மரபுவழிக் கதைகளும் ஆராய்ச்சியும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தாரா, உஜ்ஜயினி என்று இரண்டு ஊர்ப்பெயர் சொன்னேன். தாராதான் போஜன் ஆட்சி செய்த மாளவ ராஜ்யத்துக்குத் தலைநகரம், உஜ்ஜயினி அதை அடுத்து மேற்கிலே உள்ள அவந்தி ராஜ்யத்துக்குத் தலைநகர். க்ருஷ்ணா, கோதாவரி நதிகளுக்கிடையில் ஆதியில் விஸ்தாரமாயிருந்து, இப்போது பேரார் (Berar) என்கிற பகுதிக்கு மட்டும் பேராயிருக்கிற ‘விதர்ப’த்துக்கு வடக்காக இருப்பவை மாளவமும் அவந்தியும். தலைநகரான உஜ்ஜயினிக்கே அவந்தி என்றும் பெயர் உண்டு. அங்கேயிருந்து ஆட்சி பண்ணின விக்ரமாத்தியன்தான் காளிதாஸனின் patron -ஆக இருந்தவன்; போஜன் இல்லை; பல்லாளன் என்கிறவன் ஏதோ கர்ண பரம்பரைக் கட்டுக்கதைகளைத் திரட்டி “போஜ ப்ரபந்தம்” என் எழுதியிருப்பதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களுக்கு உறுதி செய்யும் ஸத்யத்தன்மை இல்லை என்று ஆராய்ச்சி செய்கிற ‘ஸ்காலர்’கள் சொல்கிறார்கள். அப்புறம், ‘அந்த விக்ரமாதித்யன் யார்? சகர்களை ஜயித்து விக்ரம சகாப்தம் ஏற்படுத்திய உஜ்ஜயினி சக்கரவர்த்தி சந்த்ரகுப்தனா, பாடலிபுத்ரத்திலிருந்து ஆட்சிசெய்த குப்த வம்சத்து இரண்டாவது சந்த்ரகுப்தனா – என்றிப்படி, பல சந்த்ரகுப்தர்களில் எவன்?’ என்பதிலும் அவர்களுக்குள்ளேயே அபிப்ராயபேதங்கள் இருக்கின்றன!

காளிதாசன் மட்டுமில்லை, இன்னும் அநேக கவிகளைப் பற்றி – ஸம்ஸ்க்ருத இலக்கியத்தில் மட்டுமில்லை, எல்லா பாஷையிலும் இருந்த இலக்கிய கர்த்தர்களைப் பற்றி – இப்படி அவர்கள் வாழ்ந்த காலம், தேசம் எல்லவாற்றையும் பற்றி இட்டுக் கட்டின கதைகள் பரவி விட்டன என்கிறார்கள். உதாரணமாக, தமிழிலே எடுத்துக்கொண்டால், திருவள்ளுவரும் அவ்வையாரும் ஸமகாலத்தவர்கள், அவர்கள் அண்ணா – தங்கையாக வேண்டும் என்று ஒருகதை, இன்னொரு பக்கம் அவ்வையார், கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி எல்லாரையுமே ஸம காலத்தவர்களாக்கி வழங்குகிற அநேக கதைகள். இவையெல்லாமே வெறும் கதைதான். ‘ஹிஸ்டாரி’கலாக ஸரியாயில்லை என்கிறார்கள்.

கதையாகத்தானிருக்கட்டும், fact -ஆகத் தானிருக்கட்டும், எதுவானாலும் இவற்றை எடுத்துக்கொண்டு ரஸிக்க வேண்டுமென்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இந்தக் கதைகள் எந்தக் கவிவாணர்களைக் குறித்தனவோ அவர்கள் கல்பனையாகப் பல பாத்ரங்களை வைத்துக் காவ்ய, நாடகங்கள் எழுதியிருக்கிறார்கள். நிஜமாக இருந்த பாத்ரங்களின் மேலேகூடத் தங்கள் கல்பனையை ஏற்றி, ஸம்பவங்களை மாற்றி, இலக்கியச் சுவை அதிகரிக்கும்படியாக மெருகு போட்டிருக்கிறார்கள். ஒரே ராமாயணத்தையே வால்மீகி ஒருவிதமாகச் சொன்னார், கம்பர் ஒருவிதமாக, துளஸிதாஸ் இன்னாருவிதமாக, க்ருத்திவாஸ் இது எல்லாவற்றுக்கும் வித்யாஸமாகச் சொன்னார்கள் என்றால் எதனால்? அவரவரும் தங்கள் கல்பனா சக்தி, அநுபவம், ‘டேஸ்ட்’, தாங்கள் எடுத்துக்கொண்டுள்ள நோக்கம் ஆகியவற்றை அநுஸரித்து, நிஜமாக நடந்ததையே மாறுதல்கள் செய்து சொல்லலாம் என்று நினைத்ததனால்தான். fact-க்கு (நடைமுறை உண்மைக்கு) ஒரு ஸத்யத்வம் உண்டு என்றால், ஒரு உத்தமமான கவியின் கல்பனை, நோக்கம் முதலானதுகளுக்கும் ஒரு ஸத்யத்வம் உண்டு என்று நினைத்து இப்படி மாற்றியிருக்கிறது. நாமும் அந்தக் காவ்ய, நாடகங்களை ரஸித்துப் படித்துப் பலவிதத்தில் பயனடைகிறோம்.

