காளிதாஸன் மறுப்பும் அதன் சிறப்பும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அதற்குக் காளிதாஸன் ஒப்புக்கொள்ளவில்லை. யாராயிருந்தாலும் உயிரோடே இருக்கிறவனை, அதிலும் ராஜாவைப் பற்றி அவன் எதிரிலேயே சரம ச்லோகம் பாடுவதற்கு இஷ்டப்படத்தானே மாட்டார்கள்?

ஆனால் இப்படி ஒப்புக்கொள்ளாத பிறகும் போஜ ராஜா விடாப்பிடியாக, “நான் ராஜா. இது ராஜாக்ஞை. இதற்கு நீ கீழ்ப்படியாவிட்டால் என் ராஜ்யத்திலேயே இருக்கக்கூடாதென்று தேசப்ரஷ்டம் பண்ணிவிடுவேன்” என்று மிரட்டி வற்புறுத்திய போது, மற்ற ஸாதாரணப்பட்ட கவிகளாயிருந்தால் ஒப்புக்கொண்டிருக்கக்கூடும். “நமக்கு என்னத்துக்கு ராஜவிரோதம்? இவன் லோகத்தை விட்டுப் போனானென்று பாடப்படாது என்பதற்காக நாம் ஏன் வீட்டையும் வாசலையும் ஊரையும் விட்டு ப்ரஷ்டமாகப் போய் அவதிப்படணும்? சரம ச்லோகந்தான் பாடித் தாம்பாள் நிறைய ஸ்வரணமும் ரத்னமுமாக வாங்கிக்கொள்ளலாமே!” என்று நினைத்திருக்கக்கூடும்.

ஆனால் காளிதாஸன் அப்படி ஸம்மதிக்கவில்லை. ‘ராஜாக்ஞையை மீறி நாம் ஏன் கஷ்டத்துக்கு ஆளாக வேண்டும்?’ என்ற கோழைத்தனமான எண்ணமோ, அவன் சொல்கிறபடி தான் பாடி அக்ஷரலக்ஷமாகக் குவித்துக்கொள்ளலாமே என்ற தாழ்வான ஸ்வயலாப எண்ணமோ அவனுக்குத் துளிக்கூட இல்லை. போஜன் சொன்னதைக் கேட்காமல், தன்னுடைய ஸ்வய மரியாதையை விடாமல் ஸ்வாதந்த்ரியமாகக் கடைசிமட்டும் அவனிடமே ‘ஸ்ட்ராங்’காக மறுத்துப் பேசினான். “ப்ரஷ்டனாகவே போகிறேன்” என்று சொல்லிவிட்டு தனக்குப் பரம ப்ரியமான போஜன், அவனுடைய ராஜ்யம், தன் வீடு வாசல் எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போய்விட்டான்!

கவிவாணர்களின் தன்மானத்தைப்பற்றிச் சொல்லவந்தேன். ஆனால் காளிதாஸன் விஷயத்தில் மான உணர்ச்சி மாத்ரமில்லாமல் இன்னும் அவனுடைய வேறு பல குண விசேஷங்களும் இதிலே தெரிகின்றன. அவனுடைய உண்மையான ஸ்நேஹ ஹ்ருதயம் இதில் தெரிகிறது. உயிரோடே இருக்கிற தன்னுடைய குழந்தை செத்துப்போய்விட்டதென்று பாடவேண்டுமென்றால், எப்படி ஒரு தாயாருக்கு மனஸ் இடம் கொடுக்காதோ, அப்படி ஸ்நேஹ தர்மத்தினாலே காளிதாஸனுக்கு போஜனின் மரணத்தைக் கல்பித்துப் பார்த்துக் கவிதை கட்ட மனஸு இடங்கொடுக்கவில்லை.

இன்னொரு காரணத்தாலும் அவன் கல்பனையாகச் சரமகவி பாட முடியாமலிருந்தது. ரிஷிகளைப் பற்றி பவபூதி “உத்தரராம சரித”த்தில் ஸ்ரீ ராம சந்த்ர மூர்த்தியின் வாயிலாக ஒரு உண்மையைச் சொல்கிறார். “ஏனைய மக்கள் என்ன நடக்கிறதோ அதைச் சொல்வார்கள்; ரிஷிகளோ என்ன சொல்கிறார்களோ அது நடந்துவிடுகிறது. ஒரு விஷயத்தை மற்றவர்கள் வார்த்தையாகச் சொல்கிறார்களென்றால், ரிஷிகளைப் பொறுத்தமட்டிலே அவர்கள் சொல்கிற வார்த்தையை விஷயம் ஓடிப்போய்ப் பிடித்துக்கொண்டு நிஜமாகிவிடுகிறது – வாசம் அர்த்தோ (அ)நுதாவதி’ என்று ராமர் வஸிஷ்டரைக் குறித்துச் சொல்வதாக பவபூதி ஒரு general truth -ஐ (பொது உண்மையை)ச் சொல்கிறார்.

