சிலேடை மர்மம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இதிலே ஒரு ச்லேஷை (சிலேடை) யும் இருக்கிறது. ‘பதம்’ என்றால் ‘கால்’ அல்லவா? ‘ஷட் – பதீ’ என்றால் ‘ஆறு கால் கொண்ட ஜந்து’ என்று அர்த்தம்.

‘ஆறு கால் ஜந்தாவது? விசித்ரமாயிருக்கிறதே!’ என்று தோன்றும்! மநுஷ்யன் இரண்டு கால் ப்ராணி. மிருகங்கள் நாலு கால் ப்ராணி. எட்டுக்கால் பூச்சி என்று ஒன்று இருக்கிறது. காலே இல்லாத பாம்பு. மரவட்டைக்கு எண்ணி முடியாத கால்கள். ஆறு கால் ஜந்து என்ன?

அதுதான் வண்டு. வண்டுக்கு ஆறு கால்தான் இருக்கும். ஷட் – பதம் கொண்டது அது. ஆகையால் ஷட் – பதீ என்றால் வண்டு என்று அர்த்தம். ஷட் – பதீ ஸ்தோத்ரம் என்றால் வண்டு ஸ்தோத்ரம்.

‘ஆறு பதம் (ச்லோகம்) உள்ள இந்த ஸ்தோத்ரத்துக்கு ஏன் வண்டு – ஸ்தோத்ரம் என்று பேர்? இந்த ச்லேஷை என்ன?’ என்று ஆசார்யாள் கடைசியான ஏழாவது ச்லோகத்தில்தான் புதிர் அவிழ்க்கிறார். ஒரு கதை சொல்கிறவர் அதில் மர்மமாக ஒன்றை ஆரம்பத்தில் சொல்லி விட்டு, அதை உடனேயே அவிழ்த்து விடாமல் கடைசிவரை மூடிமூடி வைத்து, ஆர்வத்தை ஜாஸ்தியாக்கிக்கொண்டே போய்க் கடைசியில்தான் அவிழ்ப்பார். அதே மாதிரி ‘ஷட் – பதீ’ என்று ஸ்தோத்ரத்துக்கு டைட்டில் கொடுத்த ஆசார்யாளும் ச்லோகம் முடிகிறபோதுதான் இதற்கு ஏன் ‘ஆறுகால் ஸ்தோத்ரம்’, அதாவது ‘வண்டுத் துதி’ என்று பேர் கொடுத்தார் என்று விண்டு சொல்கிறார். காவ்யங்களிலும் பக்தி க்ரந்தங்களிலும் ஈடுபட்டவர்களுக்கு, ரஸிகர்களுக்கு, அவர் சொல்லாவிட்டாலும் ஆரம்பத்திலேயே புரிந்துவிடும்.

உங்களில் கொஞ்சம் பேருக்கு இப்போதே ஷட்பதீ (வண்டு) என்பதிலுள்ள ச்லேஷை புரிந்திருக்கலாம். புரியாதவர்களுக்கு நானும் ஆசார்யாள் மாதிரியே கடைசியில்தான் புரிய வைக்கப்போகிறேன்!

இப்போது முதல் ச்லோகத்திலிருந்து ஆரம்பிக்கலாம். இந்த முதல் ச்லோகத்தில் எவையெவற்றை வேண்டி ப்ரார்த்தனை பண்ண வேண்டும் என்று நமக்கு ஆசார்யாள் சொல்லிக் கொடுக்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆறு ச்லோகத் துதி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  எதற்கு வேண்டுவது?
Next