேர்களும் நந்தி அருளாலே நாதன் எனும் பெயர் பெற்றனர். சைவத்தின் மேன்மையை விளக்கவும், சிவவழிபாட்டினைப் பரப்பவும் நமது புனித நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்றனர். இறப்பைப் பற்றியும், பிறப்பைப் பற்றியும், சிவபரம்பொருளின் பெருமையைப் பற்றியும், சிவபெருமானை அடைவதற்கான பாதைகளைப் பற்றியும் தங்கள் அனுபவத்தின் மூலமும், இறைவனிடமிருந்து தாங்கள் பெற்ற உபதேசத்தின்

அடிப்படையிலும் எட்டுத் திசைகளிலும் சென்று, தங்கள் பணியை நேரிடையாகவும் மாணாக்கர் வழியாகவும் நிறைவேற்றியதாகவும் திருமூலர் பெருமான் சுட்டிக்காட்டுகின்றனர்.

திருமூலர் இறை அனுபவம் முற்றிலும் பெற்ற ஓர் ஒப்பற்ற யோகியாவார். இறவைனைப் புறத்திலும் அகத்திலும் வழிபட்டு, தனது யோகத்தின் வலிமையாலும், தவத்தின் சாதனையாலும் எங்கும், எவ்வுலகிலும் காணப்படும் பரம்பொருளைத் தம்முள் கண்டவராய் இறை அனுபவம் நிறைந்தவராகத் திகழ்கிறார். திருவருள் அவருக்கு இட்ட பணி. மக்களிடையே சைவத்தையும், ஆன்மீகத்தையும் பரப்புவதாகும். இதற்காகவே பூவுலகில் எண்ணற்ற ஆண்டுகள் திருமூலர் வாழ்ந்திருந்தார்.

"செப்புஞ் சிவாகமம் என்னும் அப் பேர்பெற்றும்

அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்

தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்

ஒப்பில் எழுகோடி யுகம் இருந் தேனே". (திருமந்திரம் - 74)

இறைவன் அருளைப் பெற்ற திருமூலர் எண்ணற்ற ஆண்டுகள் இவ்வுடம்பினில் தங்கியிருந்ததற்குச் சான்றாகப் பின்வரும் மந்திரத்தை எடுத்துக் கொள்ளலாம்.

"இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி

இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே

இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே

இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே". (திருமந்திரம் - 80)

எண்ணற்ற ஆண்டுகள் ஒருவர் ஒரே உடலில் வாழ முடியுமா என்கிற ஐயப்பாடு எழுகிறது. அவ்வாறு எழுவதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஆனால், திருமூலர் பெருமான் போன்ற சித்தர்கள் எழுதியுள்ள பாடல்களின் உட்கருத்தைப் புரிந்து கொண்டாலன்றி, வெளிப்படையாக மட்டும் பார்த்து விளக்கம் பெறுவது கடினம் நமக்கு உண்மை கிடைக்காது.

திருமூலர் இறை உணர்வு முழுமையாகப் பெற்ற ஒரு அருளாளர் ஆவார். பல ஆண்டுகள் சிவபோகத்தில் ஆழ்ந்து நின்றார். அவரது திருவுள்ளத்திலிருந்து வெளி வந்த மந்திரங்கள் அவருடைய இறை நிலையைப் பிரதிபலிக்கின்றன. இறைவனுடன் இரண்டறக் கலந்த உயிரின் இருப்பிடம் திருவருளேயாகும். அதற்கு இரவு பகல், இறப்பு பிறப்பு என்பது இல்லை. அத்தகைய உயிரின் நிலை உடலைச் சார்ந்த அனுபவங்களுக்கு அப்பாற்பட்டதாகும். திருமூலரைப் போன்ற யோகியர்களைச் சித்தர்கள் எனக் குறிப்பிடுகிறோம். அறிவு, அறியாமை என்று நாம் அன்றாட வாழ்வில் குறிப்பிடுகின்ற நிலைகளைக் கடந்து, இறைவனுடைய திருவருளால் பெற்ற பேரறிவில் இவர்கள் ஊன்றி நிற்பார்கள்.

திருமூலருடைய சுயானுபவம், சிவானுபவம் மேலும் வெளிவருகிறது.

"நந்திஅரு ளாலே மூலனை நாடிப்பின்

நந்திஅரு ளாலே சதாசிவ னாயினேன்

நந்திஅரு ளாலே மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்

நந்தி அருளாலே நானிருந் தேனே".

இந்த மந்திரத்தின் உட்கருத்து, மூலன் என்று பெயர் பெற்ற சிவயோகியார் நிண்ட காலம் இறைவனை நாடித் தீவிர யோக நிலையில் நின்றார். தன்னுள் இருக்கும் மூலாதாரச் சக்தியினைக் கட்டுப்படுத்தி மேற்செலுத்தி, சாதாரண வாழ்க்கையின்அடிப்படைப் பற்றுக்களை நீக்கி, இறைவன் அருளால் ஞான விளக்கம் பெற்று, நானென்றும், தானென்றும் காணப்படும் வேற்றுமையை ஒழித்துச் சிவசக்தியுடன் இரண்டறக் கலந்தார் என்பதேயாகும்.

