Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

கண்ணன் கதையில் ஆசானின் அன்புடைமை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

நம்முடைய சாஸ்த்ர, புராணங்களிலிருந்து இந்த அன்புடைமையில், அருளுடைமையில் அந்நாள் ஆசார்யர்கள் ஆதர்ச புருஷர்களாக இருந்திருப்பது தெரிகிறது. குரு சிஷ்யர்களுக்கிடையிலே பரஸ்பர ப்ரியம் போகவே கூடாது என்றுதான் பாடம் ஆரம்பிக்கும்போதே மந்த்ர பூர்வமாக வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். “(குரு – சிஷ்யர்களான) நாங்கள் ஒருத்தருக்கொருத்தர் பகைத்துக் கொள்ளாமல் இருக்கவேண்டும்” என்பது பாட ஆரம்பத்திலும், முடிவிலும் வருகிற உபநிஷத் பிரார்த்தனை.

“அடிக்கிற கைதான் அணைக்கும்” என்பதற்கு அப்படியே ரூபகமாக அந்த ஆசார்யர்கள் இருந்திருக்கிறார்கள். கண்டிப்புச் செய்ய வேண்டிய இடத்தில் எப்படி நிர்தாக்ஷிண்யமாகக் கண்டித்தார்களோ அப்படியே அன்பைக் கொட்ட வேண்டிய ஸமயத்தில் கொட்டினார்கள். பாகவதத்தைப் பார்த்தால் போதும் – இரண்டும் தெரியும். பகவானே குசேலரிடம் தாங்களிருவரும் சேர்ந்து குருகுலவாஸம் செய்த நாட்களைப்பற்றி ஞாபகப்படுத்துகிறார்.

கம்ஸவதமான பின் பகவானுக்கும் பலராமருக்கும் உபநயனமாகி அவர்கள் ஸாந்தீபனி என்ற பிராமணரிடம் குருகுலவாஸம் செய்கிறார்கள். ஸர்வ வித்யைகளும் அவனிடமிருந்துதான் என்றாலும் லோகத்துக்கு குரு பக்தியை உதாரணம் காட்டவே பகவானும் இப்படி ஒரு ஆசார்யனிடம் போய்ப் படித்தான் என்று பாகவதம் சொல்கிறது. ஆனாலும் பகவானுக்கு அவதார கார்யங்கள் நிறையக் காத்துக் கொண்டிருந்ததால் பன்னிரண்டு வருஷம் வித்யாப்யாஸம் செய்வது என்று வைத்துக்கொள்ளாமல், தன் திவ்ய சக்தியையும் கொஞ்சம் கைக்கொண்டு, ஒரு நாளுக்கு ஒரு சாஸ்த்ரம் வீதம் அறுபத்துநாலே நாளில் அத்தனை சாஸ்த்ரமும் கற்றுக்கொண்டு விடுகிறார். (பலராமரும்தான். அவரும் அவதாரம்தானே?) இதிலிருந்தே க்ருஷ்ணருடைய தெய்விக ப்ரபாவத்தை குரு ஸாந்தீபனி தெரிந்துகொண்டு விடுகிறார். அதனால் பிற்பாடு சிக்ஷை பூர்த்தியாகி, “என்ன தக்ஷிணை தரணும்?” என்று பகவான் கேட்டபோது, ரொம்ப நாள் முந்தி ஸமுத்ரம் அடித்துக்கொண்டு போய்விட்ட தன்னுடைய பிள்ளையை அவர் யமாலயத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்து தரவேண்டும், அதுதான் தமக்குவேண்டிய தக்ஷிணை என்கிறார். பகவானும் அப்படியே பண்ணுகிறார். அது இப்போது நமக்கு விஷயமில்லை.

பின்னே எது விஷயம் என்றால், இப்படி தெய்வசக்தி பொருந்தியவராக க்ருஷ்ணரை அவருடைய ஆசார்யர் தெரிந்துகொண்டிருந்தபோதிலும், ‘சீஷப்பிள்ளை என்று வந்த ஒருத்தனை ஆசார்யர் நன்றாக வேலை வாங்கி, பணியினாலும் பணிவினாலும் கட்டுப்படுத்தி சுத்தி செய்வார்’ என்று லோகத்துக்குக் காட்டவே அவர் இந்த சிஷ்ய வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் தெரிந்து கொண்டார். எனவே வேலை வாங்குவதை இவர் விஷயத்திலும் விட்டு விடக் கூடாது என்று இருந்திருக்கிறார்.

