பாலைவன உவமையின் பொருத்தம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இந்தக் கானல் நீர் உபமானம் லோகத்தை ஒரு ஸ்வப்னமாக உவமிப்பதை விடப் பொருத்தம் வாய்ந்ததாகும். ஸ்வப்னம் காண்கிறவரையில் நிஜம் மாதிரியே இருக்கிறது. விழித்துக் கொண்டபின் அது அடியோடு பொய்யாகப் போய் கனவு கண்ட ஒரே ஆஸாமியின் எண்ணம்தான் கனவில் வந்த அத்தனை ஸ்ருஷ்டியும் என்று தெரிகிறது. அந்த மாதிரிதான் நாம் அஞ்ஞான தசையில் இருக்கிறமட்டும் லோகமே நிஜம் போல இருக்கிறது. ஞானம் வந்துவிட்டால், ‘இப்படி ஒன்று இல்லவே இல்லை; ஒரே ஒரு பரமாத்ம ஸத்யம்தான் இப்படிப் பல வகையான உலக ஸ்ருஷ்டியாகத் தோன்றியிருக்கிறது’ என்று தெரியும். இதனால் மாயையை ஸ்வப்னத்துக்கு ஒப்பிடுவதுண்டு. “ஸரி, அப்படியானால் விழித்துக்கொண்ட பிற்பாடு ஒருத்தனுக்கு ஸ்வப்னம் தெரியாத மாதிரி, ஞானிக்கு லோகமே தெரியக்கூடாது. ஆனால் பரம ஞானிகளான ஆசார்யாள், சுக ப்ரம்மம் மாதிரியானவர்களும், லோகம் என்ற ஒன்று இருக்கிற மாதிரியான பாவனை கொஞ்சம் இருந்ததால்தானே’, லோக உத்தாரணத்துக்காக உபதேசங்கள் பண்ணினார்கள்? லோகமே தெரியாத நிலையில் யாருக்கு யார் உபதேசம் பண்ணுவது? என்ன உபதேசம் பண்ணுவது? இவர்கள் உபதேசம் பண்ணினதால் லோகம் இவர்களுக்குத் தெரிந்தது என்று தானே அர்த்தம்? அப்படியானால் இவர்களுக்கு ஞானம் வரவில்லையா?” என்று கேட்கலாம். இங்கே ஸ்வப்ன உபமானத்தைவிடக் கானல் நீர் உபமானம்தான் பொருத்தமாக பதில் கொடுக்கிறது. ஒருத்தனுக்குக் கானல் நீர் நிஜமான ஜலம் இல்லை என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் அதற்கப்புறமும் அவன் கண்ணுக்கு ஜலம் ஓடுகிற மாதிரியான அந்தப் பொய்த் தோற்றம் நன்றாகத் தெரிந்துகொண்டுதானே இருக்கிறது? இது, கனாவிலிருந்து விழித்துக்கொண்டபின் கனா அடியோடு தெரியாத மாதிரி இல்லை. கானல் நீர் நிஜமான நீர் இல்லை என்று தெரிந்த பின்னும் அது கண்ணுக்குத் தெரியத்தான் செய்கிறது. இதனால் அவன் அதை நிஜ ஜலம் என்று நினைத்து ஓடுகிறவர்களிடம், “ஓடாதீர்கள். ஜலம் மாதிரி கண்ணுக்குத் தெரிந்தாலும் அதில் ஜலம் இல்லை” என்று எடுத்துச் சொல்லித் தடுக்க முடிகிறது.

“ம்ருக த்ருஷ்ணா” – “மானின் தாஹம்” – என்ற சொற்றொடர் அந்த தாஹத்தினால் தேடப்படும் கானல் நீருக்கே பெயராகிவிட்டது. இது இலக்கியத்தில் அலங்கார சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிற ஓர் அணி (figure of speech) யின்படி உண்டான பெயர்.

