அத்வைத தத்வமும் நடப்பு நிலையும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்கள் உலகத்திலுள்ள மேதைகள் எல்லாரும் ஆச்சரியப்படும்படியாக அத்வைத பாஷ்யங்கள் செய்திருக்கிறார். ஏற்கெனவேயிருந்த ப்ரஹ்ம ஸூத்ரம், உபநிஷத்துகள், பகவத்கீதை முதலியவற்றை விளக்கி அவர் எழுதியதற்கு ‘பாஷ்யம்’ என்று பெயர். இது தவிர தாமே (ஒரிஜினலாக) ‘விவேகசூடாமணி’, ‘உபதேச ஸாஹஸ்ரீ’ முதலான பல அத்வைத க்ரந்தங்களைச் செய்திருக்கிறார். பாஷ்யத்திலிருந்து வித்யாஸம் தெரிவதற்காக, அவர் சொந்தமாகச் செய்த இதுபோன்ற நூல்களை ‘ப்ரகரண க்ரந்தங்கள்’ என்பார்கள்.

இவற்றிலெல்லாம் சொல்லப்பட்ட அத்வைத தத்வம் என்பது ரொம்பவும் பெரிய விஷயம். நாம் ஸத்யமானது என்று நினைத்துக்கொண்டிருக்கிற இந்த ஜகத் ஒரு மாயை; பரமாத்மா ஒன்றுதான் ஸத்ய வஸ்து; அதற்கு வேறாக இருக்கிற ஜீவாத்மா என்று தன்னை நினைத்துக்கொண்டிருக்கிற நாமும் வாஸ்தவத்தில் அந்த பரமாத்மா தவிர வேறே இல்லை; ஜீவனேதான் ப்ரஹ்மம் – என்பதுதான் அத்வைதம். ச்ருதி (வேத) ப்ரமாணத்தாலும், அறிவாலும், அநுபவத்தாலும் ஆசார்யாள் இந்த ஸித்தாந்தத்தை அலசி அலசி நிச்சயப்படுத்தி, பாறாங்கல் மாதிரி நிலைப்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

ஆனாலும் இந்தப் பரம ஸத்யமான தத்வம் நம்மிலே பெரும்பாலாருக்கு எட்டவே மாட்டேன் என்கிறது. அறிவு மூலம் இதுதான் உண்மை என்று ஆசார்யாளின் வாதங்களைப் படித்து உறுதி ஏற்பட்டாலும்கூட, அநுபவம் என்று வருகிறபோது அத்வைதம் எங்கேயோ, நாம் எங்கேயோ என்றுதான் அதற்கு ரொம்ப தூரத்தில் நிற்கிறோம். ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்று என்று வெறுமே புத்தியால் தெரிந்து கொண்டு என்ன ப்ரயோஜனம்? ஒரு ஆட்டமும் இல்லாமல் அப்படியே பரம சாந்தமாக இருந்துகொண்டிருக்கிற ப்ரஹ்மமாக நம்மை நாம் எங்கே தெரிந்துகொள்ள முடிகிறது? நமக்கு ஓயாத ஓட்டம்; ஓயாத அமைதியின்மைதான். மனஸின் ஓட்டமும், ஓடிக்கொண்டே இருக்கிற இந்த ப்ரபஞ்சமும்தான் நமக்குத் தெரிந்த உண்மை. மனஸ் நின்றுவிட்டால் இந்த ஓட்டம் இல்லை. அப்போது ஜகத் மாயையாக மறைந்து போய்விடும். நாம் ப்ரஹ்மமாக இருந்துகொண்டிருப்போம். ஆனால், மனஸ் நிற்கவே மாட்டேன் என்கிறதே! அதனால் அத்வைதம் என்பது நமக்குக் கொஞ்சம்கூட அநுபவத்தில் தெரிவதில்லை.

ஆனாலும் அந்த அநுபவத்துக்குப் போவதற்கு நாம் இங்கிருந்தே ஆரம்பித்துத்தான் ஆகவேண்டும். நாம் இருக்கிற நிலையில் நமக்கு ஸத்யமாகத் தெரிகிறவைகளை வைத்துக்கொண்டே அநுஷ்டானங்களை ஆரம்பித்துப் படிப்படியாக, மேலே மேலே போய், இதெல்லாம் ஸத்யமில்லை என்று தெரிந்து கொண்டு (தெரிந்துகொண்டு என்றால் சும்மா புத்தியால் தெரிந்துகொள்வதில்லை; அநுபவத்தில் தெரிந்துகொள்ள வேண்டும்), ஒரே ஸத்யமான அத்வைத ஸித்தியை அடையவேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆலோசித்து அறிய வேண்டியவை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  நடப்பு நிலையிலிருந்து அத்வைதத்துக்கு
Next