Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

எழுத்தில்லாத போதனை! : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இப்படிச் சொல்லிக் கொடுத்தது எழுத்தின் மூலம் இல்லை. எழுத்துக்கு முக்யத்வம் வந்தது ரொம்பக் காலத்துக்குப் பிற்பாடுதான். இப்போது பள்ளிக்கூடம் என்றவுடன் நினைக்கப்படுகிற – blackboard (கரும்பலகை), சாக்பீஸ், ஸ்லேட் – பலப்பம், நோட்டு – பென்ஸில் – பேனா என்கிற எதுவும், புஸ்தகம் சுவடி முதலான எதுவுமே இல்லாதது ஆதிகால ஸ்கூல்! ‘படிப்பு’ என்று கல்வியைச் சொல்வதே புஸ்தகத்தைப் பார்த்துப் படிப்பதிலிருந்து ஏற்பட்டதுதான். அக்ஷராப்யாஸம் என்று வித்யாரம்பத்தைச் சொல்வதிலும் ‘அக்ஷரம்’ என்பது எழுத்தைச் சொல்வதாகவே இப்போது பல காலமாக வைத்துக்கொண்டு, குழந்தைக்கு அன்று ‘ஆனா’ எழுதச் சொல்லிக் கொடுக்கிறோம். இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தியே படிப்பில் எழுத்து பிரதானமாக வந்துவிட்டது என்பது திருவள்ளுவர், ஔவை முதலானவர்கள் எண், எழுத்து என்ற இரண்டையும் இரண்டு கண்களாகச் சொல்வதிலிருந்து தெரிகிறது.

ஆனால் நான் சொல்லும் மிகப் பழமையான வேதகாலத்தில் ஆரம்பித்து, அப்புறம் வெகுகாலம் வரையில் கூட எழுத்து, படிப்பது என்பது அதிகம் இல்லாமல்தான் விஸ்தாரமான வித்யாப்யாஸம் பூராவும் நடந்திருக்கிறது. என்ன செய்தார்களென்றால், வாய்மொழியாகவே சொல்லிக்கொடுத்து அதை மாணவன் காதால் கேட்டு மறுபடி வாயால் ஒப்பிக்கும்படிச் செய்தே பாடம் நடத்தினார்கள். வேதமந்த்ரங்களை எழுதி வைக்கவே கூடாது என்று பண்ணியிருந்தார்கள். ஏனென்றால் தெய்விகமான அந்த மந்த்ர சப்தங்கள் என்றைக்கும் லோகத்தில் இருந்துகொண்டு, அதன்மூலம் லோக க்ஷேமத்தை உண்டாக்க வேண்டுமென்பதற்காகத்தான். இதற்கும் எழுதி வைக்காமலிருப்பதற்கும் என்ன ஸம்பந்தம்?

லோகத்தில் மந்த்ர சப்தங்களைப் பரப்பிக்கொண்டிருக்கும்படியாக ஜனங்களில் ஒரு பிரிவை உறுதியாக ஏற்படுத்தித் தரவேண்டுமானால் அதற்கு என்ன வழி? அவர்கள் எப்போது பார்த்தாலும் இதைச் சொல்லிக்கொண்டிருக்கப் பண்ணி, அப்படிப் பண்ணினால்தான் அவர்களுக்குப் பிழைப்பு உண்டு. தக்ஷிணையோ மான்யமோ கிடைக்கும் என்று வைத்து, வேறே எந்தத் தொழிலுக்கும் அவர்கள் போகப்படாது என்று விதி செய்துவிடுவதுதான். இதற்கு அவர்கள் வேதத்தை ஏதோ அவ்வப்போது புஸ்தகங்களில் பார்த்துப் படிப்பது என்று இருந்தால் ஸரிப்பட்டு வராது. வேதத்தில் வரும் அநகே சப்தங்களை எழுத்தில் கொண்டுவர முடியாது. அதன் ஏற்றல்-இறக்கல் ஸ்வரங்களையும் எழுதிக் காட்ட முடியாது. ஏதாவது பங்க்சுவேஷன் மார்க் போடலாமே என்றால், அச்சுப்பிழை எழுத்துப்பிழை மாதிரி ஏற்பட்டுவிட்டால் மந்த்ர ரூபம் மாறிப்போய் அதன் பலனே விபரீதமாகிவிட இடமுண்டு. இதெல்லாவற்றோடுங் கூட ரொம்ப முக்யமான காரணம், ஏதோ அவ்வப்போது படிப்பது என்பதாக ஒருத்தனுடைய மனஸின் வெளி லெவலோடு மந்த்ரங்களை நிறுத்தி விட்டால் அவற்றின் பூர்ண ப்ரயோஜனம் உண்டாகவே உண்டாகாது. மந்த்ரங்கள் ஒருவனுடைய மனஸ் பூராவையும் வ்யாபித்து அவனுடைய உயிரிலேயே இறங்கி ஊறியிருக்க வேண்டும். அப்போதுதான் அவன் சொல்லும் மந்த்ரம் பூர்ணமாக வீர்யவத்தாக இருக்கும். ‘எழுதிவைத்துப் படிக்கலாம்’ என்று இருந்துவிட்டால் ஒருவன், அதை மனப்பாடம் செய்துகொள்ளாமலே, ‘அதுதான் சுவடி இருக்கே! ஸமயம் நேரும்போது பார்த்துண்டா போச்சு’ என்று இருந்துவிடக்கூடும். அதாவது மந்த்ரம் இவனுக்குள்ளே, அல்லது இவன் மந்த்ரத்துக்குள்ளே ஊறாமல் மேலெழுந்தவாரியாக முடிந்துவிடும். இப்படி விடக்கூடாது என்றுதான் எழுத்தில்லாமல் வாய்மொழியாலேயே ஆதிகால ஸ்கூலில் பாடம் நடத்தி எல்லாவற்றையும் மனப்பாடமாகப் பண்ணிக்கொள்ள வைத்தது.

