Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

“ப்ரத்யேகச் சூழ்நிலை” : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

“அதென்ன ப்ரத்யேகச் சூழ்நிலை?” என்றால்,

ப்ராமணன்தான் எல்லா ஜாதியாருக்கும் அவரவருக்கான தொழிலைக் கற்பிக்க வேண்டியவன் என்பது நம் பூர்விகர்களுடைய ஏற்பாடு. தொழில் மாத்திரமின்றி தர்மம், ஆத்ம க்ஷேமத்துக்கான விஷயம் முதலியவற்றையும் ப்ராமணர்கள் பிறருக்கு போதிப்பார்கள். ஆனாலும் இப்படி போதிக்கும்போது நாலாம் வர்ணத்தாராகிய ஜன ஸமூஹத்துக்கு வேதத்தை மட்டும் நேராக சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். ஜனங்களிடையே பலவேறு தொழில்களையும் பாரம்பர்யமாகப் பங்கீடு செய்து வைத்த நம்முடைய வர்ண தர்மத்தின்படி வேதக் கல்வியும் அதன்படியான அநுஷ்டானங்களும் ப்ராமணன் ஒருத்தனுக்குத்தான் ஆயுள் காலத் தொழில் என்று பங்கீடு பண்ணி வைத்து விட்டதால் இவற்றை ஓரோர் அளவுக்கு மாத்திரம் க்ஷத்ரியர்களுக்கும் வைச்யர்களுக்கும் சொல்லிக்கொடுப்பது, நாலாம் வர்ணத்துக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை என்று வைத்துக் கொண்டிருந்தார்கள்1. நேராக வேதத்தைச் சொல்லிக் கொடுக்காவிட்டாலும் அதன் அபிப்ராயங்களையும், தத்வார்த்தங்களையும் புராண இதிஹாஸங்களாகவும் நீதி நூல்களாகவும் எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்தார்கள்.

ஆனாலும் இந்த ஆத்மார்த்தமான போதனை என்பது பொதுஜனக்ஙளுக்கு குரு – சிஷ்யரென்று க்ளாஸில் பாடம் நடத்துவதுபோல அதிகம் நடக்கவில்லை. குருகுலத்தில் முக்யமாக வேத அத்யாபனமே நடந்தது. அத்யாபனம் முடித்து, ஆசார்யர்கள் போஜனம் பண்ணிவந்த பிற்பாடே மற்றவர்கள் வந்து அவர்களிடம் போதனை பெறுவதாக இருந்தது. இந்த ஆசார்யர்களை விடப் பௌராணிகர்கள், உபந்யாஸகர்கள் ஆகியவர்கள்தான் புராண இதிஹாஸம், நீதி நூல்கள் ஆகியவற்றைப் பொது ஜனங்களுக்கு அதிகமாக ப்ரசாரம் செய்து தத்-த்வாரா அவர்களுக்கு ஆத்ம முன்னேற்றத்துக்கான விஷயங்களைப் பரப்பினார்கள்.

இதரர்கள் (நாலாம் வர்ணத்தார்) அவர்களுடைய ஜாதித் தொழில்களை வெகு நன்றாகச் செய்து கொண்டிருக்கும்போது அதை விட்டுவிட்டுத் தொழில் கற்றுக்கொள்வதற்காக எங்கோ ஒதுக்குப்புறத்திலிருந்த குருகுலத்துக்கு அவர்களுடைய குழந்தைகள் போகவேண்டிய அவச்யமிருக்கவில்லை. வீடே அவர்களுக்குப் பள்ளிக்கூடமாகவும் இருந்தது.

வேதத்தைத்தான் ப்ராமணனிடமிருந்தே கற்க வேண்டுமென்றும், மற்ற தொழில்களுக்கான சாஸ்த்ரங்களை அந்தந்த ஜாதியாரே தங்களுக்குள் கற்றுக்கொடுத்துக் கொள்ளலாம் என்றும் ஸ்ம்ருதிகள் அநுமதிக்கின்றன. நடைமுறை ஸெளகர்யத்தை உத்தேசித்தே இவ்வாறு அநுமதித்திருப்பது. தொழிலாளி ஸமூஹப் பசங்கள் ஒரு காலத்தில் படித்துவிட்டு, அப்புறம் பிற்காலத்தில் அதை ‘அப்ளை’ பண்ணித் தொழில் செய்வது என்றில்லாமல், ஆரம்பத்திலிருந்து வீட்டுப் பெரியவர்களுக்கு அஸிஸ்டெண்டாகத் தொழிலில் உதவி செய்து, அப்போதே கற்றுக் கொள்ளவும் செய்தார்கள். ஏதாவது ஸந்தேஹம் வந்தாலோ, ஏதோ ஒரு நுணுக்கம் தெரியவேண்டுமென்றாலோ மட்டுமே அந்தத் தொழிலைப் பற்றிய சாஸ்த்ர அபிப்ராயம் தெரிவதற்காக ப்ராமண ஆசார்யனிடம் போய்க் கேட்டுக்கொண்டால் போதும் என்று இருந்தது. இப்படிப்பட்ட நுணுக்கங்கள் தெரிந்த அநுபவஸ்தர்களுங்கூட இந்த ஜாதிகளிலேயே இருந்ததால் இதற்குங்கூட “அய்ய”ரிடந்தான் போகணுமென்று கட்டாயம் இருக்கவில்லை. தட்டார்களை, சில்பிகளை, தச்சர்களையெல்லாங்கூட “ஆச்சாரி” என்று சொல்வதிலிருந்து அந்தந்த ஜாதியிலும் அவர்களைச் சேர்ந்தவர்களே நிரம்ப விஷயஜ்ஞர்களாகி ஆசார்யஸ்தானத்தில் இருந்துகொண்டு கற்றுக் கொடுத்திருக்கிறார்களென்று தெரிகிறது.