ரிஷியும், தெய்வாநுக்ரஹம் பெற்ற அருட்கவியும் ஒன்று என்பதற்கேற்ப, அம்பாளின் பரிபூர்ண க்ருபையைப் பெற்றிருந்த காளிதாஸினின் வாக்குக்கும் இப்படிப்பட்ட சக்தி இருந்தது. அதாவது அவன் வாக்கால் என்ன கவிதை வந்தாலும் அது நிஜமாகிவிடும். அவன் கல்பனையாகச் சொல்வதே ஸத்யமாகிவிடும்.

ஆனபடியால், போஜராஜா சொன்னபடி அவன் கல்பித்துச் சரமகவி பாடினால்கூட போஜன் நிஜமாகவே சரமகவிக்குப் பாத்ரமாகி விடுவான்!

இதையும் காளிதாஸன் மனஸைவிட்டு போஜனுக்கு சொல்லத்தான் செய்தான்.

அப்படியும் அவனுக்கு எவ்வளவோ உயர்ந்த குணங்களுள்ள அந்த போஜனுக்கு, ‘நாம் ராஜா. நம் வார்த்தையை ஒரு ப்ரஜை கேட்காமலிருப்பதா? உயிரே போவதானாலும் நம் வார்தையை நாமே ரத்து பண்ணிவிட்டு ஒரு ப்ரஜை சொல்வதை ஒப்புக்கொள்வதா?’ என்ற எண்ணம் ஏற்பட்டது. இதுதான் அதிகாரம் பண்ணுகிற கோளாறு!ஒரே பிடிவாதமாயிருந்தான்.

காளிதாஸனும் அதற்கு மேலே பிடிவாதம் பிடித்து ஊரைவிட்டே போய்விட்டான். அதிலே அவனுடைய த்யாக சிந்தையும், மற்ற கவிகளிடம் அவனுக்கு இருந்த பரிவும் கூடத் தெரிகிறது.

எப்படியென்றால்,

போஜனின் வற்புறுத்தல் தாங்காமலோ, அல்லது உயிரையே கொடுத்தாவது ஒரு உத்தமான கவிதையைப் பெற வேண்டுமென்று விரும்பும் அந்த அதிசய ரஸிகனின் ஆசையைப் பூர்த்தி செய்துதான் தன்னுடைய கவி தர்மமென்று கருதியோ காளிதாஸன் சரம ச்லோகம் பாடினால் என்ன ஆகும்? போஜன் போய் விடுவான். ஆனால், அதனால் காளிதாஸனுடைய கீர்த்தி, ஸம்பத், அந்தஸ்து முதுலானதுகளுக்கு ஒரு குறையும் வந்துவிடாது. ‘நான் முந்தி’, ‘நீ முந்தி’ என்று மற்ற ராஜாக்கள் அவனைக் கூப்பிட்டு உபசாரம், ஸன்மானம் நிறையப் பண்ணி விடுவார்கள். ஆனாலும் காளிதாஸன் தன்னைப் பற்றி மட்டும் நினைக்கவில்லை. மற்ற எல்லாக் கவிகளின் நிலைமையைப் பற்றி நினைத்தான். அவனுக்கும், அவனுக்கு அடுத்தபடி ரொம்பவும் யசஸோடு இருந்த ஒரு சில கவிகளுக்கும், எந்த ராஜா இருந்தாலும் போனாலும் கவலையில்லை. அவர்களுக்கு ஜாம் ஜாமென்று நடந்துவிடும், ஆனால் அவ்வளவு புகழ், அவ்வளவு ப்ரதிபா சக்தி இல்லாத மற்ற கவிகள் பலபேர் இருக்கிறார்களே, அவர்களின் பாடு, போஜன் போய் விட்டால் என்ன ஆகும்? யாராயிருந்தாலும் உதாரமாக வாரிக் கொடுத்த போஜன் போய்விட்டால் அப்புறம் வேறே எந்த ராஜா, அல்லது ப்ரபு இந்தக் கவிகளை ஆதரிப்பான்? தான் சரம ச்லோகம் பாடி போஜன் மரணமடைவதால் ஏற்படக்கூடய எத்தனையோ கஷ்டங்களுக்கு மேலாகக் காளிதாஸன் தன்னுடைய poet fraternityயில் (ஸஹோதர கவி குலத்தில்) அவ்வளவாக சரக்குப் போகாதவர்களுக்கு ஏற்படக்கூடிய அநாதரவைத் தான் பெரிசாக நினைத்தான்.

அதனால் இப்போ சரம ச்லோகத்துக்கு அக்ஷர லக்ஷமாக இல்லாமல் அக்ஷர கோடியாகவே அட்வான்ஸில் போஜனிடமிருந்த வாங்கிக்கொண்டு கவி கட்டிவிடலாமாயினும், அந்த மாதிரிப்பண்ணாமல், த்யாக புத்தியுடன், அவ்வளவாக ஸாமர்த்யம் போதாத lesser poets – இடம் உள்ள அன்பும் ஒரு காரணமாகி, அதனால் ப்ரஷ்டனாவதற்கு ஸம்மதித்து ஊரை விட்டே போய்விட்டான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is காளிதாஸனும் போஜராஜனும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மாறு வேஷம்
Next