மந்த்ரம் மாணவனுக்குள் ஊறுவதற்காகத்தான் அவனை புத்திசாலியாக மட்டுமில்லாமல் குணசாலியாகவும் இருக்கப் பண்ணினார்கள். ஏனென்றால் சுத்தமான ஜீவனக்குள்தான் வேத மந்த்ரம் இறங்கி ப்ரகாசிக்கும்; அவனையும் ப்ரகாசிக்க வைக்கும். இதனாலேயே வித்யார்த்திக்கு – ஸ்டூடண்டுக்கு – ப்ரம்மசர்ய நியமத்தை வைத்தார்கள். ‘தபஸ்’ என்றே சிக்ஷை முறையை வைத்தார்கள். வித்யாப்யாஸம் என்பது ஒரு வ்ரதமாக ஆரம்பத்திலே தீக்ஷையுடன் நடந்தது.

பிறக்கும்போது ப்ராமணனும் நாலாம் வர்ணத்தவன்தான். உபநயன ஸம்ஸ்காரத்தால்தான் அவன் ‘த்விஜன்’ என்னும் இருபிறப்பாளனாகிறான், அப்புறம் வித்யாப்யாஸத்தால் அவனுக்கு ‘விப்ரன்’ என்ற பெயர் உண்டாகிறது. இந்த மூன்றும் சேர்ந்து ஒருத்தனை ‘ச்ரோத்ரியன்’ ஆக்குகிறது. இப்படி சாஸ்த்ரத்தில் இருக்கிறது:

ஜ்ந்மநா ஜாயதே சூத்ர: ஸம்ஸ்காரேர் – த்விஜ உச்யதே |

வித்யயா யாதி விப்ரத்வம் த்ரிபி: ச்ரோத்ரிய உச்யதே ||

இவன் ‘ப்ரஹ்ம’ எனப்படும் வேதத்தில் ஊறி, அதே ப்ரஹ்மபதத்தால் குறிப்பிடப்படும் பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தில் ஸித்தி அடையும்போதே ‘ப்ராஹ்மணன்’ ஆகிறான்.

அதாவது, கல்வி என்பது ஸம்பாதிப்பதற்கு ஸாதனம் என்று நாம் வைத்துள்ள நிலைக்கு ரொம்ப ரொம்ப உச்சத்தில் அது ஒருவனுக்கு அறிவையும், ஆத்ம ஞானத்தையும் கொடுத்து அவனுடைய ஜன்மாவையே கடைத்தேற்றி வைப்பதற்காகவே ஏற்பட்டது என்ற உயர்ந்த லக்ஷியத்தை நம்முடைய ஆதி மூதாதையர் கொண்டிருந்தார்கள்.

வாயால் சொல்லி மாணவனைத் திரும்ப ஒப்பிக்க வைப்பதில் வாத்யார் ஒவ்வொரு மந்த்ரத்தையும் ஐந்து தடவை திரும்பத் திரும்பச் சொல்வார். அவர் ஒரு தடவை சொன்னதுமே அதைப் பிடித்துக்கொண்டு ஒப்பித்துவிடும் புத்திசாலிப் பையனைத்தான் “ஏக ஸந்த க்ராஹி” என்பது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மொழி, ஒலி ஒழுங்கு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  குலம், சாகை, சாத்ரன், சரணம் முதலியன
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it