திருமந்திரத்தில் ஆழச் சென்று திருமூலர் பெருமானுடைய வரலாற்றை நாம் பார்த்தோமென்றால் பெரிய புராணத்தில் காணப்படும் நிகழ்ச்சிகளின் உண்மை நிலை நம் கண்களுக்குப் புலப்படத் தொடங்குகிறது. உண்மையில், மாதவம் செய்த சிவயோகியார் கூடு விட்டுக் கூடு பாய்ந்து மூலன் உடலில் நுழைந்திருக்க வேண்டியதில்லை. உண்மை என்னவென்றால் சிவயோகியார் யோகத்தின் தொடக்கக் கட்டத்தில் தன்னுடைய மூலாதாரக் கனலை எழுப்பினார். தன்னைச் சுற்றியுள்ள உயிர்களின், "பசுக்களின்" தளையைப் படிப்படியாக அறுத்துக் கொண்டார். பல ஆண்டுகள் தவமிருந்து மெய்ஞ்ஞானம் பெற்றார். இறைவனுக்கும் உயிருக்கும் இடையே நிற்கும் பாசத்தளை அகன்றி பின் சிவபெருமானின் பூரண அருள் பெற்று, வேற்றுமை எண்ணங்கள் நீங்கிப்பற்றற்றவராக, இறையுணர்வை முழுமையும் பெற்றவராக, தான் பெற்ற இன்பத்தை இவ்வையகத்து வாழ்வாங்கு மாந்தர் அனைவரும் பெறும் பொருட்டுத் திருமந்திர மணிமாலையை அருளிச் செய்தார். அவர் இந்தச் சாதனையைச் செய்வதற்கு உறுதுணையாக இருந்தது திருவருளேயாகும். திருவருள் காரணமாக அவர் போதிய வலிமை பெற்றார். அவருடைய ஆழ்ந்த தவத்தில் உருவான ஆன்மிகச் சிந்தனைகளை ஒப்பற்ற தமிழ் மொழியில் அவர் உலகுக்கு எடுத்துக்காட்டப் பரம்பொருளே உதவியது. ஐயமில்லை எனத் திருமூலர் பெருமான் ஆழ்ந்த நன்றியுணர்வுடன் தெரிவித்துக் கொள்கின்றார். இதற்குப் பின்வரும் திருமந்திரமே சான்று.

"பின்னைநின் றென்னே பிறவி பெறுவது

முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்

என்னைநன் றாக இறைவன் படைத்தனன்

தன்னைநன் றாகத் தமிழ் செய்யுமாறே". (திருமந்திரம் - 152)

ஒருவனை இறைவன் படைத்தால் மட்டும் போதாது. நன்றாகப் படைக்க வேண்டும், இறைவனுடைய அருள் மழை பொழிவதற்கான தகுதி பெற பல நற்பணிகளையெல்லாம் ஏராளமான பிறப்புகளில் செய்திருந்த உயிரே இறைவனுடைய பெருமையைப் பிறருக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றலைத்

திருவருளால் பெறுகிறது. உண்மை விளக்கம் கிடைக்கின்றது. அறியப்பட வேண்டிய ஒன்று உள்ளத்திலே ஞாயிறு போன்று உதிக்கின்றது. அறியாமை அகலுகின்றது. மாயையின் உட்பொருள் பற்றித் தெளிவு ஏற்படுகிறது. சிவபெருமானின் திருவருளால் திருமூலருடைய உள்ளத்தில் கிடைத்த சகல விளக்கங்களும் திருமந்திரத்தில் காணப்படுவதாகத் திருமூலர் தெரிவிக்கின்றார். அந்த நிலையில் திருவரள் உள்ளத்தில் பதியத் தொடங்குகிறது. அறிய வேண்டியவை, அறிய வேண்டாதவை போன்றவற்றைப் பற்றிய சரியான உணர்வுகள் உள்ளத்திலே எழுகின்றன. குழப்பங்கள் நீங்குகின்றன. உயிரானது தன்னை நோக்குகின்றது. தன்னை அறியாமையில் கிடத்திய மாயையின் விளக்கம் கிடைக்கின்றது.


"ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை

மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை

ஆயத்தை யச்சிவன் தன்னை யகோசர

வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே". (திருமந்திரம்...90)

சான்றோர் பெருமக்கள் திருமூலரைக் கைலாய பரம்பரையினர் என்பர். சிவபெருமான் திருவடிகளில் உள்ளத்தை வைத்து, சிவயோகம் புரிந்து, சிவமாம் தன்மை பெற்று, பூவுலகில் சிவலோக நிலையைப் பெற்று வாழ்ந்தார் என்பது இதன் பொருளாகும்.

