சைவம் ஸ்ரீ சைலம்,ஆந்திரப்பிரதேசம் கர்னூல் மாவட்டத்தில் நந்திகொட்கூர் தாலுக்காவில் மலைப்பாங்கான காட்டுப்பகுதிய

சைவம்

ஸ்ரீ சைலம்,ஆந்திரப்பிரதேசம்

கர்னூல் மாவட்டத்தில் நந்திகொட்கூர் தாலுக்காவில் மலைப்பாங்கான காட்டுப்பகுதியில் உள்ளது ஸ்ரீ சைலம். (பாதாள கங்கா என்று அழைக்கப்பெறும் ) கிருஷ்ணா நதியினை அல்லது அதன் கிளை நதியினை நோக்கியுள்ள இந்த ஸ்ரீ சைலத்தை தென்கைலாசம் என்றும் அழைக்கின்றனர். இந்த ஸ்ரீ சைல மலை உச்சியில் உள்ள புராதனமான புகழ்மிக்க கோயிலில் காட்சி அளிக்கும் ஈசனுக்கு மல்லிகார்ஜுனர் எனப்பெயர். பன்னிரெண்டு ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்று. குண்டூர் விஜயவாடா ரயில் மார்க்கத்தில் நந்தியாலுக்கு 112 A.e தூரத்தில் ஸ்ரீ சைலம் உள்ளது. விஜயநகர அரசரான கிருஷ்ணதேவராயரின் ஆளுகைக்குட்பட்டதாக ஸ்ரீ சைலம் ஒருகாலத்தில் இருந்தது என்பதற்கான கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. இந்தத் தலம் ஒருகாலத்தில் மிகவும் செழுமையாக இருந்தது என்றும் கருதப்படுகிறது.

கடல் மட்டத்திற்கு 1500 அடி உயரத்தில் ஒரு சமவெளியில் மல்லிகார்ஜுனஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. மேற்கு புறத்தில் பிரமராம்பிகைக்கு ஒரு கோயில் உள்ளது. அம்பாளின் அவதாரமாக இங்குள்ள தேவி கருதப்படுகிறார்.

பழமையான புகழ் வாய்ந்த சக்தி பீடங்களில் பிரமராம்பிகை கோயிலும் ஒன்று. லிங்காயத ஜங்கம பூசாரிகளாலே மல்லிகார்ஜுன ஜ்யோதிர்லிங்கம் 'லிங்க சக்ரவர்த்தி'என்று அழைக்கப்படுகிறது. ஒன்றின் பின் ஒன்றாக இங்கு சிவனுக்கும் சக்திக்கும் பெருவிழாக்கள் தனித்தனியாக நடைபெறுகின்றன. மஹாசிவராத்திரி தினத்தன்று சிவனுக்கான விழா நடைபெறுகிறது. அதன்பின் சக்தியின் விழா நடைபெறுகிறது.