குரு பீடத்துக்கும் பொருந்தும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இப்படிச் சொல்லும்போது பாடம் சொல்லிக் கொடுக்கிற குருவை மட்டும் நினைத்துக்கொண்டு நான் சொல்லவில்லை. ஜனங்களுக்கெல்லாம் நல்லது செய்வதற்காக, நல்ல வழியைக் காட்டிக் கொடுப்பதற்காக, இந்த ஸம்ஸாரவனாந்தரத்திலிருந்து ஸாக்ஷாத் ஈச்வரனிடமே கொண்டு சேர்க்கும் வழியைக் காட்டவதற்காக ஏற்படுத்தி வழிவழியாக வந்துள்ள குரு பீடங்களில் உட்கார்ந்துகொண்டு, குரு பட்டம் கட்டிக்கொண்டிருக்கிற என் மாதிரியானவர்களையும் நினைத்தே சொல்கிறேன்.

சிஷ்யர்கள் நல்ல சிஷ்டர்களாக, அதாவது அவர்களுக்கு ஏற்பட்ட சாஸ்த்ரக் கட்டுப்பாடுகளை வழுவாமல் பின்பற்றுபவர்களாக இருந்தால்தான் நாங்களும் அவர்களுடைய ஆதரவையும் மரியாதையையும் பெறும் விதத்தில் எங்களுக்காக ஏற்பட்ட, அதைவிடக் கடுமையான சாஸ்த்ரக் கட்டுப்பாடுகளைப் பூர்ணமாக அநுஸரித்து நல்ல ஒழுக்கத்தோடும் ஆசார அநுஷ்டானத்துடனும் இருப்போம். அப்படியில்லாமல், சிஷ்யர்கள் அவர்களுக்கான நியமங்களின்படி இல்லாமல் தற்போதுள்ள மாதிரி இருந்தால் என்ன ஆகிறது? இந்த சிஷ்யர்கள் சந்நியாஸியான ஒரு குரு அவனுக்கென்று போட்டிருக்கிற ரூல்களைப் பின்பற்ற முயல்வதையே பெரிசாகப் புகழ்கிறார்கள். ஆஹாரம், வாஸ ஸ்தானம், வஸ்த்ரம் முதலானதுகளில் யதியான ஒரு குரு பரம எளிமையானவற்றைத்தான் கைக்கொள்ள வேண்டும். அது அவனுக்கான Imperative (கண்டிப்பான விதி). கொஞ்சம் விழுப்புப் பட்டால்கூட அவன் ஸ்நானம் பண்ணணும், உபவாஸம் இருக்கணும். நிரம்பத் தபஸ் பண்ணிக்கொண்டு, கொஞ்சம்கூடப் பிறழாமல் ஆசார நியமங்களை அநுஷ்டித்துக்கொண்டு அவன் இருந்தால்தான் அவன் தன்னளவில் நிஜமான யதியாக ஆகி ஸித்தி பெற முடியும்; பிறருக்கும் நிஜமாகவே குருவாகி அவர்களை ஸம்ஸாரத்திலிருந்து ஸர்வேச்வரனிடம் கொண்டு சேர்க்கும் பாதையில் அழைத்துப் போக முடியும். அணுசக்தி நிலையத்தில் வேலை செய்பவர்கள் எப்படி ‘ரேடியேஷ’னால் பாதிக்கப்படாமலிருப்பதற்காக அநேக ‘ப்ரிகாஷன்’களை கவனமாக மேற்கொண்டு, இன்ன மாதிரி ட்ரஸ், இந்த (உ)லோஹம்தான் கிட்டே வரலாம் என்பதையெல்லாம் நுணுக்கமாகப் பின்பற்றுகிறார்களோ அப்படியேதான் நாங்களும் அநாசார ரேடியேஷனைக் குறித்து ஜாக்ரதையாக நடந்து கொள்ளவேண்டும்.

அடாமிக் ரியாக்டரில் வேலை செய்கிறவன் அந்த ரூல்களின்படிச் செய்யாவிட்டால் கெடுதல் – அவனுக்கும் கெடுதல், ரியாக்டருக்கும் ஹானி ஏற்பட்டு ‘பெனிஃபீஷியரி’ (ரியாக்டரால் பயன்பெற வேண்டியவர்) களும் பயன்பெறாமல் போவார்கள். அதனால் அவன் ரூல்படிச் செய்யாவிட்டால்தான் அவன் மேல் ஆக்ஷன் எடுத்துத் தண்டிப்பார்களே ஒழிய, ரூல்படிப் பண்ணினால் அதற்காக யாரும் மெச்சிப் பாராட்டு விழா நடத்துவதில்லை. இப்படியே நாங்கள் எங்களுக்கான யதி தர்மங்களைக் கொஞ்சம்விட்டால்கூட அதற்காக எங்களைக் கண்டிக்க வேண்டுமே தவிர, பின்பற்றினால் அதற்காக ஸ்தோத்ரம் செய்ய வேண்டியதில்லை. பூர்ணமாகப் பின்பற்றுகிறோமா, பின்பற்றமுடியுமா என்றே கவலையாகத்தான் இருக்கிறது. இந்த லக்ஷணத்திலேயே, “ஐயோ, எத்தனை வ்ரதம்? எவ்வளவு நியமம்? எப்படி நமக்காகத் தம்மையே தண்டித்துக் கொள்கிறார்? என்ன தியாகம்?” என்றெல்லாம் ஸ்தோத்ரம் செய்தீர்களானால், நாளாவட்டத்தில் அது மண்டைக்குள் ஊறி, இப்போது அரைகுறையாகப் பின்பற்றும் நியமங்களையும் மேலும் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக்கொண்டு போனால் என்ன என்று தோன்ற ஆரம்பித்து விடலாம். அதோடு மடமும் போச்சு, அதனால் லோகம் பெறவேண்டிய அத்தனை நல்லதும் போச்சு என்றாகிவிடும்.

சிஷ்யர்களும் அவர்களுக்கான வ்ரத உபவாஸங்கள், மற்ற ஆசார நெறிகள், அநுஷ்டானங்கள் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களாக இருந்தால் ஆசார்யன் அவனுக்கான விதிகளைக் கண்டிப்புடன் அநுஸரிப்பதை இப்படி ‘ஓஹோ’ என்று புகழ மாட்டார்கள். அதனால் அவனுக்குத் தலைக்கனம் ஏறுவது; அல்லது அவன் நியமங்களைக் குறைத்துக் கொள்வது போன்ற ஆபத்துக்களுக்கும் இடமில்லாமல் போகும். ‘இப்படிப் பரம சிஷ்டர்களான சில சிஷ்யர்களாவது நமக்குக் கிடைக்க வேண்டும். நாமே நியம லோபமாக (குறைவாக) ஏதாவது பண்ணினால்கூட நம்மையே, ‘என்ன ஸ்வாமிகளே, இப்படிப் பண்ணலாமா?’ என்று தட்டிக் கேட்டு ஸரிப்படுத்த வேண்டும் என்பதுதான் என் ஆசை.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is குருலக்ஷணம் குருவை சிஷ்யன் உரு செய்வது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தனித்துறவியும், பீடகுருவும்
Next