திரு.வி.க அவர்கள் திருமூலரைப் போன்ற பல சித்தர்கள் இன்னும் நம்மிடையே வாழ்கின்றார்கள் என்று பொருள்படக் குறிப்பிட்டார். கைலாய மலையின் அடித்தலத்திலே மட்டும் பூத உடலில் அவர்கள் வாழவில்லை என்றும், அம்மலைக்கு மேலே சிவபெருமானோடு என்றுமே அருகிலிருந்து கொண்டு உண்மை விளக்கங்களை அவ்வப்பொழுது மக்களுக்குத் தந்து வரும் பிறப்பும் இறப்புமற்ற வாழ்வுடையவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் திரு.வி.க அவர்கள் விளக்கம் தந்துள்ளார்கள். கருணை நிரம்பிய உள்ளங்கள் உடையவர்கள் இறைவனுக்கு ஒப்பானவர்கள். அவைகள் இறைவனுடைய இருப்பிடங்கள். திருவருள் முழுமையாக அவர்களுடைய உள்ளத்தில் பதிந்து, அவர்களை வழிநடத்திச் செல்கிறது. பெருங்கருணை கொண்ட இறைவன் உயிர்கள் உய்விக்கும் பொருட்டு அவர்களுக்கு உடலையும், உடலைச் சார்ந்த அனுபவங்களையும் கொடுத்து அவர்களுடைய அறியாமையைத் தனது திருவருட் சக்தியால் நீக்கி, அவர்களுக்குத் தன்னுடைய திருவடிகளைக் காட்டி, ஒப்பற்ற இறை அனுபவத்தை நல்கி, மட்டில்லா மகிழ்ச்சியை அளித்து அருள் மழை பொழிகின்றான். இதுவே களிம்பறுத்தல் எனப்படும்.

"விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

உண்ணின் றுருக்கியா ரொப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே". (திருமந்திரம் - 113)

திருமூலர் பெருமானைப் போன்ற யோகிகள் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்றவர்கள் என்று கூறப்படுகின்றது. சித்தர்கள் உடலை ஒரு கருவியாகக் கொண்டு இப்பிறவியில் அவ்வுடலினில் புகுந்து உயிரினது குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக, உடம்பினை வளர்த்து, யோகத்தின் சிகரத்தை எட்டி, தெளிந்த அறிவு பெற்றவர்களாகத் தாம் பெற்ற அனுபவத்தை மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்கள். உயிரின் சாதனைக்கு உடம்பு இன்றியமையாதது. உயிரை வளர்க்க உடம்பைப் பேணவேண்டும். வாழ்நாட்களை வீணாக்கக் கூடாது. "போது சடக்கெனப் போகின்றது" ஆண்டுகள் கழிகின்றன. கற்பனை குறுகுகிறது. அப்பனை நம் இதயத்தில் அமர்த்திப் போற்ற வேண்டும். எனவே, சித்தர்கள் உடம்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே". (திருமந்திரம் - 724)

"உடம்பினை முன்னம் இழுக்கென்றி ருந்தேன்

உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்ட டான்என்

றுடம்பினை யானிருந் தோம்பு கின்றேனே". (திருமந்திரம் - 725)

திருமூலர் சித்தருக்கெல்லாம் தலைவர் ஆவார். முடிவான முடிவைக் கண்ட ஓர் தலைசிறந்த ஞானி. அவர் போன்றவர்கள் கண்ட முடிவு முழுமையானதாகும். மனத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட ஓர் உண்மையை உணர்ந்தவர் சித்தர் ஆவார். அது ஒரே உண்மையாகத்தான் இருக்க முடியும். பல உண்மைகளாக இருக்க முடியாது. இருப்பதற்கு நியாயம் இல்லை. உண்மை ஒன்றே. எல்லாம் ஒருவனே என்பதுதான் சித்தர்கள் கண்ட உண்மையாகும். சித்தர்கள் போதிப்பது சித்தாந்தம். அத்துடன் சிவத்தையும் சேர்த்துக் கொண்டால் நமக்குக் கிடைப்பது. சைவசித்தாந்தம். அதாவது சித்தர்கள் சிவமெனும் பரம்பொருளைஅனுபவித்துத் தங்கள் உணர்வினை வெளியிடுகிறார்கள். இருவினைக்கு அப்பால் நிற்கும் இறைவனை, பேரின்ப நிலையை, அன்பின் வடிவை, படைத்தால், காத்தல், அழித்தல், அருளல் போன்ற தொழில்களையெல்லாம் புரியும் தேவர்களுக்கு அப்பாற்பட்ட ஓர் உண்மையை, இப்பிரபஞ்சத்திற்கு ஆதாரமாய், பிரபஞ்சமாய், எல்லாவற்றிற்கும் காரணமாய், எல்லாவுமாய் விளங்குகின்ற ஒருவனை, மனத்திற்குள் உணர்ந்து, அவனுடைய தன்மையை விளக்கி, அவனை அடையும் வழிகளை உலகிற்கு எடுத்துக்காட்டுவதே சைவ சித்தாந்தமாகும். இதைச் சித்தர்களின் தலைவராகிய திருமூலர் திருமந்திரத்தில் ஒன்பது தந்திரங்களில், முப்பது உபதேசங்களில், 300 மந்திரங்களில், 3000 தமிழில் நமக்கு அளிக்கின்றார்.