அந்தக் கவிகள் வேறே பாத்ரங்களைப் பண்ணினது போலவே, அவர்களையே பாத்ரங்களாக்கி மற்றக் கவிகளும், ஜனங்களும் கதைகள் பண்ணினால், இதையும் நாம் ரஸித்து இதிலும் வெளியாகிற அநேக உண்மைகளாலும் நீதிகளாலும் பயனடைய வேண்டியதுதானே? கவி ஸமூஹமாக இல்லாத ஜன ஸமூஹம் இப்படிக் கதை கட்டிற்று என்றால்கூட, ஒரு பெரிய பண்பாட்டின் கீழே வருகிற நம் தேசத்தில் பரம்பரை பரம்பரையாக மக்கள் ஏற்றுக்கொண்டு, ஸந்தோஷப்பட்டுப் பயன் பெற்ற மரபுவழிக் கதைகள் இவை என்னும்போது அவற்றுக்கு ஒரு ‘வெய்ட்’, அவற்றை அப்படியே தள்ளிவிட முடியாததான ஒரு மதிப்பு, ஏற்படத்தான் செய்கிறது.

‘நெருப்பில்லாமல் புகையாது’ என்ற மாதிரி ஒரு ஆதாரமும் இல்லாமல் இந்த எல்லாக் கதைகளும் தோன்றியிருக்காது. சிலதோ, பலதோ கூட, ஆதாரமில்லாமலிருந்தாலும், எல்லாமே அப்படி இருந்துவிடாது. ஸம்பந்தப்பட்ட ஊர்கள், பேர்கள், காலம் முதலான details (விவரங்கள்) தப்பாக இருக்கிறபோது கூட இந்தக் கதைகளில் வருகிற ஸம்பவத்துக்கும், அதிலே வெளியாகிற கவியின் குணப்பான்மைக்கும் ஆதாரம் இருக்கவே செய்யும்.

இந்த மாதிரிக் கதைகளில் ஒன்று மட்டும் ஒப்புக்கொள்ள முடியாததாக இருப்பதைச் சொல்லவேண்டும். கம்பனானாலும், ஸரி, காளிதாஸனானலும், ஸரி, எந்தக் கவியையும் தாஸிகளோடு ஸம்பந்தப்படுத்தி உண்டாயிருக்கும் கதைகளைத்தான் சொல்கிறேன். எத்தனையோ பக்தியை ஊட்டும் படியாகவும, உசந்த தத்வ – வேதாந்தக் கருத்துக்கள் ஜ்வலிக்கும்படியாகவும், ‘கல்ச்சர்’ என்று எடுத்துக்கொண்டாலும் அதில் உச்சமான அம்சங்களை ப்ரதிபலிப்பதாகவும் காவ்ய நாடகாதிகள் செய்துள்ள மஹாகவிகளை ஸொந்த வாழ்க்கையில் பிசகி நடந்தவர்களாகச் சொல்வதில் ஸத்யம் இருப்பதற்கில்லை. ‘பின்னே ஏன், நெருப்பில்லாமல் இங்கே மட்டும் புகையணும்?’ என்று கேட்டால், இந்தப் புகைக்கும் ஆதாரமாக ஒரு நெருப்பைச் சொல்லலாம். என்ன வென்றால், காவ்யங்களின் லக்ஷணப்படி அவற்றிலே சிருங்கார ரஸம் நிறைய இருக்கத்தானே செய்யும்? அது தான் புகைக்கு நெருப்பு! இத்தனை ச்ருங்காரமாகக் கவிதை பண்ணினவர்களென்றால், அவர்களே இதிலே ரொம்பவும் ஈடுபட்டவர்களாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று தப்பாக நினைத்துக் கதைகள் செய்துவிட்டார்கள்.

பிற்காலத்தில் நடிகர்கள், கவிகள் ஆகியவர்கள் ரொம்பவும் உல்லாஸப் பேர்வழிகளாக ஆகிவிட்டதை வைத்து, முற்காலத்தில் சாஸ்த்ரோக்தமாக ஆட்சி நடந்தபோது ராஜஸதஸிலே ஸத்வித்வான்களும் மெச்சும்படியாக இருந்த கவிகளும் இப்படியே இருந்திருப்பார்களென்று நினைத்து விடப்படாது. ஒருத்தர், இரண்டுபேர் அப்படி இருந்தும் இருக்கலாம். ஆனால் எல்லாரையும் அப்படி வைத்துவிடுவது ஸரியில்லை.

இந்த ஒரு அம்சத்தைத் தவிர மற்றபடி மொத்தத்தில் குறைந்த பக்ஷம் கதையாகவேயாவது எல்லாவற்றையும் ஏற்று ரஸிக்க வேண்டியதுதான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மாறு வேஷம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கம்பரும் குலோத்துங்கனும்
Next