வேத வித்யையில் அதிகாரம் பெற்ற மூன்று வர்ணத்தாருக்கும் பழங்கால வித்யாசாலைகளில் சேரத் தகுதியிருந்தாலும் உபநயன ஸம்ஸ்காரத்தை இந்த வர்ணத்தினர்களுக்கு வேறு வேறு வயஸில் வைத்திருப்பதை இங்கே குறிப்பிடவேண்டும். உபநயனத்துக்கு முந்தியே அக்ஷராப்யாஸம் என்று ஒன்று வந்தது பிற்காலத்தில்தான். நாற்பது ஸம்ஸ்காரங்களில் அக்ஷராப்யாஸம் இல்லை2. அக்ஷராப்யாஸத்தில் குழந்தையின் கையைப் பிடித்து எழுதுவிப்பதுதான் முக்யமாயிருக்கிறது. ஆதி ஸ்கூலிலோ எழுதுவது, எழுத்து என்பவையே அதிகம் கிடையாது, காதால் கேட்டுத்தான் பாடம் பண்ணணும் என்று சொன்னேனே! அப்போது உபநயனமேதான் வித்யாப்யாஸத்துக்கு ஆரம்பமாக இருந்தது. உபநயனத்தில் செய்யும் காயத்ரி மஹாமந்த்ரோபதேசம்தான் வேதத்தைக் காதால் கேட்டுப் பாடம் பண்ணுவதற்கு அங்குரார்ப்பணம். உபநயனம் பண்ணி குருகுலத்தில் விடுவதே வழக்கம்.

இப்படிப் பண்ணுவதில் ப்ராமணப் பிள்ளையானால் எட்டு வயஸுக்கே பூணூல் போட்டு குருவிடம் அனுப்புவது என்றும், க்ஷத்ரியப் பிள்ளைக்குப் பதினோரு வயஸிலும் வைச்யப் பிள்ளைக்குப் பன்னிரண்டு வயஸிலும் இப்படிச் செய்வதெனறும் இருந்திருக்கிறது.

ப்ராமணப் பிள்ளையைப் பதினாறு வயஸுக்கு மேல் பூணூல் போடாமல் வைக்கப்படாது. இதேமாதிரி க்ஷத்ரியனுக்கு ‘அப்பர் லிமிட்’ இருபத்திரண்டு வயஸு. வைச்யனுக்கு இருபத்திநாலு.

ரொம்ப சூட்டிகையாயிருந்தால் ப்ராமணப் பிள்ளைக்கு ஐந்து வயஸிலும், க்ஷத்ரியப் பிள்ளைக்கு ஆறு வயஸிலும், வைச்யப் பிள்ளைக்கு எட்டு வயஸிலும் பூணூல் போட்டு வித்யாப்யாஸம் ஆரம்பிக்கலாம்.

ஏன் இப்படி ப்ராமணனைவிட மற்ற ஜாதியாருக்கு வித்யாப்யாஸத்தை வித்யாஸப்படுத்தியிருக்கிறது, தள்ளிப் போட்டிருக்கிறது என்றால்…

