Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

தெய்வசக்திகள் போதித்தாலும் குருபக்தி குறையாதது : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அப்போதுதான், அவன் பார்த்துப் பார்த்துப் போஷித்துக்கொண்டு வந்த மூன்று அக்னிகள் தங்கள் ஸாந்நித்யத்தை வெளிக் காட்டின. “பாவம், நமக்கு இத்தனை பண்ணின பிள்ளை சாப்பாடு கொள்ளாத அளவுக்கு வேதனைப்படுகிறானே! இனியும் காலஹரணம் பண்ணாமல் நாமே இவனுக்கு உபதேசம் பண்ணிவிடுவோம்” என்று அதுகள் தங்களுக்குள்ளே முடிவு செய்தன. அந்தப்படியே அவனுக்கு உபதேசமும் பண்ணிவிட்டன. முதலில் அவை மூன்றும் சேர்ந்தும், அப்புறம் ஒவ்வொன்றும் தனித்தனியாயும் அக்னி வித்யையையும் ஆத்மவித்யையையும் உபதேசித்தன.

ஆனாலும் அவனுக்கு குருவின் தேவையில்லாமல் தாங்களே எல்லா உபதேசமும் கொடுத்துவிட்டால் அவர் மரியாதையைக் குறைத்ததாகிவிடும் என்பதால் அக்னிவித்யை ஆத்ம வித்யை இவற்றின் (philosophy-ஐ) தத்வத்தை மட்டும் சொல்லிக் கொடுத்துவிட்டு, “ஸெளம்யா!, இனிமேல் ஆசார்யர்தான் உனக்கு இந்த தத்வங்களை அநுபவமாக்கிக் கொள்வதற்குச் செய்யவேண்டிய கார்ய க்ரமங்களை (procedure-ஐயும்), (technique-ஐயும்) சொல்லிக் கொடுக்கணும்” என்று முடித்துவிட்டன.

ஆசார்யார் திரும்பிவந்தார். “உபகோஸலா!” என்று அவனைக் கூப்பிட்டு கொண்டேதான் உள்ளே நுழைந்தார்.

“பகவானே!” என்று குரல் கொடுத்துக்கொண்டு அவனும் அவர் முன்னே போய் நின்றான்.

அவர் ஒரு பக்கம் சோதனை பண்ணினாலும், இவன் ஒரு பக்கம் வேதனைப்பட்டாலும் பரஸ்பரம் அன்பு மட்டும் போய் விடவில்லை என்று இங்கே உபநிஷத் ஸூக்ஷ்மமாகக் காட்டுகிறது.

பிள்ளையாண்டானைப் பார்த்தார். அவன் முகம் ஒரே தேஜஸாகப் பிரகாசித்தது. ‘ஓஹோ, இப்படியா ஸமாசாரம்!’ என்று ஊஹித்துவிட்டார். “ளௌம்யா, யார் உனக்கு உபதேசம் பண்ணினார்கள்?” என்று அவனையே கேட்டார்.

பையனை பயம் பிடித்துக் கொண்டது. அவரன்னியில் அவருடைய குருகுலத்திலிருந்துகொண்டே உபதேசம் வாங்கிக்கொண்டது தப்போ என்று பயம். கருணையோடு உபதேசித்த அக்னிகளைக் காட்டிக் கொடுப்பதா என்ற தயக்கம் வேறே! குருவிடம் ஒளிக்கவும் கூடாது; நடந்ததை அப்பட்டமாகப் போட்டு உடைக்கவும் கூடாது என்று நினைத்தான். ஜாடை மாடையாய்ப் புரிய வைத்துவிட எண்ணி, “வேறே யார் உபதேசிப்பார்கள் ஸ்வாமி? இந்த அக்னிகள்தான் இப்போது இருக்கிற மாதிரி இல்லாமல் கொஞ்சம் வேறே மாதிரியாக இருந்தன” என்றான்.

அவர் வைத்த கடைசி டெஸ்டிலும் அவன் ஜயித்து விட்டான். ‘இனியும் தாங்காமல் அக்னிகள் உபதேசம் பண்ணிவிடும்’ என்று அவர் மனஸுக்கே தெரிந்த ஒரு ஸ்டேஜில்தான் அவர் வேண்டுமென்றே அகத்தை விட்டுப் போனார். ஏனென்றால் அவர் வாழ்க்கையிலேயே பூர்வத்தில் இப்படி நடந்திருக்கிறது.

