இனிய எளிய ச்லோகம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அடுத்த ச்லோகத்தில் பகவானின் பாதத்தை வர்ணிக்கிறார் நம் பகவத்பாதாள். “ஷட்பதீ”யின் அடுத்த பதம் பகவத் பாதம்!

திவ்யதுநீ – மகரந்தே

பரிமள பரிபோக ஸச்சிதாநந்தே!

ஸ்ரீபதி பதாரவிந்தே

பவ பய கேத ச்சிதே – வந்தே!

திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டேயிருக்கலாம் போல் மதுரமான அக்ஷரங்களோடு, லளிதமான பதச் சேர்க்கையோடு இருக்கிறது ச்லோகம். பகவானின் பாத தாமரையை வர்ணிக்கிற ச்லோகத்தில் வார்த்தைகளும் புஷ்பம் போல் ம்ருதுவாக அமைந்திருக்கின்றன. ‘மகரந்தே’, ‘ஆனந்தே’, ‘அரவிந்தே’, ‘வந்தே’ என்று ஒவ்வொரு பாதமும் rhyme -ஆக முடிவதிலேயே ஒரு ஆனந்தம் சுரக்கிறது.

செய்யுளின் ஒவ்வொரு அடியின் ஆரம்பமும் rhyme ஆவது தமிழில் விசேஷமாக இருக்கிறது. இதற்குத்தான் ‘எதுகை’ என்று பெயர். தேவாரத்தில், திவ்ய ப்ரபந்தத்தில் எங்கே பார்த்தாலும் இப்படித்தான் ஒவ்வொரு அடியின் நாலுவரியிலும் ஆரம்ப அக்ஷரம் ஒரே தொனியில் எல்லாம் நெடிலாகவோ, குறிலாகவோ ஆரம்பிக்கும்; அந்த முதல் வார்த்தையின் இரண்டாம் எழுத்து நாலு அடியிலும் ஒன்றாகவே இருக்கும்.

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி

ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது

நாதன் நாமம் நமச்சி வாயவே

என்கிறபோது, முதலெழுத்து எல்லாம் – கா, ஓ, வே, நா என்கிற – நாலும் நெடிலாக இருக்கின்றன. இரண்டாவது எழுத்து நாலுவரியிலும் ‘த’ தான். இது ஞான ஸம்பந்தர் தேவாரம். இதே மாதிரி அப்பர் ஸ்வாமிகள் நமசிவாய மஹிமையைச் சொல்லி,

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே

என்று பாடுகிறபோது, முதல் வரியின் முதல் எழுத்து ‘சொ’ என்று குறிலாக இருப்பதால் மற்ற வரிகளிலும் ‘பொ’, ‘க’, ‘ந’ என்று குறிலே ஆரம்பமாயிருக்கிறது. இந்த தேவாரத்தில் ‘ற்று’ இரண்டாவது எழுத்தாக மட்டுமில்லாமல், மூன்றாவது எழுத்தான ‘ணை’யும் எல்லா வரியிலும் திரும்புகிறது.

ஒரு செய்யுளின் ஆரம்ப வார்த்தைகள் “ரைம்” ஆகிற எதுகையை ஆரம்ப ப்ராஸம் என்பார்கள். ஸாதாரணமாக ஸம்ஸ்க்ருதத்தில் இப்படி ஆரம்ப வார்த்தைகள் ‘ரைம்’ ஆகாமல் ஒவ்வொரு வரியின் முடிவான வார்த்தையும்தான் “ரைம்” ஆவது வழக்கம். அந்திய வார்த்தை ஒரே மாதிரி வருகிற இந்த அணியை அந்த்ய ப்ராஸம் என்பார்கள். உதாரணமாக இந்த மடத்துப் பூஜை முடிவில் ஒவ்வொரு வேளையும் சொல்கிற

ஸமரவிஜய கோடீ ஸாதகாநந்த தாடீ

ம்ருதுகுண கணபேடீ முக்ய காதம்ப வாடீ

முனிநுத பரிபாடீ மோஹிதாஜாண்ட கோடீ

பரமசிவ வதூடி பாதுமாம் காமகோடீ

என்கிற ச்லோகத்தில் பளிச்சென்று தெரிகிற மாதிரி ஒவ்வொரு அடியின் முடிவும் ‘ரைம்’ ஆகிற அந்த்ய ப்ராஸம் வருகிறது. இது ஜகன்மாதாவான காமாக்ஷியைப் பற்றி மூகர் பண்ணின “பஞ்ச சதீ”யில் வருகிற ச்லோகம்.

தத்வ ரீதியிலும், அநுபவரீதியிலும், கவித்வ ரீதியிலும் உயர்ந்ததான ஸ்துதிகளில் இம்மாதிரிச் சொல்லணிகளும் சேர்ந்து அவற்றின் அழகையும் சிறப்பையும் உயர்த்துவதுண்டு. ஷட்பதீ ஸ்தோத்ரத்திலும் இப்படிப்பட்ட சொல் ஜாலங்கள் (word-play) நிறைய உண்டு.

இடையின, மெல்லின, எழுத்துக்களில் ஒரே மாதிரியானவை திரும்பத் திரும்ப வந்தால் சொல்வதற்கே மதுரமாக இருக்கும். ‘அவிநயம் அபநய, தமய மந: சமய’ என்கிறபோது ந,ய,ம என்ற அக்ஷரங்கள் திரும்பத் திரும்ப வருகின்றன. சொல்ல அழகாக இருக்கிறது. ஒரே போன்ற சப்தங்களுள்ள வார்த்தைகள் அடுக்காக வருகின்றன. ‘விஸ்தாரய – தாரய’ என்றும் போட்டிருக்கிறார். இதை ‘யமகம்’ என்றும் ‘மடக்கு’ என்றும் சொல்வார்கள்.

உச்சரிப்பதற்கு அழகாக இருப்பதோடு இப்படிப்பட்ட சொல்லணிகளைக் கையாள்வதால் அவை மனஸில் நன்றாகப் பதிந்து ச்லோகங்களை நினைவு வைத்துக்கொண்டு மனப்பாடம் பண்ணுவதும் ஸுலபமாகிறது.

இரண்டாவது ச்லோகம், சற்று முன் சொன்னேனே, அதில் ‘மகரந்தே, ஆனந்தே, அரவிந்தே, வந்தே’ என்று அந்த்ய ப்ராஸம் வைத்துக் கவித்வ ரீதியில் ச்லோகத்தை அலங்காரம் பண்ணியிருக்கிற ஆசார்யாள், அதனாலேயே நாம் சுலபமாக நெட்டுருப் போடுகிற மாதிரியும் அநுக்ரஹம் பண்ணியிருக்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'அக்கரை அடைவிப்பாய் ! '
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  திருமகளும் தாமரையும்
Next