சித்தர்களைப் பற்றி நாம் மேலும் சற்றுச் சிந்திக்க வேண்டும். சித்தர்கள் பரிபூரண சித்திக்கு, சிவமுத்திக்கு வழிகாட்டும் இறையுணர்வாளர்கள் ஆவார்கள். சித்தர்கள் படிப்பினால் மட்டும் அறிவினை வளர்த்து, தத்துவங்களிலே மூழ்கியவர்களாக, ஆன்மிகத்தை ஏட்டளவிலே புரிந்து கொண்டு, அதைப் பேசிப் பேசி, பிறரை மயக்குபவர்கள் அல்லர். அவர்கள் பேரறிவு பெற்றவர்கள். ஜீவன் முக்தர்கள். இவ்வுலகிலும் இறையுணர்வோடு கலந்து வாழ்பவர்கள். அவர்களுடைய உள்ளத்தில் சுத்த சிவம் எங்கும், எப்பொழுதும் தோய்ந்து நிற்கின்றான். அதன் காரணமாக அவர்கள் உள்ளத்தில் அன்பும் கருணையும் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, மக்களிடையே பாமரராகக் கலந்து, வாழ்ந்து, அவர்களுடைய இன்ப, துன்பங்களைத் தாமே ஏற்று, அவர்களுடைய வாழ்வில் சரியான இறை நெறியைப் போதித்து, நல்வழியில் நடத்திச் செல்ல எத்தனை தியாகம் செய்ய வேண்டுமானாலும் அதனைச் செய்யத் துணிந்து நிற்பவர்கள். சித்து அசித்து, உண்மை இன்மை, வித்தை அவித்தை, அறிவு அறியாமை, இன்பம் துன்பம், இவற்றிற்கான வேறுபாடுகளை நன்குணர்ந்து, உள் தெளிந்து, திருவடியே தஞ்சமெனப்பெற்று, பிறப்பையும் இறப்பையும் வளர்க்கும் மும்மலங்களின் ஆட்டங்களிலிருந்து விடுபட்டு என்றும் மனத்தினுள்ளும், புத்தியிலும் இறைவனுடன் கலந்து, நான் என்ற நினைவு மறந்தவர்களாக வாழ்பவர்கள் சித்தர்கள் ஆவார்கள். திருமூலர் பெருமான் "சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்" என்கின்றார். முதன்மைக் கடவுளுடைய விளக்கம் நாதம் அந்த நாதத்தின் முடிவைத் தம்முள் உணர்ந்து, குற்றமற்ற தூய்மையான இன்பத்தில் எல்லாத் தத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட நிலையிலிருப்பவர்கள்

சித்தர்கள் ஆவார்கள். திருமந்திரம் கூறுவதாவது -

"சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்

சத்தமுஞ் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்

நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர

முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே". (திருமந்திரம் - 125)

மேலும், ஐம்பொறிகள் வழியாகக் கிடைக்கக்கூடிய அனுபவங்களில் மக்கள் மயங்கி நிற்கும்பொழுது அந்தச் சிற்றறிவினை "ஆமேவு பால் நீர் பிரிக்கின்ற அன்னம்போல்" பேரறிவிலிருந்து பிரித்து, பிறவிக்குக் காரணமான கன்ம நிலையிலிருந்து விடுபட்டவர்களாகத் தவயோகத்துள் புகுந்து தன்னொளி பெற்றுப் பரம்பொரள் உலகெங்கும் தானான உண்மை நிலையினைத் தம்முடைய பெருவெளியிலேயே உணர்ந்தவர் சித்தர்கள் ஆவர். வாழ்வையும், வாழ்வு தரும் அனுபவத்தையும், அதே நேரத்தில் அவர்கள் தள்ளிவிடமாட்டார்கள். ஆனால், அவற்றையே இறைவனின் தன்மையை வெளிக்காட்டும் ஏணியாக மாற்றி, படிப்படியாக ஏறி, ஒப்பில்லாத ஆனந்தத்தைத் தம்முள் பெற்று, விவரிக்க இயலாத இறை நிலையைத் தம்முள் கண்டு அனுபவித்து இன்புற்று வாழ்கின்றார்கள். இதைத் திருமூலர் எவ்வளவு தெளிவாகக் கூறுகின்றார் என்று பாருங்கள் -

"முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்

ஒப்பிலா ஆனந்தத் துள்ளலி புக்குச்

செப்ப அரிய சினங்கண்டு தான்தெளிந்

தப்பரிசாக அமர்ந்திருந் தாரே". (திருமந்திரம் - 126)

தம்முள் சிவத்தை இவர்கள் கொண்டிருப்பதாலும், சிவமெனும் பரம்பொருள் எங்கும் நிறைந்திருப்பதாலும் இவர்களும் எங்கும் இருப்பர். எல்லாம் இறைவன் செயல் என்பதை எப்பொழுதும் மனத்திற் கொண்டிருப்பர். காலத்திற்கு அப்பாற்பட்ட இறைவனுடனே அவர்கள் கலந்து இருப்பதால், முக்காலத்தின் இயல்பையும் அவர்கள் நன்குணர்ந்தவர்களாகின்றனர். இந்த நிலையில் இருக்கும் சித்தர்களின் தன்மையை "இழவு வந்து எய்திய சோம்பே" என்கின்றார் திருமூலர்.