*ஹாரித்ரும கௌதம ரிஷி என்பவர் பூர்வத்தில் இந்த ஸத்யகாமருக்கு உபநயனம் செய்துவைத்து நானூறு சோனிப் பசுக்களை அவரிடம் மேய்த்துவரச் சொன்னார். அந்த சோனிப் பசுக்களை நன்றாகப் போஷித்துப் புஷ்டி பண்ணி, கன்று போடவைத்து, நானூறை ஆயிரமாக வ்ருத்தி பண்ணிக் கொண்டுதான் குருவிடம் திரும்பி வந்து உபதேசம் வாங்கிக் கொள்வது என்று ஸத்மகாமர் தீர்மானம் செய்து கொண்டு கிளம்பினார். அந்தத் தீர்மானம் கார்யமாக நிறைவேறுவதற்கு அநேக வருஷங்கள் பிடித்தன. பசுமந்தையை ஆயிரமாக்கி ஸத்யகாமப் பிரம்மசாரி குருகுலத்துக்குத் திரும்பி வருகிற வழியிலேயே அதிலிருந்த ஒரு ரிஷபம் அவருக்கு ஒரு உபதேசம் பண்ணிற்று. மறுநாள் அக்னி ஒரு உபதேசம் பண்ணிற்று. அதற்கடுத்த இரண்டு நாட்களில் ஒரு ஹம்ஸ பக்ஷியும், மத்கு என்கிற ஒரு (நீர்வாழ்) பக்ஷியும் உபதேசம் பண்ணின. இப்போது உபகோஸலனுக்கு உபதேசம் கேட்டதால் தேஜஸ் உண்டானாற்போலவே அப்போது ஸத்யகாமருக்கும் உண்டாயிற்று. இப்போது இவர் உபகோஸலனைக் கேட்டாற் போலவே அப்போது ஹாரித்ருமர் இவரிடம், “உனக்கு யார் உபதேசித்தது” என்று கேட்டார். இப்போது உபகோஸலன் நாசூக்காக பதில் சொன்னது போலவே அப்போது அவர், “மநுஷ்யாள் யாரும் உபதேசிக்கவில்லை” என்று சொன்னார். அதோடு, தம்மைப் பொறுத்தமட்டில் ஹாரித்ருமரேதான் தம்முடைய உபதேச குருவாக இருக்க வேண்டுமென்று தமக்கு ஆசை என்றும் விஜ்ஞாபித்துக்கொண்டார்.

இந்த இடத்திலே அவர் ஆசாரியன் அத்யாவச்யம் என்கிற கருத்தையும் வெளியிட்டிருக்கிறார். ‘ஆசார்ய முகமாகக் கற்கின்ற வித்யைதான் உத்தமமான பலன் தரும்’ என்று அவர் சொல்வதாக இருக்கிறது. சிஷ்யனாக உள்ள தாம் இப்படி முடிவு பண்ணி அபிப்ராயம் சொல்வதுகூட அதிக ப்ரஸங்கித்தனம் என்று நினைத்து அவர், “தங்களை போன்ற பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்பது என்னவெனில், ஆசார்ய முகமாக அறிகிற வித்யைதான் உத்தம பலன் தரும் என்பது” என்கிறார்.

இப்படி ஒவ்வொரு எழுத்திலும் குரு – சிஷ்ய பாவங்கள் எப்படியிருக்க வேண்டுமென்பதை உபநிஷத்துக்கள் நுட்பமாகக் காட்டுகின்றன.

ஸத்யகாமர் சிஷ்யராயிருந்த கதையிலிருந்து ஆசார்யராகியிருக்கிற கதைக்கு வரலாம். உபகோஸலனுக்குத் தாம் உபதேசிக்காவிட்டாலும் திவ்ய சக்திகள் எதன் மூலமாகவாவது உபதேசம் பண்ணும் என்று ஸொந்த அநுபவத்திலிருந்தே அவருக்குத் தெரியும். “இம்மாதிரி உபதேசம் வாங்கிக்கொண்ட பிறகு பையன் எப்படி ஆவான்? ‘இனிமேலே இந்த குருவின் உதாஸீனத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இதே போல திவ்ய சக்திகளிடமிருந்தே எல்லா உபதேசங்களும் வாங்கிக்கலாம்’ என்று அஹம்பாவப்படுகிறானா என்று பார்க்கலாம். அப்படியில்லாமல் நம்மிடமே பூர்த்தியாக அத்யயனம் பண்ணுவதென்று இவன் இங்கேயே இருந்தால், (அக்னிகளிடம்) உபதேசம் வாங்கிக்கொண்டதைத் திமிராகச் சொல்லாமல் பயத்தோடு தெரிவிக்கிறானா, பார்ப்போம்” என்றெல்லாம் அவர் டெஸ்ட் பண்ண உத்தேசித்திருந்தார்.

அதிலே அவன் ரொம்ப நன்றாகப் பாஸ் பண்ணினதில் அவருக்குப் பரம த்ருப்தி ஏற்பட்டுவிட்டது.

“அக்னிகள் என்ன உபதேசம் பண்ணின?” என்று கேட்டார்.

சொன்னான்.

“அரைகுறையாக அதுகள் சொன்னதை இதோ நான் புஷ்களமாக உபதேசிக்கிறேன்” என்று சொல்லி இத்தனை காலம் ஏமாற்றியதற்கும் சேர்த்து அநுக்ரஹம் பண்ணி உபதேசம் கொடுத்தார் ஸத்யகாமர்.


*இக்கதை சாந்தோக்யம் 4-4-இல் காண்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is குரு பத்னி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பரீஷை செய்து படிப்படியாக உபதேசம்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it