திருமூலர் பஞ்ச இந்த்ரியங்களை “பால் பசு ஐந்து” என்று சொன்னார். இங்கே பகவத் பாதாள் இந்த்ரியங்களை மான்களாகச் சொல்கிறார். “கானல் நீரைத் தேடி ஓடி ஓடிப்போய், பாவம், கடைசியில் வெயில் தாளாமல் ப்ராணனை விடுகிற மான்கள் மாதிரி, இந்த்ரியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அல்பஸுகத்தைத் தேடித் தேடி ஓடி வீணாகப் போகிறதே! இந்தக் கஷ்டம் வேண்டாமப்பா! புலன்களின் இந்த வேட்கையை அடக்குவாய் – சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம்” ” என்று மஹா விஷ்ணுவிடம் ப்ரார்த்திக்கிறார்.

லோக வாழ்க்கை ஒரு பாலைவனம். இந்த்ரியங்களுக்கு ஸுகம் மாதிரி இதிலே தோன்றுகிறதெல்லாம் கானல் நீர் தான்.

ஒரு ப்ரதேசம் பாலைவனமான பின் அதிலே ஜலமே இல்லை. பொய் ஜலம்தான் கானல் நீராகத் தெரிகிறது. ஆனால் அந்த ப்ரதேசம் பாலைவனமாவதற்கு முன் எப்படி இருந்தது என்பதற்கு ஜியாலஜியில் சொல்வதைக் கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஆதியிலே பெரிய ஜலாசயங்களாக, நீர் நிலைகளாக, ஸமுத்ரமாக இருந்த இடங்கள்தான் பிற்பாடு பல மாறுதல்களால் பாலைவனங்களாகிவிட்டன என்று பூதத்வ சாஸ்த்ரத்தில் ஆராய்ச்சி செய்து விளக்குகிறார்கள். முக்யமாக இப்போது பாலைவனமாக இருக்கிற ப்ரதேசங்களைத் தோண்டிப் பார்க்கிறபோது, அவற்றில் ஸமுத்ரத்தில் மாத்திரமே வாழக்கூடிய திமிங்கிலங்கள், மீன்கள் முதலியவற்றின் எலும்புகள், கிளிஞ்சல் சிப்பிகள் முதலியன கிடைக்கின்றன. இதனால் ஆதிகாலத்தில் பெரிய நீர் நிலைகளாக இருந்தவைதான் இன்றைய பாலைவனங்களாகியிருக்கின்றன என்று தெரிகிறது. ஒவ்வொரு ஸமயங்களில் ஏற்பட்ட பூகம்பம் முதலான பெரிய சலனங்களால் ஸமுத்ரத்தில் சில இடங்களில் அடி பூமி முற்றிலும் மேலுக்கு வந்து வளைத்துக்கொண்டு அதற்கு நடுவே land locked-ஆக ஸமுத்ர ஜலம் தேங்கியிருக்கிறது. அப்புறம் ஸூர்ய உஷ்ணத்தினாலும், இன்னும் வேறு தினுசான பருவ மாறுபாடுகளாலும் இந்த ஜலம் வற்றிப்போன பிற்பாடுதான், ஒரு காலத்தில் நீர்நிலையாக இருந்த இடங்களே பிறகு சொட்டு ஜலம்கூட இல்லாத பாலைவனங்களாகிவிட்டன என்கிறார்கள்.