தன் நினைவு இழந்த நிலை இழவாகும். சோம்பல் என்பது பந்த பாசங்கள் நிறைந்த மனம் ஒடுங்கி இறைவனுடன் முழுதும் கலந்த நிலையில் விலகிச் சும்மா இருத்தல் ஆகும். உடலைச் சார்ந்த கருவிகளின் இயக்கம் ஓய்வடைகிறது. உள்ளத்தின் இயக்கம் தொடங்குகிறது. தெய்வீகம் நிரம்பிய திருமந்திரம் பின்வருமாறு -

"இருந்தார் சிவமாகி எங்கும் தாமாகி

இருந்தார் சிவன்செயல் யாவையும நோக்கி

இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்கு

இருந்தார் இழவுந் தெய்திய சோம்பே". (திருமந்திரம் 127)

சித்தர்கள் தம் வாழ்நாள் முழுவதும் தங்களுடைய மனவெளியிலே இறைவனுடைய எண்ணம் கலந்தவராக இருந்து கொண்டே இருப்பர். ஐம்பொறிகளால் தூண்டப்படும் உணர்ச்சிகளை முழுமையாக அடக்கியவர்களாக, தான் என்கின்ற ஆணவ மனத்தின் காரணமாக இயங்கும் தன்மையை அறவே ஒழித்துக்கிடப்பவர்கள் சித்தர்கள். எண்ண அலைகள் படிப்படியாகக் குறைந்து ஒடுங்கிய மனநிலையில் முழுமுதற் கடவுளின் தன்மையாகிய ஒலியினைத் தம்முள் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய சஞ்சாரம் உடம்பின் கருவிகளுக்கு அப்பால் நடைபெறுகிறது. அதுவே தூங்காமல் தூங்கும் சுகமாகும்.

"சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே

சோம்பர் கிடப்பதுஞ் சுத்த வெளியிலே

சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்

சோம்பர் கண்டாரச் சுருதிக்கண் தூக்கமே". (திருமந்திரம் - 128)

தூக்கம் என்பது வெறும் கண் உறங்குதல் மட்டுமல்ல. உறங்குதல் உடலைப் பற்றியது. உறங்கும்பொழுது உடலைப் பற்றிய கருவிகள் ஓய்வு பெறும். ஆனால், சித்தர் அடையும் நிலையில் மனமும் ஒடுங்கி, சித்தமும் உறங்கி இறைவனின் உணர்வு இதயத்தில் தங்குகின்றது. அந்த நிலையைத் தாயுமானவர் "தூங்காத தூக்கமது தூக்கும் பராபரமே" என்று அழகாக வருணிக்கிறார். அந்த நிலையில் சித்தர் இறைவனுடைய திருவருள் அமுதத்தைத் தம்முள்ளேயே பெறுகின்றார்.

மனமும் சித்தமும் ஆகிய அந்தக் கரணங்களும், மற்ற கருவிகளும் ஒடுங்கியிருத்தல் காரணமாக ஒப்பற்ற யோக நிலையில் இருக்கின்றனர். அந்த நிலையின் விளைவாகத் தம்முள் பேரின்பத்தை அனுபவிக்கின்றார்கள். அந்த நிலையை விவரிக்கவும் இயலுமா?

"தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே

தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே

தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம் உள்ளே

தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே". (திருமந்திரம் - 129)

திருமூலர் அந்த நிலையைப் பெற்றிருந்தார் என்பது பல மந்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. உள்ளமாகிய ஆணிப்பொன்மன்றத்தில் இறைவனுடைய பேரொளியை எப்பொழுதுமே காண்கின்றார். இறையறிவும், இறை ஆற்றலும் சேர்ந்து திருக்கூத்து நடைபெறும் இடமாக அவருடைய உள்ளம் அமைகின்றது. இதையே பொதுமன்றம் என்று சித்தர் வழங்குவர். தம்முள் இந்த ஒலி, ஒளி, அசைவுகளைச் சித்தர்கள் அனுபவிக்கும்பொழுது பல வண்ணங்களின் எழில்களாகத் தரிசிக்கின்றனர். அவற்றைத் தரிசித்து, தொழுது அவர்கள் பெறும் பேறு எத்தகையது என வெறும் சொற்களால் விவரிக்க இயலாது.

"மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்

மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்

ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்

பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே." (திருமந்திரம் - 131)

சித்தாந்தம் என்பது சித்தர்களுடைய அந்தமாகும். அதாவது சித்தர்கள் கண்ட முடிவான முடிவாகும். வேதத்தின் முடிவை வேதாந்தம் என்கின்றோம். நாதத்தின் முடிவு நாதாந்தமாகிறது. போதாந்தம் என்பது அறிவுக்கறிவு அல்லது பேரறிவாகும். சித்தர்கள் கண்ட உண்மை சித்தாந்தமாகும். இன்னும் சற்று சிந்தித்தால், சித்தர்களைச் சமயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்ட. சமயங்களுடைய முடிவாக நிற்கும் உண்மையை அவர்கள் அறிந்தவர்கள் ஆவார்கள். சமயக் கருத்துகள் ஒருவேளை இந்த உண்மையைப் போதிக்கலாம். ஆனால், முக்கியம் அதுவல்ல. சித்தர்கள் இநத் உண்மையைத் தம்முள் உணர்ந்தவர்கள் என்பதுதான் முக்கியமாகும். பாமர மக்கள் சமயக் கோட்பாடுகளைப் பின்பற்றும்பொழுது பெரியவர்கள் விட்டுவைத்துப் போயிருக்கின்ற வழிபாடுகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் தங்களுடைய வாழ்வு இம்மையிலும், மறுமையிலும் நன்கு அமையுமென்கின்ற நம்பிக்கையுடன் சமயத்தின் அடிப்படையில் நாட்டம் கொள்கின்றார்கள். ஆனால், சித்தர்கள் அத்துடன் நின்றுவிடுவதில்லை. சமயக் கோட்பாடுகளுக்கு அப்பாலும், அவற்றின் உள்ளும் புறமும் இருக்கக் கூடியவற்றை ஆராய்ந்து பார்க்கக்கூடிய ஆன்மிக வலிமையைத் தங்கள் தவத்தாலும், யோகத்தாலும், அறத்தாலும் பெறுகின்றார்கள். அந்த வலிமையைப் பெற்றவர்கள் உண்மையை நோக்குகின்றார்கள். உண்மை