எந்தக் குழந்தையானாலும் அதற்கு அதனுடைய இயற்கையான வீட்டுச் சூழ்நிலையில், அதற்கான வாழ்க்கைத் தொழிலில் இயல்பான ருசி ஏற்படும் என்பதுதான் காரணம். இமிடேட் பண்ணுவது குழந்தையின் குணம். ப்ராமணனைத் தவிர மற்றவர்கள் உடம்பாலே நிறையத் தொழில் செய்பவர்கள். ஒருத்தன் கத்தி சுழற்றுவான். இன்னொருத்தன் உழுவான். இன்னொருத்தன் நெசவு செய்வான், இப்படிப் பல. அந்த ஜாதித் தொழில்களை ஸ்வதர்மமாகக் கொண்ட குழந்தைகள் குருகுலத்திலே அந்தத் தொழில்களில் எதுவுமே நடப்பதைப் பார்க்கமுடியாது. தொழில் செய்கிற இடமில்லை குருகுலம். தொழில்முறையை அறிகிற, அறிவைப் பரப்புகிற இடம்தான் அது. இப்போது மாண்டிஸோரி முதலானவர்கள், செய்து தெரிந்துகொள்ள வேண்டியவற்றைப் பாடமாகச் சொல்லிக் கொடுப்பது முறையில்லை; இப்படிச் செய்வது ஒரு குழந்தையை ஸரியாக உருவாக்காது, அந்தக் கார்யமும் இதனால் ஸரியாக உருவாகாது என்று அபிப்ராயப்பட்டு புது தினுஸான கல்விமுறை கொண்டுவந்திருக்கிறார்கள் அல்லவா? இது புது தினுஸே இல்லை. நம் ஆதிகால மூதாதையர் இந்த வழியைத்தான் பின்பற்றினர். அதனால்தான் அறிவை வளர்ப்பதையே ஆயுஸ்காலத் தொழிலாகக் கொண்ட ப்ராமண ஜாதியில் பிறந்த குழந்தைகளைத் தவிர மற்ற ஜாதிக் குழந்தைகளை ரொம்பவும் சின்ன வயஸில் குருகுலத்தில் அடைக்க வேண்டாம்; அந்தக் குழந்தைகள் அகத்திலேயே அப்பன் பாட்டனோடு ஸந்தோஷமாக வஸித்துக்கொண்டும், அவர்களோடேயே ஆயுதசாலைக்கோ கடைக்கோ நிலத்துக்கோ பட்டறைக்கோ போயும் அவர்கள் செய்யும் தொழிலைப் பார்த்துத் தெரிந்துகொண்டு, ‘இமிடேஷன்’ செய்கிற ‘இன்ஸ்டிங்க்டி’ல் அதே மாதிரி செய்துகொள்ளட்டும் என்று விட்டார்கள். இப்படி வேலையில் குழந்தை ஒத்தாசை செய்வது அந்த ஜாதியாருக்கு வேலையையும் குறைத்து வருமான லாபத்தையும் உண்டாக்கிற்று.

இன்னொரு அம்சத்தையும் கவனிக்கவேண்டும். மந்த்ர சக்தியை உண்டாக்கிக்கொள்ள வேண்டியதை முன்னிட்டு ஆஹாரம் முதலானவற்றில் ப்ராமணக் குழந்தைக்கு இருக்கிற கட்டுப்பாடு மற்ற ஜாதிக் குழந்தைகளுக்கு இல்லை. ப்ராமமணன் நடத்தும் குருகுலத்தில் அந்த மற்றக் குழந்தைகளுக்குப் பழக்கமான, அவர்களுக்குத் தேவையான ஆஹாராதிகளை எப்படிச் சேர்க்கமுடியும்?

இத்யாதி காரணங்களால் அந்தக் குழந்தைகள் கொஞ்சம் நாக்கைக் கட்டக்கூடிய பருவத்தில் குருகுலத்துக்கு வந்தால் போதும் என்று உபநயன வயஸை உயர்த்தி நிர்ணயித்தார்கள்.

தங்கள் தங்கள் தொழிலை மட்டும் கற்றுக் கொள்வதானால் மற்ற ஜாதிக் குழந்தைகள் தங்களுடைய குடும்பத்திலிருந்துகொண்டே அதைப் பெரிய அளவுக்குச் செய்து விடலாம். எனவே அவர்கள் குருகுலத்துக்கு வந்ததே முக்யமாக வேத சாஸ்த்ர அப்யாஸத்துக்காகத்தான். இதில் அவர்கள் ப்ராமணப் பசங்களைப் போல தேர்ச்சி பெற வேண்டிய அவச்யமில்லை. அப்படிச் செய்தால் அப்புறம் அவர்கள் செய்யவேண்டிய ஸ்வதர்மத் தொழிலே பாதிக்கப்பட்டுவிடும். எனவே ஓரளவு வேத சாஸ்த்ர ஞானம் அவர்களுக்குப் போதுமானதாயிருந்தது. இதைப் பெறுவதற்காக அவர்கள் ப்ராமணப் பசங்கள் மாதிரி நீண்டகாலப் வித்யாப்யாஸம் செய்ய வேண்டியிருக்கவில்லை.


1வர்ண தர்மம் குறித்து முன் மூன்று பகுதிகளிலும் உரைகளும் உரைப்பகுதிகளும் உள்ளன. குறிப்பாக முதற்பகுதியில் ‘வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?‘ என்ற உரை பார்க்கவும்.

2 இரண்டாம் பகுதியில் “ ” என்ற உரை பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is புது மதங்களும் பெரிய கல்வி நிலையங்களும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பாடதிட்டத்தில் வேறுபாடுகள்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it