பூலோகம் என்ற ஒன்று ஸ்ருஷ்டியாகிற போதே அதன் பூமிப்பகுதியில் தான் மநுஷ்ய இனம் ஜீவிக்க வேண்டும் என்றும் ஸங்கல்பமாகி, அதிலே மநுஷ்யனுக்குத் தேவையான தான்யம் விளையவும், நதிகள் ஓடவும் ஏற்பாடுகள் ஆகியிருக்கின்றன. இந்த ப்ரபஞ்ச நிர்மாணத்தைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பார்த்தாலே ரொம்ப விசித்ரமாகவும், ப்ரமிப்பாகவும் இருக்கிறது. கடைசியில் இதெல்லாம் பொய், கானல் நீர், ம்ருக த்ருஷ்ணா என்றுதான் இத்தனை நாழி லெக்சர் அடித்தேன். ஆனால் ஒரு கானல் நீர்க்கூடக் கண்ணுக்குத் தெரிகிறவரையில் மஹாவிசித்ரமாக இருப்பதுபோல், இந்த லோக மாயையையும் பகவான் பரம விசித்ரமாகத்தான் நிர்மாணம் பண்ணியிருக்கிறான். இதில் இங்கே ஒரு மலை இருக்கிறது, அங்கே ஒரு பள்ளத்தாக்கு இருக்கிறது, இன்னோரிடத்தில் ஒரு நதி ஓடுகிறது என்றால், இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு ப்ரயோஜனம் இருக்கிறது, அர்த்தம் இருக்கிறது. பெளதிகமான லோகத்தில் ஆறு, மலை, ஸமவெளி என்று பல தினுஸாக வைத்து, ஜீவ சைதன்யமுள்ள ப்ராணி வர்க்கத்திலும், மநுஷ்யன், ம்ருகம், பக்ஷி, நீர் வாழ்வன, நிலம் வாழ்வன என்றெல்லாம் பல தினுஸாக வைத்து, இவற்றையெல்லாம் அதி விசித்ரமாக ஒன்றோடொன்று பொருத்தி, இயற்கை என்ற பெயரில் பரமாத்மா லீலை செய்கிறார். அந்த லீலையில் சில ஸமயங்களில் பொருத்தமில்லாமல் விபரீதமாகவும் துளித்துளி செய்துவிடுகிறார். முழுக்கப் பொருந்தியிருந்துவிட்டால் இந்த லோகம் தான் முழு நிஜம் என்று ஏற்பட்டுவிடுமே! அப்படித் தோன்றக்கூடாது என்றுதான் போலிருக்கிறது, இதிலே பொருத்தமில்லாமல் விபரீதமாகவும் ஏதாவது அவ்வப்போது நடத்திக் காட்டுகிறார். அதனால் தான் ஒரு பூகம்பம் வருகிறது; ஒரு எரிமலை வெடிக்கிறது. இம்மாதிரி ஒன்றாக, ஸமுத்ரத்திலே சில பாகம் நிலப் பகுதியோடு சேர்ந்து பாலைவனமாகிறது.

ஆதியிலேயே மநுஷ்யனுக்கு இருப்பிடமாக ஸங்கல்பமான பூமியில், அவனுடைய வாழ்வுக்கு அவச்யமான மழை, நதி, பயிர் பச்சை எல்லாம் இருக்கின்றன. ஆனால் இப்போது விபரீதமாக பூமியோடு ஸமுத்ரப்பகுதியும் வற்றிச் சேர்கிறபோது, இப்படிப்பட்ட பாலைவன பூமியில் மழையும் இல்லை, பயிர் பச்சையும் இல்லை. ஆதியில் பரமாத்மா, ‘இது கடல் ப்ரதேசம், அதனால் இந்த இடத்தில் ஜலத்தின் உள்ளோட்டம் (under current) வேண்டாம்’ என்று வைத்து விட்ட இடம்தானே இப்போது நிலப்பகுதியோடு சேர்ந்து விட்டது, அப்படிச் சேர்ந்துவிட்டது என்பதற்காக அவர் பழைய இயற்கை விதிகளை மாற்றிவிடுவதில்லை. இதனால் தான் ஒரு காலத்தில் ஜல ப்ரவாஹமாக இருந்த இடமே பிற்பாடு சொட்டு ஜலம் இல்லாத பொட்டலாகி விடுகிறது!

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கானல் நீர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸஹாரா - ஸாகரம்
Next