அவர்களுக்கு வெளிப்படும் போது தெளிந்த நிலையை அடைகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் பேசாது இருந்து விடுகிறார்கள். உணர்ந்த பிறகு, மீண்டும் உலகத் தொடர்பைப் பெற்று, தாம் அனுபவித்த உண்மையைப் பிறருக்கு எடுத்துக் கூறுகின்றார்கள். அல்லது மறைமுகமாகச் சொல்லுகின்றார்கள். புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் "நாம் பேசும்ட மொழிகளால் ஆன்மிக உணர்வுகளை விளக்க இயலாது" என்று கூறினார். அதே நிலையில்தான் சித்தர்களும் இருக்கின்றனர். சமயக் கோட்பாடுகளுக்கு உட்பட்டுத்தத்துவ விவாதம் செய்து ஒரு தத்துவத்தை மற்றொரு தத்துவத்திற்கெதிராக நிலைநாட்ட வேண்டுமென்பது அவர்களுடைய கொள்கையல்ல. அவ்வாறு விவாதங்களில் ஈடுபடுபவர்களைப் பற்றிப் பெரிதாக அவர்கள் எண்ணுவதில்லை.

"இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்

பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி

எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்

ஒத்துணர் வார்க் கொல்லையூர் புகலாமே". (திருமந்திரம் - 1543)

எல்லாச் சமயங்களும் உடல், உயிர், உலகம் ஆகியவற்றிற்கு அடிப்படையாக நிற்கும் பரம்பொருளையே அறிந்து கொள்ள முயலுகின்றன. அறிஞர்கள் சிறு சிறு தத்துவங்களை முன்னிறுத்தி அவற்றையே தலையாயதாகக் கொண்டு மற்றத் தத்துவங்களில் குறைகளைக் காண முயலுகின்றனர். கற்றறிந்த தத்துவ சமயக் கோட்பாடுகளின் மூலமாகத் தாங்கள் உண்மை எல்லாவற்றையும் அறிந்து விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர். இவர்கள் எல்லோரையும் திருமூலர் தெளிந்த நிலை அற்றவர்களே என்று கூறுகின்றார். உள்நின்ற பரம்பொருளைப்புறத்தே காண முயலும் தத்துவவாதிகள் மாயைக் குழியில் விழுந்தவராகக் கருதப்படலாம். மெய்யுண்மையை உணர்ந்த சித்தர்கள் இறைவனைத் தம்முள்ளேயே காண்கின்றார்கள். திருமந்திரம் கூறுவதைக் கேளுங்கள்

"ஆயத்துள் நின்ற அறுசம யங்களும்

காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா

மாயக் குழியில் விழுவர், மனைமக்கள்

பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே". (திருமந்திரம் - 1530)

"ஆறு சமயமுங் கண்டவர் கண்டிலர்

ஆறு சமயப் பொருளும் அவனலன்

தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்

மாறுதல் இன்றி மனைபுகலாமே". (திருமந்திரம் - 1533)

சித்தர்கள் அடையும் நிலை பாசத்தைக் கடந்த நிலையாகும். மனம், வாக்கு, காயத்தால் மூளும் வல்வினையைக் கடந்த இடமாகும். எல்லாம் தெரியும் அறிவுதனை அறிந்த பிறகு சித்தர்கள் தங்களுடைய சாதனையைப் பற்றிப் பேசிப்

பேசி பிதற்றிக் கொண்டிருப்பதில்லை. பேரளவில் விஷயம் தெரிநத் பகுதியறிவு பெற்றவர்களே மூச்சை அடக்குதல் பற்றியும் குண்டலினி போனற் சக்தியைப் பற்றியும் பேசி மக்களை ஈர்க்கப் பார்க்கின்றார்கள். ஆனால், உண்மையின் தன்மையை அறிந்து, ஐம்புலன்களை ஒடுக்கி நிற்கும் சித்தர்கள் இவ்வாறு பேசிப் பயனில்லை என்பதை அறிந்தவர்கள். இந்த உணர்வினைத் திருமூலர் பெருமான் பின்வரும் மந்திரத்தால் நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்.