அருமையிலும் அருமையான குழந்தை க்ருஷ்ணன், அதே ஸமயத்தில் அறிதற்கரியவராக இருந்த பகவான், குருவின் ஆக்ஞைப்படி காட்டுக்குப் போய் விறகு வெட்டிக் கொண்டு வந்துகூடக் கைங்கர்யம் பண்ணியிருக்கிறார்! அந்த நாட்களில் ஒன்றைப் பற்றித்தான் அப்போது தம் ‘க்ளாஸ்மேட்’டாக இருந்த குசேலரிடம் நீண்ட காலத்துக்குப் பின்னால் பகவான் நினைவு படுத்துகிறார்.

க்ருஷ்ணரும் குசேலரும் ஒருநாள் இப்படி விறகுக்காக அடர்ந்த காட்டுக்குப் போனபோது இருட்டிவிட்டது. அதோடு பேய் மழையும் பிடித்துக்கொண்டுவிட்டது. மேடு பள்ளம் தெரியாமல் ஒரே ப்ரளயமாயிற்று. திக்கு திசை புரியாமல் கும்மிருட்டு வேறே. நரலீலையிலே பகவான் நிஜமாகவே தமக்குத் திக்கு திசை புரியாத மாதிரிதான் நடித்தார். “நானும் நீங்களும் பயந்துண்டு, துக்கப்பட்டுண்டு ஒத்தர் கையை ஒத்தர் கோத்துண்டு ரத்ரியெல்லாம் சுத்தி சுத்தி வந்தோமே! ஞாபகமிருக்கோல்லியோ?” என்று அவரே குசேலரைக் கேட்கிறார். குருவின் வேலை வாங்கும் கண்டிப்பால் வந்தது இது.

இனிமேல் குருவின் அன்பையும் பாசத்தையும் பகவான் வாய் வார்த்தையாகத் தெரிந்து கொள்கிறோம். “குழந்தைகளைக் காணோமே-ன்னு அங்கலாச்சுண்டு குருநாதரும் நம்மைத் தேடிண்டு வந்து, ஸூர்யோதய ஸமயத்தில் கண்டு பிடிச்சாரே! ‘ஐயோ பாவம்! எனக்காக எத்தனை கஷ்டப்பட்டுட்டேள்?’ என்று நம்மிடம் எப்படி உருகிப் போயிட்டார்? அதற்குப் பரிஹாரமாக நமக்கு எப்படி மனஸழர அநுக்ரஹம் பண்ணி, ‘உங்களுடைய நல்ல நினைப்பெல்லாம் பூர்த்தியாகட்டும். நீங்க படிச்ச வேதம் எந்நாளும் பூர்ணசக்தியோடு உங்களை ரக்ஷிச்சுண்டு இருக்கட்டும்’ என்றெல்லாம் வரம் கொடுத்தாரே!” என்று ஞாபகப்படுத்துகிறார்.

மொத்தத்தில் குரு என்பவர் வித்யாஸம்பத்து மட்டுமில்லாமல் குண ஸம்பத்து, அநுஷ்டான ஸம்பத்து, ஆத்ம ஸம்பத்து எல்லாம் ஒருங்கே கூடியவராக இருந்தார்.

இப்படி அவர் இருக்கும்படியாகச் செய்தது அந்தப் பழைய நாளின் குருகுல முறையேதான். சில சிஷ்யர்கள் மட்டும் ஒரு குருவின் ஆதரவில் அவருடைய க்ருஹத்திலேயே இருந்து படிப்பது என்ற கல்வி முறையில் குரு சிஷ்யன் ஆகிய இருவருமே சுத்தர்களாகத்தான் இருந்தாக வேண்டுமென்றிருந்தது. அந்த முறையே அவர்களை அப்படி சுத்தர்களாக உருவாக்கவும் செய்தது.

சிஷ்யர்கள் கூடவே வஸித்தும் அன்பு, மரியாதைகள் செலுத்த வேண்டுமென்றால் குரு நல்லொழுக்கமுள்ளவராகவும், அநுக்ரஹ சக்தி பெற்றவராகவும் இருந்தால்தானே முடியும்? அதேபோல் புத்தி மட்டத்திலும்கூட சிஷ்யன் கூடவே இருந்து, ‘பரிப்ரச்நம்’ என்று பகவான் சொன்னபடி அவரைக் குடைந்து குடைந்து கேள்வி கேட்கிறானென்றால் அப்போது அவர் தாம் போதிக்கிற சாஸ்த்ரத்தில் நல்ல ஆழ்ந்த அறிவை உண்டாக்கிக் கொண்டேயாக வேண்டியிருந்திருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பரீஷை செய்து படிப்படியாக உபதேசம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  குருலக்ஷணம் குருவை சிஷ்யன் உரு செய்வது
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it