"வாசியு மூசியும் பேசி வகையினால்

பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை

ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்

ஈசன் இருந்த இடம் எளிதாமே." (திருமந்திரம் - 2613)

பிறவிப் பயன் முழுவதையும் பெற்றடைந்து, தான் பெற்ற பேரறிவின் பயனாக எஞ்சி நிற்கும் கன்மங்களையெல்லாம் முடித்துக் கொண்டு மேல்வரம் வினை தன்னை நெருங்காதவண்ணம் தூய வாழ்வினை மேற்கொண்டவர்களாயும் இறைவனுடைய அருள் எப்பொழுதும் தங்களோடு இணைந்து விளங்கும் நிலையைப் பெற்றவர்களாயும் சித்தர்கள் வாழ்கின்றார்கள். அப்பேற்ப்பட்ட பெருமக்களைத் தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இறைவனுடைய அருளும் சித்தர்களுடைய ஆற்றலும் பின்னி நிற்கும் நிலை சித்தர் நிலையாகும்.

"தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவனரு ளாலன்றே" (திருமந்திரம் - 2611)

இது அமைதியில் ஒடுங்கும் நிலையாகும். தம்முள் இருக்கும் சக்தியை அறிந்தவர்களுக்கு மலமில்லை, மாசில்லை, மான அபிமானமில்லை, குலமில்லை, உயிர்களுடன் பற்றி நிற்கும் குண விசேஷங்களும் இல்லை. நலனில்லை, கேடில்லை, பிரம்மன் போன்ற கோடிக்கணக்கான தேவர்கள்கூட பாசத்தால் கட்டப்பட்ட நிலையும் இல்லை. சித்தர்கள் நிலை கடவுள் நிலையாகும். இறைவனுடன் பொருந்திய பிறகு கிடைக்கக்கூடிய நிலை இது. இந்த நிலையில் இருந்த திருமூலர்.

"ஒழிந்தேன் பிறவி யுறவென்னும் பாசங்

கழிந்தேன் கடவுளும் நானுமொன் றானேன்

அழிந்தாங் கினிவரு மாக்கமும் வேண்டேன்

செழுஞ்சார் புடைய சிவனைக் கண்டேனே" (திருமந்திரம் - 2958)

என்கிறார்.

மக்கள் அன்றாட வாழ்வில் உலகத்தோடு இணைந்து வாழ முற்படுகின்றார்கள். அவ்வழியாக இன்பமடையப் பார்க்கின்றார்கள். இதில் வியப்பொன்றில்லை. பிறந்த பிறகு சமூகத்தினருடன் ஒத்து வாழ்தல் மூலமாகக்

கிடைக்கக்கூடிய பயன்களைப் பெற்றுத் தீர்வதற்கே சீவன் முற்படுகிறது. அவ்வாறு இல்லாவிடில் பிறப்பின் நோக்கம் நிறைவேறாது. ஆனால், அதன் நிலையில் என்றுமே இன்பத்தைத் தொடர்ந்து பெற்றிருக்க முடியாது. இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கும். அதை அறிந்தும்கூட மக்கள் "இச்சையுளே வைப்பர்". சற்றுச் சிந்தித்துப் பார்க்கும் பொழுது இவையெல்லாம் தேவையற்றது என்று புரிந்து கொள்ள முடிந்தாலும், வலுவான பாசத்தால் கட்டுப்படட மக்கள் நிலையான பேரின்பத்தைப் பெற இயலுவதில்லை. ஆனால், என்றாவது ஒருநாள் உண்மையை எல்லாச் சீவன்களும் உணர்வதற்கான வழியினை இறைவன் நமக்குக் காட்டுகின்றான். திருவருளினால் நமக்கு அந்த நேரம் கிட்டும்பொழுது இனி உலக அனுபவங்கள் தேவையில்லை என்கின்ற முடிவு தோன்றுகின்றது. மனச்சேட்டைகள் அடங்குகின்றன. பிறவித் துயரைக் கொடுக்கும் அறிவு மாறி,

அகத்தில் பேரொளி புலப்படத் தொடங்குகின்றது. வாழ்க்கையின் உண்மையான நோக்கம் அக்கண்களுக்கு விளங்கத் தொடங்குகிறது. நிலையான நெறி ஒன்றினை மனம் பற்றிய பிறகு, அதனால் ஏற்படும் பெரும் பேற்றினை மனம் அடைகின்றது. இந்தச் சாதனையைச் செய்த சித்தர் உலகுடன் பேசாப் பெருமையைப் பெறுவர்.

"பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி

பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்

பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு

பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே". (திருமந்திரம் - 132)

இத்தகைய பேறு பெற்ற சித்தர்களைச் சீவன் முக்தர்கள் என்று அழைப்பது வழக்கம். இந்தப் பிறப்பிலேயே அவர்கள் பிறவாப் பெரும் பயனைப் பெற்ற பின்னர், மக்களை, மற்ற சீவ ராசிகளை, மற்ற இதயங்களைப் புறக்கணித்துவிட்ட வெறுமனே தங்கள் வாழ்நாட்களைக் கழிப்பதில்லை. எங்கும் நிறைந்து, எங்குமிருந்து நெடுஞ்சுடரைத் தம்முள் காணும் சித்தர்கள் பிறருடைய உள்ளங்களிலும் காண்கின்றார்கள். வேற்றுமை என்னும் மாயைத் திரை அகன்ற பின்னர்த் தம்முள் எல்லாச் சீவராசிகளிடத்து அன்பும், கருணையும், பாசமும் பரிவும், உருக்கமும் தயவும் தோன்றுகிறது. இந்த உயர்ந்த நிலையை அடைந்த சித்தர்கள் தமக்கின்றி, பிறருக்காக வாழ்கின்றார்கள். வள்ளலார் வாடிய பயிரைக்கண்டு வாடினார். திருமூலரோ மக்களிடமிருந்து ஒதுங்கி விடாது, தான் கண்ட உண்மைகளைப் பிறருக்கு உபதேசித்து "அறம் செய், அன்பு கொண்டவனாய் இரு, அன்பு செய்வோரை சிவனறிவன்" என்று போதித்தும் அவர்களுக்கெனவே வாழ்கின்றார். நாட்கள் கழிந்து கொண்டே போகின்றன. யாக்கை நிலைத்து நிற்பதில்லை. அறம் செய்வதன் மூலம் இறைவனுடைய கழலடியைக் காண வேண்டுமென்பதே திருமூலர் உலகுக்குப் பறைசாற்றும் நெறியாகும். பிறருக்கு அன்பு செய்வதன் மூலம், இறைவனை அன்பெனும் பீடத்தில் அமர்ந்திருக்கும்பொழுது, சீவராசிகளிடம் பேரன்பு செலுத்துவதன் மூலமாக இறைவனை அடையலாம் என்பது திருமூலர் நமக்குக் கற்பிக்கும் கல்வியாகும். அன்பையும் அறத்தையும் இரண்டு அடிக்கற்களாக வைத்து வாழ்வை நடத்திச்

செல்லக்கூடிய ஒருவன் கட்டாயம் பெரும் பேற்றினை அடைவான். இதில் சந்தேகமில்லை. இறைவனுடைய அருள்பெற்றும் விளங்குவான். இதுதான் உண்மையான ஆன்மிகம். மூச்சை அடக்கிப்பலவிதமான ஆசனங்களில் உடலைப் பொருத்தி வாட்டித்தான் இறைவனை அடைய வேண்டுமென்பதில்லை. அன்பு கொண்ட இதயம் இறைவனை அடைகின்றது. இறைவன்பால் அன்போடு இருக்க வேண்டுமென்பது மட்டுமில்லை. எல்லா சீவராசிகளிடமும் அன்பைச் செலுத்தினாலே போதுமானது. அன்பெனும் உயர்ந்த நிலையை முற்றிலும் உணர்ந்த சித்தர்கள் பெற்றிருக்கின்றார்கள். அந்த அன்பின் அடிப்படையில்தான் நமக்கு உண்மை நிலையைத் தெளிவுபடுத்துகின்றார்கள்.

சித்தர்களுக்கெல்லாம் தலைவராய் விளங்கும் திருமூலரின் திருமந்திர மணிமாலை ஓர் அறிவுப் பொக்கிஷம். ஒர் ஆன்மிகக் களஞ்சியம். என்றும் வற்றாத பசுவிடமிருந்து நமக்குச் சொரிந்து கிடைக்கின்ற ஞானப்பால். ஓர் விரிந்த ஆழ்ந்த அனுபவக்கடல். அக்கடலினுள் கிடைக்கக்கூடிய நல்முத்துக்கள் ஏராளம். ஆழ்கடலில் மூழ்கி இம்முத்துக்களை எடுத்துக் கரை சேர்வதற்கு திறமையும், முதிர்ந்த அனுபவமும் வேண்டுமென்பதை மறுக்க இயலாது என்றாலும், எனக்கு அத்தகைய திறமையும், அனுபவமும் இல்லையென்கின்ற குறையை நான் உணர்ந்திருந்த போதிலும், திருமந்திரத்தைப் படிப்படியாக படித்து, சிந்திக்கக்கூடிய வாய்ப்பினை இறைவனருளால் நாம் எல்லோரும் பெற்றிருக்கிறோம் என்கிற ஒரே காரணத்தினால், எனக்குத் தோன்றும் ஒருசில எண்ணங்களை இந்த முத்துக் குவியலில் இருந்து எடுத்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகின்றேன்.

அந்த இறைவனே ஓர் முத்தினில் முத்து. முகிழ் இள ஞாயிறு. தேடிப்பார்த்து அடைய வேண்டிய பரம்பொருள். முகிழ் இள ஞாயிற்றைப்போல், எங்கெங்கும் ஒளி வீசிக் கொண்டிருப்பவன். இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடு உடையனபோலத் தோன்றும். ஆனால், உண்மையில், கிடைப்பதற்கரிய ஒருவன் இளம்ட ஞாயிறைப்போல எங்கும், எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றான். அவன் அழியாத் தன்மையைப் பெற்றிருக்கும் சீவனையும் கடந்தவன். தனித்து நிற்பவன். பல்வேறு அண்டங்களுக்கு அப்பாற்பட்டவன். ஒப்பில்லாதவன். பவளம் போன்ற இதழ்களையும், முத்துப்போன்ற பற்களையும், இனிய மொழியையும் உடைய பெண்களுடைய சக்தியிலும் மயங்காத ஓர் அறிவுப் பேரொளியாகி, தொடர்பவர்களுடைய மருளினை நீக்கி, என்றும் அருள் தன்மை பொருந்தியவனாக நிற்கின்றான்.

"அமரத் துவங்கடந் தண்டங் கடந்து

தமரத்து நின்ற தனிமையன் ஈசன்

பவளத்து முத்தும் பனிமொழி மாதர்

துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே". (திருமந்திரம் - 2788)